கடந்த ஐந்தாண்டு கால தமிழக ஆட்சியினைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு வித மலைப்பும் விரக்தியும் ஒரு சேர வருவதை யாராலும் தடுக்க முடியாது. நடுநிலை நோக்காளர்கள் தி.மு.கவின் தனிப்பட்ட சில செயல் திட்டங்களை மறுத்தும் எதிர்த்தும் பேச முடியாத அதே நேரத்தில் தனது கட்சியினை வளர்த்துக் கொள்ளவும், கட்சியின் உள் கட்டமைப்பிற்குள் உறவுகளை முழுக்க முழுக்க நிரப்பி வைத்துக் கொண்டதும், முதுமை காரணமாக ஒரு முழுமையான ஒரு தொலை நோக்கு பார்வையை தி.மு.க தலைமை தொலைத்து விட்டு காங்கிரசுக்கு கொடி பிடித்ததும் ஒரு வித எரிச்சலை நமக்குள் பரவவிட்டிருப்பது தவிர்க்க முடியாத விசயமாய்ப் போய்விட்டது.
ஈழப்பிரச்சினையில் தமிழனத்தின் தலைவர் என்றர் வாசகத்தை தமது இலச்சினையில் பொறித்து வைத்துக் கொண்டு போர்ப்பரணி பாடிய தலைவர் தமது பதவியை பேணிக் காத்துக் கொள்ள கடித போக்குவரத்துக்கள் மத்திய அரசுக்கு நடத்தியதும், ஈழத்தில் தமிழனை கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில் சலனமற்று மெரினாவில் சினிமாத்தனமான உண்ணா விரதங்கள் இருந்ததும் தி.மு.க தலைமை மீது இருந்த மதிப்பினை தமிழர்கள் மத்தியில் சரித்துப் போட்டது என்பது உறுதியான விடயம்.
எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு, இந்திய தேசத்தின் ஒற்றுமையை பேணிக்காத்து இந்தியர்களை ஒருமிக்க தவறிய கிழட்டு காங்கிரஸ்......தன் கோரப்பல்லினை பழிவாங்கும் விதமாக தமிழர்கள் மீது பதித்து இரத்தம் உறிஞ்சிய போதெல்லாம் அவர்களுக்கு கவரி வீசிய காவலனாய் கூட்டணி தர்மத்தை தக்கவைத்துக் கொள்ள சொந்த பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் நிகழ்வுகளுக்கு உடன் போன தி.மு.க அரசினை ஒரு தமிழின துரோகியாய் பார்க்கும் பாவம் தமிழ் மக்களிடம் தன்னை மீறி தோன்றியதும் உண்மை.
ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல், அதில் கனிமொழியின் தலையீடு, ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், மீனவர்கள் தொடர் படுகொலைகள் இவைகளின் முன்னால் கலர் டி.வியும்... இலவச வீடுகளும்.... ஒரு ரூபாய் அரிசியும் பஸ்பமாய் மறைந்துதான் போயின.
விரக்தியில் இருந்த தமிழனுக்கு யார்தான் மாற்று என்று பார்க்கும் போது எதிரணியில் இருக்கும் அம்மையாரோ...கடந்த ஐந்து வருடத்தை விடுமுறையிலேயே கழித்திருந்தார் மேலும்...ஒரு திடமான அரசியல் முடிவோ அல்லது... போராட்டங்களோ நடத்தப் பெறாதவராக.., சூழ்நிலைகளின் பொருட்டு அறிக்கைகளும் போராட்டங்களும் என அவர் செய்தது எல்லாமே செயற்கைத்தனமாகவே இருந்தது. புரட்சித்தலைவருக்குப் பிறகு கட்சியில் அம்மையாரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தலைவராக இல்லை என்பதும் எல்லோரும் அறிந்ததே..!
எம்.ஜி.ஆரின் காலத்தில் எம்.ஜி.ஆரை அடுத்து இமிடியெட் தலைவர்கள் என்று அ.தி.மு.கவில் குறிப்பிட்டு சொல்லும் படி நிறைய பேர்கள் அவரது காலத்தில் இருந்ததும் இப்போது இல்லாமல் இருப்பதும்.....இரு வேறுபட்ட தலைமைகளின் வித்தியாசத்தை காட்டும் அதே நேரத்தில்......ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையும், மிக திடமான முடிவுகளும் எப்போதுமே வசீகரமானவை.
இந்த இரு கட்சிகளையும் தாண்டி விஜயகாந்தும் ஒரு சிறந்த ஓட்டு வங்கியை வைத்திருக்கும் ஒரு வளர்ந்து வரும் தலைவராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்... மேலும் கடந்த தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவின் எதிர் ஓட்டுக்களை அழகாக எடுத்துச் சென்றவர் என்றாலும்....அதை வைத்து அவரால் எதுவும் செய்ய முடியாததோடு...... அது வலுவான தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு உதவும் வகையிலேயே இருந்தது.
வரப்போகும் தேர்தலில் விஜயகாந்த் தனித்தும், அ.தி.மு.க தனித்தும் போட்டியிட்டு இருந்தால் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு வேறு வழியின்றி பிரகாசமாய்தான் இருந்திருக்கும்... ஆனால் மிக முக்கிய காய் நகர்த்தலாய் அ.தி.மு.கவின் தலைமை...விஜயகாந்தோடு கூட்டணி வைத்து அதுவும் 41 இடங்களை அவர்களுக்கு ஒதுக்கி இருக்கும் இந்த சூழல் எல்லாவற்றையும் நொறுக்கிப் போட்டிருப்பதும், தி.மு.கவையும் அதன் கூட்டணி கட்சிகளின் உறக்கத்தையும் கெடுத்துதானிருக்கும்.
கனவுகளைத் தேக்கி வைத்திருந்த தி.மு.க கனவிலும் கூட நினைத்திருக்காது அ.தி.மு.க இப்படி ஒரு கூட்டணி வைக்கப்போகிறது என்று....
காங்கிரஸ் என்ற மண் குதிரை வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் தவிடு பொடி ஆகப் போவதும், தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இழைத்த அநீதிகளுக்கான பலனை தி.மு.க பெறப்போவதும், சாதுர்ய அரசியல் ஒத்துப் போதலுக்கான பலனை விஜயகாந்தும் ஜெயலலிதாவும் பெறப்போவதும் யாராலும் தடுக்க முடியாத ஒன்று.....
எல்லாம் சரியாகத்தான் நிகழ்கிறது....எம் மக்களும் வாக்குகள் அளித்து விட்டு காத்திருக்கத்தான் போகிறார்கள்....! வரப்போகும் புது ஆட்சியாவது.....எம் மக்களுக்கு இலவச திட்டங்களை மட்டும் அறிவித்துக் கொண்டிருக்காமல் சூழலையும் உணர்ந்து நல்வழி காட்டுமா?
தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில் இதைத்தான் சொல்ல வேண்டும் வேறு வழியில்லை.....
ம்ம்ம்....வெல்கம் பேக் அ.தி.மு.க....!
Saturday, March 12, 2011
கனவுகளைத் தேக்கி வைத்திருந்த தி.மு.க கனவிலும் கூட நினைத்திருக்காது அ.தி.மு.க இப்படி ஒரு கூட்டணி வைக்கப்போகிறது என்று....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment