கடந்த சில நாட்களாக தயாநிதி மாறன் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் மந்திரி சபை மாற்றத்தில் தயாநிதி நீக்கப்படுவார் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.
கனிமொழி கைது, கலைஞர் டெல்லி சென்று தனது அன்பு மகளை பார்த்த நாள் வரையிலும் தயாநிதி பற்றிய செய்திகளும், அவர் மீதான விசாரணைகளும் வேகமெடுக்காத நிலையில் திடீரென்று இந்தச் செய்திகள் பறந்து வந்ததற்கான காரணங்கள் என்ன..?
இதற்குப் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஜன்பத் வீட்டுக் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதி மாறன் செய்த முறைகேடுகள் பற்றிய சி.பி.ஐ.யின் அந்தக் கடிதத்தை வாங்கி பெட்டியில் வைத்துவிட்டு கும்பகர்ணத் தூக்கத்தில் இருப்பதாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம்..! சமயம் வரும்போது அதனைப் பயன்படுத்துவோம் என்று நினைத்து வைத்திருந்தார்கள். இப்போது சமயமாகிவிட, பூனைக்குட்டியும் வெளியே வந்துவிட்டது.
குற்றம் செய்தவர்களைக்கூட தங்களுக்கு சாதகமாக்கி அதன் மூலம் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு பின்பு அந்த வழக்கை நிர்மூலமாக்க அத்தனை வழிகளையும் கையாண்டு கேஸ் நடத்தியதுபோலவும் ஆச்சு.. குற்றவாளிகளை தப்பிக்க வைச்ச மாதிரியும் ஆச்சு.. தாங்களும் பிழைத்துக் கொண்டது போலவும் ஆச்சு என்ற வெக்கம்கெட்ட அரசியல் பொழைப்பை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது..!
மத்தியில் அடுத்த பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் ஒளி விளக்காகவும் மிளிரப் போகிற ராகுல்காந்திக்கு தமிழகத்தின் மீது ஒரு கண். எப்பாடுபட்டாவது தனது ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் காங்கிரஸை உட்கார வைக்க நினைக்கிறார்..!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாக வேண்டுமெனில் அதற்குத் தோதான அரசியல் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதன் முதல் கட்டப் பணியினைத்தான் தனது ஆட்சி அதிகாரத்தை வைத்து சில்லரைத்தனமாக இப்படி செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
இருக்கின்ற இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தினால் ஒழிய காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் அரியணை ஏறுவது நடவாத காரியம் என்பது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்.
இதற்கெல்லாம் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கிடைத்ததுதான் கடந்த கால தி.மு.க.வின் கேடு கெட்ட ஆட்சி..! தாத்தா பாராட்டுக் கூட்டங்களில் திளைத்திருக்கும் நேரத்தில் மகன்களும், மகள்களும், பேரன்களுமாக தமிழ்நாட்டைச் சுரண்டியெடுத்ததை வேடிக்கை பார்த்த காங்கிரஸ் இந்தத் தகவல்களை கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் விட்டு ஆழம் பார்த்தது..!
காங்கிரஸ்தான் இந்த குள்ளநரித்தனத்தைச் செய்கிறது என்பதை உணர்ந்தும், அதனைத் தடுக்க இயலாத அளவுக்கு தாத்தாவுக்கு புத்திரப் பாசம் பீடித்துக் கொண்டுவிட்டது.. தாத்தாவின் இந்த நவீன திருதராஷ்டிரன் பாசத்தை காங்கிரஸ் தற்போதுவரையிலும் நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது..!
2-ஜி விவகாரத்தை முதலில் தமிழகத்தில் தொடர்ந்து வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வேண்டிய அளவுக்கான செய்திகளை வழங்கியதுகூட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்..! மீண்டும் மாறன்கள் கட்சியிலும், குடும்பத்திலும் இணைந்த பின்பு சமயம் பார்த்து நீரா ராடியாவின் டேப்புகளை ரிலீஸ் செய்தது சி.பி.ஐ.யின் உள்ளடி வேலைதான்..!
ஒரு டேப் வெளியானால்கூட சரி.. யாரோ ஒருத்தர் செய்திருக்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் வரிசையாக சர்ச்சைக்கிடமான விஷயங்களை மட்டுமே உள்ளடக்கிய டேப்புகளாக பார்த்து வெளியிட்டால் அதற்கு யார் காரணமாக இருக்க முடியும்..? மத்திய அரசின் தலையசைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்று இந்தியாவில் பத்திரிகை அலுவலகங்களில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்கள்கூட சொல்வார்கள்..!
பிரச்சினைகள் பெருக, பெருக தனக்கும் இதற்கும் யாதொரு சந்தர்ப்பமும் இல்லாததுபோல் காட்டிக் கொண்டது காங்கிரஸ்.. தி.மு.க.வின் குடும்ப விவகாரங்களெல்லாம் சந்தி சிரிக்கின்றவரையில் டெல்லி மேலிடம் கை கட்டி வேடிக்கை பார்த்தது. டேப்புகள் ரிலீஸ் ஆவது நின்றபாடில்லை.
பத்திரிகையாளர்கள் பர்கா தத், வீர் சங்வி, ரத்தன் டாட்டாவுடனான நீரா ராடியாவின் பேட்டிகளைப் படித்துப் பாருங்கள்..! இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதைக் காட்டுவதற்காகவே அவர்களையும் இழுத்து தெருவில்விட்டார்கள் சி.பி.ஐ.யினர்.. இப்போது பத்திரிகையுலகம் ஆட்சியாளர்களை திட்ட முடியுமா..? தொழில் உலக கூட்டமைப்பினர் ரத்தன் டாட்டாவின் டிரெஸ்ஸிங்சென்ஸை ராடியா வர்ணிப்பதை படித்து பொறாமைப்படுவார்களா? அல்லது அரசைக் கண்டிப்பார்களா..?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டுத்தான் பிரசாந்த் பூஷன் செய்தார். இதுவும் ஏற்கெனவே உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்குத் தெரியும். ஆனாலும் மெளனம் சாதித்தது..! யாரோ சிக்கப் போகிறார்கள். நமக்கென்ன என்ற எண்ணமில்லை.. சிக்கப் போவது நமது பரம்பரை எதிரிகள்.. தற்போதைய கூட்டணிக் கட்சியாக இருந்தால் என்ன? நமக்கு அரசியல் லாபம்தான் முக்கியம் என்பதில் குறியாக இருந்தது காங்கிரஸ் அரசு.
உச்சநீதிமன்றத்தில் எந்த அளவுக்குச் சொதப்ப முடியுமோ அத்தனையையும் செய்து கடைசியில் கேஸை அந்த நீதிமன்றத்திடமே விட்டுவிட்டு தான் தப்பித்துவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே உச்சநீதிமன்றம் தனது சாட்டையை வீசத் துவங்க.. தள்ளி நின்ற தி.மு.க.வை பிடித்திழுத்து அடி வாங்க வைத்ததும் காங்கிரஸ்தான்..!
ஆ.ராசாவை ஆரம்பத்திலேயே அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருந்தால் தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் இத்தனை கெட்ட பெயர் கிடைத்திருக்காது.. ஆனாலும் காங்கிரஸ் மானம், ரோஷம் பார்க்க மாட்டார்கள் என்பதால் இது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால் சிங்கள் டீயைக் குடித்துவிட்டு நாள் முழுக்க ஊர் முழுக்க கலைஞர் வாழ்க. தி.மு.க. வளர்க என்று போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புக்களுக்கு அது இருக்கிறதே.. அந்த ஒரு தொண்டனின் தொண்டைக் குழியில் ஒரு சொட்டு தண்ணீராவது நிம்மதியாக இறங்கியிருக்கும்..! செய்யவிடவில்லையே காங்கிரஸ்..!
திட்டம் போட்டு தீட்டினார்கள்..! மன்னமோகனசிங்குக்கு முனங்கத்தான் தெரியும். பேசத் தெரியாது.. அதேபோல் லேசு பாசாகவே சொன்னார்கள். “ராசா இல்லாதிருந்தால் நன்றாக இருக்குமே.. வேறு யாராவது வரட்டுமே..” என்றார்கள்.. தங்களுடைய இயலாமையினால் தங்களிடம் கெஞ்சுகிறார்கள் என்று தப்புக் கணக்குப் போட்ட தி.மு.க. தலைமை, “அதெப்படி நாம் ராஜினாமா செய்வது.. முடியாது..” என்று முறுக்கிக் கொண்டது. இவர்கள் முறுக்குவார்கள் என்பது தெரிந்தே காங்கிரஸ் மேலும், மேலும் நீதிமன்றத்தில் குழப்பத்தை கூட்டிக் கொண்டே வந்தது..!
“ராசா ஏன் இன்னும் அவர் பதவியில் இருக்கிறார்..?” என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட பின்பும்கூட நேரடியாக சொல்லாமல் ஆள் விடும் தூதுக்களில் மட்டுமே சொன்னது காங்கிரஸ்.. தானாகவே தூக்கு மேடையில் வந்து நின்ற நிலைமைக்கு தி.மு.க. வந்தவுடன், ராசா ராஜினாமா என்றானது..
பின்பு சி.பி.ஐ. விசாரணை என்ற வளையத்திற்குள் வந்தவுடன் முதல் 7 நாட்களும் கைது செய்யாமல் பாவ்லா காட்டியவர்கள் கைது தவிர்க்க முடியாதது. கோர்ட், அதிகாரிகளைத் தோண்டித் துருவுகிறது. என்ன செய்யறது..? என்று கேட்டு நோகாமல் நொங்கெடுத்துவிட்டார்கள்..!
தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பின்புற அலுவலகத்தில் சி.பி.ஐ.யை அனுப்பி மனைவியையும், மகளையும் விசாரிக்க வைத்தது காங்கிரஸ்..! இதெல்லாம் தங்களைத் திட்டமிட்டு செய்யப்படும் சதி என்பது தி.மு.க.வுக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ஆட்சி, அதிகாரம், மகன், மகள்களின் பதவி ஆசை, பேரன்களின் பண ஆசை.. இதற்கெல்லாம் மையப் புள்ளியான அதிகாரத்தை விட்டுத் தர வேண்டுமா? ஆட்சியைத் துறக்க வேண்டுமா? என்றெல்லாம் யோசித்து, யோசித்து இதோ கடைசியில் தனது அருமை மகளையும் ஜெயிலுக்குள் அனுப்பிவிட்டு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறார் தமிழர்களின் தன்மானத் தலைவர்..!
அடுத்தது யாராக இருக்கும் என்று யோசிக்க வைத்த சூழலில் இரண்டு பக்கமும் இடி கொடுப்பதைப் போல ஏர்செல் விவகாரம், மற்றும் இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் விவகாரத்தை சி.பி.ஐ. கசிய விட்டிருக்கிறது..!
இனி பத்திரிகைகள் இவைகளைப் பற்றி தினமும் செய்து வெளியிடும் சூழலில் தயாநிதிக்கும் சூழல் இறுக்கப்படும். தயாநிதி மாறன் தானாகவே பதவி விலகும் சூழலை காங்கிரஸ் அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் ராசாவும், கனிமொழியும் ஜாமீனில் வெளிவரும்போது உள்ளே போகும் அடுத்தச் சொந்தமாக தயாநிதி இருக்கக் கூடும்..! இதற்குக் காரணமாக உச்சநீதிமன்றத்தை கை காட்டிவிட்டு காங்கிரஸ் எளிதாகத் தப்பித்துக் கொள்ளும்.
இதையெல்லாம் தவிர்க்கத்தான் தயாநிதி மூலமாக தி.மு.க.வை உடைக்கும் வேலையில் காங்கிரஸ் முயல்வதாக தலைநகரத்து செய்திகள் கசிகின்றன..! கேடி பிரதர்ஸின் பணம், ஊடகங்களின் பலம் இவற்றை வைத்து தி.மு.க.வின் சில தலைவர்களையாவது அவர்கள் பக்கம் இழுக்க வைத்து வைகோ விலகிய சூழலை போன்று ஏற்படுத்த காங்கிரஸ் நினைப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது..!
தாத்தா எந்தக் காரணத்தை முன்னிட்டும் இப்போது மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற மாட்டார். அப்படி வாபஸ் வாங்கினால் காங்கிரஸ்காரர்கள் யார் காலில் விழுந்தாவது தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அத்தோடு இந்த ஊழல் வழக்குகளில் இருந்து தி.மு.க.வினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது பெரும்பாடுதான் என்பதை நன்கு உணர்ந்துதான் இருக்கிறார் தாத்தா. எனவே காங்கிரஸ் இழுக்கின்ற இழுப்புக்கு தாத்தா போய்தான் ஆக வேண்டும்..! இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது..!
தாத்தாவின் குடும்பப் பூசல்கள் பகிரங்கமாக வெடிக்கும் சூழல் ஒன்றைத்தான் காங்கிரஸ் தற்போது எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்குத் தோதாகத்தான் அழகிரியை கேடி பிரதர்ஸ் தற்போது வளைத்துப் பிடித்திருப்பதாகத் தெரிகிறது.
ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை முன்னிறுத்தி அவருக்குப் பின்னால் நின்று அப்போதைக்கு வேண்டிய பணம், ஊடக பலம் ஆகியவற்றைக் கொடுத்து என்.டி.ராமராவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு செய்த புரட்சியைப் போல கருணாநிதியை வீட்டிலேயே உட்கார வைக்க ஒரு திட்டமும் இருக்கிறதாம்..!
அப்படியொரு சூழலில் அதற்காக கேடி பிரதர்ஸ் சம்மதித்தால் தற்போது தயாநிதியைச் சுற்றியுள்ள வலை கொஞ்சம், கொஞ்சமாக சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலமாகவே அறுத்தெடுக்கப்படும். இல்லையெனில் அவர்களது கழுத்திலேயே இறுக்கப்படும் என்றே நானும் நினைக்கிறேன்..!
இன்னொரு வதந்தியும் தலைநகரில் உலா வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. தலைமை காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டால் தயாநிதி மாறன் காங்கிரஸில் சேரும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்கிறார்கள். இதனை அவர்களின் குடும்பத்தினரே உணர்ந்திருக்கிறார்களாம்..
இப்போதே தயாநிதி மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்..! தற்போது தயாநிதி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தி.மு.க. தலைமை மெளனம் சாதிக்கும் அதே வேளையில் தயாநிதி மட்டுமே பதில் சொல்லி வருகிறார். கட்சிக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லையோ என்று நினைக்குமளவுக்கு பிரச்சினையைக் கண்டும், காணாததுபோல் இருக்கிறது தி.மு.க. தலைமை. இல்லையெனில் இந்நேரம் கலைஞரோ, ஸ்டாலினோ இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள்..!
போதாக்குறைக்கு நக்கீரன் இதழில் உலக அதிசயமாக தயாநிதி மாறனின் ஊழல் பற்றிய தெஹல்கா கட்டுரையைத் தமிழாக்கம் செய்து போட்டிருப்பது பத்திரிகை வட்டாரங்களில் பரபரப்பை கூட்டியிருக்கிறது..! இது நிச்சயம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்..!
இப்போது நக்கீரனுக்கு நடுநிலைமை வேஷம் போட வேண்டிய தேவையில்லை. அப்படியிருந்தால் நீரா ராடியா டேப்புகள் பற்றியும், கனிமொழி, வோல்டாஸ், டாட்டா, ராஜாத்தி தொடர்புகள் பற்றியும் அவர்கள் எழுதியிருப்பார்கள். அதையெல்லாம் வி்ட்டுவிட்டு தயாநிதியை குறித்து எழுதியிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தயாநிதி மற்றும் அவரது பி.ஏ.வின் போன் நம்பரைகூட வெளிப்படையாகக் குறிப்பிட்டு எழுதியிருப்பது என்னவோ நடக்கப் போகிறது என்கிறார்கள்..!
தொடர்ச்சியான 3-வது நக்கீரன் இதழிலும் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகளே வெளியாகியுள்ளது. இத்தனை நாட்கள் சன் குழமத்திற்கும், நக்கீரனுக்கும் இருந்த நட்பு எப்படி ஒரே நாளில் மறைந்து போயிருக்கும் என்ற குழப்பத்திற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். ஆனந்த விகடன் குழுமத்தில் மாறன் சகோதரர்களும் கை வைத்துவிட்டதை மீடியா உலகமே தற்போது நம்பி வருகிறது. பேசியும் வருகின்றனர். இந்தக் காரணத்தினால்தான் அறிவாலய வட்டாரம் நக்கீரனை முன்னிறுத்தி தயாநிதி பற்றிய ஊழல்களை எக்ஸ்போஸ் செய்வதாகத் தோன்றுகிறது..!
நேற்றைய நிலவரப்படி விரைவில் மந்திரி பதவியை இழந்து திஹார் ஜெயிலுக்குள் நுழையப் போகும் அடுத்த வி.ஐ.பி. தயாநிதிதான் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்..! தயாநிதி மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்தால், கலாநிதி மாறன் கோர்ட் படியேற வேண்டி வரும். ஏன் அவரே கைது செய்யப்பட்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. அப்படியொன்றைத் தவிர்ப்பதற்காக மாறன் சகோதரர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்..! இதோ இன்றைக்கு கனிமொழியின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம்..!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்க உதவிகள் செய்தும், கட்சியையும், தங்களது குடும்பத்தினரையும் அழிக்கப் பார்க்கிறார்களே என்கிற கோபத்தில் தி.மு.க. இருக்கிறது..!
கலைஞர் டிவி ஆரம்பிக்கின்றவரையிலும், தி.மு.க.வின் ஊதுகுழலாகவும், ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தின் முடிவுரைக்கு உதவியும், ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்த குடும்பத்தினரெல்லாம் இன்றைக்கு ஸ்கூடா காரில் போகும் சூழலை ஏற்படுத்தி கோடி, கோடியாக கொடுத்தும் நம்மை ஓரங்கட்டி ஜெயிலுக்கு அனுப்பத் துடிக்கும் தனது சக குடும்ப உறவுகள் மீதான கோபத்தில் மாறன் சகோதரர்கள்..!
இந்த முட்டல் மோதலை எட்ட நின்று வேடிக்கை பார்த்து சமயத்துக்குக் காத்திருக்கும் குள்ள நரியாக காங்கிரஸ்..!
நாமும் வேடிக்கையை பார்ப்போம்..! இந்த மாதத்திற்குள் இந்திய அரசியலில் ஏதோவொன்று நடக்கும் என்று நம்புகிறேன்..!
Read more: http://truetamilans.blogspot.com/2011/06/blog-post_08.html#ixzz1OnDYPIeF
Thursday, June 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment