மதுரை 'மதுரா கோட்ஸ்’ மில் ஊழியரான நடராஜப் பிள்ளையின் மகன் சுரேஷ் பாபு. ஆனால்,அது 20 வருடங்களுக்கு முன்பு. இப்போது, 'மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்’ என்று ஜெயலலிதாவே பயோடேட்டா கொடுக்கும் அளவுக்கு, தி.மு.க-வில் ஜெகஜ்ஜாலக் கில்லாடி!
ஆரம்பத்தில் இந்த சுரேஷ்பாபு, அ.தி.மு.க. அனுதாபி. நைட்டி வியாபாரம்தான் தொடக்கம். அப்போது சார் பேரே 'நைட்டி சுரேஷ்’தான். நைட்டி பிசினஸ் ஏனோ அலுத்துப்போனதால், மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு டீக்கடை ஓரத்தில், பஜ்ஜிக் கடை போட்டார். ம்ஹூம்... அதுவும் போணி ஆகவில்லை.
'அமைதிப் படை’ படத்தில் சத்யராஜின் கேரக்டர்தான் சாருக்கு இன்ஸ்பிரேஷன். அரசியலில் இறங்கினார். 90-களில் அ.தி.மு.க. எம்.பி-க்களாக இருந்த ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். 96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சுறுசுறுப்பான பஜ்ஜி சுரேஷ், எப்படியோ நூல் பிடித்து அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பற்றிக்கொண்டார்.
நெற்றியில் மங்களரமாக குங்குமப் பொட்டு சகிதம் சுரேஷ் செய்த 'பணிவிடை’கள் பிடித்துப்போனதால், அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார் அமைச்சர். ஒரு கட்டத்தில் அங்கேயும் சிக்கலாகி, மீண்டும் மதுரைக்கு வந்தவருக்கு சென்னையில் கற்ற 'வித்தை’கள் நன்றாகவே கைகொடுத்தன.
மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வீட்டில் பசை தேடி ஒட்டிக்கொண்டார். ஏற்கெனவே 'கிரம்மர்’ சுரேஷ் (இப்போது இவர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்!) என்பவர் பி.டி.ஆர். முகாமில் இருந்தார். பி.டி.ஆர். ஒரு முறை, ''சுரேஷைக் கூப்பிடுங்கப்பா'' என்று சொல்ல, அங்கே இருந்தவர்கள் கிரம்மரை உள்ளே அனுப்பிவிட்டார்கள். ''இவன் இல்லப்பா... அந்த பொட்டு வெச்சிருக்கிற சுரேஷைக் கூப்பிடு!'' என்றார் பி.டி.ஆர். அதில் இருந்துதான், நைட்டி சுரேஷ் என்ற பஜ்ஜி சுரேஷ், 'பொட்டு சுரேஷ்’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படலானார்.
பிறகு, பி.டி.ஆரை விட்டுப் பிரிந்த பொட்டு, அழகிரிக்கு நெருக்கமான
நாகேஷிடம் ஒட்டிக்கொண்டு, அப்படியே அழகிரியின் நிழலுக்குள் நுழைந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஆறேழு மாதங்கள் கழித்துத்தான் பொட்டு சுரேஷ், அழகிரியின் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்தார். வழக்கமாக அழகிரி மூலமாக ஏதாவது காரியத்தை முடித்தால், அதில் வரும் நன்மையை தனக்கு இவ்வளவு, அண்ணனுக்கு இவ்வளவு என்றுதான், கட்சியினர் கணக்குப் பிரிப்பார்கள். ஆனால், எவ்வளவு கிடைத்தாலும், அதை அப்படியே அழகிரியிடம் கொடுத்துவிட்டு, ''செலவுக்கு ஏதாச்சும் குடுங்கண்ணே...'' என்று பணிவான பவ்யம் காட்டுவது பொட்டு ஸ்டைல். 'இவ்வளவு விசுவாசமாக்கிடக்கிறானே’ என அழகிரி மனதில் இடம் பிடித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரையில் அழகிரிக்கு சொந்தமான 'தயா திருமண மஹால்’ கட்டி முடிக்கப்பட்டது. பொட்டுவின் தம்பி சரவணனின் திருமணம்தான், அங்கு நடந்த முதல் விசேஷம். தமிழகம் முழுவதிலும் இருந்து வி.ஐ.பி-க்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். மொய் வரவு மட்டும் கோடிகளில் கொட்டியது. திருமணம் முடிந்த கையோடு அந்தப் பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அழகிரியின் வீட்டுக்கு போனார் பொட்டு. உறக்கத்தில் இருந்த அழகிரியை எழுப்பி, அவருக்கு எதிரில் மூட்டையை அவிழ்த்தாராம். ''என்னய்யா இதெல்லாம்?'' என்றதற்கு, ''என் தம்பி கல்யாணத்துக்கு வந்த மொய்ப் பணம்ணே. இது எனக்கு வந்த பணம் இல்லைண்ணே... எனக்கு நீங்களா பார்த்துப் போட்ட பிச்சை!'' என்று கண்ணீர் மல்க காலில் விழுந்த கதை, மதுரையில் பிரபலம்.
அழகிரி அன்றே, ''பொட்டு எது சொன்னாலும், அது நான் சொன்னதாத்தான் அர்த்தம். அவரு சொல்றதை செஞ்சு குடுங்க; எங்கிட்ட கேக்கணும்கிறது இல்லை...'' என்று முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கே ஆர்டர் போட்டதாக ஒரு பரபரப்பான பேச்சும் மதுரையில் உண்டு. அழகிரியை இவர் நெருங்க நெருங்க... ஏற்கெனவே அழகிரியோடு நெருக்கமாக இருந்த பலர் விலக்கிவைக்கப்பட்டார்கள்.
இதை எல்லாம்வைத்துத்தான் அழகிரி முதலமைச்சர் என்றால், பொட்டு சுரேஷ் துணை முதலமைச்சர் என்று ஜெயலலிதா பட்டம் கொடுத்தார்!
- ஜூ.வி. க்ரைம் டீம்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment