இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974, 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அ.இ.தி.மு.க பொதுச் செயலர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.
இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா , இலங்கைக்கு இடையே 1974, 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.
டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
1972இல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929, 1933ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதில், ராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment