ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. மீது திடுக் புகார்
திரும்பிய பக்கம் எல்லாம் தி.மு.க. பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு கள். ஆனால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலோ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி மீது புகார் கிளம்பிக் கிடுகிடுக்கிறது.
புகார் கொடுத்த செந்தில்குமார் ஜோலார் பேட்டையை சேர்ந்தவர். அவரை சந்தித்தோம். ''நான் கடந்த மூணு வருஷமா பெப்சி டீலர்ஷிப் எடுத்து, திருப்பத்தூர், ஏலகிரி, நாட்றாம்பள்ளிக்கு சப்ளை பண்ணிட்டு வர்றேன். போன மே மாசம் நான் ஏலகிரியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய என்னுடைய வண்டியில் போனேன். அப்போது அங்கே இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரங்க என்கிட்ட, 'இனி கடைக்காரங்க மட்டும் இல்லை. உங்களை மாதிரி டீலர்களும் மாமூல் கொடுத்தாகணும்’னு சொன்னாங்க. 'என்னால் மாமூல் தர முடியாது’ன்னு அப்பவே கட் அண்ட் ரைட்டா சொன்னேன். உடனே அவங்க கோபமாகி, அந்த இடத்திலேயே என்னை அடிச்சாங்க. நான் ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ. வீரமணி என்கிட்ட பிரச்னைக்கு வந்தார்.
'போலீஸ்ல கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு! அவங்களை மீறி நீ ஏலகிரியில் வியாபாரம் செய்ய முடியாது.’னு மிரட்டினார். என்னை அடிச்சவங்க மேல் நான் புகார் கொடுத்து இருக்கேன், எதுக்காக வாபஸ் வாங்கணும்? முடியாதுனு சொல்லிட்டேன்.
கடந்த 18-ம் தேதி இரவு எங்க வீட்டுக்கு சிலர் வந்தாங்க. 'எம்.எல்.ஏ. உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார், வா...’ன்னு கூப்பிட்டாங்க. நானும் எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டுல ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜினி, அசோக்குமார் இருந்தாங்க.
'நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ ஏன் ஏலகிரியில் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கலை?’னு எம்.எல்.ஏ. என்கிட்ட கேட்டார். 'என்னை அடிச்ச துக்கு நான் புகார் கொடுத்திருக்கேன். அதை வாபஸ் வாங்கச் சொல்லி, நீங்க எதுக்கு தொல்லை கொடுக்குறீங்க?’னு கேட்டேன்.
'நீ நான் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறியா? சரி... அதை நீ வாபஸ் வாங் கலைன்னா பரவாயில்லை. நாட்றாம்பள்ளியில் உனக்கு 1,200 சதுரஅடி நிலம் இருக்குல்ல... அது எனக்குத் தேவைப்படுது. அதுக்கு என்ன ரேட்டோ, அதை வாங்கிட்டு எனக்கு எழுதிக் கொடுத்துடு’ன்னு எம்.எல்.ஏ. கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு. 'என்னோட நிலத்தை நான் விற்கிற ஐடியா இல்லைங்க’னு சொன்னதும் எம்.எல்.ஏ-வுக்கு கோபம் வந்துடுச்சு. 'நான் பொறுமையா இருக்கேன். என்னை சோதிக்காதே. இன்னும் 10 நாள்தான். அப்புறம் நான் மந்திரி ஆகிடுவேன். அதுக்குப் பிறகு, உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன். உன் மேலேயும் உன் குடும்பத்தார் மேலேயும் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ள, எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் சொன்னா, இந்த இன்ஸ்பெக்டர் செய்ய மாட்டார்னு நினைக்கிறியா... என்னய்யா செய்வேல்ல?’னு இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்டார். உடனே அவர், 'செஞ்சிடலாம் சார்’னு சொன்னார். அந்த இடத்தில் என்ன பண்றதுனு எனக்குத் தெரியலை. தப்பிச்சாப் போதும்னு தலையை ஆட்டிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு தினமும் எனக்கு மிரட்டல் வந்துட்டே இருக்கு. தி.மு.க. ஆட்சியில் இப்படி நடந்த விஷயங்களைத் தோண்டி எடுத்துத்தான் முதல்வர் கேஸ் போடச் சொல்லி இருக்காங்க. ஆனா, அவங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தரே இப்படி கட்டப்பஞ்சாயத்து பண்ற கொடுமையை நாங்க எங்கே போய் சொல்றது? ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனே எம்.எல்.ஏ. வீட்டுலதான் நடக்குது. அப்புறம் எப்படி நான் போலீஸுக்குப் போறது?'' என்று வேதனையோடு கேட்டார்.
ஜோலார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.சி.வீரமணியிடம் குற்றச்சாட்டு களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''அந்த ஆளு சொல்ற மாதிரி எல்லாம் நான் மிரட்டக் கிடையாதுங்க. என்னைப்பற்றி ஜோலார்பேட்டையில் விசாரிச்சுப் பாருங்க. மக்களே உங்களுக்குச் சொல்லுவாங்க. புகார் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அதான், என் மீது பழி போடுறார். தொகுதி மக்களை சந்திக்கவும், கட்சிப் பணி ஆற்றவுமே எனக்கு நேரம் சரியா இருக்குது. இதுல கட்டப்பஞ்சாயத்து பண்ண எங்கே நேரம் இருக்கு? எனக்குத் தேவையான அளவு சொத்து இருக்கு. நான் எதுக்கு மத்தவங்க நிலத்தை அபகரிக்க நினைக்கப்போறேன்? என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காம சிலர் அவரைத் தூண்டிவிடுறாங்கனு நினைக்கிறேன். அது யாருன்னு நானே விரைவில் கண்டுபிடிக்கிறேன்...'' என்று சொன்னார்.
பிரச்னையில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக் டர் ராஜேந்திரனிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ. வீட்டுக்கு நாங்க போனது உண்மைதான். ஆனா, அவர் சொல்ற மாதிரி எந்த சம்பவமும் அங்கே நடக்கவில்லை. எதுக்காக இப்படி ஒரு தப்பான தகவலை சொல்லி இருக்கிறார்னு விசாரிக்கிறேன்!'' என்றார்.
பிரச்னையில் ஜோலார்பேட்டை போலீஸ் சிக்கி இருப்பதால், வேறு போலீஸ் டீம் இந்த விவகாரத்தை விசாரிப்பது நல்லது!
நன்றி: ஜூனியர் விகடன்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment