Wednesday, July 27, 2011

பண்டிகை பலகாரங்கள் ...பல,பல

முந்திரி-தேங்காய் பால்கோவா

தேவையானவை: பால் - 8 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 கப், ஊற வைத்த முந்திரி - 10, தேங்காய் துருவல் - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் பாதியாகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, காய்ச்சிய பாலுடன் கலந்து, மீண்டும் பாதியாக வந்ததும், சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு, நெய் விட்டு, சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

வழக்கமாக செய்யும் பால்கோவாவைவிட, இது அதிக சுவையோடு இருக்கும்.

கர்ச்சிக்காய்

தேவையானவை: அரிசி மாவு - இரண்டு கப், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து, பொட்டுக்கடலை, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பொடித்து பூரணமாக செய்து கொள்ளவும். கொதிக்க வைத்த தண்ணீரை அரிசி மாவில் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து, உருட்டி சிறு சொப்பு போல் செய்து, அரை டீஸ்பூன் பூரணத்தை அதனுள் வைத்து, நீளவாக்கில் ஓரத்தை கவனமாக மூடினால்... இதுதான் கர்ச்சிக்காய். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு அல்லது மூன்று கர்ச்சிக்காய்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

பழமையான இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.

ட்ரை ஃப்ரூட் போளி

தேவையானவை: ஊற வைத்து தோல் உரித்த பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், மைதா மாவு - ஒரு கப் கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு சிறிய கப், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து... தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கெட்டியான பூரணமாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவுடன் கேசரி பவுடர், நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து,. சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதை ஒரு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி, போளியாக தட்டி, தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த போளியை, முந்தைய நாளே பூரணம் செய்து வைத்துக் கொண்டு, மறுநாள் தயாரிக்கலாம். வேலை சுலபமாக இருக்கும்.

மைசூர்பாகு


தேவையானவை: கடலை மாவு, நெய் - தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப்.

செய்முறை: பாதி அளவு நெய்யில் கடலை மாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு சர்க்கரைப் பாகு (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்) காய்ச்சி, வறுத்து வைத்த கடலை மாவை சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கடலை மாவு கெட்டியாகி தட்டில் கொட்டும் பதம் வந்ததும் இறக்கவும். நெய் தடவிய குழிவான தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டால்... மைசூர்பாகு ரெடி.

கடலை மாவுக்குப் பதிலாக கடலைப்பருப்பு வாங்கி ஊற வைத்து, மாவாக அரைத்துச் செய்தால்... இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.

சாக்லேட் லாலி பாப்

தேவையானவை: பால் - இரண்டரை கப், சாக்லேட் பவுடர் - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிறிய கப், முந்திரி, பாதாம் - தலா 10, லாலிபாப் ஸ்டிக் - 5.

செய்முறை: முந்திரி, பாதாமை அரைத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி, அரைத்த முந்திரி, பாதாம் விழுதை அதில் சேர்த்துக் கிளறி... சர்க்கரை, சாக்லேட் பவுடர் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை லாலிபாப் ஸ்டிக்கில் பொருத்தி, ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து சாப்பிடவும்.

சாக்லேட் பவுடருக்குப் பதிலாக போர்ன்விட்டா சேர்த்தும் செய்யலாம்.

அத்திப்பழ அல்வா

தேவையானவை: அத்திப்பழத் துண்டுகள், முந்திரி - தலா 20, சர்க்கரை - ஒரு சிறிய கப், நெய் - 6 டீஸ்பூன், பாதாம், பிஸ்தா - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: முந்திரி பத்து, அத்திப்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை தோல் உரித்து, எல்லாவற்றுடனும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு பத்து நிமிடம் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்க்கவும். மீதமுள்ள முந்திரிப்பருப்பை உடைத்து, சிறிதளவு நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, அல்வா பதத்தில் ஒட்டாமல் வந்ததும் கிளறி இறக்கவும்.

அட்டகாசமாக இருக்கும் இந்த அல்வா! அத்திப்பழம் இருமலை போக்கும் மருத்துவக் குணம் கொண்டது.

கோவா-கேசரி சுகியன்

தேவையானவை: பால்கோவா, மைதா மாவு - தலா ஒரு கப், ரவை - 2 கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு சிறிய கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: நெய்யில் ரவையை சிவக்க வறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்ற அளவில், தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். இதில் ரவையைப் போட்டுக் கிளறி, வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள், பால்கோவா சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது கேசரி பவுடர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து கோவா-கேசரி உருண்டைகளை மைதா மாவில் தோய்த்துப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

வாசனையும், சுவையும் அமோகமாக இருக்கும். தட்டில் வைத்த அடுத்த நொடியில் காணாமல் போய்விடும்.

பயத்தமாவு உருண்டை

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு சிறிய கப், நெய்யில் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: வெறும் கடாயில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரையைக் கலந்து... ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, காய்ச்சிய நெய் சேர்த்துக் கலந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பாசிப்பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது. சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும் சத்தான உருண்டை இது.

கோவா குலோப் ஜாமூன்

தேவையானவை: ஜாமூன் மிக்ஸ் - ஒரு சிறிய கப், பால்கோவா - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: ஜாமூன் மிக்சுடன் பால்கோவா, பாதி அளவு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் நான்கு, ஐந்து உருண்டைகளாகப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். மீதமுள்ள சர்க்கரையில் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்த ஜாமூன் உருண்டைகளைப் போடவும். ஊறியதும் சாப்பிடலாம்.

சர்க்கரைப் பாகுடன், கோவா சேர்க்கும்போது ருசியுடன் நல்ல வாசனையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் எசன்ஸ் சேர்க்கலாம்.

புரோட்டீன் லட்டு

தேவையானவை: பொடித்த பாதாம், உடைத்த முந்திரி, பிஸ்தா - தலா 10, வறுத்து தோல் உரித்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, பொட்டுக்கடலை - ஒரு கப், வெள்ளரி விதை, நெய் - தலா 4 டீஸ்பூன், பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டி கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டால் முத்து போல் திரண்டு வரும் பதம்). பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வெள்ளரி விதை, பிஸ்தா ஆகியவற்றை நெய் விட்டு வறுத்து, எல்லாவற்றையும் பாகுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு போஷாக்கான லட்டு. தினமும் இரண்டு சாப்பிட்டால் உடல் வளர்ச்சி கூடும்.

ரங்கோலி லட்டு

தேவையானவை: கடலை மாவு - கால் கிலோ, சர்க்கரை - முக்கால் கிலோ, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, கிராம்பு - 6, சிறிய கல்கண்டு - 25 கிராம், உலர்ந்த திராட்சை - 10, வறுத்த முந்திரிப் பருப்பு - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, மூன்று நிற ஃபுட் கலர் பவுடர்கள் - ஒவ்வொன்றும் சிறிதளவு, நெய், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் பூந்தி கரண்டியில் சிறிதளவு மாவைப் போட்டு பூந்தி போல் தேய்த்து, கரகரப்பாக வெந்தவுடன் எடுக்கவும். இதே முறையில் சிறிது சிறிது மாவுடன் கலர் பவுடரை சேர்த்து கலரிலும் பூந்தி தயாரித்துக் கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்). வேக வைத்த கலர் முத்துக்களை பாகில் போடவும். கிராம்பு, திராட்சையை நெய்யில் பொரித்துப் போடவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கல்கண்டு எல்லாவற்றையும் சேர்க்கவும். ஆறியதும், கெட்டியான லட்டுகளாகப் பிடிக்கவும்.

குழந்தைகளை ஆசையுடன் சாப்பிடத் தூண்டும்... கலர்கலராய் மின்னும் ரங்கோலி லட்டு.

பாஸந்தி

தேவையானவை: பால் - 8 கப், சர்க்கரை - இரண்டரை கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை விட்டு மிதமான தீயில் காய்ச்சவும். பாலின் மேல் படியும் ஏடுகளை ஒரு சிறு கரண்டியால் எடுத்து தனியே வைக்கவும். பால் பாதியாகும் வரை காய்ச்சி பால் ஏடுகளை சேகரித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாக வரும்வரை கிளறி, சேகரித்த பால் ஏடுகளைப் போட்டு... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

பாஸந்தி படு ருசியாக இருக்கும். சூடாகவோ, ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்'லென்றோ சாப்பிடலாம்.

பீட்ரூட் அல்வா

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய பீட்ரூட் துண்டுகள் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம், முந்திரி - தலா 10 (ஊற வைத்து தோல் உரித்து நைஸாக அரைக்கவும்).

செய்முறை: பீட்ரூட் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, பீட்ரூட் விழுதினைப் போட்டு வதக்கி, அரைத்த முந்திரி, பாதாம் விழுதை சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி, வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு இறக்கவும்.

பீட்ரூட் ரத்த விருத்திக்கு நல்லது.உடல் மெலிந்த குழந்தைகளின் உடல் எடை கூடுவதற்கு உகந்த அல்வா இது.

பாதாம் அல்வா

தேவையானவை: பாதாம், முந்திரி - தலா 20, பால்கோவா - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை, நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப்.

செய்முறை: பாதாம், முந்திரியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். இதை கடாயில் போட்டு சர்க்கரை, பால் கோவாவை சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

திருமணங்களில் முக்கிய இடம் வகிக்கும் இனிப்புகளில் பாதாம் அல்வாவும் ஒன்று. செய்வது எளிது... சத்தும், சுவையும் அதிகம்.

ரோஜா குல்கந்து

தேவையானவை: இளஞ்சிவப்பு ரோஜாப்பூ - 10, சர்க்கரை - 2 கப், பால்கோவா - ஒரு சிறிய கப், குங்குமப்பூ, நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக உதிர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் பால்கோவா, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி... நெய், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து திரும்பவும் கிளறி இறக்கவும்.

ரோஜா சீஸனின்போது இந்த குல்கந்து தயாரிக்கலாம். சாப்பிட்டவுடன் வாயே மணக்கும்.

லட்டு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை, டைமண்ட் கல்கண்டு, எண்ணெய் - தேவையான அளவு, சர்க்கரை - 2 கப், பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் கேசரி பவுடர், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பூந்திக் கரண்டியில் மாவை ஊற்றித் தேய்த்து, பூந்தி தயாரிக்கவும். பிறகு, சர்க்கரையில் தேவையான தண்ணீர் சேர்த்து இளம்பாகாக காய்ச்சவும். இந்தப் பாகில் பூந்தி, முந்திரி, கல்கண்டு, திராட்சை, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து புரட்டவும். சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கையில் நெய் தடவிக் கொண்டு லட்டு பிடிக்க வேண்டும். ஆறிவிட்டால் பிடிக்க வராது.

ஜாங்கிரி

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு, சர்க்கரை - தலா ஒரு கப், சிவப்பு கேசரி கலர் - ஒரு சிட்டிகை, ரோஸ் எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கம்பிப்பாகு பதத்தில்காய்ச்சி இறக்கி, எசன்ஸ் சேர்க்கவும். உளுத்தம்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, பொங்கப் பொங்க அரைக்கவும். அரைக்கும்போதே அதில் கலர் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஜாங்கிரி துணியில் ('ரிட்' எனப்படும் ஜாங்கிரி பிழியும் துணி கடைகளில் கிடைக்கும். அல்லது வெள்ளை நிற காடா துணியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டால்... ஜாங்கிரி துணி தயார்). அரைத்த மாவைப் போட்டு, துணியை மடித்துப் பிழியவும். நன்றாக வெந்ததும் எடுத்து, ஜாங்கிரியை சர்க்கரைப் பாகில் ஊறவிட்டு எடுத்து வைக்கவும்.

பளபளவென ஜோராக இருக்கும் இந்த ஜாங்கிரி.

குஜராத்தி லாடு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், கோதுமை மாவு, நெய் - தலா கால் கப், வனஸ்பதி - 5 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, சர்க்கரை - ஒன்றரை கப்.

செய்முறை: கடலை மாவு, கோதுமை மாவு இரண்டையும் கடாயில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரையை சேர்த்துப் பொடிக்கவும். திராட்சை, முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து சேர்த்துப் பிசிறவும்.

கடாயில் நெய், வனஸ்பதியை விட்டு சூடாக்கி, பிசறிய மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குஜராத்தியர்களின் வீடுகளில் இந்த உருண்டைகள் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும்.

பாதுஷா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், வனஸ்பதி - ஒரு கப், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் சமையல் சோடா சேர்த்து, ஒரு தட்டில் நுரை வரும்வரை தேய்க்கவும். இதில் மைதா மாவைக் கொட்டி வனஸ்பதி சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்றாகப் பிசையவும். இந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து, கைகளால் உருண்டையை கொஞ்சம் தட்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அழுத்தி விடவும். இவ்வாறு செய்தவற்றை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பிசுக்கு பதத்தில் பாகாக காய்ச்சவும். இந்தப் பாகில் பாதுஷாவை முக்கி எடுத்து வைக்கவும்.

பாதுஷாவை, சின்னச் சின்னதாக செய்தால், குழந்தைகள் சாப்பிட வசதியாக இருக்கும்.

அதிரசம்

தேவையானவை: ஊற வைத்து அரைத்த பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி, மீண்டும் வெல்லப் பாகை அடுப்பில் வைத்து, உருட்டு பதத்தில் காய்ச்சி இறக்கவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்). இதில், மாவை சிறிது சிறிதாகப் போட்டு கட்டியில்லாமல் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசையவும். மறுநாள் இந்த மாவை எடுத்து, இலை (அ) பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, வட்டமாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுட்ட அதிரசத்தின் மேல் கரண்டியால் அழுத்தி, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்து எடுக்கவும்.

மாவு பிசையும்போது தளர்வாக இல்லாமல், அளவு சரியாக இருந்தால்தான், அதிரசம் நன்றாக வரும்.

ஜிலேபி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், அரிசி மாவு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பேகிங் பவுடர் - கால் டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 கப், மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன், அரிசி மாவு, மஞ்சள் ஃபுட் கலர், பேகிங் பவுடர், தயிர் சேர்த்து வடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, ஜாங்கிரி பிழியும் துணியில் மாவைப் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.

சர்க்கரையை கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சி, அதில் ஜிலேபிகளைப் போட்டு எடுத்து பரிமாறவும்.

மாவை முதல் நாளே கரைத்து புளிக்கவிட்டு செய்வதாக இருந்தால் பேகிங் பவுடர் சேர்க்க வேண்டாம்.

சோமாஸ்

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ரவை, சர்க்கரை - தலா கால் கப், பொட்டுக்கடலை - கால் கப் (மாவாக்கிக் கொள்ளவும்), தேங்காய் - அரை மூடி (துருவி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை: மைதா மாவில் ரவை, உப்பு சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பொட்டுக்கடலை மாவுடன், சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக செய்து கொள்ளவும். ஈரத்துணியில் சுற்றிய மாவை எடுத்து, சிறுசிறு சப்பாத்திகளாக இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சோமாஸ் அச்சிலும் வைத்து செய்யலாம்.

குலோப் ஜாமூன்

தேவையானவை: மைதா மாவு, சர்க்கரை இல்லாத கோவா - தலா ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் கோவா, நெய், சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டியில்லாமல் பிசையவும். தேவைப்பட்டால் பால் சேர்த்துப் பிசையலாம். தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் அந்த உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து இளம்பாகாக காய்ச்சி, செய்து வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும். விருப்பப்பட்டால் பாகில் எசன்ஸ் சேர்க்கலாம்.

வாயில் போட்டதும் கரைந்து விடும் சூப்பர் ஜாமூன் இது.

பொட்டுக்கடலை மாவு உருண்டை (மாலாடு)

தேவையானவை: பொட்டுக்கடலை, சர்க்கரை - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - அரை கப்.

செய்முறை: பொட்டுக்கடலை, சர்க்கரை இரண்டையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும், நெய்யை சூடாக்கி, மாவில் கொட்டி சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

திருமண நிச்சயதார்த்தத்தின் போது இந்த உருண்டை செய்வது சில இனத்தினரிடையே சம்பிரதாயமாக இருக்கிறது.

தேங்காய் பர்ஃபி

தேவையானவை: தேங்காய் துருவல், சர்க்கரை - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பிப் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். இதில் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மிதமான தீயில், கைபடாமல் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்.

தேங்காயை அடி ஓடுவரை துருவாமல், மேலோட்டமாகத் துருவி செய்தால், பர்ஃபி வெள்ளை வெளேரென இருக்கும்.

ரவா லட்டு

தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி - சிறிதளவு, நெய் - அரை கப்.

செய்முறை: ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, அதில் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு சூடாக்கி, மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

நெய் பாதி, வனஸ்பதி பாதியாக சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

எள் உருண்டை

தேவையானவை: எள், வெல்லம் - தலா ஒரு கப்.

செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து இடித்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இது சுலபமாக பிடிக்க வரும். உடலுக்கு நல்ல வலுவைத் தரும்.

கடலை உருண்டை

தேவையானவை: நிலக்கடலை, வெல்லம் - தலா 2 கப், தேங்காய் துருவல் - ஒரு கப்.

செய்முறை: கடலையை வறுத்து, தோல் நீக்கி, ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். இதனுடன் வெல்லம் சேர்த்து மீண்டும் இடித்து, தேங்காய் துருவல் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

நெடுநாள் வைத்திருக்க வேண்டுமென்றால், தேங்காய் சேர்க்காமல் செய்யலாம்.

காஜு கத்லி

தேவையானவை: முந்திரி, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - சிறிதளவு.

செய்முறை: முந்திரியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீரை விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும், அரைத்த முந்திரி விழுதை சேர்த்துக் கிளறவும். நன்றாக சேர்ந்து கடாயில் ஒட்டாமல் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டவும்.

முந்திரியை பொடித்தும் செய்யலாம். வளரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

டைமண்ட் பிஸ்கட்

தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - அரை கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் சமையல் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை பூரிகளாக இட்டு சிறிய டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும். இதை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஈஸியாக செய்யக்கூடிய டேஸ்ட்டான இனிப்பு பிஸ்கட் இது.

பின்குறிப்பு : பண்டிகை காலங்களுக்கு வெகு முன்பாக நான் இதை வெளிட காரணம், நீங்கள் டரியல் & எரர் பார்த்து பழகவே....

No comments: