பாமகவின் பொதுக்குழு இன்று 27.07.11 சென்னையில் கூடி எடுத்த முடிவுகள் கண்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.அது இன்ப அதிர்ச்சி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முடிவே இதற்கு காரணம்.
தமிழகத்தின் பெரிய கட்சிகளாக விளங்கும் அதிமுகவும் திமுகவும் மிக ரகசியமாக பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் இந்த முடிவினைக் கொண்டாடியதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற வாக்குறுதியை நம்பி ஜெயலலிதாவும் கருணா நிதியும் சொன்னது என்னவென்றால், கடைசி வரை நம் அணிக்கு வருவாரா, இல்லை எதிர் அணிக்குப் போவாரா என ஒவ்வொரு தேர்தலிலும் ரத்த அழுத்தம் ஏற்றும் ஒரு பிரச்சினை தீர்ந்ததாக மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். இருவரும் ஒத்த கருத்தோடு இருந்த ஒரே விஷயம் இதுதான் என்பது பொன்னெழுத்துக்களில் பொறிக்கத்தக்க செய்தி.
மக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்றே நாம் பேசிய அனைவரும் கூறுகின்றனர். ஓட்டுப் போடும் வரை ஒரு அணியில் இருப்பது, போட்டவுடன் அணி மாறுவது என்றிருந்ததால் நாம் போடும் ஓட்டு எந்த அணிக்காக இருக்கும் என்று தெரியாமலேயே வாக்களித்து வந்ததாகவும், இனி அந்த குழப்பம் இல்லாமல் ஓட்டுப் போடமுடியும் என்பதாலே மகிழ்ச்சி எனவும் கூறினர். மேலும் பாமக தனியாக நிற்பதால் அவர்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவது மிக சுலபமாகிவிட்டது எனவும் பலர் தெரிவித்தனர்.
பாமகவின் ஜிகே மணி அவருக்கே கூட தெரியாமல் ரகசியமாக அளித்த பேட்டியில் கூறியது.அடிக்கடி அணி மாறும் கட்சி என்ற அவப்பெயரை நீக்கவே மருத்துவர் ஐயா இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகவும் இதன் பிறகு யாருமே அந்தக் குற்றச்சாட்டைக்கூற முடியாது எனவும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். விளக்கமாகச் சொல்லும்படிக் கேட்டதற்கு அணித் தலைமையாக பாமகவே இருப்பதால் அணியிலிருந்து நீங்கவே முடியாது. அதனால் இனி அணி மாறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார்.
(காப்புரிமை பெறாத செய்திகள் - இதனை யார் மீண்டும் பிரசுரித்தாலும் பாமகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்)
Wednesday, July 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment