Tuesday, December 8, 2009

நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார்

பாமரனின் பக்கங்கள் என்ற வலை பூவிலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டது

மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், இந்த வசதி போதும் என்றிருக்க விடுகிறார்களா?

ஒரு நாள் லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்கப் போனபோது ஒரு பையன் பாவமாக, சார்! உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா. ஜஸ்ட் 5 நிமிஷம் என்றான். எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். நான் படிக்கிறேன் சார். இந்த வேலை செய்தால் எனக்கு ஃபீஸ் கட்ட காசு வரும் சார் என்றான்.

சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. நாளைக்கு அல்லது நாளன்னைக்கு டாய்ச் வங்கியிலிருந்து ஒரு முகவர் வருவார். கடன் அட்டை தருவார். அதை பயன் படுத்தி பொருட்கள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை லேண்ட்மார்க்கில் எது வேண்டுமானாலும் வாங்கப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றான்.

வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடன் அட்டையும், என் மனைவியும் ரயில்வே என்பதால் ஒரு கூடுதல் அட்டையும் தபாலில் வந்தது. என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.

பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை.

வெள்ளிக் கிழமையன்று ஒரு தபால் வந்தது.அதே வங்கிதான். ஆக்டிவேட் கூட செய்யப்படாத அட்டைக்கு உண்டான கடன் தொகையளவான 84,000 ரூபாய் என் பெயரில் சாங்க்ஷன் ஆகி நான் கடனாளியாக்கப் பட்டிருக்கிறேனாம்.

மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம்.

கூடுதல் கட்டணம் இல்லை. படிவங்கள் நிரப்பத் தேவையில்லை. ஆவணங்கள் தேவையில்லை. வந்து கடன் வாங்கிக் கொண்டால் போதும். திருப்பித் தரும் காலத்தை நானே தேர்வு செய்து கொள்ளலாம். எப்புடீடா என் மேல இவ்வளவு பாசம். அரசாங்க வங்கிக்கு நான் இவ்வளவு நம்பகமான ஆளா என்று புளகாங்கிதம் அடைந்தேன்.

ஆனாலும், அதே குளத்து மட்டைதானே. இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.

காசோலை அல்லது டிராஃப்ட் மூலமாகவே கடன் வழங்கப் படுமாம். குறைந்த பட்சம் 10000 ரூபாய் கடனாகப் பெறவேண்டுமாம். கடன் அட்டைக்கான கடன் தொகைக்குட்பட்டு இந்தத் தொகை இருக்குமாம். அதாவது 84,000 ரூபாயில் 20000 ரூ கடன் வாங்கினால், மீதம் 64000 ரூபாய் வரை மட்டுமே நான் கடன் அட்டையைப் பயன் படுத்தலாமாம்.

அப்புறம் வருகிறது ஆப்பு. ப்ராசசிங் கட்டணம் 1500 அதிக பட்சம் குறைந்த பட்சம் 499ரூ வரை வசூலிக்கப் படுமாம். (அதான் ஒரு கடுதாசி போட்டுதானே கடன் சேங்க்ஷன் பண்ணியது? விண்ணப்பமும் வேண்டாமாம். அப்புறம் என்ன ப்ராஸஸ் பண்ணப் போகிறானோ?). அப்புறம் வந்தது வட்டிக் கதை. சரி கடன் வாங்கினா வட்டி கட்டாம முடியுமா?

அப்புறம் வெச்சாங்க ஆப்பு. 3 வருஷம் கடனாளியா இருக்கேன்னு எழுதிக் கொடுத்து அப்புறம் முன்னாடியே கட்டிடுறேன்னா அதுக்கு தண்டனையாம். 3.85 சதவீதம் மாதத்துக்கு. என்ன கொடுமை சரவணா? அப்புறம், ஏதோ காரணத்துக்கு ஒரு மாதம் கட்ட முடியாமல் போனால் அதற்கும் அதே சதவீதத்தில் தண்டம் அழ வேண்டுமாம்.

மேற்கொண்டு வரிசையாக ஆப்புக்கள் காத்திருக்கிறது. இக்கட்டில் இருக்கும் ஒரு நபரைத் தூண்டுவது இருக்கட்டும். வணிகத்தில் நியாயமான நடைமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு வங்கி என் விண்ணப்பமின்றி, என் விருப்பின்றி எப்படி ஒரு கடன் அட்டையை தர முடியும். அப்படியானால் என்னுடைய தகவல்களை என் கவனத்திற்கு கொண்டு வராமல் எப்படிப் பெறலாம்?

கூடுதல் கட்டணமில்லை, விண்ணப் படிவமில்லை என்று ஏமாற்றுவது தண்டனைக்கு உரியதா இல்லையா. சீக்கிரம் கட்டினாலும் தண்டனை. ஒரு மாதம் கட்டாமல் விட்டலும் தண்டனை எனில், தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

இதே நாம் தேடிப் போய் கடன் என்று நின்றால் ஆயிரம் ஆவணங்கள், ஆயிரம் சோதனைகள், பிணையாளர்கள் என்று எப்படி அலைக்கழிக்கிறார்கள். தனிநபர் கடன் என்ற ஒன்றை ஆரம்பித்து, வெறும் சம்பளச் சான்றிதழ், தன்னுடைய வங்கியின் மூலம் சம்பளம் பெறுவதற்கான சம்மதம், தன்னுடைய வங்கியிலிருந்து கடனாளியில்லை என்ற சான்றிதழின்றி வேறு வங்கிக்கு சம்பளப் பணத்தை மாற்ற மாட்டேன் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட சம்மதம் மட்டுமே போதும் என்றார்கள்.

இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?

அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.