Wednesday, September 28, 2011

உளவாளிகளின் மர்ம உலகம் – 4

அத்தியாயம் 4
விமானத்துக்குள் மறைந்திருந்த கமாண்டோக்கள்!


இஸ்ரேலில் மொசாத் தலைமையகம் பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கென்யாவுக்குள் முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகளும் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?

மொசாத்தின் திறமைசாலிகளான உளவாளிகள் எனத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இந்த ஆறு பேரில் இரண்டுபேர், விமானங்களையும் செலுத்தக் கூடியவர்கள்.இந்த இருவரும் களத்தில் இறங்கினார்கள்.

தாங்கள் இருவரும் இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்பட நிபுணர்கள் என வெளியாட்களிடம் கூறிக்கொண்டார்கள். தனியார் விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றுக்குள், இவர்கள் நுழைந்தார்கள்.

கென்யாவில் சிறிய விமானங்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனங்கள் அதிகம் உண்டு. காரணம், காடுகளில் மிருகங்களைக் கண்டுகளிக்கும் சபாரி பயணங்களுக்காக வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் வரும் நாடு கென்யா. வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அவை.

அப்படியொரு நிறுவனத்தில் சிறிய செஸ்னா ரக விமானத்தை, இந்த இருவரும் உல்லாசப் பயணிகள்போல வாடகைக்கு எடுத்தார்கள். அவர்கள் இந்த விமானத்தில் ஏறி முதலில் லேக் விக்டோரியா ஏரிக்கு மேலே பறந்து சில புகைப்படங்களை எடுத்தார்கள்.

அதன்பின், விமானத்திலிருந்த ரேடியோ சாதனம் மூலம் உகண்டாவின் விமானக் கட்டுப்பாட்டு டவரைத் தொடர்பு கொண்டார்கள்.

தாங்கள் உல்லாசப் பயணிகளுக்கான புத்தகம் ஒன்றைத் தயாரிக்கும் ஆட்கள் என அறிமுகம் செய்து கொண்டார்கள். அந்தப் புத்தகத்துக்காக ஏர்-வியூவில் புகைப்படங்கள் எடுப்பதாகவும், உகண்டாவின் வான் எல்லைகளுக்குள்ளேயும் பறந்து புகைப்படங்கள் எடுக்கவேண்டும் என்றும், உகண்டாவின் விமானக் கட்டுப்பாட்டு டவரில் அனுமதி கோரினார்கள்.

இவர்கள் மொசாத் உளவாளிகள் என்ற விஷயம் தெரியாமலேயே, விமானக் கட்டுப்பாட்டு டவரில் இருந்து அனுமதி கிடைத்தது.

இவர்கள் பறக்க அனுமதி கேட்டிருந்தது உகண்டாவின் எல்லைக்குள் ஓடும் விக்டோரியா ஏரிக்குமேல் பறந்து புகைப்படம் எடுப்பதற்கு! ஆனால் இவர்களது செஸ்னா விமானம், லேக் விக்டோரியா ஏரியைப் புகைப்படம் எடுத்ததுடன் நின்று விடவில்லை.

அதற்கு அருகிலுள்ள என்டபே விமான நிலையத்துக்கு மேலேயும் பறந்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளியது. அந்த விமான நிலையக் கட்டடத்துக்குள்தான் பணயக் கைதிகளும் இருந்தார்கள். தீவிரவாதிகளும் இருந்தார்கள்.

விமான நிலையத்தின் ரன்வே, அதற்கு அருகிலுள்ள கட்டடங்கள் என்று எல்லாமே புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, உடனே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

இந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, டேவிட் கிம்சே அதிரடித் தாக்குதல் திட்டத்தைப் போடத் தொடங்கினார். அதின் முக்கிய அம்சம் கடத்தல்காரர்களை தொழில்நுட்பத்தை வைத்து குழப்புவது என்பதாக இருந்தது.

மொசாத் ஒரு பக்கமாக அதிரடி மீட்பு நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அரசியல் ரீதியான சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசுத் தலைமை.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், நேரடியாகவே உகண்டாவின் தலைவர் இடி அமீனின் அரண்மனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “இடி அமீனுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசவேண்டும்” என்றார்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கை இடி அமீனின் மாளிகை அதிகாரிகளால் (இடி அமீனின் உத்தரவுப்படி) நிராகரிக்கப்பட்டது.

அப்படித்தான் நடைபெறும் என்பதை அவரும் ஊகித்திருந்தார்.

இடி அமீன் பேசமாட்டார் என்பதை ஊகித்திருந்தும், அவர் இடி அமீனின் மாளிகையைத் தொடர்பு கொண்ட காரணமே வேறு. அங்கிருந்த முக்கிய அதிகாரிகளுடன், அவரால் பேச முடிந்தது. அதுதான் அவருக்குத் தேவை.

இடி அமீன் மாளிகையின் முக்கிய அதிகாரிகளுடன் பேசும்போது, “உங்களது நாட்டின் (உகண்டா) விமான நிலையத்தில் இஸ்ரேலியப் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதால், இது ஒரு சம்பிரதாயமான தொலைபேசித் தொடர்பு” என்று தெரிவித்தார் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். அத்துடன் அந்த பணயக் கைதிகளுக்கு உகண்டா அரசு உணவு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

இதைச் சொல்வதற்கா போன் பண்ணினார்? இல்லை.

இந்தப் பேச்சுக்களின்போது, கதையோடு கதையாக, பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்களின் சகல கோரிக்கைகைகளும் ஏற்பது என்ற நிலைப்பாட்டை இஸ்ரேலிய அரசு எடுத்திருப்பதாக (பொய்தான்!) மீண்டும், மீண்டும் கூறினார்.

இடி அமீனின் அரண்மனையிலுள்ள அதிகாரிகளுக்கு இதை ஏன் அவர் சொல்ல வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவது, இஸ்ரேல் கடத்தல்காரர்களுக்குப் பணிந்து போகப்போகின்றது என்ற நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏற்பட்டால்தான் பாதுகாப்பு விஷயத்தில் உகண்டா அஜாக்கிரதையாக இருக்கும்.

அப்படியொரு நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏன் ஏற்பட வேண்டும்?

தமது பரிவுக்குரிய தீவிரவாத அமைப்பின் கடத்தல்காரர்கள்மீது, தமது நெடுநாள் விரோதியான இஸ்ரேலினால், தமது நாட்டு விமான நிலையத்தில் வைத்தே தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்ற விஷயத்தை உகண்டா ஊகித்து விட்டால் என்ன நடக்கும்? உகண்டா தனது ராணுவத்தைக் கொண்டுவந்து அந்த விமான நிலையத்தைச் சுற்றி நிறுத்தி விட்டாலும் விடலாம்.

அப்படியான உஷார்படுத்தலைத் தடுத்து, உகண்டா அரசை அஜாக்கிரதையாக இருக்க வைப்பதே இந்தத் தொலைபேசி உரையாடலின் முதலாவது நோக்கம்.

இரண்டாவது நோக்கம், இடி அமீனின் மாளிகை அதிகாரிகளுக்குக் கூறப்பட்ட இந்த விஷயம் எப்படியும் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் போய்ச்சேரும் என்பதை, இஸ்ரேல் ஊகித்திருந்தது. அப்போதுதான் அவர்களும் அலட்சியமாக இருப்பார்கள்.

ஒரு ராஜதந்திரியின் தொலைபேசி அழைப்பு உளவுத்துறை ஆபரேஷனுக்கே பாதை அமைத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்தீர்களா? இஸ்ரேலைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான ஒரு விளையாட்டுத்தான்!

இந்த ராஜதந்திர விளையாட்டைச் செய்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை இஸ்ரேல். ராஜதந்திர அளவில் மற்றுமோர் வேலையும் செய்தது. வெளிவிவகார அமைச்சின் மூலம் தமது நட்பு நாடுகளின் தூதரகங்களையும் தொடர்பு கொண்டது. அப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட தூதரகங்களிடமும், “கடத்தல்காரர்களிடம் பணிந்து போவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை” என்றே கூறப்பட்டது.

இப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் ஒன்று பிரிட்டிஷ் தூதரகம்.

“உகண்டாவிலிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டது. இதனால், உகண்டாவில் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்த உங்களது (பிரிட்டனின்) தூதரக உயரதிகாரியை எங்களது சார்பில் உகண்டாவில் பேச்சு வார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?” என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டது.

பிரிட்டிஷ் அரசும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தது.

இஸ்ரேலின் சார்பில் உகண்டா அரசுடன் பேசுவதற்கு அங்கிருந்த தூதரக உயரதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த பிரிட்டிஷ் தூதரக உயரதிகாரியும், இஸ்ரேல் கடத்தல்காரர்கள் கேட்பதையெல்லாம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றது என்றே உகண்டா அரசிடம் கூறிக்கொண்டிருந்தார்.

(இஸ்ரேலுக்காக உகண்டா அரசுடன் பேசிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்பதாகக் கூறுவது டூப் என்பதை ஊகித்திருந்தாரா என்பது தெரியவில்லை)

ராஜதந்திர விளையாட்டுகள் இப்படியாக ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கமாக மொசாத்தின் அதிரடி நடவடிக்கையின் முதற் கட்டம் தொடங்கியது.

இஸ்ரேலுக்குச் சொந்தமான ஒரு போயிங் 707 விமானம் (ஆம். அந்த நாட்களில் 707தான் பாவனையிலிருந்த பிரபல விமானம்!) ஒன்று டெல்அவிவ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட 9 மணிநேரம் பறந்தபின், கென்யாவின் நைரோபி விமான நிலையத்தில் போய் தரையிறங்கியது அந்த விமானம்.

நைரோபி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதுத் கென்ய விமான நிலைய அதிகாரிகள் தமது வழமையாக செயற்பாடாக, விமானத்துக்குள் ஏறி செக் பண்ணினார்கள்.

மொசாத்தின் ஆலோசனைப்படி, அந்த விமானம் ஒரு பறக்கும் வைத்தியசாலை போலவே அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் என்று நிறையவே இருந்தன. அத்துடன் இஸ்ரேலிய டாக்டர்கள் குழு ஒன்றும் அந்த விமானத்தில் இருந்தது.

உண்மையில் அந்தக் குழுவில் இருந்தவர்கள் டாக்டர்கள் அல்ல. அவர்கள் மொசாத்தின் ஏஜன்ட்கள்தான் என்ற விபரம், நைரோபி விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட முக்கிய விஷயம், இந்த விமானத்தின் கீழ்ப்பகுதி (கார்கோ ஏற்றுமிடம்) மாற்றியமைக்கப்பட்டு, அதனுள் கொமாண்டோக்கள் மறைந்திருந்தனர்.

இவர்கள் உபயோகித்த 707 விமானத்திற்கு வெளியே எந்த விதமான எழுத்தும் எழுதப்பட்டிருக்கவில்லை. வழமையாக எந்தவொரு விமானத்திலும் குறைந்த பட்சம் அது எந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் என்றோ, எந்த நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்றோ எழுதப்பட்டிருக்கும். இதில் அப்படி எதுவுமே இல்லை.

அந்த விமானத்தைச் செலுத்திய இரு விமானிகளும், பயணிகள் விமானங்களைச் செலுத்தும் ஆட்களல்ல. இஸ்ரேலிய விமானப்படையைச் சேர்ந்த விமானிகள்!

இஸ்ரேலின் போயிங் 707 விமானம் நைரோபி விமான நிலையத்தில் தரையிறங்கிய அதே நேரத்தில், தொடரின் முன்பகுதியில் நாங்கள் கூறிய லேக் விக்டோரியாப் பாதை வழியாக 6 மொசாத் ஏஜன்ட்களும் உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்துவிட்டிருந்தார்கள்.

இந்த ஆறுபோரிடம் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தன.

மொசாத் தலைமையினால் அவர்களுக்கு இஸ்ரேலில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த திட்டப்படி, அவர்கள் ஆறுபேரும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்திருக்க வேண்டும். அங்கிருந்து தரையில் நடைபெறும் சம்பவங்களை நைரோபியிலுள்ள தொலைத் தொடர்புக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்கவேண்டும்.

அது மாத்திரமல்ல அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மற்றொரு முக்கிய வேலையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அது, தம்மிடமுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களையும், உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.

அதை எப்படிச் செய்யப்போகிறார்கள்?
(29 -09-2011 ...நாளை தொடரும்)

உளவாளிகளின் மர்ம உலகம் – 3

அத்தியாயம் 3
விமான நிலையத்தை உளவு பார்த்தல்!

தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

இந்த விவகாரம், கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும். அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை பணயக் கைதிகளை மீட்க அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.

அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றது!

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல,மிகத் தெளிவாகபுரியக்கூடிய விடயம் இது. இஸ்ரேலிய விமானம் வருவது, பணயக் கைதிகளை மீட்கும் ரகசிய ஆபரேஷன் என்பதை கென்யா ஊகித்திருந்தது.

ஆனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல், தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை. அதனால்தான் துருவித் துருவி விபரங்களைக் கேட்டது கென்யா.

டேவிட் கிம்சீ, மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.
இஸ்ரேல் சொன்ன பொய்

“இந்த விமானத்துக்கும் பணயக் கைதிகளுக்கும் சம்மந்தமே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை கூடாது. அது கென்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலுள்ள ராஜாங்க உறவுகளைக் கெடுத்துவிடும்” என்பதை டேவிட் ஒப்புக்கொண்டார்.

அதே நேரத்தில், பணயக் கைதிகளை மீட்க அதிரடித் திட்டம் ஒன்றுக்காகத்தான் இந்த விமானம் என்று கூறவும் அவர் விரும்பவில்லை.

எனவே, இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் புதிதாக, அதே நேரத்தில் நம்பும்படியாக ஒரு கதை கூறுவது என மொசாத் முடிவெடுத்தது. அந்தக் கதைதான் கென்யாவுக்கும் இஸ்ரேலினால் சொல்லப்பட்டது.

அந்தக் கதை என்ன?

“விமானக் கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பணயக் கைதிகளை மீட்கவே இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது. ஆனால், கடத்தற்காரர்களின் கோரிக்கையை இஸ்ரேல் நிறைவேற்றிய பின்னரும், பணயக் கைதிகளை நோக்கித் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டால் என்ன செய்வது? ஒருவேளை அப்படி நடந்தால், உடனடி மருத்துவ உதவிகளைச் செய்யவே இந்த விமானம்!

இது ஒரு பறக்கும் வைத்தியசாலை போல அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் டாக்டர்கள் இருப்பார்கள். விமானத்துக்கு உள்ளேயே சகல மருத்துவ உபகரணங்களுடன் ஆபரேஷன் தியேட்டர் உண்டு. அப்படியான ஒரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பவே அனுமதி கேட்கிறோம்” என கென்யாவின் வெளிவிவகார அமைச்சிடம் கூறப்பட்டது.

விமானத்துக்கும் மொசாத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போலவே ஒரு தோற்றம் காண்பிக்கப்பட்டது.

மருத்துவ உதவி என்ற இந்தக் கோரிக்கையுடன் சென்றபோது கென்யாவால் அதை மறுக்க முடியவில்லை. சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய விமானம் நைரோபி விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை கென்யா அரசு கொடுத்தது. மனிதாபிமான ரீதியிலான அனுமதி என்று கென்யாவின் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

அந்த ஏற்பாடும் சரி. இனி அடுத்த பிரச்சினை.
உளவாளிகள் உகண்டாவுக்குள் எப்படி நுழைவது?

மொசாத் ஏற்கனவே கென்யாவுக்குள் தனது உளவாளிகள் ஆறு பேரை அனுப்பிவிட்டது. மேலதிக உளவாளிகளையும் அங்கே அனுப்பலாம்.

ஆனால், கென்யாவிலிருந்து உகண்டா நாட்டுக்குள் இஸ்ரேலிய உளவாளிகள் நுழைவது எப்படி என்பதுதான் இன்னமும் குழப்பமாக இருந்தது.

கொமாண்டோக்களை ஏற்றிச் செல்லும் விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் போய் அதிரடியாக இறங்கி, பணயக் கைதிகளை மீட்பது என்பதுதான் மொசாத்தின் திட்டம். அப்படிச் செய்வதற்கு முன்னர் மொசாத்தின் உளவாளிகள் அந்த விமான நிலையம் இருக்கும் ஏரியாவுக்குள் ஊடுருவிச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

முக்கியமாக அந்த விமான நிலையம் பற்றிய உளவுத் தகவல்கள் வேண்டும்.

விமான நிலையத்தில் இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது தெரிய வேண்டும். எந்த நேரத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கின்றது என்பதை அறிய வேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, அந்த விமான நிலையத்தின் முழுமையான வரைபடம் வேண்டும்.

இந்தக் காரணங்களுக்காக முதலில் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைய வேண்டும்.

இஸ்ரேலியர்களை உத்தியோகபூர்வமாக உள்ளே நுழைய இடி அமீன் அனுமதிக்க மாட்டார் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும். எனவே யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான உள்ளே நுழையவேண்டும்.
அடுத்த சிக்கல், P.L.O.!

மொசாத் இப்படி உகண்டாவுக்குள் நுழைவதற்கு மற்றுமோர் பெரிய தடையும் இருந்தது. அது பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம்.

அந்த நாட்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை வெளிநாடுகள் பலவற்றில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தது. அதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் போராளிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமல்லவா?

அப்படியான பயணங்களுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் அந்த நாட்களில் நுழைவாயிலாகப் பயன்படுத்திய விமான நிலையம் எது தெரியுமா?

இதே என்டபே விமான நிலையம்தான்!

என்டபே விமான நிலையத்தினூடாக உள்ளே நுழையவும், அதனூடாக மற்றய ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு இடி அமீன் முழுமையான அனுமதி வழங்கியிருந்தார். அதைவிட உகண்டாவுக்கு உள்ளே பாலஸ்ததீன விடுதலை இயக்கத்துக்கு ஒரு ரகசியத் தலைமை அலுவலகம் அமைக்கவும் இடி அமீனால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
யாருடைய வீடு அது தெரியுமா?

உகண்டாவுக்குள் அமைக்கப்பட்டிருந்த இந்த ரகசியத் தலைமை அலுவலகம் பற்றியும் அனேகருக்குத் தெரியாத ஒரு சுவாரசியமான தகவல் உண்டு.

1972ல் இடி அமீன் இஸ்ரேலுடன் உகண்டாவுக்கு இருந்த ராஜாங்கத் தொடர்புகளையெல்லாம் துண்டித்துக் கொண்டார். இஸ்ரேலியத் தூதரகத்தையும் உகண்டாவிலிருந்து வெளியேற்றினார். அப்போது இஸ்ரேலியத் தூதுவர் உகண்டாவில் தங்கியிருந்த வீட்டையும் தம்வசம் எடுத்துக் கொண்டார் இடி அமீன்!

அந்த வீட்டைத்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ரகசியத் தலைமையகமாக உபயோகிக்கக் கொடுத்திருந்தார்.

அந்த வீட்டில் இருந்துதான் அவர்கள், இஸ்ரேவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான உத்தரவுகள் போய்க்கொண்டிருந்தன.

இந்த விபரம் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. மூலமாகவே மொசாத்துக்குத் தெரிய வந்திருந்தது.

இப்படியாக பாலஸ்தீன் ஆட்கள் அங்கிருப்பது, மொசாத்துக்கு அடுத்த சிக்கலாக இருந்தது.

மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான்.

தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது.

ஏனென்றால் அந்த வீடு என்டபே விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது!

விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் இஸ்ரேலியக் கொமாண்டோக்கள், என்டபே விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்துவதே திட்டம். அப்போது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள அந்த வீட்டில் இருந்தால் என்னாகும்?

அவர்களிடம் இருந்து ஆயுத ரீதியான எதிர்ப்புக் கிளம்பலாம். அதற்கு ஏற்ற ஒழுங்குகளையும் செய்துகொள்ள செய்யவேண்டும்.

இந்த விபரங்களை அறிய ரிஸ்க் எடுத்தாவது மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்குள் அனுப்பியே ஆகவேண்டும்.
இரு உளவாளிகள் ஊடுருவுகின்றனர்

டேவிட் கிம்சே இதற்காக இரண்டு மொசாத் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைவதற்குத் தயார் செய்தார். அவர்கள் இஸ்ரேலில் இருந்து முதலில் கென்யாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

கென்யா சென்றடைந்த அவ்விரு உளவாளிகளும் அங்கிருந்து உகண்டாவுக்குள் ஏரி ஒன்றின் ஊடாகவே ஊடுருவுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கென்யாவிலிருந்து திருட்டுத்தனமாக படகு ஒன்றின் மூலம் லேக் விக்டோரியா ஏரியில் பயணம் செய்து உகண்டாவுக்குள் நுழைந்தார்கள்.

இதிலுள்ள மற்றொரு முக்கியமான விஷயம், இரு உளவாளிகளின் இந்த ஊடுருவல் கென்யாவின் உளவுத் துறைக்குத் தெரிந்தே நடைபெற்றது.

உண்மையில் படகு மூலமாக உகண்டாவுக்குள் நுழையும் ஐடியாவை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்குக் கொடுத்ததே கென்யாவின் உளவுத்துறைதான். அத்துடன் இரு மொசாத்தின் உளவாளிகளையும் அந்தப் பாதையூடாக உகண்டாவுக்குள் அழைத்துச் செல்ல கென்யாவின் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரையும் கூடவே அனுப்பி வைத்திருந்தது கென்ய உளவுத்துறை.

என்டபே பகுதிக்குள் இந்த மூன்றுபேரும் ஊடுருவி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தால், வீடு காலி!

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர், உகண்டாவில் இருந்து தங்களது நடவடிக்கைகளையெல்லாம் அங்கோலா நாட்டுக்கு நகர்த்திவிட்டார்கள் என்ற விபரம் அதன் பின்னரே மொசாத்துக்குத் தெரியவந்தது.

ஒரு தடை நீங்கியது. அதிரடி ஆப்பரேஷனின்போது விமான நிலையத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தேவையில்லை.

இந்த இடத்தில், இவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஒன்றும் அடித்தது.
பாதுகாப்பு அதிகாரியின் உறவினர்

இரண்டு மொசாத் உளவாளிகளுடன் கென்யாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சென்றிருந்தார் என்று சொன்னோமல்லவா… அந்தப் பாதுகாப்பு அதிகாரிக்கு உகண்டாவில் நல்ல தொடர்புகள் இருந்தன.

அந்தத் தொடர்புகள் மூலம் தகவல் சேகரித்ததில் அவரின் மனைவியின் உறவினர் ஒருவர் விமான நிலையத்தில் பணயக் கைதிகளை காவல் காக்கும் பணியில் இருப்பது தெரிய வந்தது.

குறிப்பிட்ட இந்த உறவினருடன் பேசிய கென்யப் பாதுகாப்பு அதிகாரி, தங்களை எப்படியாவது என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அது ஆபத்தான விளையாட்டு என்று அந்த உறவினர் மறுத்துவிட்டார்.

காரணம், இரு இஸ்ரேலிய உளவாளிகளையும் அவர்களது உருவத் தோற்றத்தை வைத்தே கடத்தற்காரர்கள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இப்போது ஒரு மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டது.

இஸ்ரேலிய உளவாளிகள் இருவரையும் பாதுகாப்பான இடம் ஒன்றில் விட்டுவிட்டுத் தன்னை மாத்திரம் தனியே என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் கென்யப் பாதுகாப்பு அதிகாரி.

இதில் சிக்கல் ஏதும் இருக்காது. காரணம் உகண்டா நாட்டவருக்கும் கென்ய நாட்டவருக்கும் உருவ அளவில் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

இதற்கு அவரது உறவினர் ஒப்புக்கொண்டார். அவருடன் இவரும் ஒரு காவல் காக்கும் சகா என்ற தோற்றத்தில் என்டபே விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டார்.

அங்கே நோட்டமிட்டதில் பணயக் கைதிகள் அனைவரும் உயிருடன் இருப்பதை இவர் கண்களால் பார்த்தார். அத்துடன் என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த காவல் ஏற்பாடுகளையும் இந்தப் பாதுகாப்பு அதிகாரி மனதில் பதிவு செய்துகொண்டார்.

மொத்தம் 15 பேர் பணயக் கைதிகளைக் காவல்காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களில் சிலர் இப்படியான வேலைகளுக்கே புதியவர்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. இந்தப் புதியவர்கள் துப்பாக்கியையே முன்பின் இயக்கிப் பழக்கமில்லாத ஆட்கள் என்பது அவர்கள் துப்பாக்கியை மிரட்சியுடன் பிடித்திருந்ததில் இருந்தே தெரிந்தது.

துப்பாக்கி பிடிக்கத் தெரிந்த மற்றயவர்களும் அனுபவசாலிகள் அல்ல. அவர்களும் நகத்தைக் கடித்தபடி பயத்துடனும் பதட்டத்துடனும் காணப்பட்டார்கள்.

இந்தத் தகவல்கள் ரேடியோ மூலம், இஸ்ரேலிலுள்ள மொசாத் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதே நேரத்தில் கென்யாவுக்கு முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?

(தொடரும்)

உளவாளிகளின் மர்ம உலகம் – 2

அத்தியாயம் 2
மொசாத் திட்டமிடத் தொடங்குகிறது!

“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார்.

“இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. மொசாத் சுதந்திரமாகச் செயற்படலாம்”
மொசாத் களத்தில் இறங்கியது!

இதில் மொசாத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கியிருக்கும் இடம்!

அது உகண்டா.

அதில் என்ன சிக்கல்? 1972ம் ஆண்டே உகண்டா அரசு இஸ்ரேலுடன் இருந்த ராஜாங்க உறவுகளைத் துண்டித்து விட்டிருந்தது. அப்போதே உகண்டாவிலிருந்த இயங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் உகண்டாவை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தார்கள்.

அதற்குப் பின்னர் எந்தவொரு இஸ்ரேலியரும் உகண்டாவுக்குள் நுழைவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத காரியமாகப் போயிருந்தது.

எனவே இந்த விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் இறக்கப்பட்டபோது, உகண்டா நாட்டிலேயே மொசாத்தின் ஏஜன்ட்கள் யாரும் இருக்கவில்லை. நிலைமை கொஞ்சம் கஷ்டமானதுதான் என்பது மொசாத்தின் தலைவருக்குப் புரிந்தது.

இது ஒரு கடினமான, அதே நேரத்தில் பல உயிர்களுடன் சம்மந்தப்பட்ட ஒப்பரேஷன். இதைச் சரியாகவும் துல்லியமாகவும் நடத்த வேண்டுமானால், அதற்கு இந்த ஒப்பரேஷனை மொசாத்தில் பணிபுரியும் மிகத் திறமைசாலியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொசாத்தின் தலைவர் யோசித்தபோது, அவரது நினைவில் முதலில் தோன்றிய பெயர் டேவிட் கிம்சே!

மொசாத்தின் தலைவர் டேவிட் கிம்சேயை உடனடியாக அழைத்து இந்த ஒப்பரேஷன் பொறுப்பைக் கொடுத்தார். இந்த ஒப்பரேஷனை டேவிட் விரும்பிய வகையில் மேற்கொள்ளப் பூரண சுதந்திரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

டேவிட் யோசித்தார்.

ஒப்பரேஷனுக்காக மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்கு உள்ளே அனுப்ப முடியாது. உகண்டாவுக்கு அருகில் உள்ள ஏதாவது நாடு ஒன்றில் வைத்துத்தான் இந்த ஒப்பரேஷன் செயற்பட வேண்டும். அதற்கு அந்த நாடு அல்லது அந்த நாட்டின் உளவுத்துறை சம்மதிக்க வேண்டும். மொசாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அருகில் உள்ள எந்த நாடு கைகொடுக்கும்?

உகண்டாவுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு நாடு பற்றியும் டேவிட்டால் அலசப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அந்த நாட்டிலிருந்து உகண்டா எவ்வளவு தூரம்? அந்த நாட்டிலிருந்து உகண்டாவுக்குள் நுழைவதென்றால் எப்படி நுழையலாம் என்று பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இறுதியில் டேவிட் தேர்ந்தெடுத்த நாடு கென்யா.

இந்தத் தகவல் மொசாத்தின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் கென்யாவின் உளவுத்துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு அவரைக் கோரினார் டேவிட்.

மொசாத்தின் தலைவருக்கு கென்யாவின் உளவுத்துறைத் தலைமையுடன் நேரடிப் பரிச்சயம் இருந்தது. மொசாத்தின் தலைமை உடனடியாக கென்யா நாட்டு உளவுத்துறையின் தலைவரைத் தொடர்பு கொள்ள, கென்ய நாட்டு உளவுத்துறை மொசாத்துக்கு உதவுவதற்கு சம்மதித்தது.

அடுத்த கட்டமாக, மொசாத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளான ஆறு உளவாளிகள், கென்யத் தலைநகரான நைரோபியில் போய் இறங்கினார்கள்.

விமானத்தில் தீவிரவாத அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடி ஒப்பரேஷன் ஒன்றை நடாத்த மொசாத் தனது திறமைசாலிகளான 6 உளவாளிகளை அனுப்பி வைக்கிறது என்ற விபரம் கென்யாவின் உளவுத்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கென்யாவில் தேவையானவற்றைச் செய்து கொடுக்குமாறு ஒரு கோரிக்கையும் இஸ்ரேலில் இருந்து கென்யாவுக்கு ராஜதந்திர மட்டத்தில் போய்ச் சேர்ந்தது.
உளவாளிகள் தங்கவைக்கப்பட்ட வீடு

ஆறு மொசாத் உளவாளிகளும் கென்யாவின் நைரோபி நகரை அடைந்தவுடன் அவர்களை சேஃப் ஹவுஸ் என உளவு வட்டாரங்களில் குறிப்பிடப்படும் பாதுகாப்பான வீடுகளில் ஒன்றில் தங்கவைத்தார்கள் கென்ய நாட்டு உளவுத்துறை அதிகாரிகள்.

பொதுவாகவே எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இப்படியான சேஃப் ஹவுஸ்களை வைத்து இயக்குவது வழக்கம். வெளிப்படையாக மக்கள் குடியிருப்புகள் போலவே தோற்றமளிக்கும் இந்த வீடுகள் உளவுத்துறையினரின் பிரத்தியேக பாவனைகளுக்கானவை.

மொசாத்தின் ஸ்பை மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட டேவிட் கிம்சே. மொசாத்தின் சாதனை படைத்த பல ஒப்பரேஷன்களின் திட்டமிடல் இவருடையதுதான்!

நைரோபியில் இப்படியான சுமார் 20 வீடுகளை கென்யாவின் உளவுத்துறை வைத்திருந்தது. மக்கள் குடியிருப்புக்களில் கலந்திருந்த இந்த வீடுகள் தகவல் தொடர்புக்கான பாதுகாப்பான தொலைபேசி இணைப்புக்ளைக் கொண்ட வீடுகள். ஆனால், அந்த தொலைபேசி இணைப்புக்கள் கென்யாவின் தொலைத் தொடர்பு இலாகாவினால் நிர்வகிக்கப்படும் இணைப்புக்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அங்கிருந்து மேற்கொள்ளப்படும் எந்தத் தொலைத் தொடர்பும் கென்ய உளவுத்துறை அறியாமல் வெளியே செல்ல முடியாது!

முதலில் அனுப்பப்பட்ட ஆறு மொசாத் உளவாளிகளில் இரண்டுபேர் உளவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் டெக்னீஷின்கள்கூட. அவர்கள் இதுபோன்ற ரகசிய ஒப்பரேஷன்கள் வெளிநாடுகளில் மொசாத்தால் நடாத்தப்படும்போது வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சனல் ஒன்றை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

அவர்கள் மூலமாக, நைரோபியில் இருந்த வீட்டுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் நகரத்துக்கும் நேரடியாக சட்டலைட் தொலைத் தொடர்பு இணைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இந்த இணைப்பு கென்யாவின் தொலைத்தொடர்பு இலாகாவுக்கு ஊடாகச் செல்லாத இணைப்பு என்பதலால், இவர்களது உரையாடல்களை கென்யாவில் யாருமே கேட்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதன்பின் இந்தப் பாதுகாப்பான வீட்டிலிருந்த உளவாளிகளுக்கு உத்தரவுகள் மொசாத்தின் தலைமையகத்தில் இருந்து வரத்தொடங்கின.

அதிரடி ஒப்பரேஷனுக்காக இப்படி உகண்டாவுக்கு வெளியே கென்யாவில் முன்னேற்பாடுகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் உகண்டாவில் என்ன நடந்துகொண்டிருந்தது?
என்டபே விமான நிலையத்தில்…

எயார் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது.

அதிரடித் தாக்குதல் நடாத்தப்படத் திட்டமிடப்படும் இந்த என்டபே விமான நிலையம் உகண்டாவின் தலைநகரில் இருந்தாலும், அளவில் சிறியது. அதனூடாக நடைபெறும் விமானப் போக்குவரத்தும் மிக மிகக் குறைவு. எனவே பயணிகள் நடமாட்டம் அந்த விமான நிலையக் கட்டடத்தில் பெரிதாக இருப்பதில்லை.

இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதியை முழுமையாகவே கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, பணயக்கைதிகளை அங்கே வைத்திருந்தார்கள்.

உகண்டா நாட்டின் அன்றைய தலைவர் இடி அமீன் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு எதிரான நிலை எடுத்திருந்த காலப்பகுதி அது. இதனால், கடத்தல்காரர்களுக்கு என்டபே விமான நிலையத்தில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு ஒன்று மற்றொரு நாட்டு விமானத்தைப் பயணிகளுடன் கடத்திக் கொண்டு வந்து மூன்றாவது நாடு ஒன்றில் வைத்திருக்கின்றது. இப்படியான நிலையில் விமானம் இறக்கப்பட்டிருக்கும் மூன்றாவது நாடு வழமையாகக் கடத்தல்காரர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கும். அவர்கள்மீது தாக்குதல் நடாத்த முடியுமா? பணயக்கைதிகளைக் காப்பாற்ற முடியுமா? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் உகண்டாவில் இது தலைககீழாக இருந்தது.

கடத்தல்காரர்களும், உகண்டாவின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நடந்து கொண்டார்கள். அதற்கு ஒருபடி மேலேபோய், கடத்தல்காரர்கள் ஓய்வு எடுக்கும்போது உகண்டாவின் பாதுகாப்புப்படை அதிகாரிகளால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட லோக்கல் ஆட்களே பணயக் கைதிகளை காவல்காத்தார்கள்.

உகண்டா அரசே கிட்டத்தட்ட கடத்தல்காரர்களின் பக்கத்தில் இருந்து செயற்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.

அங்கிருந்த யாருக்கும், பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் பணயக்கைதிகள் உட்பட, இவர்களை விடுவிக்க மொசாத் அதிரடி நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுகின்றது என்ற விஷயம் தெரியாது! இதுதான் அங்கிருந்த நிலை.

உகண்டாவில் நிலைமை அப்படியிருக்க இஸ்ரேலில் மொசாத்தின் தலைமைச் செயலகத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருந்தது?
மொசாத்தின் திட்டம்

மொசாத்தின் அதிரடி மீட்பு நடவடிக்கையை திட்டமிட்டுக் கொண்டிருந்த டேவிட் கிம்சே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். என்னதான் கென்யா நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் கிடைத்திருந்தாலும், அதிரடி மீட்பு நடவடிக்கைகளை முற்று முழுதாக கென்யா நாட்டிலிருந்து நடத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கும் ஒரு காரணம் இருந்தது.

இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க உறவு என்ற ரீதியில் கென்யா இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், உள்மனதில் அவர்களுக்கும் இஸ்ரேல்மீது கோபம் இருக்கலாம். அதுவும் தங்களுக்கு அருகிலுள்ள நாடு (உகண்டா) ஒன்றில் இஸ்ரேலிய உளவுத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப் போகின்றது என்பதை கென்யா எந்தளவுக்கு விரும்பும் என்று ஊகிப்பது கஷ்டம்.

யார் கண்டது, சில வேளைகளில் கவிழ்த்து விட்டாலும் விடலாம்.

இது பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பது மாத்திரமல்ல. இப்படியொரு ஒப்பரேஷன் தோல்வியில் முடிந்தால் அது இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய கடும் அவமானமாகவும் இருக்கும்.

இதனால் இந்த அதிரடித் தாக்குதல் மீட்பு எப்படி நடைபெறப்போகின்றது என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாமல் – (கென்யா உட்பட) – இருக்கவேண்டியது அவசியம் என்று டேவிட் கிம்சீ முடிவு செய்திருந்தார்.
கொமாண்டோக்களை அனுப்ப வேண்டும்!

ஆனால் சிக்கல் என்னவென்றால், பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் இருப்பது ஆபிரிக்காக் கண்டத்தில். இந்த அதிரடித் தாக்குதலுக்காகக் கொமாண்டோக்களை இஸ்ரேலில் இருந்து விமானம் மூலமாகக் கொண்டுபோய் ஆபிரிக்காவில் இறக்க வேண்டும்.

இஸ்ரேலில் இருந்து அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்த கொமாண்டோக்களை விமானமூலம் கொண்டு சென்றாலும், உகண்டாவுக்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு நாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.

அந்த நாட்களில் இஸ்ரேலில் இருந்து ஆபிரிக்கா சென்று, மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவருமளவுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவொரு விமானமும் இஸ்ரேலிடம் இருந்ததில்லை. தற்போது இருப்பதுபோல விமானத்துக்கு வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அப்போது இருக்கவில்லை.

இஸ்ரேலுக்கு ஆபிரிக்கக் கண்டத்தில் அந்த நாட்களில் இருந்த அரசியல் உறவுகள் காரணமாக இஸ்ரேலுக்கு அந்தப் பிராந்தியத்தில் உதவக்கூடிய நாடுகள் அதிகமில்லை.

வேறு வழியில்லாமல் இதற்கும் கென்யாவிடம்தான் போகவேண்டும் என்ற நிலை.
இஸ்ரேலிய தந்திரம்

இந்த இடத்தில் இஸ்ரேல் ஒரு சிறிய தந்திரம் செய்ய முயன்றது. ஏற்கனவே உளவுத்துறையான மொசாத் மூலமாக கென்யாவில் இந்த அதிரடி நடவடிக்கைக்காக சில முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை… இது வெறும் சிவில் விமான விவகாரம் என்று காட்டி கென்யாவிடம் அனுமதி வாங்க முயன்றது இஸ்ரேல்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மூலம் கென்யாவின் வெளிவிவகார அலுவலகத்தில் தமது விமானம் ஒன்றுக்கு நைரோபி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கேட்பதாக முடிவு செய்யப்பட்டது. சும்மா விமானம் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பவேண்டும் என்பதைத்தவிர, வேறு எந்த விபரமும் சொல்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இப்படியான கோரிக்கை கென்யா நாட்டு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, அவர்கள் எரிபொருள் நிரப்பப்படவேண்டிய குறிப்பிட்ட இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்களை கேட்கத் தொடங்கினார்கள்.

என்ன வகை விமானம் அது? விமானத்தில் என்ன இருக்கிறது? விமானம் கென்யாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு எங்கே செல்லப் போகின்றது? இப்படியான பல கேள்விகள் வந்து விழுந்தன.

இதற்கெல்லாம் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சிடம் பதில் இல்லை.

“இந்த விபரங்களைக் கூறினால்தான் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கமுடியும்” என்று கென்ய வெளிவிவகார அமைச்சுக் கூறிவிட, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மொசாத்தைத் தொடர்பு கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டது.

விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் விமானக் கடத்தல் ஒன்றின்மூலம் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்திதான் அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இது கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும்.

அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை அதற்குள் அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.

அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றதென்றால், அது நிச்சயம் இந்தப் பணயக் கைதிகளுடன் சம்மந்தமாக ஏதோ ரகசியக் ஒரு காரியம் என்பதை கென்யா ஊகித்திருந்தது. இதனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல் தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை.

டேவிட் கிம்சீ மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.

முடிவில் மொசாத்தின் மற்றொரு திட்டம் உருவாகியது.
(தொடரும்)

உளவாளிகளின் மர்ம உலகம் – 1

அத்தியாயம் 1
எயார் பிரான்ஸ் விமானம் கடத்தல்

ஜூன் மாதம் 27ம் திகதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.

எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.

வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.

அது போலவே இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் மிகப்பெரிய சதவிகிதமானவர்கள் இஸ்ரேலியர்கள். அதற்கு அடுத்தபடியாக கிரேக்க நாட்டவர்களும், பிரென்சுக்காரர்களும் இருந்தார்கள். இவர்களைத் தவிர மிக சொற்ப எண்ணிக்கையில் வேறு நாட்டவர்கள்.

எயார் பிரான்ஸ் விமானப் பிரான்ஸில் இருந்து கிளம்புவதால் அதில் பிரென்ச்காரர்கள் இருப்பது சரி. ஆனால் கிரேக்க நாட்டவர்கள் பிரான்சிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள இந்த விமானத்தில் ஏன் அதிகமாக தென்படுகிறார்கள்?
விமானம் முதலில் தரையிறங்கப்போவது ஏதென்ஸ்!

அந்த நாளைய பாரிஸ் விமான நிலையம் இதுதான். தற்போது இதன் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது!

காரணம், எயார் பிரான்ஸின் அந்த குறிப்பிட்ட விமானம் பாரிஸிலிருந்து நேரே இஸ்ரேல் செல்லும் விமானமல்ல. பாரிஸிலிருந்து முதலில் கிரேக்க நகரான ஏதன்ஸ் சென்று, அங்கு ஒரு மணிநேரம் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டுதான் டெல் அவிவ் செல்லும் ரூட் அது. அதனால்தான் அதில் கிரேக்க நாட்டவர்களும் அதிகளவில் பயணிக்க வந்திருந்தனர்.

இந்த விமான ரூட்டிலுள்ள விசித்திரமான அம்சம் என்ன தெரியுமா?

விமானம் புறப்படும் பாரிஸ் விமான நிலையமும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமுள்ள விமான நிலையம். விமானம் போய்ச் சேரும் இஸ்ரேலின் டெல்அவிவ் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் விமான நிலையம் அது. இந்த இரண்டுக்கும் இடையே விமானம் இயங்கி ஏறப்போகும் ஏதன்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகா மோசம்!

இப்படி ஏதென்ஸ் வழியாகச் செல்வதால் அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த விமானத்தைக் கடத்துவதற்கு கடத்தல்கார்கள் குறிவைத்திருந்தார்கள்.
எதையும் கடத்திக்கொண்டு போக அட்டகாசமான விமான நிலையம்!

டிப்பாச்சர் லவுன்சில் பயணிகள் விமானத்துக்குள் ஏறுமுன்...

அந்த நாட்களில் ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்த விமானநிலையங்களின் முக்கியமானது, ஏதென்ஸ் விமான நிலையம். (இன்றுகூட நிலைமை அதுதான்) பாதுகாப்புச் சோதனைகளுக்குள் சிக்காமல் எந்தவொரு பொருளையும் விமானம்வரை கடத்திச் செல்லக்கூடிய அளவில் இருந்தது அங்கு நிலைமை.

இந்த எயார் பிரான்ஸ் விமானத்தைக் கடத்தத் திட்டமிட்டவர்கள் பாரிஸிலிருந்து விமானம் கிளம்பியபோதே பயணிகளாக அதற்குள் ஏறிவிட்டிருந்தார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவுமில்லை. பாரிஸ் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஆயுதங்களை ரிஸ்க் எடுத்து கொண்டுசெல்ல அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. எயார் பிரான்சின் அந்த விமானம் எயார்பஸ் A300 ரக விமானம். ரெஜிஸ்ட்ரேஷன் F-BVGG. ரூட் இலக்கம் 139.

விமானம் முதலாவதாகத் தரையிறங்கிய ஏதென்ஸ் விமான நிலையம். இங்கு கிரேக்க தேசிய விமான நிறுவனம் ஒலிம்பிக் எயார்லைன்ஸின் விமானங்கள் அதிகம் நிற்பதைக் காணலாம்.

அதன் முதலாவது லான்டிங்காக ஏதென்ஸ் விமான நிலையத்திலும் இறங்கியது. ஏதென்ஸ் வரை பயணம் செய்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டனர். டெல்அவிவ் செல்லும் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தனர்.

ஏதென்ஸ் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் புதிய பயணிகள் ஏற்றப்படுவதற்கு முன்னர், துப்பரவுப் பணியாளர்கள் மூன்றுபேர் விமானத்துக்குள் ஏறி துப்பரவு செய்தார்கள்.

அந்த மூன்று பேரில் ஒரு ஆள் கடத்தற்காரர்களின் ஆள்.

அவர் துப்பரவு செய்துவிட்டு இறங்குமுன்னர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை விமானத்தில் டாய்லட் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு இறங்கினார். துப்பரவுப் பணியாளர்கள் இறங்கிய உடனேயே விமானத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர் டாய்லட்டுக்குச் சென்றார்.

அவர் திரும்பவும் தனது சீட்டுக்கு வந்தபோது ஆயுதங்கள் அவருடன் வந்து விட்டன.
துப்பாக்கியுடன் கடத்தல்காரர் எழுந்தார்!

ஏதென்ஸ் விமான நிலையத்தில் பயணிகள். இங்குதான் ஆயுதங்கள் எயார் பிரான்ஸ் விமானத்துக்குள் போய்ச் சேர்ந்தன!

ஏதென்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியபோதே கடத்தல்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்துவிட்டன. ஏதென்ஸிலிருந்து விமானம் கிளம்பி சுமார் அரைமணி நேரத்தின்பின், முதலாவது கடத்தல்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது சீட்டிலிருந்து எழுந்தார்.

அந்த நிமிடத்தில் விமானத்தின் கட்டுப்பாடு கடத்தல்காரர்களின் கைகளுக்குப் போனது. விமானம் கடத்தப்படுகிறது என்ற தகவலை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் வாடி ஹாடாட் என்ற தீவிர இஸ்லாமிய விடுதலை அமைப்பினர்.

விமானத்தைக் கடத்தியவர்கள் விஷயம் தெரியாத ஆட்களல்ல. அவர்களுக்கு விமான நகர்வுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு (ஆபிரிக்கா) செல்வதற்கு விமானத்தில் எரிபொருள் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

ஏதென்சில் இருந்து டெல்-அவிவ் இருக்கும் தூரத்தின் அளவிலான தூரத்திலிருக்கும் மற்றுமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைச் செலுத்தச் செய்வதாக திட்டம் வைத்திருந்தார்கள்.
கடத்திய விமானத்தை முதலில் தரையிறக்க…

அப்படி, அவர்கள் மனதில் வைத்திருந்த நாடு லிபியா. (காரணம் லிபியா இந்தத் தீவிரவாத அமைப்பினர்மீது ஓரளவு பரிவு வைத்திருந்த நாடுகளில் ஒன்று)

கடத்தல்காரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, ஏயார் பிரான்சின் விமானி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தைக் தொடர்பு கொண்டு விமானத்தைக் கடத்தற்காரர்களின் உத்தரவுப்படி லிபியாவை நோக்கித் திருப்புவதாகத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் லிபியாவின் பென்காசி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அங்கே இவர்கள் கேட்டுக் கொண்டபடி விமானத்துக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்ப லிபிய அரசு சம்மதித்தது.

இதற்கிடையே எயார் பிரான்சின் விமானம் கடத்தப்பட்ட விபரம் வெளியே தெரியவந்துவிட ஊடகவியலாளர்கள் பலர் பென்காசி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் யாரையும் விமானத்துக்கு அருகே செல்லவே லிபியப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபியாவிலிருந்த பிரென்ச் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசமுடியாது என்று கடத்தல்காரர்கள் கூறிவிட்டார்கள்.

பென்காசி விமான நிலையம் உண்மையில் ஒரு விமான நிலையமாகக் கட்டப்பட்டதல்ல. இது ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவத் தளம். விமான நிலையத்திலுள்ள போஸ்ட் ஆபீஸைப் பார்த்தாலேதெரியும்.

இந்தக் கட்டத்தில் விமானத்துக்குள் ஒரு சுவாரசியமான நாடகம் நடைபெற்றது. கடத்தப்பட்ட பயணிகளில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமுற்று இருப்பதாகத் தெரிவித்து, தனக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதையடுத்து மயக்கமாகி சீட்டில் சரிந்தார்.

கடத்தல்காரர்கள் தமக்குள் ஆலோசனை செய்தபின் அந்த இளம்பெண்ணை மாத்திரம் பென்காசியில் வைத்து விடுவிக்கச் சம்மதித்தனர். இப்படியாக பணயக் கைதிகளில் முதலாவதாக இந்த இளம்பெண் விடுவிக்கப்பட்டார்.

சரி. “விமானத்துக்கு உள்ளே ஒரு நாடகம் நடைபெற்றது” என்று இந்தச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் உண்மையில் கர்ப்பிணி அல்ல. சும்மா பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்!
கடத்தல்காரர்களுக்கு முதல் பிரச்சினை

எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பென்காசி விமானநிலையத்திலிருந்து கிளம்பியபோதுதான் கடத்தியவர்கள் முதலாவது பிரச்சனையைச் சந்தித்தார்கள்.

கடத்தற்காரர்களின் திட்டம் என்னவென்றால் ஏதென்ஸ் விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பியவுடன் விமானம் கடத்தப்படவேண்டும். அங்கிருந்து பென்காசி சென்று எரிபொருள் நிரப்பவேண்டும். அதன்பின்னர் சூடான் நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்துக்கு விமானத்தைச் சொலுத்திச் சென்று அங்கே தரையிறங்கவேண்டும்.

இந்தக் கடைசிப் பகுதியில்தான் சிக்கல்.

கடத்தப்பட்ட F-BVGG ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் விமானம் இதுதான். கடத்தல் முடிவுக்கு வந்தபின் இந்த விமானம் உகண்டாவிலிருந்து பிரான்சுக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் இந்த விமானத்தை எயார் பிரான்ஸ் விற்றுவிட்டது. அதை வாங்கிய நிறுவனம் வியட்நாம் எயார்லைன்ஸ். தற்போது இந்த விமானம் TC-MNA என்ற ரெஜிஸ்ட்ரேஷனுடன் கார்கோ விமானமாக மாற்றப்பட்டுள்ளது.

விமானம் கிளம்பியபோது விமானியிடம் கார்ட்டூம் விமான நிலையம் நோக்கிச் செல்லும்படி கடத்தியவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். விமானமும் அந்தத் திசையில் செலுத்தப்பட்டது. ஆனால் சூடான் நாட்டு அதிகாரிகள் இந்த விமானத்தைத் தமது நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

சூடான் நாடும் தங்கள்மீது அனுதாபம் வைத்திருக்கும். எனவே அங்கே விமானத்தைத் தரையிறக்கிவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று இந்த விடுதலை அமைப்பினர் வைத்திருந்த திட்டம் குழம்பிப்போனது.
எங்கே போவது என்று தெரியாமல் பறந்த விமானம்

இந்த விமானம்தான் கடத்தப்பட்ட எயார்பிரான்ஸ் விமானத்தின் இன்றைய தோற்றம். 3 தடவைகள் கைமாறி, தற்போது எம்.என்.ஜி. என்ற கார்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.

விமானம் சிறிது நேரம் எங்கே போகின்றது என்ற இலக்கு இல்லாமல் சூடான் இருந்த திசையில் பறந்து கொண்டிருந்தது. அதற்குள் கடத்தியவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசித்தார்கள். ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டில்தான் விமானத்தை இறக்குவது பாதுகாப்பானது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சூடான் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபின் வேறு எங்கே செல்வது.

இரண்டாவது தேர்வாக அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு உகண்டா.

விமானத்தை உகண்டாவை நோக்கித் திருப்பும்படி விமானியிடம் கூறினார்கள். உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் சர்வதேச விமான நிலையம் பூகோள ரீதியில் இவர்கள் முதலில் செல்லத் திட்டமிட்டிருந்த கார்ட்டும் விமான நிலையத்திலிருந்து குறைந்த பாகை வித்தியாசத்திலேயே இருக்கிறது.

எனவே சூடான் நோக்கிச் சென்ற விமானத்தை இலகுவில் உகண்டாவை நோக்கித் திசைதிருப்பிவிடலாம். கார்ட்டூம் நகருக்கும் கம்பாலா நகருக்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 1053 மைல்கள்தான் என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலுள்ள எரிபொருளும் போதுமானதாக இருக்கும்.

இப்போது விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு உகண்டாவில் தலையிறங்க அனுமதி வேண்டுமென்று கேட்டார்.

கடத்தப்பட்ட A300 ரக விமானத்திக் காக்பிட்.
இடி அமீனே நேரில் வழங்கிய அனுமதி

ஆச்சரியகரமாக உடனே அனுமதி கிடைத்தது. அதுவும் உகண்டாவின் அன்றைய தலைவர் இடி அமீன் தானே நேரடியாக அனுமதி வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அனுமதி கிடைத்தவுடன், எயார் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்த என்டபே விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளில் இஸ்ரேலியர்களைத் தவிர மற்றய நாட்டுக்காரர்கள் அனைவரையும் கடத்தல்காரர்கள் உடனே விடுதலை செய்துவிட்டார்கள்.

அந்த எயார் பிரான்ஸ் விமானத்தின் காப்டனாகப் பணியாற்றியவர் Michel Bacos. பிரென்ச்காரரான இவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்தபோதும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். விமானத்தின் காப்டனான தனது பொறுப்பிலேயே அனைத்து விமானிகளும் இருப்பதால் அதில் ஒருபகுதியினரை விட்டுவிட்டுத் தன்னால் விடுதலையாகிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார் இவர்.

இவரைப் பின்பற்றி எயார் பிரான்சின் மற்றய விமானப் பணியாளர்களும் விடுதலையாக மறுத்து, பணயக் கைதிகளுடனே தங்கிக் கொண்டனர்.

இடி அமீன் - ஆச்சரியகரமாக விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்தார்!

விடுதலையாக மறுத்த மற்றொருவர் அந்த விமானத்தில் பயணித்த பிரென்ச் கன்னியாஸ்திரி. துறவியான தனக்குப் பதிலாக பணயக் கைதிகளில் ஒருவரை விடுவிக்குமாறு இவர் கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைப் பணயக் கைதியாக வைத்திருக்க கடத்தல்காரர்கள் சம்மதிக்கவில்லை.

இறுதியில் என்ன நடந்தது? அவரை வைத்திருந்தால் இது மத ரீதியான விவகாரமாகத் திரும்பிவிடும் என்று, உகண்டாவின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கன்னியாஸ்திரியைப் பலவந்தமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இப்போது பணயக் கைதிகளாக இருந்த 105 பேரில் 85 பேர் இஸ்ரேலிய, மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளில்லாத யூதர்கள். மிகுதி 20 பேரும் எயார் பிரான்ஸ் விமானச்

சிப்பந்திகள். இவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் வைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டார்கள் கடத்தல்காரர்கள்.

எயார் பிரான்சின் விமானச் சிப்பந்திகள் (புதிய யூனிபோர்ம்)

மொத்தம் மூன்று கோரிக்கைகள். முதலாவது, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் நாற்பது பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும். இரண்டாவது, ஐரோப்பிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும்.

மூன்றாவது, கென்யா நாட்டில் நைரோபி விமான நிலையத்திலிருந்து எல்-அல் இஸ்ரேலி ஏயார்லைன்ஸின் விமானம் ஒன்று கிளம்பும்போது அதை சாம்-7 ரொக்கட்டால் அடித்து வீழ்த்த முயன்ற இரு ஜேர்மன்காரர்கள் கைது செய்யப்பட்டு கென்யாவின் சிறையில் இருக்கிறார்கள். அந்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறினால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூன் மாதம் 30ம் திகதி.
பிரதமர் வைத்திருந்த ரகசியத் திட்டம்!

இஸ்ரேலில் அவசர அவசரமாக மந்திரிசபை கூடியது. பிரதமர் ரேபின் இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 40 பேரை விடுதலை செய்யச் சம்மதிப்பதுபோலக் காட்டிக் கொண்டார். ஆனால், அதற்கு இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதால் அதற்கு சில நாட்கள் அவகாசம் எடுக்கும் என்றும் கூறிக்கொண்டார்.

அந்த நாளைய எயார் பிரான்ஸ் விமானத்தின் இன்டீரியர். தற்போது இது புதிதாக வடிவமைக்கப்பட்டுவிட்டது. விமானச் சிப்பந்தியின் பழைய யூனிபோர்மைப் பாருங்கள்.

ஆனால், உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவிப்பதுதான் உள்ளேயிருந்த நிஜத்திட்டம்.

இது நடந்தபோது மொசாத்தில் தலைவராக இருந்தவர் யிட்சாக் ஹோபி. அவர் பிரதமருடன் ரகசியமாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறாமல் ரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் யோசனை ஒன்று தம்மிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார் பிரதமர்.

இந்த ஒப்பரேஷன் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படவேண்டும். துரிதமாகவும் முடியவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் இஸ்ரேலியப் பணயக் கைதிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டுவிடும் என்பது மொசாத்தின் தலைவருக்கு கூறப்பட்டு அப்படியான முறையில் ஒரு ஒப்பரேஷனை நடாத்த முடியுமா என ஆலோசனை கேட்கப்பட்டது.
“இது உங்களால் முடியுமா?”

“இது உங்களால் (மொசாத்தால்) முடியுமா? அல்லது பேசாமல் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி எமது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையா” என்று கேட்டார் பிரதமர்.

“நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விட்டால் அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார் மொசாத்தின் தலைவர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்டிருந்த அனுமதி வந்து சேர்ந்தது.

(அத்தியாயம் 2 தொடரும்)

Sunday, September 25, 2011

ஸ்நாக்ஸ் ! ஸ்நாக்ஸ் ! ஸ்நாக்ஸ் !

'சாப்பாடு’ என்றால் வாயை மூடிக் கொள்பவர்கள்கூட... 'ஸ்நாக்ஸ்’ என்றால் 'ஆ...' என்று வாயைத் திறந்து விடுவார்கள். அத்தகையோரின் ஆவலை மேலும் மேலும் தூண்டும்விதமாக... '30 வகை ஸ்நாக்ஸ்'களை இங்கே சமைத்திருக்கிறார் சமையல் கலைஞர் உஷாதேவி.

''பெரும்பாலும் ஹோட்டல் மெனு கார்டில் மட்டுமே பார்த்திருக்கக் கூடிய அயிட்டங்கள் பலவற்றையும் இங்கே வழங்கியிருக்கிறேன். டோனட்ஸ், பர்கர், ஆலு போஹா, சோயா சுகியன் என்று விதம்விதமாக உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் செய்து கொடுத்துப் பாருங்கள்... உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவாகிவிடும்'' என்ற உத்தரவாதத்தோடு உஷாதேவி தரும் ஸ்நாக்ஸ்களை, கலை உணர்வுடன் அலங்கரித்து, இங்கே உங்களுக்குப் பரிமாறுகிறார் செஃப் ரஜினி.

ஸ்வீட் டைமண்ட் கட்ஸ்

தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, சர்க்கரை - 100 கிராம், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், வெனிலா எஸன்ஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் வெனிலா எஸன்ஸ் ஆகியவற்றுடன் சூடான எண்ணெயையும் (ஒரு குழி கரண்டி) ஊற்றி, புட்டு மாவு போல் நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். 10 அல்லது 15 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும். மாவை எடுத்து பெரிய பெரிய உருண்டையாக உருட்டி, சிறிது கனமாக தேய்த்துக் கொள்ளவும். இதை ஒரு கத்தி மூலம் டைமண்ட் வடிவில் அல்லது சதுரவடிவில் கட் செய்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும். ஆற வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.

முந்திரி உருண்டை

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சைப் பயறு - கால் கிலோ, ஏலக்காய் - 3, வெல்லம் - 300 கிராம் (பொடித்துக் கொள்ளவும்), சர்க்கரை - 50 கிராம், தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), எள் - 25 கிராம், முந்திரி - 25 கிராம் (பொடியாக உடைத்துக் கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து தோசை மாவு போல் அரைத்து வைக்கவும். பச்சைப் பயறை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து வைக்கவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். தேங்காய் துருவலை சிறிது நேரம் வதக்கி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பொடித்த வெல்லத்தை பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய தாம்பாளம் அல்லது பேசின் எடுத்து வறுத்து பொடித்த பச்சைப் பயறு மாவு, வறுத்த எள்ளு, வதக்கிய தேங்காய், பொடித்த முந்திரி, தூள் செய்த ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். பின்னர் வெல்லக் கரைசலை இதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை கோலி உருண்டைகள் போல பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

அரைத்த பச்சரிசி - உளுத்தம்பருப்பு மாவில் சிறிது உப்பு சேர்க்கவும். பின் மூன்று மூன்று உருண்டைகளாக மாவில் முக்கியெடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு நன்கு வெந்தவுடன் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும்.

இது உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

கீரை வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கீரை - ஒரு கப் (அரைக்கீரை முளைக்கீரை, சிறுகீரை இதில் ஏதேனும் ஒன்று), பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஊற வைத்து அரைக்கவும். அதனுடன் நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் மாவை வைத்து நடுவில் ஆள் காட்டி விரலால் ஓட்டை செய்யவும். காய்ந்த எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

டோனட்ஸ்

தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஈஸ்ட், உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். இதை ஈரமான துணியால் மூடி, ஒரு மணி நேரம் வைக்கவும். இப்போது மாவு நன்கு உப்பி இருக்கும். இதை பெரிய பெரிய உருண்டைகளாக செய்து மீண்டும் 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, ஒரு ஒரு உருண்டையாக பூரி கட்டையால் மெதுவாகத் தேய்க்கவும். ஒரு சிறு மூடியால் நடுவில் அழுத்தினால் மெதுவடை போல் ஓட்டை வரும். இதுபோல் எல்லாவற்றையும் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக எடுத்து, மீதியுள்ள சர்க்கரையில் அழுத்தி எடுக்கவும். (மேல்புறம் மட்டும்).

பீட்ஸா

தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, ஈஸ்ட் - 20 கிராம் (பவுடர்), சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

மேலே அலங்கரிக்க: குடமிளகாய், பெங்களூர் தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீஸ் - ஒரு பாக்கெட் (துருவிக் கொள்ளவும்), ஓரிகானோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - சில்லி சாஸ் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, ஈஸ்ட், சர்க்கரை, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு போளி மாவு பதத்தில் பிசைந்து, ஈரத் துணியால் மூடி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பொங்கிய மாவை எடுத்து, மறுபடியும் பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக்கி வைக்கவும். 'அவன்’ ட்ரேயில் வெண்ணெய் தடவவும். உருண்டைகளை பீட்ஸா பேஸ் (பூரி வடிவில் கனமாக) போல இட்டு ட்ரேயில் வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இதுபோல் செய்யவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், பாதியளவு ஓரிகானோ, உப்பு, பாதியளவு சீஸ் சேர்த்துக் கிளறவும். பிறகு, ட்ரேயில் இருக்கும் பீட்ஸா பேஸ் மீது வெண்ணெய், தக்காளி - சில்லி சாஸ் தடவி, மீதி சீஸ், ஓரிகானோ வைத்து, முள்கரண்டியால் பதிய வைக்கவும். பிறகு காய்கறி கலவையைச் சேர்த்து, சீஸ் தூவி. 'அவன்’-ல் 180 டிகிரியில் 7 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும்.

சாக்லேட் பாப்கார்ன்

தேவையானவை : பாப்கார்ன் சோளம் - ஒரு கப், குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம், வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு,

செய்முறை : ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பாப்கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடிவிடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும். பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும். நன்கு குலுக்கி சீராக பரவ விடவும் இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

வாழைப்பூ வடை

தேவையானவை: வாழைப்பூ - ஒன்று (பெரியது), பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று, சோம்பு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 100 கிராம் (நைஸாக பொடி செய்து கொள்ளவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை நரம்பு, தோலை எடுத்துவிட்டு ஆய்ந்து நறுக்கி, நீர் மோரில் போடவும். பிறகு, நீர் மோரை வடித்து, நறுக்கிய வாழைப்பூவில் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொடித்த பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை வடை போல் தட்டி... கடாயில் எண்ணெய் சூடானதும் போட்டு பொரித்தெடுக்கவும்.

வெங்காய சமோசா

தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வெங்காய மசாலா தயாரிக்க: பெரிய வெங்காயம் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 5 , கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, பின்னர் தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெல்லியதாக தேய்த்து அதன் மேல் மாவைத் தூவவும். இன்னொரு உருண்டையும் எடுத்து இதே போல் தேய்த்து அதன் மேல் வைத்து மறுபடியும் நன்கு மெல்லியதாக தேய்க்கவும். இதனை தோசைக் கல்லில் (எண்ணெய் ஊற்றாமல்) போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு தனியே எடுத்து விடவும். பின் கத்தியால் நீளவாக்கில் கட் செய்து வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும் (வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்க வேண்டாம்). பிறகு, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும் இப்போது நீளவாக்கில் கட் செய்த துண்டை எடுத்து முக்கோண வடிவில் மடித்து ஆற வைத்த வெங்காய மசாலாவை உள்ளே வைத்து மூடிவிடவும். மூடுவதற்கு தண்ணீர் அல்லது மைதா பேஸ்ட் உபயோகிக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காய வைத்து, செய்து வைத்துள்ள சமோசாவைப் போட்டு பொன்னிறமானவுடன் எடுத்து ஆற வைத்து, சாஸ் அல்லது புதினா தயிர் சட்டியுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

ஆலு போஹா

தேவையானவை: கெட்டி அவல் - கால் கிலோ, உருளைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - காரத்துக்கு ஏற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய மாங்காய் - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டு - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அவலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு அலசி, சிறிது நேரம் ஊற வைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து... இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, வெங்காயம், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்து கிழங்கு வேகும் வரை வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கவும் (விருப்பப்பட்டால் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்க்கலாம்). இறக்கும் சமயத்தில் ஊற வைத்த அவல், எலுமிச்சைச் சாறு சேர்த்து சிறிது நேரம் கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

இட்லி சில்லி வறுவல்

தேவையானவை : இட்லி - 10 (துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - 3 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, கெச்சப் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டுப் பல், வினிகர், சிவப்பு சில்லி சாஸ், கொத்தமல்லி இலை - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - ஒரு கப், சோள மாவு - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். இட்லித் துண்டுகளை இதில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.

வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு வதக்கி, சதுரமாக நறுக்கிய குடமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் சிறிது வினிகர், சோயா சாஸ், சிவப்பு சில்லி சாஸ் மற்றும் கெச்சப் சேர்த்துக் கிளறி, வறுத்த இட்லியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

முந்திரி பிஸ்கட்

தேவையானவை: மைதா மாவு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 5 பல், பேக்கிங் பவுடர் - அரை டேபிள்ஸ்பூன், வறுத்த சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், உப்பு, அரைத்த மசாலா விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு மறுபடியும் பிசிறி, பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும். இதை பெரிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி இடுவது போல் பெரியதாகவும், அதே சமயம் மெல்லியதாகவும் இடவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். தேய்த்து வைத்துள்ள மாவை, பாட்டில் மூடியால் வட்டமாக கட் செய்யவும். அதை முந்திரி வடிவ துண்டுகளாக கட் செய்யவும்.

இதை காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக ஆனவுடன் எடுத்து, ஆறியவுடன் சாப்பிட்டால், நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

ஃபிரெஞ்ச் ஃப்ரை

தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : உருளைக்கிழங்கை தோல் சீவி, கழுவி, நீளவாக்கில் நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து ஒரு துணியில் பரப்பி காயவிடவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, உருளைக்கிழங்கை அதில் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து உப்பு தூவவும் (லேசாக மிளகாய்த்தூள்

அல்லது மிளகுத்தூள் தூவியும் சாப்பிடலாம்). இதனை கெச்சப் உடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சோயா - பனீர் கட்லெட்

தேவையானவை: சோயா சங்க்ஸ் (Soya Chancks- டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம், பனீர் - 150 கிராம், உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 300 கிராம், பச்சைப் பட்டாணி (உரித்து, வேக வைத்தது) - 50 கிராம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - தலா ஒன்று, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - சிறிதளவு, வறுத்த சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன், ரொட்டித் தூள் - கால் கிலோ, சோள மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சோயா சங்க்ஸை போட்டு அடுப்பை அணைத்துவிடவும். இதை வடிகட்டி கொஞ்சம்கூட தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். இதனுடன் துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, வறுத்த சீரகப்பொடி சேர்த்து வதக்கவும். சோயா சங்க்ஸ் கலவையை அதில் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். பிறகு ஆற வைத்து, பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் ரொட்டித் தூளை கொட்டவும். சோயா கலவை உருண்டையை கனமாக தட்டி, சோள மாவில் முக்கி எடுத்து, பின்னர் ரொட்டித் தூளில் புரட்டவும். எல்லாவற்றையும் இதேபோல் செய்து ஒரு பெரிய தட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெயக் காய வைத்து, செய்து வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும். சாஸ் தொட்டு சாப்பிடவும்.

குறிப்பு: எண்ணெய் நன்கு சூடான பிறகுதான் கட்லெட்டுகளைப் போட வேண்டும். அடிக்கடி கிளறிவிடக் கூடாது.

குழிபணியாரம் (இனிப்பு)

தேவையானவை: கோதுமை மாவு, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பொடித்த முந்திரி - 10, பொடித்த ஏலக்காய் - 2, நெய் - தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் குழிபணியார சட்டியை வைத்து, நெய் ஊற்றி சூடு செய்யவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் வெல்லத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதனை சூடாகிக் கொண்டிருக்கும் பணியார சட்டியில் ஒவ்வொரு குழியிலும் ஊற்றி, திருப்பிப்போட்டு இருபுறம் வெந்தவுடன் எடுக்கவும். சூடு ஆறியவுடன் பரிமாறவும்.

சோயா முறுக்கு

தேவையானவை: சோயா மாவு - 50 கிராம், கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 100 கிராம், அரைக்கீரை (அ) பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு, ஓமம் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கீரையை போட்டு, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆற வைத்து பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... ஓமம், உப்பு, அரைத்த விழுது போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.

கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். மாவை முறுக்கு அச்சில் போட்டு, தட்டில் சிறிய முறுக்குகளாக பிழிந்து, எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்தவுடன் எடுத்து, ஆற வைத்து சாப்பிடவும்.

சோயா சுகியன்

தேவையானவை: சோயா - 100 கிராம், உளுந்து - 50 கிராம், பச்சரிசி - 300 கிராம், கடலைப்பருப்பு - 250 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் - 2, தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 6 மணி நேரம் ஊற வைத்த சோயா, ஒரு மணி நேரம் ஊற வைத்த உளுந்து இரண்டையும் சேர்த்து அரைக்கவும். 4 மணி நேரம் ஊற வைத்த பச்சரியைத் தனியாக அரைக்கவும், அரைத்த மாவுகளை ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். இந்த மாவை புளிக்க விடக்கூடாது.

கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்து, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை பொடித்து பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும் கடாயில் நெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டியானதும் இறக்கி ஆற வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டிய உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தால் மிக்ஸர்

தேவையானவை: பச்சைப் பயறு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, காய்ந்த பட்டாணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை - தலா 100 கிராம், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 25 கிராம், பச்சை வேர்க்கடலை - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, கொள்ளு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக தண்ணீர் ஊற்றி முதல்நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் மாலை தண்ணீரை வடிகட்டி தானியங்களைத் தனித்தனியே துணியில் போட்டு நன்கு காயவிட வேண்டும். பிறகு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொரு வகை பருப்பையும் போட்டு நன்கு வெந்தவுடன் வடிகட்டியில் போடவும். இவ்வாறு எல்லாவற்றையும் வறுத்து முடித்தவுடன்அதே எண்ணெயில் முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை போட்டு வறுத்தெடுத்து ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள தானியங்களுடன் சேர்க்கவும் பிறகு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயதூள், மிளகாய்த் தூள் (விருப்பப்பட்டால் தட்டிய பூண்டையும் வறுத்து போடவும்) சேர்த்து, நன்கு குலுக்கி ஆற வைத்து சாப்பிடவும்.

பனீர் பஜ்ஜி

தேவையானவை: பனீர் - 200 கிராம் (சதுரமாக கட் செய்யவும்), கடலை மாவு - 100 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகப்பொடி - இரண்டு டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டியது), சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சதுரமாக நறுக்கிய பனீருடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குலுக்கவும். இன்னொரு பாதத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகப்பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைக்கவும். பனீரை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு, வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

சோயா 65

தேவையானவை: சோயா சங்க்ஸ் (Soya chunks- டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 100 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சோயா சங்க்ஸை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து சோயா சங்க்ஸில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, மற்ற அனைத்தையும் அதனுடன் சேர்த்து பிசிறிக் கொள்ளவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது). பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்து சோயா சங்க்ஸை ஒவ்வொன்றாக ஒட்டாமல் போட்டு, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

பேபி கார்ன் ஃப்ரை

தேவையானவை : பேபி கார்ன் - ஒரு பாக்கெட் (கழுவி, நீளமாக நறுக்கி கொள்ளவும்), சோள மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். நறுக்கிய பேபி கார்னை போட்டு ஒரு நிமிடத்துக்குப் பிறகு எடுத்து ஆறவிடவும். இதில் உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசிறவும். இதனை சோள மாவில் புரட்டவும். 5 நிமிடம் கழித்து, எண்ணெயைக் காயவைத்து, புரட்டிய கார்னை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

பர்கர்

தேவையானவை : பர்கர் பன் - 4, பெரிய தக்காளி - 2 (வட்டமாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டேபிஸ்பூன், மையோனீஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல் (நன்றாக தட்டிக்கொள்ளவும்), சீஸ் - நான்கு ஷீட், லெட்யூஸ் இலை - ஒரு கொத்து, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மையோனீஸ், பூண்டு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பன்னை சமமாக கட் செய்து வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் சிறிது நேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பாதி பன்னில் முதலில் சீஸை வைத்து, அதன் மீது தக்காளி, வெங்காயம் வைத்து, (விருப்பப்பட்டால்) பனீர் கட்லெட் வைத்து, லெட்யூஸ் இலை நறுக்கி வைக்கவும் பன்னின் மறு பாதியின் உள்பக்கத்தில் மையோனீஸ் - பூண்டு கலவை தடவவும். இரண்டு துண்டுகளாக இருக்கும் பன்னை மூடி, தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

சாண்ட்விச் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் - 10 ஸ்லைஸ், கடலை மாவு - 150 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள்- காரத்துக்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த சீரகப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டியது), புதினா சட்னி - ஒரு கப், தக்காளி சட்னி - ஒரு கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பிரெட் துண்டின் உள்பக்கம் புதினா சட்னியும், அடுத்த பிரெட் துண்டின் உள்பக்கம் தக்காளி சட்னியும் வைத்து மூடிவிடவும். பின் இதனை நான்கு துண்டுகளாக செய்யவும். இதே போல் எல்லா பிரெட் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்த சீரகப் பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும், ரொட்டித் துண்டை மாவில் தோய்த்துப் போட்டு, இருபுறமும் வெந்தவுடன் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.

குழிபணியாரம் (காரம்)

தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், உளுத்தம் பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், கார சட்னி அல்லது புதினா சட்னி - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை ஊற வைத்து, அரைத்து, புளிக்க வைக்கவும் (அல்லது இட்லி மாவிலும் தயார் செய்யலாம்). மாவில் தேங்காய் துருவல். கார சட்னி அல்லது புதினா சட்னி, உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பணியார சட்டியில் எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி மூடி, திருப்பி போட்டு, இருபுறம் வெந்தவுடன் இறக்கி, சூடாக சாப்பிடவும்.

ஓம இலை பஜ்ஜி

தேவையானவை: ஓம இலை (கற்பூரவள்ளி) - இரண்டு கைப்பிடி அளவு, கடலை மாவு - 100 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகப்பொடி - இரண்டு டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டியது), சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகப்பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். ஓம இலையை (கற்பூரவள்ளி) இரண்டாக பிய்த்து, மாவில் முக்கி, கடாயில் எண்ணெய் சூடானதும் அதில் போட்டு, வெந்தவுடன் எடுத்து, சாஸ் உடன் சாப்பிடவும்.

சளித் தொந்தரவை குணமாக்கும் இந்த பஜ்ஜி.

காலிஃப்ளவர் பக்கோடா

தேவையானவை: காலிஃப்ளவர் (பெரியது) - ஒன்று, மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - சிறிதளவு, , கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், சோள மாவு - 25 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறிய சிறிய பூக்களாக பிய்த்து, கழுவி, கொதிக்கும் நீரில் சேர்த்து உப்பு போட்டு, நன்கு கொதித்ததும் எடுத்து, தண்ணீரை வடித்துவிடவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும் இந்த மாவை காலிஃப்ளவர் மேல் தூவி, நன்கு குலுக்கி, 5 நிமிடம் வரை வைக்கவும். பின்னர், கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காலிஃப்ளவரை போட்டு, நன்கு வெந்தவுடன் எடுத்துச் சாப்பிடவும்.

சீஸ் வடை

தேவையானவை: சீஸ் (துருவியது) - 100 கிராம், கடலைப்பருப்பு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக செய்து, நடுவில் துருவிய சீஸ் வைத்து மூடி, கொஞ்சம் கனமாக தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் நன்கு வெந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கார முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 50 கிராம், வனஸ்பதி (அ) நெய் - 50 கிராம், மிளகாய்த்தூள் - 25 கிராம், தனியாத்தூள் - சிறிதளவு, வறுத்த எள் (வெள்ளை) - ஒரு டேபிள்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூன்று மாவுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், எள், பெருங்காயத்தூள், வனஸ்பதி (அ) நெய் சேர்த்து நன்கு பிசைந்து, பிறகு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் வெந்தவுடன் ஆற வைத்து சாப்பிடவும்.

பானிபூரி

தேவையானவை : பானிபூரி (சிறிய பூரி - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் ரெடிமேடாக கிடைக்கும்) - ஒரு பாக்கெட், வேக வைத்த உருளைக்கிழங்கு - கால் கிலோ, புளி - 50 கிராம், வெல்லம் - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா (ஆய்ந்து) - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, வறுத்த சீரகப்பொடி - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டி, ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீராக வைத்துக் கொள்ளவும் இதனுடன் பொடித்த வெல்லம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கறுப்பு உப்பு, அரைத்த புதினா - கொத்தமல்லி - பச்சை மிளகாய் விழுது, சீரகப்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

பூரியை எடுத்து நடுவில் ஒரு ஓட்டை போட்டு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை வைத்து, புளிக்கலவை தண்ணீர் விட்டு அப்படியே சாப்பிடவும். தேவைப்பட்டால் இனிப்பு சட்னியுடன் பரிமாறலாம்.

ஜவ்வரிசி வடை

தேவையானவை: ஜவ்வரிசி - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 5, வறுத்த வேர்க்கடலை - 25 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை சலித்து தண்ணீரில் கழுவி ஊற வைக்கவும். மென்மையானவுடன் மிக்ஸியில் சேர்த்து, உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை பாத்திரத்தில் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் ஒன்றிண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வெந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

பனானா க்யூ

தேவையானவை: கற்பூர வாழைப்பழம் - 10, பழுப்பு சர்க்கரை - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு, ஸ்கீவர்ஸ் (டிபர்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும் - அல்லது பெரிய டூத்-பிக் குச்சிகள்) - 10.

செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து முனைகளை கட் செய்து கொள்ளவும் பின்னர், கடாயில் வாழைப் பழம் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு பழமாக முழுவதும் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பிறகு, அதன் மீது பழுப்பு சர்க்கரையைத் தூவி கொண்டே வரவும். சர்க்கரை, பழத்தின் மீது படிந்து, உருகி, பிரவுன் கலராக வரும்படி பொரித்தெடுக்கவும். பின்னர் ஸ்கீவர் (அ) டூத்-பிக் குச்சியை பழத்தில் குத்தி சாப்பிடவும்.

''நாங்கள் அப்​பாவிகள்!'' என்றுதான். 'தூக்குத் தண்டனைக்கு ஆளாக வேண்டிய ஆட்கள்தான் இவர்கள்’ என்பதற்கு அதிகாரிகள்

ஆர்ப்பாட்டங்கள்... ஆவேசங்கள்... தீக்குளிப்புகள் என மொத்தத் தமிழகமும் கைக்​கொண்ட போராட்டங்களும், சட்ட ரீதியான முன்னெடுப்புகளும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய மரண தண்டனைகளுக்கு இடைக்​காலத் தடையைப் பெற்றுத் தந்திருக்கிறது.



மரணத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலும் அந்த மூவரும் உரக்கச் சொன்னது, ''நாங்கள் அப்​பாவிகள்!'' என்றுதான். 'தூக்குத் தண்டனைக்கு ஆளாக வேண்டிய ஆட்கள்தான் இவர்கள்’ என்பதற்கு அதிகாரிகள் காட்டும் ஒரே ஆதாரம் இவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைதான். ''ராஜீவ் கொலையில் சம்பந்தம் இருப்பதை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அவர்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படியிருக்க, வேறு சாட்சி எதற்கு?'' என்கிறது சி.பி.ஐ. தரப்பு.

''மனதில் நினைத்ததையும், மனசாட்சி இல்லாமல் கற்பனை செய்ததையும் மொத்தமாக எழுதி, சித்ரவதை​களின் அத்தனை வடிவங்களையும் எங்கள் மீது காட்டிக் கையெழுத்துப் பெற்றதுதான் ஒப்புதல் வாக்குமூலமா?'' என்கிறார்கள் இந்த மூவரும்.

வழக்கறிஞர்கள் சிலர் மூலமாக... ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட விதம் குறித்து நாம் முருகனிடம் விசாரித்தோம். ராஜீவ் கொலை சம்பவத்துக்குப் பிறகு, விசாரணை வளையத்தில் சிக்கியது தொடங்கி, ஒப்புதல் வாக்குமூலத்துக்காக அனுபவித்த சித்ரவதைகள் வரை தன் நெடுந்துயரத்தை வாசகர்கள் முன்பு தன் தரப்பாக இறக்கி வைக்க முன்வந்தார் ஸ்ரீகரன் என்கிற முருகன். வழக்கறிஞர் வாயிலாகவே வந்திறங்கும் அவருடைய வார்த்தைகள் இங்கே உங்கள் முன்...

மரண மேகம் சற்றே விலகி நிற்கிறது. நிரந்தரமாக அது எப்போது எம்மைவிட்டு நீங்கும் என்பது தெரியவில்லை. களத்தில் நெல் காயப் போட்டவர்கள் கறுத்திருக்கும் மேகத்தை எப்படிக் கவலையோடு பார்ப்பார்களோ, அதே தவிப்பில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிறைக்குள் பரிதவித்துக் கிடக்கிறோம்.

வெளி உலகம் எப்படி இருக்​கிறது? உறவுகள் எப்படி இருக்​கிறார்கள்? போக்கு​வரத்து தொடங்கி பூகோள அமைப்புகள் வரை எப்படி மாறி இருக்கின்றன என்பது தெரியாமல் சிறைக் கம்பிகளின் அரவணைப்புக்குள் 21 வருடங்களாக அடைபட்டுக் கிடப்ப​வர்கள் நாங்கள். 'சிறு வெளிச்சக்கீற்று எம் மீது விழாதா?’ என ஒவ்வொரு நாள் விடியலையும் ஏக்கத்தோடும் இயலாமையோடும் வெறிச்சிட்டுப் பார்க்கிறோம். 'இவ்வளவு​தான் வாழ்க்கையா?’ என்கிற இயலாமை மேலிட்ட சலிப்பு அடிக்கடி மனதுக்குள் எட்டிப் பார்க்கிறது. 'செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு’ என்கிற செய்தியை அரசாங்கம் அறிவித்தபோது, 'இறுதி வரை எமது நியாயமும் தவிப்பும் எடுபடாமல் போய்விட்டதே’ என்கிற ஆதங்கமே இதயத்தில் திரையிட்டது. அப்படியே 14.06.91 என்கிற தேதிக்கு எம்மை நினைவு சுழல் இழுத்துச் செல்கிறது...

ஸ்ரீகரன் (கி3) என்கிற நானும், நளினி (கி1) என்கிற என் மனைவியும் அன்றுதான் கைது செய்யப்பட்டோம். எம்மை சி.பி.ஐ. எஸ்.ஐ.டி-யைச் சேர்ந்த ஓர் உதவி ஆய்வாளரும் இரு காவலர்களும் சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள். 'எதற்காக’ என்கிற கேள்வி எம் கண்ணில் நீராக உருண்டபோதும், அவர்கள் எவ்வித பதிலும் சொல்லாமலே ஒரு ஆட்டோவில் எங்களை ஏற்றிச் சென்றார்கள். அவர்களது விசாரணை அலுவலகமான 'மல்லிகை’யில் ஆட்டோ நின்றது.

பிடிக்கப்பட்ட - கொண்டு செல்லப்பட்ட சிறு கணப் பயணத்துக்குள் நாங்கள் அனுபவித்த துயரம் எழுத்தில் சொல்ல முடியாதது. குரூரமும் வக்கிரமுமாக நகர்ந்த அந்தப் பயணத்தை என்னால் வாழ்விலும் மறக்க முடியாது. என் மனைவி நளினி அப்போது இரண்டு மாத கர்ப்பவதி. ஆட்டோவின் பின் இருக்கையில் எங்கள் இருவரையும் நடுவில் அமரவைத்து, என் மனைவியின் பக்க ஒரமாக ஓர் உதவி ஆய்வாளரும், என் பக்கமாக ஒரு காவலரும் ஏறிக்கொண்டனர். மூன்று பேர் மட்டும் அமரக்கூடிய அந்தக் குறுகிய இடத்தில் நான்குபேர் அமர்ந்து இருந்த சூழலை உதவி ஆய்வாளர் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார் தெரியுமா? கர்ப்பிணி என்றுகூடப் பார்க்காமல், என் கண் எதிரிலேயே என் மனைவி மீது அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டார். புழுவாகத் தவித்த என் மனைவியின் அவஸ்தையைத் தடுக்கக்கூட இந்த இயலாமைக்காரனால் முடியவில்லை.

'எமக்கான கொடூர நரகம் தொடங்கிவிட்டது’ என்பதை அந்த நிகழ்வே எனக்குப் புரியவைத்தது.

'ஒரு வார்த்தைப் பேசினாலும் தவறு’ என்கிற சூழலில் அருகே அமர்ந்திருந்த நளினியை வேதனையோடு பார்த்தேன். கண்ணீரும் கடும் துயரமுமாக தலைகுனிந்து இருந்​தாள்.

மல்லிகை எஸ்.ஐ.டி. அலுவல​கத்தில் ஆட்டோ நின்றது. அங்கே இருந்த உயர் அதிகாரி முன்னால் எங்களைக் கொண்டுபோய் நிறுத்தி​னார்கள். ''இந்த இரு நாய்களின் முதுகுத் தோலையும் அடித்து உரியுங்கள்!'' என உத்தரவு போட்டார். அத்தகைய ஏவலுக்​காகவே காத்திருந்​தவர்கள்போல, என்னைப் பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்றார்கள். எதிரே என் மனைவி நளினி.

கணவன் இழுத்துச் செல்லப்​படுவது கொல்லப்​படுவதற்காக என்றுகூட அவள் நினைத்திருக்கலாம்; பதறி இருக்கலாம். பரிதவிப்போடு ஏதோ சொல்ல நினைத்தாள். கண்ணீரைக்கூட சுதந்திரமாக உதிர்க்க முடியாத அந்தக் கொட்டடியில் அவளால் என்ன பேசியிருக்க முடியும்?

தனி அறைக்கு என்னைக் கொண்டுவந்த அதிகாரிகள் முதலில் என் ஆடைகளைக் களைந்தார்கள். உலகின் பெருந்துயரம் - பிறர் முன்னால் ஆடைகள் அற்றுப்போய் அவமானம் சுமந்து நிற்பது. நிர்வாணத்துக்கு லத்திக் கம்புகளாலேயே வரிவரியாய் ஆடை வரைந்தார்கள் அதிகாரிகள். ஆவேசம் என்றால் அப்படியரு ஆவேசம்... பிரம்புகளே பிய்ந்து தொங்குகிற அளவுக்கு அடித்தார்கள். ஊரே கேட்கும் அளவுக்குக் கதறிய என் ஓலம் அந்த அதிகாரிகளின் மனதைக் கொஞ்சம்கூட அசைக்கவில்லை. மயக்கத்தின் முதல் நிலையில் மௌனம் சுமந்து கிடந்தேன். இனி அலறத் தெம்பில்லை. அலறியும் பலன் இல்லை.

உடல் எங்கும் கன்றிப் போய், உதடுகளில் ரத்தம் வழிந்த நிலையில் தூக்கி நிறுத்தினார்கள். 'செத்தேன்’ என்கிற வார்த்தையோடு என் மூச்சு இழுத்துக்கொண்டு இருந்தது.

திடீரென, ''அய்யோ...'' என்கிற அலறல். மயக்கம் தெளிந்து நிமிர்ந்தால் எதிரே கதறி அழுதபடி என் மனைவி நளினி. என் கோலத்தைக் காட்டுவதற்காக அவளைக் கொத்தாக இழுத்து வந்திருக்கிறார்கள். நான் ரத்தம் சொட்ட நின்றதும், அதிகாரிகளின் பிடியில் சிக்கியபடியே தலையில் அடித்துக்கொள்ள முடியாமல் நளினி கதறியதும் இப்போதும் மனதுக்குள் தகிப்பாகக் கொதிக்கின்றன.

''நாங்க சொல்கிறபடி எல்லாம் நடந்துக்கலைன்னா, உனக்கும் இதே கதிதான்!'' என நளினியை நோக்கிக் கத்தினார்கள். அவள், ''அவரை ஏன் இப்படி அடிச்சீங்க?'' எனக் கதற, ''உன்னோட காதலனை அடிச்சாத்​தானே உனக்கு வலிக்கும். அடி மட்டும் இல்லை... அவனைக் கொன்னே புடுவோம்...'' என மிரட்டி அவளை இழுத்துச் சென்றார்கள்.

என்னை அவர்கள் கொன்றாலும் சரி... அறுத்துப்​போட்டு தின்றாலும் சரி... கர்ப்பவதியாக இருக்கும் என் மனைவியைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்கிற சிறு ஆறுதலோடு வீழ்ந்து கிடந்தேன். என்னை அடித்துக் களைத்த அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்காக விட்டிருந்த இடைவேளை அது. சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும். 'ஆ... அய்யோ...’ என்கிற பெரு அலறல். பக்கத்து அறையில் இருக்கும் நளினியின் குரல் அது என்கிற யூகிப்பு என்னைத் தவிக்க வைக்கிறது. சிறு சிறு உறுப்புகளாக முழு வடிவம் சுமக்கப்போகும் குழந்தைக்குத் தாயின் அமைதியான சூழலும் நிம்மதியும்தான் மிக முக்கியத் தேவை. ஆனால், அந்தப் பச்சை சிசுவின் நிலையைக்கூட நினைத்துப் பார்க்காமல், அவளை பிரம்புகளால் பின்னி எடுத்திருக்கிறார்கள். பிறகு, ஒரு நாள் அவளை எதிர்கொண்டபோது, எப்படி எல்லாம் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவள் சொன்னாள். என் நிலை பரவாயில்லை என்கிற அளவுக்கு அவள் சுமந்த வேதனைகள் கொடூரமானவையாக இருந்தன.

நாள்வாரியாக தினமும் நடந்த சித்ரவதைகள் பற்றி இங்கே சொல்ல ஆரம்பித்தால், சித்ரவதைகளின் கொடூரம் உங்களுக்கே பழகிப்போகலாம். மனதின் ஈரம் இற்றுப்போகிற நிலையை உங்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

சித்ரவதைகள் செய்வதற்கு சிறப்பு பயிற்சிகள் பெற்றவர்கள்போல் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் என்னை அவர்கள் வதைத்த விதம் தாங்க முடியாதது. மரண பயத்தின் பீதியும், மோசமான விரக்தி மனநிலையும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும்படி செய்தன அத்தனை சித்ரவதைகளும். உண்மையான குற்றவாளியைக்கூட இந்த அளவுக்கு வதைக்க மாட்டார்கள். ஆனால், எதையோ நோக்கி வழக்கை நகர்த்திச் செல்ல அதிகாரிகள் போட்ட திட்டம், என்னை அணு அணுவாக நரகத்தின் வயிற்றுக்குள் திணித்தது.

இலங்கைப் பிரச்னைக்கு சர்வதேச ரீதியிலான தீர்வு சாத்தியமில்லை என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே கூறினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற 66-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இன்று பேசியது:

"இலங்கையில் நிலவும் பிரச்னைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விஷயம். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விஷயத்தை அணுகக்கூடாது.

தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும்.

வரலாற்றின் புதிய தருணத்தில் நாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று எம் நாட்டு மக்கள் நம்புகிறார்கள். உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது.

பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்ககூடாது.

தற்போது உலகளாவிய பயங்கரவாதம், ஐ.நா. சபை உள்பட சர்வதேச அமைப்புகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து நாடுகளையும் பயங்கரவாதம் அச்சுறுத்தி வருகிறது.

பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி விடுதலைப்புலிகளுடன் நாங்கள் நடத்திய போரில் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை மக்கள், இப்போது புலிகளின் பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் எல்லா பகுதிகளிலும் சுதந்திரமாகவும் பயமின்றியும் வாழ்கிறார்கள்," என்றார்.

மேலும், "போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு அழுத்தங்கள் வருவதால், அதை முறியடிக்க சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்," என்று ராஜபக்ஷே கேட்டுக்கொண்டார்.

Tuesday, September 20, 2011

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் தூக்கில் போடுவதை சோனியா காந்தி விரும்பவில்லை

சென்னை, இந்தியா: “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் தூக்கில் போடுவதை சோனியா காந்தி விரும்பவில்லை” இப்படி ஒரு தகவல் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார் வைகோ. சோனியாவின் விரும்பம் பற்றிய இந்தத் தகவல் எங்கே பரவி வருவதாக அவர் தெரிவிக்கவில்லை.

சோனியாவின் விருப்பம் இதுதான் என்ற தகவல் பரவி வருவது தமிழகத்தில் என்றால், உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், இது முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம், இது சோனியா காந்தியின் நிஜமான விருப்பமோ இல்லையோ, அப்படியொரு தகவல் தமிழகத்தில் பரவினால், தேர்தல் பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ்காரர்கள் சங்கடமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும்.

இந்த ட்ராக்கை கெட்டியாகப் பிடித்துள்ள வைகோ, “தூக்கில் போடுவதைத் தடுக்க வேண்டும் என்பது சோனியாவின் விருப்பம் என்ற தகவல் பரவி வருவதால், இந்த சொல்லை செயலாக்கி காட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இன்று வேலூர் சென்று சிறையில் இருக்கும் முருகன், சந்தன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்த ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, அதன்பின் வெளியே வந்து நிருபர்களுடன் பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “முதல்வர் ஜெயலலிதா நினைத்தால், இவர்கள் மூவரது தண்டனையைத் தடுத்து நிறுத்த முடியும்” என்பதையும், இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் அவர்.

“இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த தீர்மானத்தை ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுகோளாக ஏற்று, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணை மனுதள்ளுபடி செய்யபட்ட பின்னர் அதை மறு பரிசீலனை செய்வதற்கு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. இவர்களது தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களுக்கு சகல அரசியல் கட்சிகளும், வாக்கு சேகரிப்பதற்காக மக்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளன. அப்படியான நேரத்தில், வைகோவின் இந்த ஸ்பெசிஃபிக் டார்கெட் பேச்சு, அதிஷ்டத்தோடு விளையாடும் விளையாட்டாகவே தெரிகிறது.

அழகிரி திக்திக்… மதுரையில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது

மதுரை, இந்தியா: “நீங்க பாட்டுக்கு அதிரடியா ஏதாவது பேசிட்டு போயிருவீங்க. உடனே அந்தம்மா நடவடிக்கை எடுக்கிறேன்னு என்னை புடிச்சுக்குவாங்க. அவங்க ஆட்சி பற்றி அதிகமா போசாம கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசியுங்க” சமீபத்தில் மதுரை முன்னாள் அரசர், பதட்டத்துடன் கலைஞரிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

அழகிரியின் இந்த வார்த்தைகளின் பின்னரே, புதிய சட்டமன்றக் கட்டடத்தை வைத்தியசாலையாக மாற்றும் திட்டத்தை கலைஞர் எதிர்க்கவில்லை, மாறாக, ஆதரித்தார் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். அப்படி அழகிரிக்கு என்ன பதட்டம்?

மதுரையில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது என்ற தகவல் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்கிறார்கள். அழகிரியின் வலது, இடது கைகளை தமது கஸ்டடியில் வைத்திருக்கும் போலீஸ், அடுத்ததாக அழகிரியின் கைகளைத் தேடி ‘காப்பு’டன் வரலாம் என்ற தகவல்தான் அஞ்சா நெஞ்சரை மிரள வைத்துள்ளதாம்.

ஒரேயொரு நாள் போலிஸ் கஸ்டடி விசாரணையிலேயே பாண்டியராஜன் கொலை வழக்கில் உண்மையை எல்லாவற்றையும் கக்கிவிட்டார், எஸ்ஸார் கோபி. அதையடுத்து, நில அபகரிப்பு விவகாரம் மாத்திரமின்றி, பாண்டியராஜன் கொலை கேஸ் விஷயத்தில் ஆழமாக தோண்டத் தொடங்கியுள்ளது மதுரை போலீஸ்.

ஒருநாள் விசாரணையின்பின் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், பாண்டியராஜனை கொலை செய்ய ஆட்களை அனுப்பியதை ஒப்புக்கொண்ட கோபி, பொட்டு சுரேஷ் சொல்லித்தான் ஆட்களை அனுப்பி வைத்ததாக கூறியிருக்கிறார். அதுவரைக்கும் சரி. ஆனால், அதற்குப் பின், காட்சிக்குள் அழகிரி வரும் வாக்கியத்தில்தான் போலிஸ் திணறுகின்றது.

கோபி வாக்குமூலத்தில் போலிஸ் திணறும் அந்த வாக்கியம் எதுவென்றால், “பாண்டியராஜனைக் கொல்ல ஆட்களை அனுப்பச் சொன்ன பொட்டு சுரேஷ், அது அழகிரியின் உத்தரவு என்றும் சொன்னார்” என்பதுதான்.

உண்மையில் இந்த வாக்கியத்தை வைத்துத்தான் அழகிரியை கைது செய்ய நினைத்தது மதுரை போலீஸ். சாதாரண நபர் ஒருவர் சம்மந்தப்பட்ட கொலை வழக்கு என்றால், இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே போலீஸ், ஒரு ஆளை தூக்கி வந்து விடலாம். ஆனால், ஒரு மத்திய அமைச்சரைத் தூக்குவதற்கு இது போதாது!

காரணம், இது இந்திய குற்றவியல் சட்டத்தில், ‘தேர்ட் பார்ட்டி ஹியர் சே’ என்ற வகையில் வருகிறது. அதாவது, மூன்றாவது தரப்பு நபர் ஒருவர் சொன்னதாக, இரண்டாம் தரப்பு நபர் கூறியதை, முதல் தரப்பு (வாக்குமூலம் கொடுத்தவர்) நபர் ஒப்புக் கொள்வது.

இந்த ‘ஹியர் சே’ வாக்கியத்தை வைத்துக்கொண்டு ஒரு மத்திய அமைச்சரைக் கைது செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தில் எந்தவொரு மாஜிஸ்திரேட்டும் கையெழுத்திட மாட்டார்.

எஸ்ஸார் கோபியின் வாக்குமூலத்திலுள்ள இந்த வாக்கியம், இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில்தான், அழரியைக் கைது செய்ய வைக்க, ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

1) சப்போர்ட்டிங் ஸ்டேட்மென்டாகப் பயன்படலாம். அதாவது, இதிலுள்ள இரண்டாம் தரப்பு நபரும் (பொட்டு சுரேஷ்) இதே கூற்றைக் கூறினால், அந்தக் கூற்றை வலுப்படுத்த, இந்தக் கூற்றை சப்போர்ட்டிங் ஸ்டேட்மென்டாகப் பயன்படுத்தலாம்.

2) இரண்டாவது தரப்பு நபர் போலிஸால் அணுகப்பட முடியாத நிலையில் (தலைமறைவு) இருந்தாலோ, அல்லது போலீஸால் வாக்குமூலம் எடுக்க முடியாத பிஸிகல் ஸ்டேஜில் (கோமா ஸ்டேஜில் இருந்தாலோ, உயிரிழந்திருந்தாலோ) இருந்தாலோ, இந்தக் கூற்றைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டியை (அழகிரி) கைது செய்யலாம்.

இதுதான் போலிஸ் துறைக்கு தற்போதுள்ள சிக்கல்.

இதிலுள்ள முதலாவது சாத்தியத்தில், பொட்டு சுரேஷ் வாக்குமூலம் கொடுக்க வேண்டும். மயிலே மயிலே என்று கேட்டும் மயில் இறகு போடுவதாக இல்லை என்று தெரிகிறது. மயிலை போலிஸ் காவலில் எடுத்தால், இறகு பிடுங்குவது சுலபம்.

நீதிமன்றம் ஒன்றில் போலீஸார் எத்தனை நாட்கள் கஸ்டடி கேட்கிறார்களோ, அத்தனை நாட்கள் பொட்டு சுரேஷை ஒரு மாஜிஸ்திரேட் கஸ்டடிக்கு அனுமதி கொடுத்தால் போதும், அழகிரி தொடர்பான அத்தனை விவரங்களையும் கக்க வைத்து விடுவார்கள், மதுரை போலீஸார். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அதுதான் அழகிரியின் பதட்டத்துக்குக் காரணம்.

எந்த நிமிடமும் பொட்டு சுரேஷ் மனது மாறி வாக்குமூலம் கொடுத்து விடலாம். அல்லது வாக்குமூலம் கொடுக்க வைக்கப்படலாம் என்பது அவருக்கு உள்ள பெரிய திக் திக். போலிஸ் நடைமுறைகள் யாருக்குத் தெரிகிறதோ, இல்லையோ, பொட்டு சுரேஷ், கோபி, அழகிரி போன்ற ஆட்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஒருவேளை முதலாவது வழிமுறை சரிவராமல், இரண்டாவது வழிமுறை பலித்து விட்டால் என்னாகும்? என்பது கிடுகிடுக்க வைக்கும் அடுத்த சாத்தியம்.

அதாவது, பொட்டு சுரேஷை ஜெயில் மாற்ற அழைத்துச் செல்லும்போதோ, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போதோ, அவர் தப்பிச் செல்ல முயன்று, வேறு வழியில்லாமல் போலிஸ் அவரை…..

-ஒரு சட்ட ஆலோசகரின் சில குறிப்புகளுடன், ரிஷி.
Viruvirupu, Saturday 20 August 2011, 10:08 GMT

ரஷ்யா, ‘பழைய கொலையை’ மறந்து விட்டு வரச் சொல்கிறது!

முன்னாள் உளவாளி தமது நாட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட கோபம், பிரிட்டனுக்கு உள்ளது. கோபத்தை தணித்து, இரு நாடுகளும் பழையபடி உளவுத் தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது ரஷ்யா.

லண்டன், பிரிட்டன்: அடுத்த வாரம் பிரதமர் டேவிட் கேமரான் ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், இரு நாடுகளிடையேயும் உளவுத் தகவல்களை பரிமாற்றம் செய்வது பற்றிய கோரிக்கையை ரஷ்யா வலியுறுத்த உள்ளதாக தெரியவருகிறது.

2006ம் ஆண்டு லண்டனில் முன்னாள் உளவாளி அலெக்சான்டர் லிட்வினென்கோ கொல்லப்பட்டபின், இரு நாடுகளும் உளவுத் தகவல்களைத் தமக்கிடையே பரிமாற்றம் செய்வதை நிறுத்தியிருந்தன. பிரிட்டன்தான் தொடர்புகளை முதலில் முறித்துக் கொண்டது.

தமது நாட்டில் வைத்துச் செய்யப்பட்ட அந்தக் கொலை பிரிட்டனுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னணியில் ரஷ்ய உளவுத்துறை இருந்தது என்பது, பெரிய ரகசியமாக இருக்கவில்லை.

பிரிட்டனிலுள்ள ரஷ்ய தூதர் அலெக்சான்டர் யகோவென்கோ, “இந்தக் கொலை பற்றி பிரிட்டிஸ் அரசு கோரிக்கை விடுக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால், பிரிட்டன் கோருவதுபோல ரஷ்ய உளவுத்துறையைச் சேர்ந்த யாரையும் விசாரணைக்காக பிரிட்டனிடம் ஒப்படைக்க முடியாது. அதற்கு எமது அரசியல் சட்டத்தில் இடமில்லை. தவிர, இதில் ரஷ்ய உளவுத்துறை தொடர்பு பட்டுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆதாரம் இல்லாமல் யாரையும் நாடுகடத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம்தான், இரு நாடுகளிடையே உளவுப் பரிமாற்றத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.

“செப்.11 தாக்குதலின் 10வது ஆண்டு நிறைவின்பின் பிரிட்டிஷ் பிரதமர் ரஷ்யாவுக்கு விஷயம் செய்யும் சந்தர்ப்பத்தில், ரஷ்ய உளவுத்துறைக்கும், பிரிட்டிஷ் உளவு அமைப்புகளான MI5, MI6 ஆகியவற்றுக்கும் இடையே உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்வதில் நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம்” என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

“நாம் தயாராக உள்ளோம். பிரிட்டனின் பக்கத்திலிருந்துதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என்றும் கூறியுள்ளார் ரஷ்ய தூதர். மாஸ்கோ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பிரிட்டிஷ் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதியைச் சந்திப்பதுடன், ரஷ்ய அரசின் ‘மிகச் சக்தி வாய்ந்த’ மனிதராகக் கருதப்படும் பிரதமர் விளாதிமிர் பூட்டினையும் சந்திக்க உள்ளார்.

கசப்பான அறிக்கை யுத்தங்களை அடுத்து, முதல் தடவையாக 4 வருடங்களின்பின், இரு தரப்புத் தலைமையும் நேருக்கு நேர் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளனர்.

Sunday, September 18, 2011

கணபதி ஸ்தபதி காற்றில் கரைந்து விட்டார்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்பீரமான வள்ளுவர் கோட்டமும் நிலைகொண்டு நிற்கும் தேரும்... அண்ணா நகரில் தோரண வாயில்... அண்ணா அறிவாலயத்தின் முகப்பு... உயர் நீதிமன்ற வளாகத்தில் நிற்கும் மனுநீதிச் சோழன் சிலை... இப்படியே சென்னையைத் தாண்டினால்...

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முகப்பு... பூம்புகாரில் கலைக்கூடம்... மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழன்னை சிலை... மதுரையைச் சுற்றிலும் தோரண வளைவுகள்... காரைக்குடியில் தமிழ்த் தாய் கோயில்... குமரியில் 133 அடிக்கு வள்ளுவனுக்குச் சிலை... எனத் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் திக்கெட்டும் நிற்பவை எல்லாம் எவரின் கைவண்ணமோ... அந்தக் கலைஞனின் கண் மூடிவிட்டது. வாஷிங்டன் சிவா விஷ்ணு, சிகாகோ ஸ்ரீராமர், சிங்கப்பூர் ஸ்ரீதண்டாயுதபாணி என அவரால் கண் திறக்கப்பட்ட எத்தனையோ தெய்வச் சிலைகளின் ஆசீர்வாதங்களுடன் கணபதி ஸ்தபதி காற்றில் கரைந்து விட்டார்!

காரைக்குடியில் கணக்கு வாத்தியாராக இருந்த கணபதி, பழநி முருகன் கோயிலில் தலைமை ஸ்தபதி வேலை கிடைத்து சேரத் திட்டமிட்ட தகவலைத் தனது தந்தையார் வைத்தியநாத ஸ்தபதிக்குக் கடிதமாக எழுதினார். 'சிற்பக் கலையில் நீ செய்த பிரவேசம், அதற்கு மாபெரும் அதிர்ஷ்டமாகும்’ என்று அவர் தந்தை எழுதியதைக் கர்வம் என்று சொல்வதைவிட, கணபதி மீதான நம்பிக்கை எனலாம். வைத்தியநாத ஸ்தபதியும் சாமான்யர் அல்ல. காரைக்குடி பிள்ளையார்பட்டி கோயில் கோபுரம், திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமம், சென்னை காந்தி மண்டபம், ஆகியவற்றை அமைத்த கலைஞன். அப்பாவும் மகனும் சேர்ந்து தமிழ்ப் பண்பாட்டின் சின்னங்களைச் செதுக்கிய பெருமையை மொத்தமாகக் கொண்டுசென்றது வேறு குடும்பத்துக்கு இல்லை!

சென்னை காந்தி மண்டபத்தை வைத்தியநாத ஸ்தபதி கட்டிய அழகைப் பார்த்துத்தான் சிற்பக் கலையைப் பயிற்றுவிக்க ஒரு கல்லூரி உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார் ராஜாஜி. மாமல்லபுரத்தில் கல்லூரி உருவாக்கப்பட்டு, அதன் முதல்வராக அவரையே நியமித்தார். மூன்று ஆண்டுகளுக்குள் அவரது உடல்நிலை முடமானபோது, வாரிசு என்பதற்காக அல்ல... தகுதியின் அடிப்படையில் அந்தப் பொறுப்பு கணபதி ஸ்தபதிக்கு வந்து சேர்ந்தது. சுமார் 27 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து, வெறும் கல் பட்டறையாக இருந்த சிற்பக் கல்லூரியைத் தொழில்நுட்பப் படிப்பாக மாற்றி ஆயிரக்கணக்கான சிற்பிகளைச் செதுக்கி அனுப்பும் காரியத்தைக் கடவுளின் கட்டளையாகப் பார்த்தார் கணபதி ஸ்தபதி!

சிலர் தொழிலில் திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால், அதை வார்த்தைகளில் சொல்லத் தெரியாது. ஆனால் கணபதி, எல்லாவற்றுக்கும் தீர்க்கமான விளக்கம் வைத்திருப்பார்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு வடக்கே யும் ஒரு வாசலை வைக்கலாமா, கூடாதா என்று விவாதம் வந்தபோது கோயில் அறங்காவலர் பி.டி.ராசன் (பி.டி.ஆர். பழனிவேல்ராசனின் தந்தை!), கணபதி ஸ்தபதியை வரவழைத்துக் கேட்டார். வடக்கு வாசல் வைக்கக் கூடாது என்று சொல்லிய அத்தனை பேர் வாதங்களையும் தர்க்கரீதியாக மறுத்து, தான் சொன்னதை எழுதியும் கொடுத்து, எதிர்த்தவர்கள் அத்தனை பேரும் அதை ஒப்புக்கொண்டு கையெழுத்து வாங்கவைத்தவர் கணபதி. ஒரு சிட்டிகை பொடி எடுத்துப் போட்டுக் கொண்டு, பென்சில் எடுத்து வரைய ஆரம்பித்தால், வானத்தை வசப்படுத்தும் கோபுரம் நிமிரப்போகிறது என்று அர்த்தம்!

சீர்காழிக்குப் பக்கத்தில் தாசில்பண்ணை என்ற ஊரில் கௌரி என்ற பெண் இருந்தாராம். அவருக்கு கண்ணகி மீது தீராத பக்தி. கணபதி ஸ்தபதியிடம் சொல்லி, ஒரு கண்ணகி சிலையைச் செய்து வாங்கிச் சென்று, அந்தப் பகுதியில் வைத்தார். இதைப் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி பார்த்து... கணபதி ஸ்தபதியைப் பற்றிக் கேள்விப்பட்டு மாமல்லபுரம் வர... அன்று தொடங்கிய நட்பு, சிற்பச் செழிப்பாகவும் மாறியது.

இவர் வடித்த மாதவி சிலையின் வனப்பு எப்போதும் பேசப்படும். ''நீங்களே கண்ணகியைவிட மாதவியைத்தான் அழகாக வடித்துள்ளீர்கள். கோவலன் மயங்காமல் என்ன செய்வான்?'' என்று கருணாநிதி கேட்டதாகச் சொல்வார்கள்.

குமரியில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டபோது, இது முறை யாக நிற்குமா என்று பலரும் சந்தேகம் கிளப்பினார்கள். ''கலையும் மலையும் இருக்கும் வரை இந்தச் சிலை இருக்கும்'' என்று சொன்னார் கணபதி ஸ்தபதி.

இந்தோனேஷியாவில் கிளம்பி ஒரு சுழற்சியில் பல்லாயிரம் மக்களைப் பழி தீர்த்த சுனாமியில் வள்ளுவரா நின்றார்... இல்லை, கணபதியே நின்றார்!

எப்போதும் நிற்பார்!

Friday, September 16, 2011

இரும்புத் திரைக்குப் பின்னால்... சோவியத் சிதறிய 20 ஆண்டுகள்!

எங்களைச் சூழ்ந்திருந்த இரும்புத் திரை ஒருவழியாக விலகிவிட்டது என்று நினைத்துக் கொண்டோம். ஜனநாயகம் திரும்பிவிடும் என்று நம்பினோம். எங்கள் வாழ்க்கை இனி முற்றிலுமாக மாறிப்போகும் என்றும் காத்திருக்க ஆரம்பித்தோம்!’ 1991ல் சோவியத் யூனியன் சிதறுண்டபோது எடுக்கப்பட்ட சர்வேயில் கணிசமானோரின் விருப்பமும் விழைவும் இப்படித்தான் இருந்தது. 140 மில்லியன் ரஷ்யர்களின் எதிர்பார்ப்பு இது என்று மீடியா அறிவித்தது.

சோவியத் யூனியன் சிதறுண்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், ரஷ்ய மீடியா கருத்து சேகரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்கூட சோவியத் யூனியன் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் இன்றைய முகவரி என்ன? உலகம் ரஷ்யாவை எப்படிப் பார்க்கிறது? அதை விட முக்கியமாக ரஷ்யர்கள் தங்கள் நாட்டை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களுடைய கனவு பலித்ததா?

ஹெல்த் க்ளப் ஒன்றில் பணியாற்றும் திருமதி கொமார் தன் முன் நீட்டப்பட்ட மைக்கை கோபத்துடன் எதிர்கொள்கிறார். ‘பத்து ஆண்டுகளாக நான் வோட்டுப் போடவில்லை. நான் வோட்டுப் போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. அவர்களுக்குத் தேவையானவரை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் என்னும் போது என்னைப் போன்றவர்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும்?’ சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். ‘கடிகாரத்தைத் திருப்பியமைக்க முடியுமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும்! பழைய சோவியத்தில் ரொட்டி கிடைத்தது. வேலை எப்போதும் இருந்தது. அந்த வாழ்க்கை திரும்ப வேண்டும்.’

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இணைய சாட் அறைகளிலும் பங்கேற்கும் பல ரஷ்ய இளைஞர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது.‘சோவியத் கால புத்தகங்களையும் ஏடுகளையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை சாதனைகளை அநாயாசமாக நிகழ்த்தியிருக்கிறார்கள்! ஸ்டாலினைப் போன்ற ஒரு வலிமையான தலைவர் இன்று இருந்திருந்தால் நாம் வேறு மாதிரியாக இருந்திருப்போம் என்று நினைக்கிறேன். “சோவியத்தை எப்படியாவது காப்பாற்றியிருக்க வேண்டும்.” நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்று தி நியூயார்க் டைம்ஸ் சோவியத் யூனியனின் கடைசி தலைவராக இருந்த மிகேல் கோர்பசேவை கேட்டபோது, அவர் அளித்த பதில் இது. “எல்லோரும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அப்போதிருந்த நிலையில் என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை.”

சோவியத் யூனியன் கலைக்கப்பட வேண்டுமா என்று கேட்டு மார்ச் 1991ல் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமையுடன் 15 உறுப்பினர்கள் ஒன்றியத்தில் இணைந்திருந்தனர். அதில் ஒன்பது பேர் சோவியத் சிதறக்கூடாது என்று வாக்களித்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் போரிஸ் எல்ட்சின் ராணுவ எழுச்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, சோவியத்தைச் சிதறடித்தார். ‘எல்ட்சினின் அதிகார வெறியே சோவியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்’ என்கிறார் கோர்பசேவ். உண்மையில் ஸ்டாலின் மறைந்த 1953ம் ஆண்டே சோவியத் தடுமாற ஆரம்பித்துவிட்டது. அதிகாரபூர்வ மரணம் நிகழ்ந்தது 1991ல்.

சோவியத் யூனியன் ரஷ்யாவாக மாறியது நன்மைக்கே என்று வாதிடுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இவை. ‘மாஸ்கோ நகரை எடுத்துக் கொள்ளுங்கள். உணவுப் பொருள்கள் உள்பட எதை வாங்கவேண்டுமானாலும் வரிசையில் நிற்கவேண்டும். கொடுப்பதையே பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கார் வாங்க வேண்டுமானால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றை மாஸ்கோவைப் பாருங்கள். வழி நெடுகிலும் பளபளக்கும் ஷாப்பிங் மால்கள். பல மாடல் கார்கள். இது மாஸ்கோவா நியூயார்க்கா என்று அதிசயிக்கும் அளவுக்கு ஜீன்ஸ், பர்கர், கோக் என்று எல்லாம் கிடைக்கும்.’

கம்யூனிச முழக்கங்களும் பேனர்களும் இருந்த இடங்களில் ஆள் உயர பில்போர்டுகள். விமானங்கள் நிரம்பி வழிகின்றன. சுற்றுலாப் பயணிகள் ஈக்களைப் போல் மொய்க்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள் சர்வ சாதாரணம். ரஷ்யாவின் பொருளாதாரம் அரசின் கட்டுப் பாட்டில் மட்டும் இல்லை என்பதால் ஏற்பட்ட மாற்றங்கள் இவை. சந்தைப் பொருளாதாரமும் தனியார்மயமும் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. 1990களில் தொடங்கி, ரஷ்யாவின் பெரும்பாலான துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு விட்டன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகிலேயே மாஸ்கோவில்தான் அதிகளவு பில்லினியர்கள் குவிந்திருக்கிறார்கள்.

குறிப்பாக, புடின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியுள்ளது என்கின்றனர் பொருளதார நிபுணர்கள். தொழில் துறையில் 75 சதவீதமும் முதலீடுகளில் 125 சதவீதமும் ஏற்றம். சராசரி வருமானம் 80 டாலரில் இருந்து 640 டாலருக்கு உயர்ந்தது. ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியான நடுத்தர வர்க்கம், 2000-2006 காலகட்டத்தில் 8 மில்லியனில் இருந்து 55 மில்லியனாக பெரும் வளர்ச்சி பெற்றது. உலகிலேயே ஆயுத விற்பனையில் இரண்டாவது இடத்தை ரஷ்யா பெற்றுள்ளது (முதலிடம், அமெரிக்கா). தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்த இடத்தைப் பிடித்தது. அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் ரஷ்யாவைத் தவிர்க்க முடியாது. ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க மதபீடங்கள் 1991க்குப் பிறகு பிரசாரத்தில் தீவிரமடைந்து, வெற்றியும் பெற்றுள்ளன. தேவாலயங்கள் மீண்டும் வழிபாட்டுத் தலங்களாக மாறியுள்ளன. இஸ்லாத்தின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. ‘சுதந்தரமாக வழிபட முடிகிறது, பொதுவெளிகளில் மத ஊர்வலங்கள் நடத்த முடிகிறது,’ என்கிறார்கள் ரஷ்யர்கள். அதேசமயம், வாகாபிஸம் உள்ளிட்ட புதிய மதப்பிரிவுகள் தோன்றியதையும் செசன்யா போன்ற இடங்களில் மதக்கலவரங்கள் பெருகியதையும் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஒரு பக்கம் அபரிமிதமான வளர்ச்சி, இன்னொரு பக்கம் படுபாதாள ஏழைமை. இதற்குக் காரணம் என்ன? இரு அம்சங்களை ரஷ்யப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவுமுறையால் அரசு மட்டத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகியுள்ளது. தேச நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுயநலம் சார்ந்த முடிவுகளை அரசியல்வாதிகள் மேற்கொள்கிறார்கள். இதனால் பணக்காரர்களுக்குச் சாதகமான வளர்ச்சி மட்டுமே. இரண்டாவதாக, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு பலவீனம் அடைந்துள்ளது. வரி வசூல் செய்வதற்கும், நகரங்களில் குற்றங்களைக் குறைப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய ரஷ்ய இளைஞர்கள் புதிதாகக் கிடைத்த பாலியல் சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஒழிக்கப்பட்டிருந்த பாலியல் விடுதிகள் பளபளப்புடன் இன்று நகரம் முழுக்க வியாபித்திருக்கின்றன. சிதறிய சோவியத் நாடுகளில் இருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான அகதிகள் இருப்பிடம் வீதிகளில்தான்.

1996ல் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறை கேடுகள் நடந்திருப்பதையும், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லாததையும், பலகட்சி ஜனநாயக முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பொதுவுடைமை கொள்கையை அகற்றினால் மக்களுக்குக் கூடுதல் சுதந்தரம் கிடைக்கும், ஜனநாயகம் தழைக்கும், வெளிநாடுகளுக்குச் சுதந்தரமாகப் போய் வரலாம், அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளுடன் கைகுலுக்கிக்கொள்வதன் மூலம் அதிக வளம் பெறலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெற்றன என்பதும் உண்மை. ஆனால் இவை எதுவும் ரொட்டியின்றி அவதிப்படுபவர்களை மீட்டெடுக்கவில்லை.

அதனால் கடிகாரத்தைத் திருப்பமுடியமா என்னும் ஏக்கத்தை பெருமபாலான ரஷ்யர்களிடம் இருந்து ஒழிக்கமுடியவில்லை. குறிப்பாக, சோவியத்தில் இருந்து சிதறிய நாடுகள் கடந்த இருபது ஆண்டுகாலத்தைச் சோகத்துடன் திரும்பிப் பார்க்கின்றன. பாவேல் என்னும் பேக்கரி தொழிலாளி இந்த மன நிலையை இப்படிப் படம்பிடிக்கிறார். ‘பணம் உள்ளவர்களுக்கு இன்றைய ரஷ்யா பிடிக்கும். பணம் இல்லாத எங்களைப் போன்றவர்கள் பழைய சோவியத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்.’

சிதறிய சோவியத்

பதினைந்து சோஷலிச உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியம், சோவியத். 1991க்குப் பிறகு அவை தனித்தனியே சிதறின. ஆர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க் மினிஸ்தான், உக்ரேன் மற்றும் உஸ்பெகிஸ்தான். இவை பிந்தைய சோவியத் நாடுகள் என்றும் புதிய சுதந்தர நாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சோவியத் சாதனைகள்

மன்னராட்சியில் இருந்து விடுதலை. இலவச கல்வி. இலவச மருத்துவம். சிறு பான்மை மக்களுக்கும் அவர்கள் மொழி மற்றும் கலாசாரத்துக்கும் பாதுகாப்பு, அங்கீகாரம். மத பீடங்களின் அதிகாரம் ஒடுக்கப்பட்டாலும், வழிபாட்டு உரிமை மதிக்கப்பட்டது.

அபரிமிதமான செல்வம், அபரிமிதமான ஏழைமை ஒழித்துக் கட்டப்பட்டன. உற்பத்தியும் உற்பத்திச் சக்திகளும் பொதுவுடைமையாக்கப்பட்டன. பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசு அமைப்புகள், சட்டங்கள். ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொழில்துறையில் தன்னிறைவு. அறிவியல், தொழில்நுட்பத்தில் துரித வளர்ச்சி. கிராமப் புறங்களுக்கும் நகரங்களுக்குமான இடைவெளி பெருமளவில் குறைக்கப்பட்டது. கூட்டுப்பண்ணைகள், கூட்டு விவசாயம் மூலம் பஞ்சம் ஒழிக்கப்பட்டது.