Sunday, November 27, 2011

கர கர காளான் வடை!

ஷாஹி துக்கடா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 3 கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, திராட்சை - 10.

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரவுன் பகுதிகளை 'கட்’ செய்து விட்டு, நான்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை நெய்யில் 'மொறுமொறு’வென பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு பால் கலவையில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பால் - பிரெட் கலவை மீது தூவி பரிமாறவும்.

- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்

காளான் வடை



தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பையும் வேர்க்கடலையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பாதி அரைக்கும்போது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பிறகு, காளானை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசவும். வெறும் கடாயில் காளானைப் போட்டு வதக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் வற்றி காளான் சுருண்டு வந்ததும் இறக்கி, அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... சுவையான காளான் வடை ரெடி!

- எஸ்.கோகிலாம்பாள், திருச்சி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...ஷாஹி துக்கடா: பாலின் அளவைக் குறைத்து, பால் பவுடர் அல்லது 'மில்க் மெய்ட்' சேர்த்தால் சுவை கூடும்.

காளான் வடை: வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்காமல், மிக்ஸியில் கொரகொரவெனப் பொடித்துப் போட்டால் வடை 'க்ரிஸ்பி’யாக இருக்கும்.

30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி

சாப்பாட்டுக்கு 'டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, 'இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால், 'ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள்.

அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ''எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்'' என்று வாழ்த்துகிறார்.

அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை - சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

பேல் பூரி

தேவையானவை: அரிசிப் பொரி - 3 கப், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - தலா கால் கப், சாட் மசாலா - கால் டீஸ்பூன்.

கார சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.

ஸ்வீட் சட்னிக்கு: புளி - 50 கிராம், வெல்லம் - கால் கப், பேரீச்சம்பழம் - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்... கார சட்னி தயார். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து... மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்... ஸ்வீட் சட்னி ரெடி.

வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து... அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பானி பூரி

தேவையானவை: ரவை - அரை கப் மைதா - அரை டீஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, சோடா உப்பு, சர்க்கரை, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.

அவற்றை சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும். பூரியின் நடுவில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி ஊற்றி பரிமாறவும்.

ரவா பூரி

தேவையானவை: மைதா, மெல்லிய ரவை - தலா ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நெய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). 15 நிமிடம் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பொரிக்கவும். இந்த பூரி மிகவும் கரகரப்பாக இருக்கும்.

தக்காளி பூரி

தேவையானவை: மைதா - ஒரு கப், கோதுமை மாவு - ஒன்றரை கப், தக்காளி - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி... சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஷாஹி பட்டூரா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், ஈஸ்ட்,

ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், மோர் - ஒன்றரை கப், சூடான பால் - அரை கப், ஸ்பிரிங் ஆனியன் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், மோர், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

தேங்காய் பூரண பூரி

தேவையானவை: கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ரவை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.

ஸ்டஃப்டு வெஜ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், நெய் - 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு: வெங்காயம், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா ஒன்று , கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து... கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். கோதுமை மாவு, மைதா மாவு, நெய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை பூரிகளாக தேய்க்கவும் ஒரு பூரியில் மசாலாவை வைத்து, மற்றொரு பூரியை மேலே வைத்து, தண்ணீரால் தொட்டு மூடவும். பிறகு காயும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

பசலைக்கீரை பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பசலைக்கீரை - 2 கட்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான மாவாக பிசைய வும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

சோம்பு பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - அரை கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரை சுடவைத்து அதில் சோம்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற விடவும். கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, அதில் சோம்பு, வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை - அரை டீஸ்பூன், தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, தயிர், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறிது நேரம் ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

காரப் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 3 கப், ரவை, கடலை மாவு - தலா 2 டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, ஓமம், மிளகாய்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மசாலா சீஸ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் - ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). இஞ்சி - பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் - இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பிரெட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், பிரெட் - 8 ஸ்லைஸ், புளிப்பான கெட்டித் தயிர் - அரை கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும். பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டைகளாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

புதினா கொத்தமல்லி பூரி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா - தலா அரை கப், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

வடப்பி

தேவையானவை: சோள மாவு - இரண்டரை கப், கோதுமை மாவு - ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கைப்பிடி அளவு, அரிசி மாவு - அரை கப், புளிக்காத தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் கப் (மாவுக்கு), துருவிய வெள்ளரிப் பிஞ்சு - 2 கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை சற்று கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவை பிசைந்த உடனேயே பூரிகளாக இட்டு பொரித்துவிட வேண்டும்.

காலிஃப்ளவர் மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலா பூரணத்துக்கு: துருவிய காலிஃப்ளவர் - 2 கப், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி - தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால்... மசாலா பூரணம் தயார்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பாதாம் பூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை, பாதாம் - தலா ஒரு கப், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் - 5, கேசரி பவுடர் - சிறிதளவு, பால் - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: வெந்நீரில் பாதாமை போட்டு ஊற விடவும். பிறகு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், அரைத்த பாதாம், பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்த்துப் பிசையவும். மாவை உருண்டைகளாக்கி, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மேத்தி பூரி

தேவையானவை: கோதுமை மாவு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - தலா 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

தக்காளி சீஸ் பூரி

தேவையானவை: மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீஸ் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கேரட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய கேரட் - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஆலு பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 2 கப், உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உரித்து, மசித்தது) - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்). பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொன்றாக பொரிக்கவும்.

குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

தால் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், தனியாதூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து... உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மத்ரி

தேவையானவை: மைதா - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - 2 சிட்டிகை, ஓமம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். 15 நிமிடம் ஊற விட்டு, உருண்டைகளாக உருட்டி, சற்று கனமாக இடவும். பின் சிறு வட்ட மூடி (அ) கிண்ணத்தால் வெட்டி முள்கரண்டியால் குத்திவிட்டு, பின்னர் எண்ணெயில் பொரிக்கவும். இது ஒரு குஜராத்தி உணவு.

கேரட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 2 கப், மசித்த கேரட் விழுது - ஒரு கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓரு பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைப் போட்டு கரைக்கவும். இதை மைதா மாவில் சேர்த்துப் பிசிறி, கேரட் விழுதை சேர்த்து நன்கு பிசையவும். இதை ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து பொங்க விடவும். பிறகு மாவை கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

லுச்சி

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் உப்பு, ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிது ஊறியவுடன் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும் இந்த வகை பூரி மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற உணவாகும். உருளைக்கிழங்கு சப்ஜி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

இன்ஸ்டன்ட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், சாதா சோடா - ஒரு பாட்டில், சர்க்கரை - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோடாவில் உப்பையும் சர்க்கரையும் போட்டு நன்கு நுரைக்கும்படி கலக்கவும். பிறகு அதை மைதா மாவுடன் சேர்த்துப் பிசையவும். சிறிது ஊற வைத்து, சற்று கனமான பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மிளகு சீரக பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா - தலா முக்கால் கப், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகையும், சீரகத்தையும் வாணலியில் சிறிது சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். மாவுகளை ஒன்றாக்கி, உப்பு போட்டு கலந்து, அதில் மிளகு - சீரகப் பொடியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறிது ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ராகி பூரி

தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை சேர்த்து, கெட்டியாக பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கசகசா பூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பூரணத்துக்கு: கசகசா (அரைத்த விழுது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கசகசா விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, பூரணத்தை நடுவில் வைத்து பரப்பி, ஓரத்தை சேர்த்து மூடி, பூரிகளாக தேய்க்கவும். பிறகு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

கம்யூனிசமே இப்படித்தானா?

ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம்.


நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?


சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.


"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள்.


இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான்.

Thursday, November 10, 2011

கல்லடிபடும் சச்சின்!

சோயிப் அக்தர் சச்சினை விமர்சித்து எழுதின புத்தகம், இப்போது டாப் செல்லர். இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஜெயவந்த் லீலே தன்னுடைய I Was There என்கிற புத்தகத்தில் சச்சினைத் தாக்கி, சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், சச்சினைப் பற்றி லீலே சொன்னதெல்லாம் தினமும் பத்திரிகையில் வந்து கொண்டிருப்பதால் அந்தப் புத்தகமும் அதிக கவனத்துக்கு ஆளாகியிருக்கிறது. லீலே சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?

‘1999ல் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் தோற்றுப்போனவுடன் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் சச்சின். ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்தபோது நான் பதறிப் போய்விட்டேன். தொடரில், இன்னுமொரு ஒரு டெஸ்ட் ஆடவேண்டி இருந்தது. ரவி சாஸ்திரி, ராஜ்சிங் துங்கர்புரிடம் பிரச்னையைச் சொன்னேன். அவர்களும் சச்சினிடம் பேசினார்கள். ஆனால் சச்சின் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. வேறுவழியில்லாமல் சச்சினின் மனைவி அஞ்சலியிடம் பேசி நிலைமையை எடுத்துச் சொன்னோம். அவர் சச்சினிடம் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறச் செய்தார். அடுத்த டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.

ஒரு தேர்வுக்குழுக் கூட்டத்தில், மும்பை பந்துவீச்சாளர் நிலேஷ் குல்கர்னியைப் பரிந்துரைத்தார் சச்சின். ஆனால், அவர் பந்துவீசி சச்சின் பார்த்தது கிடையாது. அந்த ரஞ்சி டிராபி சீஸனில், மும்பை அணியிலிருந்து குல்கர்னியை நீக்கியிருந்ததையும் சச்சின் அறிந்திருக்கவில்லை. யாரோ ஒருவர் தவறாகச் சொன்னதை நம்பி ஏமாந்து போனார்.

1999ல் மேட்ச் பிக்ஸிங் உச்சத்தில் இருந்த நேரம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்ச் ஒன்றில், இந்திய அணி, நியூசியை ஃபாலோ ஆன் செய்தது. இதனால், தாம் மீண்டும் பந்துவீசப் போவதாக நடுவர்களிடம் சச்சின் அறிவித்தார். ஆனால், இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் மறுத்துவிட்டார். இறுதியில், ஜெயிக்கவேண்டிய டெஸ்ட் டிராவாகிப் போனது. வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டதனால்தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை.’

இது போதாதென்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், ‘ஃபியர்ஸ் ஃபோகஸ்’ என்ற நூலில் சச்சினைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

‘மலேசியாவில், 2006-ல் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சச்சின் சரியாக விளையாடவில்லை. இதையடுத்து ஒரு நாள், 2 மணி நேரத்துக்கும் மேல் என்னுடன் உரையாடினார். அவர் தனது அப்போதைய ஆட்டம் குறித்தும், காயங்கள் குறித்தும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அவர் மீது கோடிக்கணக்கானோர் வைத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சில சமயங்களில் அவர் பலவீனமாக இருப்பார். அணியுடன் பயணம் செய்யும் போது தனது ஹெட் ஃபோனைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார். முழு கவனமும் விளையாட்டு பற்றியே இருக்கும். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனிடம் கூட மக்கள் இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1989 முதல் மக்களின் எதிர்பார்ப்பை அவர் சுமந்தே வந்துள்ளார். அவருக்கு நண்பர்களும் நிறைய பேர் கிடையாது.’

2007 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சேப்பல், ‘இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மாஃபியா கும்பல் போலச் செயல்பட்டு இளம் வீரர்களை மிரட்டுகிறார்கள்,’ என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த சச்சின், ’உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும்,’ என்று கூறினார். அதற்குத்தான் இப்போது மலேசியா தொடரைக் கையில் எடுத்திருக்கிறார் சேப்பல்.

இப்படி கிரிக்கெட் புத்தகம் எழுதுபவர்களெல்லாம் ஏன் சச்சினைக் குறி வைக்கவேண்டும்? புத்தக வெளியீட்டின்போது, சச்சின் குறித்த கருத்துகளை மட்டும் ஏன் மீடியாவுக்கு அளிக்கவேண்டும்?

இதற்கெல்லாம் ஒரே பதில். புத்தகம் அதிக கவனம் பெறவேண்டும். அதிக காப்பிகள் விற்கவேண்டும். ஜெயவந்த் லீலே போன்றவர்கள் ஒரேநாளில் தன் வாழ் நாள் புகழை அடைவார்கள். நிச்சயம் சச்சின் யார்மீதும் மானநஷ்ட வழக்கு போடமாட்டார். சச்சினைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், அதில் தகவல்கள் மிகச்சரியாக இருக்க வேண்டும். மேலும், ஒரு கிரிக்கெட் வீரர் என்பவர் ரோபோ கிடையாது. எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வதற்கு. அவர் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும்போதுதான் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் சச்சின் நிராகரித்து மௌனம் காப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கிறது.

சூப்பர் சமையல்.................

ஸ்டீம் பனீர் டிலைட்

தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 1 கப்,

உப்பு - தேவையான அளவு,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

பூரணம் செய்ய:

துருவிய பனீர் - 1/2 கப்,

வெங்காயம் - 2,

பூண்டு - 5-6

துருவிய கோஸ் - 1/2 கப்,

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் (அரைத்த விழுது) - 1/2 கப்,

சோயா சாஸ் - 2-3 டீஸ்பூன்,

வினிகர் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவு தயாரிக்க:

* ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து தனியாக வைக்கவும்.

பூரணம் தயாரிக்க:

* ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* துருவிய கோஸ் சேர்த்து, வதங்கியவுடன், சீரகத் தூள், மிளகுத் தூள், மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* பின்பு, பனீர், சோயா சாஸ், வினிகர் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

ஸ்டீம் பனீர் டிலைட் தயாரிக்க:

* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இரண்டு/மூன்று டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து, ‘பை’ போல் மூடவும்.

* பூரணம் வைத்த ‘பை’களை, இட்லித் தட்டில் அடுக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* சூடான ஸ்டீம்ட் பனீர் டிலைட்’ ஐ, சாஸுடன் பரிமாறவும்.

சன்னா பாஸ்தா சூப்

தேவையான பொருள்கள்: பாஸ்தா - 1/2 கப், வேகவைத்த வெள்ளை கொண்டைக்கடலை - 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் - 1 கப் (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட் வேகவைத்து வடிகட்டிய தண்ணீர்), ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 1/2 கப், இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1/4 கப், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* நான்-ஸ்டிக் பிரஷர் பான்-இல் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

* நன்கு வதங்கியவுடன், வெஜிடபிள் ஸ்டாக், பாஸ்தா சேர்க்கவும்.

* பின்பு, உப்பு, மிளகுத்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், வெள்ளைக் கொண்டைக்கடலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும்.

* சாஸ் மற்றும் வினிகருடன் பரிமாறவும்.

மாதுளை புதினா பச்சடி

தேவையான பொருள்கள்: மாதுளை முத்துகள் - 1/2 கப், துருவிய வெள்ளரிக்காய், காரட் - 1/2 கப், தேன் - 2 டீஸ்பூன், கறுப்பு மிளகுத் தூள் - 2 டீஸ்பூன், புதினா சட்னி - 1-2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புளிக்காத தயிர் - 1 கப்

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் இட்டு, நன்றாகக் கலக்கவும். துருவிய வெள்ளரிக்காய், காரட், தேன், கறுப்பு மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு மாதுளை முத்துக்களைச் சேர்க்கவும்.

புதினா சட்னி சேர்த்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

மஷ்ரூம் கோலா புலாவ்

தேவையான பொருள்கள்: (மஷ்ரூம் கோலாவுக்கு), மஷ்ரூம் - 10, பொடித்த பொட்டுக்கடலை - 1/2 கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், இலவங்கம் -1, பட்டை- தலா 1 , பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1/4 கப், மிளகுத் தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய்-100 கிராம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை - 1/2 கப், உப்பு - தேவையான அளவு

புலாவுக்கு:

பாசுமதி அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம் - 4, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக நறுக்கியது), புதினா - 1/4 கப்( பொடியாக நறுக்கியது), பட்டை, இலவங்கம், ஏலக்காய் - 1 (சிறியது), நெய் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் கோலா செய்முறை:

* மஷ்ரூமை நன்கு கழுவி, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, வெண்ணெயில் வதக்கவும்.

* பொட்டுக்கடலையை நைசாகப் பொடிக்கவும்.

* வதங்கிய மஷ்ரூமுடன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பட்டை, இலவங்கம், பெருஞ்சீரகம், கொத்துமல்லி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த கலவையில், பொட்டுக் கடலை மாவைச் சேர்த்து, நன்கு பிசைந்து, நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

புலாவ் செய்முறை:

* பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தேங்காய்ப் பாலுடன் ஒரு கப் நீர் சேர்த்து ஊறவைக்கவும்.

* ஒரு பிரஷர் குக்கரில், நெய்+எண்ணெய், பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி- பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

* பிறகு தக்காளி, புதினா, மல்லித்தழை, மஞ்சள் தூள் சேர்த்து, ஊறிய அரிசியைப் பாலுடன் அதில் போட்டு, உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கி, மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

‘மஷ்ரூம் கோலா புலாவ்’ பரிமாற:

‘புலாவ்’வுடன், மஷ்ரூம் கோலா உருண்டைகளைச் சேர்த்து, சாதம் உடையாமல் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

சுவையான ‘மஷ்ரூம் கோஃப்தா புலாவ்’ விருந்துக்கு ரெடி!

கோபி பட்டர் கறி

தேவையான பொருள்கள்: காலிஃபிளவர் - 1 (சிறு பூக்களாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன் (2+2), மைதா மாவு - 1/2 கப், சோள மாவு - 1/2 கப், முந்திரி - 15, பால் - 1/2 கப், மிளகாய்த் தூள் - 3-4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2-3 (பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1 கப், வெண்ணெய் - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்திற்குக் கலக்கவும்.

* காலிஃபிளவரை அதனுடன் சேர்த்து கலக்கி, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்பு, காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

* முந்திரியை, பாலில் அரை மணி முதல் 1 மணி நேரம் ஊறவிட்டு, தனியாக அரைக்கவும். பாலைத் தனியாக எடுத்து வைக்கவும்.

* ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கிய பின், தக்காளி விழுது, பொரித்த காலிஃபிளவர் சேர்க்கவும்.

* பின்பு, அரைத்த முந்திரி விழுது, பால் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டு மூடிவிடவும்.

* நன்றாகக் கெட்டியானதும், வெண் ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சாக்கோ பிஸ்

தேவையான பொருள்கள்: பிரட் (ஸ்வீட்)- 6 துண்டுகள், பொடித்த சர்க்கரை - 1/2 கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், போர்ன்விடா/பூஸ்ட் - 2 டீஸ்பூன், ஃபிரஷ் க்ரீம்-1 கப், பாதாம், பிஸ்தா - தலா 6 (துருவியது)

செய்முறை:

* பிரட்டை, நன்றாகப் பொடித்து ஒரு பெரிய பாத்திரம்/கிளாஸ் பௌலில் பிரட் தூள்களைப் போடவும்.

* அதில் பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர், போர்ன்விடா, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* நன்றாகக் கலக்கியதும், ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து, துருவிய பாதாம், பிஸ்தா சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

* கேக்-இன் சுவையைத் தோற்கடிக்கும், எளிதான, சுவையான, சத்தான சாக்கோபிஸ்.

Tuesday, November 1, 2011

30 வகை ஈஸி ரெசிபி!

கடைக்குப் போனோமா... ஸ்வீட் பாக்ஸை வாங்கினோமா... முடிஞ்சுது தீபாவளி!' என்கிற நினைப்பு பெருகிவிட்ட காலம் இது. இதற்கு நடுவேயும், 'அது ஒரு முறுக்கா இருந்தாலும், என் கையால செய்து கொடுக்கறப்ப கிடைக்கற சந்தோஷமே தனி!' என்று நெகிழ்பவர்கள், அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை மேலும் நெகிழ வைப்பதற்காக, இங்கே 30 வகை இனிப்பு - கார ரெசிபியுடன் உதவிக் கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்-2 என்றபடி, பயத்தமாவு லட்டு, வைட்டமின் சத்து கொண்ட நெல்லிக்காய் அல்வா என்று வித்தியாசமாக அவர் தந்திருக்கும் ரெசிபிகளை, கண்ணுக்கு குளுமையளிக்கும் முறையில் அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி!

மூவர்ண கேக்

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சாக்லேட் பார் - 4 (அல்லது பூஸ்ட் அல்லது போர்ன்விடா பவுடர் - 4 டீஸ்பூன்), நெய் - 100 மில்லி.

செய்முறை: மைதா மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச் சவும். மைதா மாவை மூன்று பங்காக பிரிக்கவும். சர்க்கரை பாகையும் மூன்று பங்காக பிரித்து... ஒரு பங்கு மைதாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகை சேர்த்துக் கலக்கி, சாக்லேட்டை கரைத்து விட்டு கிளறி, கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மீண்டும் ஒரு பங்கு மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகு, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மிகுந்த ஒரு பகுதி மாவுடன் மீதி சர்க்கரை பாகு சேர்த்துக் கிளறி (கலர் சேர்க்க வேண்டாம்) கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். ஆரஞ்சு, பிரவுன், வெள்ளை என்று மூன்று கலரில் பார்க்க அழகாக இருக்கும்.

பயத்தம் மாவு லட்டு

தேவையானவை: பயத்தம்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையும் தனியாக அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து, உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: பயத்தம்பருப்பு குளுமை உடையது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும்.

வள்ளிக்கிழங்கு அல்வா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி, சர்க்கரை கரைந்ததும் மசித்த வள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யை உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதில் விடவும். அல்வா பதம் வந்ததும்... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டிலும் இதேபோல அல்வா செய்யலாம்.

பாசிப்பருப்பு அசோகா

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த கோதுமை மாவு - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.

செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து, வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும். கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் விட்டு மேலும் கிளறி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஓம தட்டை

தேவையானவை: ஓமம் - 100 கிராம், மைதா மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓமத்தை தண்ணீரில் அலசி எடுத்து, வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். மைதா மாவு, உப்பு, வெண்ணெய், பொடித்த ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை தட்டைகள் போல் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: ஓம வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த தட்டையை ஓமம் சேர்க்காமலும் செய்யலாம். பிறகு அதைப் பொரித்து ஜீராவில் போட்டு பரிமாறலாம்.

கைமுறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய், சீரகம், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை விரல் களால் சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து, முறுக்கு சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை கவனமாகப் போட்டு, எண்ணெய் ஓசை அடங்கி வரும்போது எடுக்கவும். சீரகத்துக்குப் பதில் எள்ளும் போடலாம்.

ஹெர்பல் ஓமப்பொடி

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், ஓமம் - 25 கிராம், புதினா, துளசி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டுப் பல் - 4, வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: ஓமத்தை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரில் அலசி எடுத்து... புதினா, துளசி இலை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெயை ஒன்றாக சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இது வாய்க்கு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

ஜீரோ போளி

தேவையானவை: ரவை - 200 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 250 மில்லி.

செய்முறை: ரவையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து, கேசரி பவுடர் சேர்த்து மேலும் பிசைந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அப்பள வடிவில் இட்டு வைத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஜீரா காய்ந்ததும் (கம்பிப் பதம்), பொரித்து வைத்ததை இருபுறமும் பாகால் நனையும்படி போட்டு எடுத்து தனியே வைக்கவும். ஜீரா மேலே பூத்து வந்ததும் அப்படியே சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பாலை நன்கு காய்ச்சி போளியின் மேல் விட்டு, ஊறியதும் சாப்பிட்டால்... சுவையாக இருக்கும். மேலே குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் தூவலாம்.

மல்டி பருப்பு மிக்ஸர்

தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு பயறாக பொரித்து எடுக்கவும். பொரித்த பயறுகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி, கறிவேப்பிலை பொரித்துப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: மழைக்காலத்தில் இந்த மல்டி பருப்பு மிக்ஸரை தயாரித்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால், ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

மசாலா கடலை

தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்துக் கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வேர்க்கடலையை மாவில் தோய்த்துப் போட்டு பொரிக்கவும்.

குறிப்பு: கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.

கர்ச்சிக்காய்

தேவையானவை: ஈர அரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி அரைத்த மாவு) - 200 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொட்டுக்கடலை - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி.

செய்முறை: தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், வெல்லம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை சொப்பு போல் செய்து, பொடித்து வைத்திருக்கும் பொடியுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி, உள்ளே வைத்து மூடவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து சொப்புபோல செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இது பாட்டி காலம் முதல் செய்யப்பட்டு வரும் பழைமையான ஸ்வீட்.

நாரத்தை இலை சீடை

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், நாரத்தை இலை - ஒரு கைப்பிடி அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், நாரத்தை இலையை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அரிசி மாவு உளுத்தம் மாவுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை சீடைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீடைகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கொப்பரைத் தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.

கலர் கார முறுக்கு

தேவையானவை: ஈர அரிசி மாவு (பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி, அரைத்து, சலித்த மாவு) - 300 கிராம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிற கேசரி பவுடர் - சிறிதளவு, வெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று பாகமாக பிரிக்கவும். பிறகு ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கலர் பவுடரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து தனித் தனியாக வைக்கவும். மாவை சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி, ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மூன்று கலர்களில், பார்வைக்கு அழகாகவும், சுவையில் அசத்தலாகவும் இருக்கும் இந்த முறுக்கு.

மாலாடு

தேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையையும் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்யை சூடாக்கி மாவில் விட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை போட்டு கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

எனர்ஜி லட்டு

தேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலை - தலா 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து சலிக்கவும். சர்க்கரைப் பொடியுடன் மாவைக் கலந்து, நெய்யை லேசாக சூடுபடுத்தி சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: இந்த உருண்டை ஒன்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும்... உடம்பு புத்துணர்ச்சி பெறும்.

நியூட்ரிஷியஸ் மிக்ஸர்

தேவையானவை : அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 250 கிராம், மிளகாய்த்தூள் - 25 கிராம், முந்திரிப் பருப்பு - 10, பாதாம் பருப்பு - 10, பிஸ்தா பருப்பு - 10, அவல் - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை, சீரக மிட்டாய் - சிறிதளவு, ஓமம் (வறுத்துப் பொடித்தது) - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் சிறிதளவு எடுத்து (சம அளவு) உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

அரிசி மாவு, கடலை மாவை மீண்டும் சம அளவில் எடுத்து, உப்பு சேர்த்து, பொடித்த ஓமத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

சிறிதளவு கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தி தேய்த்து எண்ணெயில் வேகவிட்டு எடுக்கவும்.

அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து எடுக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்பை நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையை பொரிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, மிளகாய்த்தூள், சீரகமிட்டாய் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: காரம் அதிகம் போடாமல் தயாரித்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எள் தட்டை

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், எள் - 4 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் வறுத்த அரைத்த உளுத்தம் மாவு, எள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டை வடிவில் தட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் தட்டைகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கறிவேப்பிலை, கொத்தமல்லிக்குப் பதிலாக புதினாவை பொடியாக நறுக்கிப் போட்டும் தட்டை செய்யலாம். எள்ளுக்குப் பதிலாக ஓமம், பொட்டுக்கடலை, உடைத்த வேர்க்கடலை சேர்த்தும் தயாரிக்கலாம்.

பொருள் விளங்கா உருண்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். கடலைப்பருப்பையும் தனியாக வறுக்கவும். பின்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். வெல்லத்தை நீரில் கரைய விட்டு இளம் பாகாக காய்ச்சவும் (லேசாக உருட்ட வரும் மெழுகு பதம்). நறுக்கிய கொப்பரையை நெய் விட்டு வறுத்து, சலித்து வைத்திருக் கும் மாவுடன் சேர்க்கவும். சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: இதில் என்ன பொருள் சேர்த்துள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினம் என்பதால்தான் இந்த உருண்டைக்கு 'பொருள் விளங்கா உருண்டை’ என்று பெயர். கெட்டியாக இருப்பதால் 'கெட்டி உருண்டை’ என்றும் கூறுவார்கள்.

ரஸ்க் முந்திரி ஃப்ரை

தேவையானவை: ரஸ்க் - ஒரு பாக்கெட், முந்திரிப் பருப்பு - 30, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை : அரிசி மாவுடன் பொடித்த ரஸ்க், கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முந்திரியை மாவுக் கரைசலில் தோய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

தேங்காய் பர்ஃபி

தேவையானவை: தேங்காய் - ஒன்று, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு காய்ச்சி... தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.

குறிப்பு: பாதாம், முந்திரியை அரைத்து சேர்க்கலாம். சிறிது ரவை சேர்த்தும் தயாரிக்கலாம்.

பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). ஒரு அகலமான பேஸினில் பொட்டுக்கடலையைப் போட்டு, பாகை சிறிது சிறிதாக ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: பொட்டுக்கடலை புரோட்டீன் சத்து மிகுந்தது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மனோகர லட்டு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு பிழியும் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). முறுக்கை வாய் அகலமான பேஸினில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: முறுக்கில் உப்பு சேர்க்கக் கூடாது. இந்த லட்டு, முறுக்கின் கரகரப்பும் வெல்லத்தின் இனிப்பும் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்.

நெல்லிக்காய் அல்வா

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு உதிர்த்து, விதை நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு நெல்லிக்காய் விழுதை வதக்கி, பின்பு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

முள்ளு தேன்குழல்

தேவையானவை : அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 400 கிராம், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

பாதாம் முந்திரி கேக்

தேவையானவை: பாதாம் பருப்பு - 15, முந்திரிப் பருப்பு - 20, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன்.

செய்முறை: பாதாம், முந்திரியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்பு, முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

சீரக முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சிறிய சிறிய முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

ரவா லட்டு

தேவையானவை: ரவை - 250 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 200 மில்லி.

செய்முறை : ரவையை பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவில் விட்டு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சீஸ் பனீர் ரோல்

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், துருவிய பனீர் - 100 கிராம், சீஸ் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் சீஸ், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய சப்பாத்தி வடிவில் இட்டு, மேலே பரவலாக பனீர் துரு வலைப் போட்டு லேசாக உருட்டவும். இதை சிறிது சிறிதாக 'கட்’ செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: சீஸ், பனீர் சேர்ந்த புதுமாதிரியான இந்த ரோலை குழந்தைள் விரும்புவார்கள்.

கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், பாகு வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, சுத்தம் செய்யவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். பாகு காய்ந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலையைப் போட்டு, சிறிது சிறிதாக பாகை ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

ரோஜா குல்கந்து

தேவையானவை: பன்னீர் ரோஜாப்பூ - 20, நெய் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக ஆய்ந்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது நெய் விட்டு வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாகக் கிளறி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். கூடவே, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.