Saturday, March 12, 2011

ஜெ. மனசைக் கரைத்த ஒன்பது காரணங்கள்!................. காங்கிரஸைச் சேர்த்தால் எதையும் பேச முடியாது!

மெள்ள நெருங்கும்போது நீ தூரப் போகிறாய்... விட்டு
விலகும்போது நீ நெருங்கி வருகிறாய்...’ - இது காதலுக்காக எழுதப்பட்ட பாடல் வரியாக இருந்தாலும், இன்றைய சூழலில் அ.தி.மு.க-வுக்கும், காங்கிரஸுக்கும்கூட அப்ப​டியே அப்பட்டமாகப் பொருந்துகிறது!

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ளூர நடந்த பேரங்கள் படிந்து வராத காரணத்தால் 'மத்திய அரசுக்கு பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு' என்று கருணாநிதி 'மார்ச் 5' செக் வைக்க... இது ஜெயலலிதாவை அதிகம் ஆச்சர்யப்படுத்தவில்லை என்கிறார்கள். ஒரு வருடம் முன்பே எப்படியாவது காங்கிரஸை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என பல்​வேறு முயற்சிகளை செய்தார் ஜெயலலிதா. அப்போதே அவருக்கு முற்றாக 'நெகடிவ்' பதில் வந்ததாகச் சொல்ல முடியாது. அதைத் தொடர்ந்துதான், ஆ.ராசா கைது தாமதமான சமயத்தில், ''பதினெட்டு எம்.பி-களுக்கு நான் கியாரண்டி!'' என்று வலிய ஒரு சேனலைக் கூப்பிட்டுப் பதிவு செய்து வைத்தார். இதற்கிடையே, அ.தி.மு.க-வுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்த காங்கிரஸ், சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மூன்று முக்கியஸ்தர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்​பியது. கடற்கரையோரம் உள்ள ஒரு நகரத்தில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்​​டவர்கள், தமிழகம் முழுக்கச் சுற்றி அ.தி.மு.க-வைப்பற்றி அலசி ஆராய்ந்தனர். அவர்கள் கொடுத்த ரிப்போர்ட், 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்குத்தான் செல்வாக்கு அதிகம். அதனால், நாம் தி.மு.க. சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டத் தேவை இல்லை. நாம் கேட்கும் ஸீட்களை அவர்கள் ஏற்காதபட்சத்தில், கூட்டணியில் இருந்து வெளிவந்து, அ.திமு.க-வோடு சேர்ந்துவிடலாம்!’ என்று இருந்ததாம்.

இத்தனைக்கும் நடுவே காங்கிரஸுடன் கூட்டணி போட்டால் எப்படி இருக்கும் என்று அண்மையில் அ.தி.மு.க. தரப்பிலிருந்து ஒரு சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதுபற்றி அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ''காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது குறித்து தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் மக்களிடம் சர்வே எடுக்கச் சொன்னார் அம்மா. பல தரப்பினர்கிட்டயும் எடுக்கப்பட்ட அந்த சர்வே முடிவு இப்போ அம்மா கையில்! அதில், 'காங்கிரஸுடன் அ.தி.மு.க. சேரவே கூடாது’ என்பதற்கு ஒன்பது காரணங்களைச் சொன்னார்கள்.

முதல் காரணம், ஈழத் தமிழர் பிரச்னை. காங்கிரஸ் அரசாங்கம் நினைச்சிருந்தா, இலங்கை அரசைக் கண்டிச்சு ஈழக் கொடுமைகளைத் தடுத்திருக்கலாம்.

அடுத்து, அம்மா அதிகமாகக் கையில் எடுத்துப் போராடிய தமிழக மீனவர் பிரச்னை. காங்கிரஸுடன் கூட்டு சேரும்பட்சத்தில், இதுவரை கொலை செய்யப்பட்ட 520 மீனவர்களைப்பற்றித் தேர்தல் நேரத்தில் பேசவே முடியாது.

மூன்றாவது, காவிரிப் பிரச்னை. காவிரி நதிநீர் ஆணையம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகா வழங்காமல் இழுத்தடிச்சுட்டே இருக்கு. இதைத் தீர்த்துவைக்க வேண்டிய காங்கிரஸ், கை கட்டி வேடிக்கை பார்க்கிறது.

நான்காவது... முல்லை பெரியாறு பிரச்னை. இது குறித்து மத்திய அரசோட செயல்பாடு மெத்தனமா இருக்கு.

ஐந்தாவது, பாலாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான சிக்கல்கள். ஆறாவது, விலைவாசி! வெங்​காயத்தில் ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளோட விலையும் விண்ணை முட்டுது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எதுவுமே செய்யலை.

உலகத்தையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏழாவது பிரச்னை. அதில் காங்கிரஸ் தலைகளுக்கும் தொடர்புன்னு தகவல்கள் வெளியாகுது. அந்தக் கூட்டணிக்குள்ள போயிட்டா, அப்புறம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழு உண்மைகளைப் பேசவே முடி​யாமப் போயிடும்.

கடந்த ஒரு வருஷத்தில் மட்டும் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்ந்திருக்கு. மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்னை என்பதால், தேர்தல் நேரத்தில் இதைப்பத்தி பேசியே தீரணும். காங்கிரஸ் எங்களோடு இருந்தால் எப்படிப் பேச முடியும்?

கடைசியா, ஊழல் விஷயங்கள்... கறுப்புப் பணத்தைப் பதுக்குவதில் தொடங்கி, காமன் வெல்த் ஊழல் வரை எல்லாமே மத்திய அரசோட கண்ணசைவில்தான் நடந்​திருக்கு. மூணு வருஷங்களில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் இந்தப் பிரச்னைகளைப்பத்தி நாடாளுமன்றத்தில் தொடந்து பேசினாங்களே... அப்படி இருக்கையில், இப்போ காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தால், எந்தப் பிரச்னை​களையுமே தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பேச முடியாமல் போய்... மக்கள் மத்தியில் தற்போது உள்ள செல்வாக்கு கண்டிப்பாகக் குறைத்துவிடும்.

அது மட்டும் இல்லாமல், 'தி.மு.க-வுக்குப் போயிட்டு அங்கே பேச்சுவார்த்தையில் சரிப்பட்டு வரலேன்னுதானே நம்ம பக்கம் வரப் பார்க்கிறாங்க? அப்படி ஒரு இரண்டாம் பட்சமான உறவு தேவையே இல்லை! அதுவும் தவிர... வைகோ, விஜயகாந்த், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எல்லாமே நாங்கதான் வேணும்னு தெளிவான முடிவோடு வந்தாங்க. காங்கிரஸ் உள்ளே வந்தா, இவங்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களையும் நினைச்சுப் பார்க்கணும்!'' என்று காரசாரமாகப் பேசுகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரேகூட, ''ஆரம்பத்தில் ஜெயலலிதா, காங்கிரஸை அவங்க பக்கம் இழுக்கப் பார்த்தது, காங்கிரஸ் மேல் உள்ள மரியாதையால் அல்ல. தி.மு.க. மேல் உள்ள கோபத்துக்கு வடிகால் தேடத்தான்!

காங்கிரஸை தங்கள் பக்கம் இழுத்துவெச்சுக்கிட்டா, மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு சிக்கல் கொடுக்கலாம்னு கணக்குப் போட்டாங்க. அதோடு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவைக் கைது செய்யவைக்கணும், அதற்கு எந்தச் சூழ்நிலையிலும் காங்கிரஸ் தடையா இருந்துடக் கூடாதுன்னு நினைச்சாங்க. அவங்க நினைச்ச மாதிரியே எல்லாம் ஓரளவு நடந்துவிட்டது. அதனால், 'கட் த்ரோட்' ஜெயலலிதா இனி காங்கிரஸ் தோழமையை எதிர்பார்க்க மாட்டார்!'' என்றுதான் கணக்கு சொல்கிறார்!

- கே.ராஜாதிருவேங்கடம்

அ.தி.மு.க கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெல்லும்? -லேட்டஸ்ட் சர்வே!

தமிழக வாக்காளர்கள் பேரவைன்னு ஒரு இயக்கம்..இவங்க தேர்தல் தோறும் ஒரு சர்வே நடத்துறாங்க...இந்த முறையும் சர்வே நடத்துனாங்க..அதில் தமிழக தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 200 இடங்களை வெல்லும் என முடிவு தெரிஞ்சிருக்காம்..

ஸ்பெக்ட்ரம் ராசா பற்றி கிராம மக்கள் முதல் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்களாம்..
ஒரு தமிழக மந்திரி திகார் சிறையில் இருப்பது தி.மு.க வுக்கு அவமானமாகவே இல்லையான்னும் கேட்குறாங்களாம்...

இலவசடிவி கொடுப்பதே.. அவங்க செய்தி,சினிமாவை மக்கள் பார்க்கத்தான்....கேபிளை ஏன் இலவசமா கொடுக்கலை..?அவங்க கேபிள் தொழிலில் நிறைய சம்பாதிக்கத்தான் இலவச டி.வி கொடுக்கறாங்க...
விலைவாசி உயர்வு,கொள்ளை,போலிஸ் ஸ்டேஷன் எல்லா த்திலும் இப்போ கட்டபஞ்சாயத்துதான் நடக்குது..அதுக்கு தி.மு.க அரசின் அலட்சியம்தான் காரணம்னும் மக்கள் சொல்றாங்களாம்..

ரிப்போர்ட்டர் வார இதழில் இந்த செய்தி வந்திருக்கு...நான் சொல்லலை...

கனவுகளைத் தேக்கி வைத்திருந்த தி.மு.க கனவிலும் கூட நினைத்திருக்காது அ.தி.மு.க இப்படி ஒரு கூட்டணி வைக்கப்போகிறது என்று....

கடந்த ஐந்தாண்டு கால தமிழக ஆட்சியினைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு வித மலைப்பும் விரக்தியும் ஒரு சேர வருவதை யாராலும் தடுக்க முடியாது. நடுநிலை நோக்காளர்கள் தி.மு.கவின் தனிப்பட்ட சில செயல் திட்டங்களை மறுத்தும் எதிர்த்தும் பேச முடியாத அதே நேரத்தில் தனது கட்சியினை வளர்த்துக் கொள்ளவும், கட்சியின் உள் கட்டமைப்பிற்குள் உறவுகளை முழுக்க முழுக்க நிரப்பி வைத்துக் கொண்டதும், முதுமை காரணமாக ஒரு முழுமையான ஒரு தொலை நோக்கு பார்வையை தி.மு.க தலைமை தொலைத்து விட்டு காங்கிரசுக்கு கொடி பிடித்ததும் ஒரு வித எரிச்சலை நமக்குள் பரவவிட்டிருப்பது தவிர்க்க முடியாத விசயமாய்ப் போய்விட்டது.

ஈழப்பிரச்சினையில் தமிழனத்தின் தலைவர் என்றர் வாசகத்தை தமது இலச்சினையில் பொறித்து வைத்துக் கொண்டு போர்ப்பரணி பாடிய தலைவர் தமது பதவியை பேணிக் காத்துக் கொள்ள கடித போக்குவரத்துக்கள் மத்திய அரசுக்கு நடத்தியதும், ஈழத்தில் தமிழனை கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில் சலனமற்று மெரினாவில் சினிமாத்தனமான உண்ணா விரதங்கள் இருந்ததும் தி.மு.க தலைமை மீது இருந்த மதிப்பினை தமிழர்கள் மத்தியில் சரித்துப் போட்டது என்பது உறுதியான விடயம்.

எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு, இந்திய தேசத்தின் ஒற்றுமையை பேணிக்காத்து இந்தியர்களை ஒருமிக்க தவறிய கிழட்டு காங்கிரஸ்......தன் கோரப்பல்லினை பழிவாங்கும் விதமாக தமிழர்கள் மீது பதித்து இரத்தம் உறிஞ்சிய போதெல்லாம் அவர்களுக்கு கவரி வீசிய காவலனாய் கூட்டணி தர்மத்தை தக்கவைத்துக் கொள்ள சொந்த பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் நிகழ்வுகளுக்கு உடன் போன தி.மு.க அரசினை ஒரு தமிழின துரோகியாய் பார்க்கும் பாவம் தமிழ் மக்களிடம் தன்னை மீறி தோன்றியதும் உண்மை.

ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல், அதில் கனிமொழியின் தலையீடு, ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், மீனவர்கள் தொடர் படுகொலைகள் இவைகளின் முன்னால் கலர் டி.வியும்... இலவச வீடுகளும்.... ஒரு ரூபாய் அரிசியும் பஸ்பமாய் மறைந்துதான் போயின.

விரக்தியில் இருந்த தமிழனுக்கு யார்தான் மாற்று என்று பார்க்கும் போது எதிரணியில் இருக்கும் அம்மையாரோ...கடந்த ஐந்து வருடத்தை விடுமுறையிலேயே கழித்திருந்தார் மேலும்...ஒரு திடமான அரசியல் முடிவோ அல்லது... போராட்டங்களோ நடத்தப் பெறாதவராக.., சூழ்நிலைகளின் பொருட்டு அறிக்கைகளும் போராட்டங்களும் என அவர் செய்தது எல்லாமே செயற்கைத்தனமாகவே இருந்தது. புரட்சித்தலைவருக்குப் பிறகு கட்சியில் அம்மையாரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தலைவராக இல்லை என்பதும் எல்லோரும் அறிந்ததே..!

எம்.ஜி.ஆரின் காலத்தில் எம்.ஜி.ஆரை அடுத்து இமிடியெட் தலைவர்கள் என்று அ.தி.மு.கவில் குறிப்பிட்டு சொல்லும் படி நிறைய பேர்கள் அவரது காலத்தில் இருந்ததும் இப்போது இல்லாமல் இருப்பதும்.....இரு வேறுபட்ட தலைமைகளின் வித்தியாசத்தை காட்டும் அதே நேரத்தில்......ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையும், மிக திடமான முடிவுகளும் எப்போதுமே வசீகரமானவை.

இந்த இரு கட்சிகளையும் தாண்டி விஜயகாந்தும் ஒரு சிறந்த ஓட்டு வங்கியை வைத்திருக்கும் ஒரு வளர்ந்து வரும் தலைவராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்... மேலும் கடந்த தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவின் எதிர் ஓட்டுக்களை அழகாக எடுத்துச் சென்றவர் என்றாலும்....அதை வைத்து அவரால் எதுவும் செய்ய முடியாததோடு...... அது வலுவான தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு உதவும் வகையிலேயே இருந்தது.

வரப்போகும் தேர்தலில் விஜயகாந்த் தனித்தும், அ.தி.மு.க தனித்தும் போட்டியிட்டு இருந்தால் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு வேறு வழியின்றி பிரகாசமாய்தான் இருந்திருக்கும்... ஆனால் மிக முக்கிய காய் நகர்த்தலாய் அ.தி.மு.கவின் தலைமை...விஜயகாந்தோடு கூட்டணி வைத்து அதுவும் 41 இடங்களை அவர்களுக்கு ஒதுக்கி இருக்கும் இந்த சூழல் எல்லாவற்றையும் நொறுக்கிப் போட்டிருப்பதும், தி.மு.கவையும் அதன் கூட்டணி கட்சிகளின் உறக்கத்தையும் கெடுத்துதானிருக்கும்.

கனவுகளைத் தேக்கி வைத்திருந்த தி.மு.க கனவிலும் கூட நினைத்திருக்காது அ.தி.மு.க இப்படி ஒரு கூட்டணி வைக்கப்போகிறது என்று....

காங்கிரஸ் என்ற மண் குதிரை வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் தவிடு பொடி ஆகப் போவதும், தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இழைத்த அநீதிகளுக்கான பலனை தி.மு.க பெறப்போவதும், சாதுர்ய அரசியல் ஒத்துப் போதலுக்கான பலனை விஜயகாந்தும் ஜெயலலிதாவும் பெறப்போவதும் யாராலும் தடுக்க முடியாத ஒன்று.....

எல்லாம் சரியாகத்தான் நிகழ்கிறது....எம் மக்களும் வாக்குகள் அளித்து விட்டு காத்திருக்கத்தான் போகிறார்கள்....! வரப்போகும் புது ஆட்சியாவது.....எம் மக்களுக்கு இலவச திட்டங்களை மட்டும் அறிவித்துக் கொண்டிருக்காமல் சூழலையும் உணர்ந்து நல்வழி காட்டுமா?

தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில் இதைத்தான் சொல்ல வேண்டும் வேறு வழியில்லை.....

ம்ம்ம்....வெல்கம் பேக் அ.தி.மு.க....!