Sunday, January 25, 2009

சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்கும்

ஒரு பொருளாதார பிரச்சினையாக மட்டுமே முதலில் கருதப் பட்ட சத்யம் விவகாரம் இப்போது அரசியல் பூச்சு பெற்று வருகின்ற நிலையில் சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் (?) மற்றும் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்களின் வாழ்வாதாரமாக கருதப் படும் சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்குமா என்பது பற்றி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒரு அலசல்.

முதலில் அரசியல் ரீதியான அலசல்

இந்த பிரச்சினை அரசியல் வடிவம் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் சத்யம் (முன்னாள்) தலைவரின் கட்சி வேறுபாடற்ற அரசியல் தொடர்புகள். மென்பொருள் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப் பட்டவர் ராமலிங்க ராஜு. மென்பொருள் வளர்ச்சி என்ற பெயரில் அரசிடமிருந்து பல சலூகைகளை (மென்பொருள் தொழிலுக்கென நிலம் பெற்று அதை இவரது மகன்களின் நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததாக கூட குற்றச் சாட்டு உண்டு) இவரால் பெற முடிந்தது. 2003 இல் வரி தணிக்கையின் போது ராம லிங்க ராஜு சார்பாக பல பினாமி கணக்குகள் இருந்ததாக இந்திய குடியரசு கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செபி கடிதம் அனுப்பியதாகக் கூறப் படுகிறது. அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க சந்திர பாபு நாயுடு அவர்களுடன் இருந்த தொடர்பு மற்றும் நாயுடுவுக்கு அப்போதைய பா.ஜ.க. அரசில் இருந்த செல்வாக்கு உதவியதாக கூறப் படுகிறது

சந்திர பாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்த ராம லிங்க ராஜு 2004 இல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் வியந்து கொண்டிருந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடுவிடம் மென் பொருள் எனும் தலையைக் காட்டிக் கொண்டிருந்த ராமலிங்க ராஜு, ராஜசேகர ரெட்டி அவர்களிடம் காட்டியது அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் எனும் வாலை. ராஜசேகர ரெட்டி ஆட்சி பொறுப்பு ஏற்பட்ட பின்னர் வழங்கப் பட்ட பொதுத்துறை அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏறக்குறைய அனைத்து ஒப்பந்தங்களும் ராமலிங்க ராஜுவின் மகனால் நடத்தப் பெறும் மைடாஸ் நிறுவனத்திற்கே வழங்கப் பட்டது என்றும் அந்த ஒப்பந்தங்களின் அளவு சுமார் 19,000 கோடிகள் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத் மெட்ரோ பணிகள் மைடாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மெட்ரோ தலைவர் இந்த ஒப்பந்தம் ஒரு ஊழல் என்றும் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் கண் துடைப்பே என்றும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே ரியல் எஸ்டேட் லாபங்கள்தான் என்றும் கடந்த செப்டம்பர் மாதமே கூறியது கவனிக்கத் தக்கது.

ராஜுவின் அரசியல் தொடர்புகள் முக்கியமாக முதல்வருடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆந்திர மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் காரணத்தினாலும் ஆந்திர பிரதேச சட்ட சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதாலும் சத்யம் முன்னாள் தலைவரை மட்டுமல்ல சத்யம் நிறுவனத்தையும் காப்பாற்றுவது ஆளுங்கட்சியின் அவசரத் தேவையாகிறது. இந்த விவகாரத்தை ஏற்கனவே கையில் எடுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, ராமலிங்க ராஜுவுக்கும் ஆந்திர முதல்வருக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி ஆந்திர மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. மேலும் சென்ற தேர்தலில் மத்திய அரசு அமைக்க காங்கிரஸ்சுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆந்திராவின் வாக்குகளை இழக்க விரும்பாத காங்கிரஸ் அரசு அந்த மாநிலத்தின் பெருமையாகக் கருதப் படும் சத்யம் நிறுவனம் முழுகிப் போவதையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50,000 பேர் (?) வேலை இழப்பதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் கூறப் படுகிறது. இதன் அடிப்படையிலேயே சத்யம் நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவிகள் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய வணிகத் துறை அமைச்சர் முதலில் கூறினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும், செபி கையில் ராஜுவை மாட்ட விடாமல் தடுப்பதற்கே அவர் அவசர அவசரமாக நீதிபதி முன் ஆஜர் செய்யப் பட்டார் என்றும் பின்னர் செபி விசாரிப்பதற்கு பல சட்டரீதியான தடங்கல்களை ஆந்திர அரசு செய்வதாகவும் பலரால் கருதப் படுகிறது. எனவே, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியை (மற்ற நிறுவனங்களுடன் இணைந்து போவதின் மூலம் சத்யம் சுயமிழந்து போவதை) எந்த காரணத்தைக் கொண்டும் விரும்பாத மத்திய மாநில அரசுகள், புதிய சத்யம் தலைமைக்கு போதுமான உதவிகள் செய்யும் என்று முதலில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்காக கணக்கு வழக்கில் திருத்தங்கள் என்ற "கணக்கு வழக்கு மோசடி" மட்டும் ராஜு செய்தார் என்று அனைவரும் முதலில் நம்பியிருந்த நிலை மாறி நிறுவனத்தின் பணத்தை பல வகையிலும் (சொந்த கணக்குக்கு திருப்பியது, போலி வங்கி வைப்பு தொகை, போலியான ஊழியர் எண்ணிக்கை என) மிகப் பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளிவரவே, காங்கிரஸ் மத்திய தலைமை, இப்போது சத்யத்திற்கு நேரடியாக உதவி செய்ய தயங்குகிறது. ஆனால், சத்யத்தை விட பெரிய மய்டாஸ் விவகாரத்தினால் தனது அரசியல் எதிர்காலமே ஒரு கேள்விக் குறியாகி விட்ட நிலையில் ஆந்திர முதல்வர் சத்யத்தை உயிர்ப்பிக்க தீவிரமாக இருப்பதாக சொல்லப் படுகிறது.

மொத்தத்தில், சத்யத்தை தக்க முதலுதவி செய்து இதுவரை உயிர் பிழைக்க செய்திருப்பது "பழைய நிர்வாக குழுவை அடியோடு நீக்கி வணிக உலகில் சிறந்த பெயர் பெற்ற தீபக் பரேக் உள்ளிட்ட புதிய நிர்வாக குழு அமைத்திருக்கும்" மத்திய அரசின் நடவடிக்கைதான் என்பதை மறுக்க முடியாது.

இப்போது பொருளாதார ரீதியான அலசல்

இப்போது சத்யம் நிறுவனத்தின் தலைமை குழுவில் மத்திய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் திரு. தீபக் பரேக், தொழில் முறையில் திறம்பட செயல் பட்டுக் கொண்டிருக்கும் HDFC நிறுவனத்தின் தலைவருமாவார். இவருடன் தலைமைக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றவர்களும் கூட நிறுவனத்திற்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்த மிகவும் உதவிகரமாக உள்ளனர்.

நிதித் தட்டுப்பாடு

இப்போது நிறுவனத்தின் உடனடி பிரச்சினை என்னவென்றால்,ரொக்க கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால் அன்றாட செலவினங்களுக்கும் சம்பள பட்டுவாடாவுக்கும் நிதித் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. மோசடிகள் நடைபெற்ற நிறுவனம் என்பதால் வங்கிகள் கடன் தர தயங்குகிறார்கள். மேற்சொன்ன அரசியல் காரணங்களால், அரசினாலும் நேரடியாக கடன் வசதிகளை செய்து தர முடிய வில்லை. நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழு பூர்வாங்க விசாரணையில், சத்யம் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் தொகை பாக்கி உள்ளது என்றும் சத்யம் நிறுவனத்தில் அசையா சொத்துகளின் மீது இதுவரை எந்த ஒரு வங்கிக் கடனும் பெறப் படவில்லை எனவும் அறியப் பட்டிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடி தேவைகளை சமாளிக்க நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மீது வங்கிகளிடம் கடன் கோரலாம் என்று புதிய நிர்வாக குழு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

தலைமை இல்லாத நிலை

நிறுவனத்தின் மற்றொரு மிகப் பெரிய பிரச்சினை, இந்த நிறுவனத்தின் மீது ஊழல் கறை
படிந்திருப்பதால் தலைமை நிர்வாகி பொறுப்பேற்க யாரும் முன்வராதது. அதே சமயம், இந்த நிறுவனத்தை கையகப் படுத்த முடியுமா என்று இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான லார்சன் டுப்ரோ தீவிரமான சிந்தனையில் இருப்பதாக தெரிகிறது. சத்யம் தலைமைக் குழுவிடம் சில திட்ட விவரங்களை முன்வைத்ததாகவும் தெரிகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்க இன்னும் காலம் பிடிக்கும் என்றும் சொல்லப் படுகிறது. இடையில் இந்த நிறுவனம், சத்யத்தில் தனது பங்கினை நான்கு சதவீதத்திலிருந்து பன்னிரண்டு சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. தலைமை குழுவில் தனது பிரதிநிதியை அமர்த்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமும் சிறந்த வணிக நியதிகளை கடைப் பிடிப்பதாகவும் அறியப் படும், லார்சன் டுப்ரோ நிறுவனம் சத்யத்தின் நிர்வாகத்தை ஏற்கும் எனில் சத்யம் நிறுவனத்திற்கு நம்பகத் தன்மை கிடைக்க உதவி புரியும். மேலும் சில நிறுவனங்கள் (டெக் மகிந்திரா, ஐ.கேட் போன்றவை) கூட சத்யத்தை கையகப் படுத்த முயலுவதாகவும் வணிக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

வாடிக்கையாளர்கள் பின்வாங்கும் அபாயம்

தற்போது சத்யம் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்ட நிலையில் மேலும் பலர் இவ்வாறே செய்வார்களோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. அதே சமயத்தில் மென்பொருள் சேவைகளை சட்டென்று துண்டிப்பது மிகவும் கடினம் எனவே பல வாடிக்கையாளர்கள் சத்யம் சேவையை தொடர்வார்கள் என்றும் துறை விற்பன்னர்களால் கருதப் படுகிறது. ஏற்கனவே சொன்ன படி தீபக் பரேக், லார்சன் டுப்ரோ ஆகியோர் நிறுவனத்தின் நம்பகத் தன்மையை வளர்க்க உதவுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சட்டரீதியான சிக்கல்

இந்திய சட்ட காவலர்களிடம் இருந்து சத்யம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் தப்பித்தாலும், அமெரிக்க சந்தைகளில் இதன் பங்கு வர்த்தகமாகி வருவதால், அங்குள்ள கண்காணிப்பாளர்கள் இந்நிறுவனத்திற்கும் ராஜுவிற்கும் கடும் நெருக்கடி கொடுக்கலாம் என்றும் இதில் இருந்து தப்பித்து அமெரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது இந்த நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப் படுகிறது. (சரிவர கண்காணிக்கத் தவறிய இந்திய செபி மீது கூட அமெரிக்க அரசு வழக்கு தொடரலாம் என்று கூட வதந்திகள் உள்ளன)

ஆக மொத்தத்தில் சத்யம் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்றாலும் இதைப் பிழைக்க வைக்க ஐ.சி.யு வில், லார்சென் டுப்ரோ மற்றும் தீபக் பரேக் எனும் திறமை மிக்க டாக்டர்களின் நேரடி கவனிப்பில், சத்யம் நிறுவனம் இருப்பதால் அது தப்பிப் பிழைக்கும் என்று ஓரளவு நம்பிக்கையோடு இருக்கலாம்.

பின்குறிப்பு: சத்யம் நிறுவனத்தின் தொடர்பாக லார்சென் மற்றும் தீபக் பரேக் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருபவர்கள், மிக்க துணிச்சல் இருந்தால் இந்த நிறுவனத்தின் பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முடிவில் மிகுந்த சந்தை அபாயம் உள்ளது. முழுமையாக பணம் இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் முதலீடு செய்த பணம் முழுமையாக போனாலும் பரவாயில்லை என்று கருதும் அளவிற்கு மட்டுமே பணம் முதலீடு செய்ய வேண்டும். இது தகவலுக்காக மட்டும். பரிந்துரை அல்ல.
Posted by Maximum India at 4:45 PM
Labels: அரசியல், செய்தியும் கோணமும், பங்கு சந்தை, பொருளாதாரம்

No comments: