Thursday, July 23, 2009

குரு பரம்பரை கதை

பேராசை பெருமாள்சாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் தன்னக்கு பெரிய செல்வம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அவனது இயல்பு. தனது ஆசையால் சிறுக சிறுக பொருள் சேர்ப்பது அவனுக்கு சரியாக படவில்லை.


அடித்தால் ஒரே அடியில் பெரும் பணத்தை சம்பாதித்து அதை வைத்து வாழ்க்கை மேம்படுத்தவேண்டும் என முடிவெடுத்தான். ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை கண்பித்து இவனது செல்வநிலையை முடிவுசெயலாம் ஜோதிடரை அணுகினான். அவனது ஜாதகம் சிறப்பாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் பெருமாள் சாமிக்கு புதையல் கிடைக்கும் என்றும் ஜோதிடர் சொன்னார்.

காய்கறி கடையில் சில ரூபாய் மிச்சம் பிடித்தாலே சந்தோஷத்தில் இரவு தூங்கமாட்டன் பெருமாள் சாமி, இந்த லட்சணத்தில் ஜோதிடர் சொன்னது அவனுக்கு காதில் ரிங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது.

எப்படி புதையல் கிடைக்கும்? எங்கு இருக்கும்? அந்த புதையல் நமக்கு போதுமானதாக இருக்குமா என பல எண்ணங்கள் சிந்தனையில் வந்தவண்ணம் இருந்தது.

அந்த ஊரில் இருக்கும் ஓர் ஞானியை பார்த்து கேட்டால் அவர் தனக்கு உதவகூடும் என எண்ணினான். கண்களில் பேராசை மின்ன தன்முன் வந்து நிற்கும் பெருமாள் சாமியை பார்த்தார் ஞான குரு . "ஐயா எனக்கு புதையல் கிடைக்கும் என ஜோதிடர் சொன்னார். நீங்கள் தான் எனக்கு அந்த புதையல் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான் பெருமாள் சாமி.

பெருமாள் சாமியின் உண்மையான தேவையை உணர்ந்த ஞான குரு...புன்னகையுடன் பார்த்தார் பின்பு..." பெருமாள் சாமி , இந்த ஊரின் மேற்கு பகுதியில் இருக்கும் மலைக்கு அதிகாலையில் செல். சூரிய ஒளியில் உனது நிழலை கவனி. நிழலின் அளவு எங்கு முற்றிலும் குறைகிறதோ அங்கு புதையல் இருக்கிறது" இதை கேட்டதும் அவருக்கு நன்றி சொல்ல கூட தோன்றாமல் விரைவாக நடந்தான்.

அதிகாலையில் குளித்துவிட்டு பயபக்தியுடன் மேற்கு மழைக்கு சென்றான். மலையை பார்த்து நின்றான். பின்புறம் இருந்த சூரிய ஒளியால் நிழல் தெரிய துவங்கியது. நிழலை பின்தொடர்ந்தான். உச்சிவேளையில் நிழல் அவனது உடலில் ஐக்கியம் அடைந்து காணாமல் போனது.

காலை முதல் நிழலை பார்த்த வண்ணம் இருந்ததால் மனம் ஒருமுகப்பட்டு தனது உள்நிலையில் தெளிவான நிலையில் இருந்தான். முடிவாக பெருமாள் சாமி புதையல் தனக்குள்ளே இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

--------------------------ஓம்----------------------
தன்னுள் தேடாமல் எப்பொருளைவெளியே தேடினாலும் அது முடிவாகாது.
தன்னுள் சேர்க்காத எப்பொருளும் நம்மிடம் சேராது.

180 டிகிரி திரும்புங்கள். உங்கள் பிறப்பின் மூலத்தை காண முயற்சியிங்கள்.
அங்கே புதையல் கொட்டிக்கிடக்கிறது.

உங்கள் உள்ளே இருக்கும் ”உருபொருளை” புதையலாக நினைத்து தோன்டி எடுங்கள், புதைபொருளாக மாற்றி புதைத்துவிடாதிர்கள்.

No comments: