Sunday, December 26, 2010

இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும்

வங்காளதேச விடுதலையைத் தொடர்ந்து புகழேணியின் உச்சியில் இருந்த இந்திராவுக்கு எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவருடன் போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ராஜ்நாராயண் "அரசியல் கோமாளி" என்று வர்ணிக்கப்பட்டவர். தேர்தலில் வெற்றி பெற இந்திரா காந்தி ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 1975 ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். "இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது" என்பதே அந்தத் தீர்ப்பு.
இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்தையும் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அடையச் செய்தது.

தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்ததாவது:_ "மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25_ந்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்திரா மனு தீர்ப்புக் கூறப்பட்ட அரை மணி நேரத்திற்கெல்லாம், "தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும்" என்று கோரி இந்திரா காந்தி சார்பில் நீதிபதி சின்கா முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு தீர்ப்பை அமுல் நடத்துவது இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்த இருபது நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.

இந்திரா காந்தி மந்திரிசபையில் மூத்த மந்திரிகளாக இருந்த ஜெகஜீவன்ராம், சவான், உமாசங்கர், தீட்சித், பிரமானந்த ரெட்டி, சங்கர் தயாள் சர்மா, இ.காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஆகியோர், "அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா காந்தி அப்பீல் செய்ய இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இந்திரா காந்தி தலைமையில் நாங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்கும், ஸ்திரத் தன்மைக்கும் அவர் தலைமை அவசியமானது" என்று அறிக்கை வெளியிட்டனர்.
அப்போதைய ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய், காஷ்மீரில் தங்கியிருந்த ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்து, "கோர்ட்டு தீர்ப்புக்குத் தலைவணங்கி இந்திரா பதவி விலக வேண்டும்" என்று வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிரபல வழக்கறிஞர் பல்கிவாலா தாக்கல் செய்தார். மனுவை ஜுன் 23_ந்தேதி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, மறுநாள் தீர்ப்புக் கூறினார்.
தீர்ப்பு விவரம் வருமாறு:_ "அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு கூறப்படும் வரை அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பின் அமுலை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிறுத்தி வைக்கிறோம். அதாவது, இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை." இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதால், இந்திரா காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

இந்திரா காந்தி மத்திய மந்திரிகளையும், இ.காங்கிரசைச் சேர்ந்த முதல்_மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.

"நீங்கள் ராஜினாமா செய்தால் இந்தியா முழுவதும் குழப்பங்கள் ஏற்படும். இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்படும். எனவே பொறுமையுடன் இருங்கள். நான் இந்திய அரசியல் சட்டத்தை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்" என்று கூறினார் ரே. அவர் அரசியல் சட்டத்தில் நிபுணர். மீண்டும் அரசியல் சட்டத்தை நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர் இந்திரா காந்தியை சந்தித்து, "நீங்கள் பதவியில் நீடிக்கலாம் என்று கோர்ட்டு அறிவித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். அப்போது, உளவுத்துறையிடம் இருந்து தனக்கு வந்துள்ள தகவல்களை அவரிடம் இந்திரா கொடுத்தார்.

இந்திரா காந்திக்கு எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், இந்திரா காந்தியை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. "நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி" என்றார் ரே.
நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார்.இறுதியில், "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். (ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29_ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். போராட்டத்தை நடத்துவதற்காக, மொரார்ஜி தேசாய் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.)
பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

"உள்நாட்டுக் கலவரம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டார். பிறகு, "நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்" என்று தெரிவித்தார். இந்தக் கால கட்டத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கு கொண்டிருந்தார்.

தாயாருக்கு அவர் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். நெருக்கடி நிலைமை பிரகடனம் ஆகப்போகிறது என்று தெரிந்து கொண்டதும் அவர் தாயாரை சந்தித்தார். "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள். எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார்.

இந்திரா காந்தி இதற்குத் தயங்கினார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு தலைவர்களை கைது செய்யவும், பத்திரிகைத் தணிக்கைக்கும் சம்மதித்தார். 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாசரை, நள்ளிரவில் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர். "விநாசகாலே விபரீத புத்தி" ("கெட்ட காலம் வந்துவிட்டால் விபரீத புத்திதான் வரும்") என்று கூறியபடி அவர் போலீசாருடன் சென்றார். மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதே, பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியோ, தலைவர்கள் கைது பற்றியோ செய்தி இடம் பெறக்கூடாது என்று சஞ்சய் காந்தி நினைத்தார். அதற்காக அவர் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். பத்திரிகைகள் அச்சாகத் தொடங்குவதற்கு முன், பத்திரிகை ஆபீசுகளுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அன்று காலை நாளிதழ்கள் வெளிவரவில்லை. ஜெனரேட்டர் வசதியுள்ள ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வெளிவந்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது மந்திரிகளுக்கு கூட தெரியாது! காலை 6 மணிக்கு மந்திரி சபை கூட்டம் இருப்பதாக காலை 5 மணிக்கு மந்திரிகளின் வீடுகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு மந்திரிகள் கூடினார்கள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது பற்றி இந்திரா விளக்கினார்.

"நெருக்கடி நிலையை காலதாமதமின்றி உடனடியாக பிரகடனம் செய்யவேண்டியிருந்ததால், மந்திரிசபை கூட்டத்தை முன்னதாகக் கூட்டி ஒப்புதல் பெற முடியவில்லை" என்று கூறிய இந்திரா, நள்ளிரவில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவித்தார். சில மந்திரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது என்றாலும் தங்கள் கருத்தை வெளியிட தைரியம் இன்றி மவுனமாக இருந்தனர். பின்னர், நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது குறித்து, ரேடியோவில் இந்திரா காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-

"மக்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது முதலே, அதற்கெதிராக சதி உருவாகி வந்தது. ஜனநாயகம் செயல்படுவதைச் சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நமது ராணுவத்தையும், போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் நெருக்கடி நிலையை ரத்து செய்யும் அளவுக்கு உள்நாட்டு நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும் என்று நம்புகிறேன்." இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்.

===============================================================================

நெருக்கடி நிலை அமுலுக்கு வந்தபின் 1975, ஜுலை 1_ந்தேதி இந்திரா காந்தி தன்னுடைய 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம்பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாடப்புத்தகங்களை குறைந்த விலையில் வழங்குவது முதலியவை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப்பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக 336 ஓட்டுகளும், எதிராக 59 ஓட்டுகளும் பதிவாயின. "நெருக்கடி நிலைமை"யின் போது சில நன்மைகளும், பல தீமைகளும் நடந்தன.
அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். ஒழுங்காக வேலை பார்த்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல்லை. கள்ள மார்க்கெட் ஒழிந்தது. அதே சமயத்தில், சஞ்சய் காந்தி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் விருப்பப்படி எல்லாம் உத்தரவு பிறப்பித்தார். பிறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக, வட இந்தியாவில் கட்டாயமாக பலர் கருத்தடை செய்யப்பட்டனர்.
நெருக்கடி நிலை அமுலுக்கு வந்த ஐந்து மாத காலத்திற்குள் 37 லட்சம் பேர் கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்கும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். (நெருக்கடி நிலையின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி அப்போது செய்தி எதுவும் வெளியாகவில்லை. காரணம், அப்போது பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருந்ததால் அச்செய்திகளை வெளியிட அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். நெருக்கடி நிலை ரத்தான பிறகு இதுபற்றிய செய்திகள் வெளியாயின). நெருக்கடி நிலையை காமராஜர் எதிர்த்தார்.
திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து பகிரங்கமாகப் பேசினார். "நெருக்கடி நிலை" அமுலாகி 4 மாதத்தில் (1975 அக்டோபர் 2) காமராஜர் திடீரென்று காலமானார். அப்போது இந்திரா காந்தி விமானத்தில் வந்து காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண் கலங்கினார்.
இதற்கிடையே இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. "ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லும்" என்று 1975 டிசம்பர் 19_ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 1976 மார்ச்சில் முடிவடைவதாக இருந்தது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தை நீடித்து, தேர்தலை தள்ளிவைக்க இந்திரா விரும்பினார்.
"தேர்தலை தள்ளி வைக்க வேண்டாம். இப்போதே நடத்துவது நல்லது" என்று சில மந்திரிகள் யோசனை கூறினார்கள். அதை இந்திரா ஏற்கவில்லை. "நெருக்கடி நிலை காலவரம்பு இன்றி நீடிக்கவேண்டும்" என்று சஞ்சய் காந்தி வற்புறுத்தினார். அதை ஏற்று பாராளுமன்ற தேர்தலை இந்திரா தள்ளிவைத்தார். அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
நெருக்கடி நிலையின்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. நெருக்கடி நிலையை முதல்_அமைச்சர் கருணாநிதி எதிர்த்தார். இதன் காரணமாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு 1976 ஜனவரி மாதம் 31_ந்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் நடத்த முடிவு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 1 ஆண்டு கழிந்தது.
அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திரா காந்தி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தினால் தனக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினார். 1977 ஜனவரி 18_ந்தேதி ரேடியோவில் பேசுகையில் "பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். சிறையில் இருக்கும் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்" என்று அறிவித்தார்.
==================================================================================
"நெருக்கடி நிலை"யின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாசரும், மற்ற தலைவர்களும் பாராளுமன்றதேர்தலில் இந்திரா காந்தியை தோற்கடிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

"நெருக்கடி நிலை" கொண்டு வந்ததால் இந்திரா காந்திக்கு கெட்ட பெயர். எனவே, எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறாமல் இருந்தால் இந்திராவை சுலபமாகத் தோற்கடிக்கலாம்" என்று ஜெயப்பிரகாசர் யோசனை தெரிவித்தார். அது மட்டுமின்றி எல்லா கட்சித் தலைவர்களையும் அழைத்து, "ஒற்றுமையாக இருங்கள். ஒரே கட்சியாக செயல்பட்டு, இந்திரா காந்தியை தோற்கடியுங்கள்" என்றார். அதன்படி ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோசலிஸ்டு, லோக்தளம் ஆகிய நான்கு பெரிய கட்சிகளும் "ஜனதா கட்சி" என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. வேற்றுமைகளை மறந்து ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தன.

இந்த சமயத்தில், எதிர்பாராத திருப்பமாக இ.காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகஜீவன்ராம் (மத்திய விவசாய மந்திரி) விலகினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெரிய தலைவராக விளங்கிய ஜெகஜீவன்ராம் அதுவரை இந்திரா காந்தியின் வலது கரமாக விளங்கியவர். அவர் இ.காங்கிரசைவிட்டு விலகியதோடு மட்டுமின்றி, இந்திரா காந்தியை தாக்கியும், நெருக்கடி நிலை கொடுமைகளைக் கண்டித்தும் அறிக்கை விடுத்தார். "ஜனநாயக காங்கிரஸ்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி ஜனதாவுடன் கூட்டு சேர்ந்தார். ஜெகஜீவன்ராமை பின்பற்றி மத்திய மந்திரிகள் எச்.என். பகுகுணா, நந்தினி சத்பதி (ஒரிசா முன்னாள் முதல்_மந்திரி), கே.ஆர்.கணேஷ், டி.என்.திவாரி ஆகியோரும் இ.காங்கிரசை விட்டு விலகினர். இவர்கள் ஜனதா கட்சியில் சேர்ந்தார்கள். ஜெகஜீவன்ராமும், மற்றவர்களும் இ.காங்கிரசை விட்டு விலகி ஜனதாவுடன் சேர்ந்து கொண்டது, இந்திராவுக்கு அதிர்ச்சி அளித்தது.

தேர்தலில் இ.காங்கிரஸ் வெற்றி பெறுவது சந்தேகம் என்பதைப் புரிந்து கொண்ட சஞ்சய் காந்தி, "தேர்தலை ரத்து செய்து விடுங்கள்" என்று இந்திரா காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. "நெருக்கடி நிலையினால் ஏற்கனவே நமக்கு கெட்ட பெயர். அப்படி இருக்க தேர்தலை ரத்து செய்தால், அது நமக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்தலை ரத்து செய்யமாட்டேன்" என்று கூறிவிட்டார். தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, 11_2_1977_ல் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். (தேர்தலை தள்ளிப்போடும்படி இந்திரா காந்தி வற்புறுத்தியதாகவும், அந்த அதிர்ச்சியால் ஜனாதிபதி மரணம் அடைந்ததாகவும் பின்னர் சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மை அல்ல என்று இந்திரா மறுத்தார்.) பக்ருதீன் அலி அகமதுவுக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஜாட்டி, தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றார்.

இதற்கிடையே நேருவின் தங்கையும், பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவருமான விஜயலட்சுமி பண்டிட், இந்திரா காந்தியைத் தாக்கி அறிக்கை விடுத்தார். "நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த ஜனநாயகத்துக்கு களங்கம் உண்டாக்கிவிட்டார் இந்திரா காந்தி. இந்தியாவில் மீண்டும் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும்" என்று அறிக்கை விடுத்தார். ஜனதா வெற்றி பெற்றால் தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்ததாக பின்னர் பத்திரிகைகள் எழுதின.

மார்ச் 14_ந்தேதி அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. ஒரு காரில் வந்த மர்ம மனிதர்கள், சஞ்சய் காந்தியின் காரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். அந்த சமயத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த தன் உதவியாளரை நோக்கித் திரும்பி பேசிக்கொண்டிருந்ததால், சஞ்சய் காந்தி உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மர்ம கும்பல் தப்பிச்சென்று விட்டது. இதுபற்றி சஞ்சய் காந்தி போலீசில் புகார் செய்தார். ஆனால் துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது கடைசிவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

சஞ்சய் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யப்போன சில இடங்களில் அவருக்கு எதிராக விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "கட்டாய கருத்தடையால் கணவரை இழந்தோம். நீ குற்றவாளி!" என்று அவர்கள் குரல் எழுப்பினர். சஞ்சய் காந்தி தான் பேசிய கூட்டங்களில் கட்டாய கருத்தடை திட்டத்தை நியாயப்படுத்திப் பேசினார். அதனால் அவருக்கு எதிர்ப்பு மேலும் அதிகமாகியது.

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும், அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தியும் போட்டியிட்டனர். இரண்டும் அடுத்தடுத்து இருந்தன. "காங்கிரஸ் கோட்டைகள்" என்று வர்ணிக்கப்பட்ட தொகுதிகள் இவை. அங்கு இ.காங்கிரசுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவது கண்டு, இந்திரா காந்தி கவலை அடைந்தார். ஆயினும் குறுகிய ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும் என்று அவர் நம்பினார். பாராளுமன்றத்திலும் சொற்ப மெஜாரிட்டியுடன் இ.காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று, உளவுத்துறை மூலம் அவருக்கு வந்த தகவல்கள் கூறின. ஆனால்...
====================================================================

1977 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. ஜெயப்பிரகாசர் உருவாக்கிய "ஜனதா கட்சி", ஆட்சியை பிடித்தது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 19_ந்தேதி நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயணன் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:_ ராஜ்நாராயணன் (ஜனதா) 1,77,729 இந்திரா காந்தி (இ.காங்) 1,22,517 (1971 தேர்தலில் இதே தொகுதியில் ராஜ் நாராயணனை 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா காந்தி தோற்கடித்தார்.

இந்திரா தேர்தலை எதிர்த்து ராஜ்நாராயணன் வழக்குத் தொடர்ந்து அதில் "இந்திரா தேர்தல் செல்லாது" என்று தீர்ப்பு கூறப்பட்டதும் அதன் விளைவாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது) உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி தோல்வி அடைந்தார்.

அவரை ஜனதா வேட்பாளர் ரவீந்திரபிரசாத் சிங் சுமார் 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்றும் வாஜ்பாய், ஜெகஜீவன்ராம், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜோதிபாசு உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.

இந்திரா காந்தி மந்திரிசபையில் மந்திரிகளாக இருந்தவர்களில் 32 பேர் தோல்வி அடைந்தனர். மற்றும் காங்கிரசின் முன்னணி தலைவர்கள் பலரும் தோல்வியைத் தழுவினர். சங்கர் தயாள் சர்மா, தினேஷ்சிங், கே.சி.பந்த், பிரணாப் முகர்ஜி, அனுமந்தையா ஆகியோர் தோற்றவர்களில் முக்கியமானவர்கள். காங்கிரஸ் தலைவர்களில் சவான், பரூவா, கரண்சிங் உள்பட சிலர் மட்டும் வெற்றி பெற்றனர். ஆட்சியைப் பிடித்த ஜனதா பாராளுமன்றத்தின் மொத்த இடங்கள் 542 அதில் 299 இடங்களில் ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மற்ற கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள்:_ இ.காங்கிரஸ் 153 மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு 22 அ.தி.மு.க. 19 அகாலிதளம் 8 வ.கம்žனிஸ்டு 7 தி.மு.க. 1 இதர கட்சிகள் 33

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெருக்கடி நிலை அத்துமீறல்கள் எதிரொலிக்கவில்லை என்றே சொல்லலாம். அ.தி.மு.க, இ.காங்கிரஸ், வ.கம்ïனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகியவை ஒரு அணியாகவும், தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ், இ.கம்ïனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க _ இ.காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள் வருமாறு:_ மொத்தம் _40 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட) அ.தி.மு.க. 19 இ.காங்கிரஸ் 14 வ.கம்ïனிஸ்டு 3 தி.மு.க _ ஸ்தாபன காங்கிரஸ் அணி ஸ்தாபன காங்கிரஸ் 3 தி.மு.க. 1. வடசென்னை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அங்கு ஆசைத்தம்பி வெற்றி பெற்றார்.

இந்திரா தோல்வி பற்றிய செய்திகள் வர வர, டெல்லியில் எதிர்க்கட்சியினர் பட்டாசுகளைக் கொளுத்தியும், வாண வேடிக்கைகள் நடத்தியும் விழா கொண்டாடினர். இந்திரா காந்தியின் வீட்டில் மவுனம் நிலவியது. இந்திரா தன் அறையில் தன்னந்தனியே அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய நீண்டகால சிநேகிதியான புபுல் ஜெயக்கர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும், இந்திரா எழுந்து அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, "புபுல்! நான் தோற்றுவிட்டேன்" என்றார். இருவரும் சற்று நேரம் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

பிறகு, "கவலைப்படாதே! மீண்டும் நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு இரு" என்று ஆறுதலாகக் கூறிவிட்டு புபுல் ஜெயக்கர் விடைபெற்றார். அப்போது அங்கு ராஜீவ் காந்தி வந்தார். "இவ்வளவுக்கும் சஞ்சய்தான் காரணம். அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்றார். (அப்போது சஞ்சய் காந்தி, அமேதி தொகுதியில் இருந்து திரும்பவில்லை). பாராளுமன்ற தேர்தலின் பெரும்பாலான முடிவுகள் வெளியான பிறகு (21_ந்தேதி) மாலையில் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இடைக்கால ஜனாதிபதி ஜாட்டியை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார். மறுநாள் (22_ந்தேதி) தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறைகளில் இருந்த "மிசா" கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திரா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

"மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டும். நானும் எனது கட்சியினரும் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஜனநாயக முறையின் ஒரு பகுதி தேர்தல். தேர்தலை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல வாழ்வு அளிப்பதுதான் முக்கியமே தவிர, தேர்தலில் பெறும் வெற்றி அல்லது தோல்வி அதிக முக்கியம் அல்ல.

மத்தியில் அமையப்போகும் புதிய அரசாங்கத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதசார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம் ஆகிய அடிப்படை கொள்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். நமது தேசத்தை எதிர்நோக்கியுள்ள பணிகளை நிறைவேற்ற புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை அளிக்க நானும், காங்கிரஸ் கட்சியும் தயாராக இருக்கிறோம்.

எனது மந்திரிகளும், எனது கட்சியினரும், இந்த தேசத்தின் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் ஒத்துழைத்து என் மீது ஆழ்ந்த பரிவு காட்டினார்கள். பிரதமர் என்ற முறையில் உங்களிடம் இருந்து விடைபெறும் இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் நான் கொண்டுள்ள அன்பும், அவர்களின் நல்வாழ்வில் நான் வைத்திருக்கும் அக்கறையும் மாறாமல் இருக்கிறது. என்னால் இயன்ற அளவு மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதே சிறு வயது முதல் என்னுடைய லட்சியம் ஆகும். இதுவே என்னுடைய நோக்கமாக இருக்கும். இப்போதும், எப்போதும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்".

இவ்வாறு அதில் இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்தார்.
==============================================================
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947_ல் இருந்து 30 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செலுத்தி வந்த காங்கிரஸ், ஆட்சியை விட்டு இறங்கியது. வரலாற்றில் முதல் முறையாக, காங்கிரஸ் அல்லாத பிரதமராக, மொரார்ஜி தேசாய் 1977 மார்ச் 24_ந்தேதி பதவி ஏற்றார். 1964_ல், நேரு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆவதற்கு மொரார்ஜி தேசாய் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். பின்னர், 1966 ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி திடீர் என்று காலமானதால், பிரதமர் தேர்தல் நடந்தது. அதில், இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு, தேசாய் தோல்வி அடைந்தார். 14 ஆண்டுகளாக தேசாய் கண்டு வந்த "பிரதமர் பதவி கனவு" 1977_ல் பலித்தது.

மார்ச் 24 ந்தேதி மாலை மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றார். மற்ற மந்திரிகள் 26_ந்தேதி பதவி ஏற்றனர். அன்று பதவி ஏற்ற 14 மந்திரிகளின் பெயர்களும் இலாகா விவரமும் வருமாறு:-

1. சரண்சிங் - உள்நாட்டு இலாகா
2. வாஜ்பாய் - வெளிநாடு
3. எச்.எம்.படேல் - நிதி, ரெயில்வே, பாங்கிகள்
4. பாதல் - தபால் தந்தி
5. சாந்திபூஷண் - சட்டம், நீதித் துறை, கம்பெனிகள் விவகாரம்.
6. எல்.கே.அத்வானி - ரேடியோ, தகவல் இலாகா
7. பட்நாயக் - இரும்பு, சுரங்கம்
8. மதுதண்டவதே - ரெயில்வே
9. பி.சி.சுந்தர் - கல்வி, சமுதாயம், சுகாதாரம்
10. மோகன்தாரியா - வர்த்தகம், உணவு, கூட்டுறவு.
11. புருசோத்தம் கவுசிக் - சுற்றுலா, விமான போக்குவரத்து
12. சிக்கந்தர் பக்த் - வீட்டு வசதி, பொதுப்பணி வினியோகம், அகதிகள் மறுவாழ்வு
13. பா.ராமச்சந்திரன் - மின்சாரம்
14. ரவீந்திரவர்மா - பாராளுமன்ற விவகாரம், தொழிலாளர் விவகாரம் (இது தவிர மற்ற எல்லா இலாகாக்களையும் பிரதமர் மொரார்ஜி தேசாய் தன் வசம் வைத்துக்கொண்டார்)


ஜெக ஜீவன்ராம் ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜனநாய காங்கிரஸ் தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் ராஜ்நாராயணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28 ந்தேதி ஜெகஜீவன்ராம் உள்பட 5 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். அவர்களது இலாகா விவரம்:-

1. ஜெகஜீவன்ராம் - ராணுவம்
2. பகுகுணா - ரசாயனம், உரம்
3. ஜார்ஜ் பெர்னாண்டஸ் - தபால் தந்தி
4. ராஜ்நாராயணன் - சுகாதாரம், கருத்தடை
5. பிரிஜ்லால் வர்மா - தொழில்
பாதலிடம் இருந்த தபால் _ தந்தி பெர்னாண்டசுக்கு ஒதுக்கப் பட்டதால், பாதலுக்கு விவசாயம் _ நீர்ப்பாசனம் இலாகா கொடுக்கப்பட்டது.
இந்திரா வாழ்த்து
மார்ச் 25_ந்தேதி பாராளுமன்றம் கூடியது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றார்கள். அன்று பிரதமர் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தியை சந்தித்து பேசினார்.

தேசாய்க்கு இந்திரா காந்தி வாழ்த்து தெரிவித்தார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், "என் கடமை முடிந்துவிட்டது" என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாளே அவர் உடல் நலம் மிகவும் மோசமானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்துவிட்டதால், ரத்தத்தை சுத்திகரிக்க "டயாலிஸ்" சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த சஞ்சய் காந்தி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_ "அரசியலில் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை. வேறு வழிகளிலும் சமுதாயத்துக்கு பாடுபட வழி உண்டு. எனவே அரசியலை விட்டு ஒதுங்கி விடுகிறேன். அரசியலில் இனி ஈடுபடமாட்டேன். அமேதி தொகுதி மக்கள் தங்களுக்கு உரிய வரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மனதார ஏற்கிறேன். இவ்வாறு சஞ்சய் காந்தி அறிவித்தார்.

1960 செப்டம்பர் மாதம் இந்திரா காந்தி கேரளா சென்றிருந்தார். திருவனந்தபுரத்தில் நடை பெற்ற காங்கிரஸ் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். 7_ந்தேதி இரவு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், ஒரு அதிர்ச்சியான தகவல் அவருக்குக் காத்திருந்தது.
==========================================================================
கணவர் பெரோஸ் காந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்தத் தகவல். பெரோஸ் காந்திக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது முறை. விமான நிலையத்திலிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார், இந்திரா.

அங்கு இந்திரா காந்தியின் உதவியாளர் உஷா பகத் உள்பட பலர் இருந்தனர். பெரோஸ் காந்திக்கு விட்டு விட்டு உணர்வு திரும்புவதாகவும், அப்போதெல்லாம் "இந்து எங்கே?" என்று அவர் கேட்பதாகவும் உஷா கூறினார். இதைக்கேட்டு இந்திரா கண் கலங்கினார். அன்று பகலில், நெஞ்சு வலிப்பதாக தன்னுடைய நண்பரான டாக்டர் கோசலாவுக்கு பெரோஸ் டெலிபோன் செய்திருக்கிறார். உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு அவர் கூறியிருக்கிறார். பெரோஸ் வந்ததும், டாக்டர் கோசலா மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளார்.

பரிசோதனை நடந்து கொண்டு இருக்கும்போதே, பெரோஸ் உணர்வு இழந்துவிட்டார். அன்றிரவு இந்திரா தூங்கவில்லை. கணவர் படுக்கை அருகிலேயே இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு பெரோஸ் காந்தி கண் விழித்துப் பார்த்தார். கண்களில் கண்ணீருடன் வாடிய முகத்துடன் இந்திரா சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். "இந்து! கவலைப்படாதே, போய் ஏதாவது சாப்பிடு" என்று கூறினார். ஆனால் இந்திரா சாப்பிட மறுத்துவிட்டார். பெரோஸ் காந்தி மீண்டும் நினைவு இழந்தார். இந்திரா துயரத்துடன் கணவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். காலை 7.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே பெரோஸ் காந்தியின் உயிர் பிரிந்தது. 48வது பிறந்த நாளுக்கு நான்கு நாள் இருக்கும்போது பெரோஸ் மரணம் அடைந்தார்.


ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதலே இந்திரா காந்தி மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விடுவார் என்று கூறி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தது. உண்மையில் நேரு இறந்த பின் அரசியலை விட்டு விலகி லண்டனில் குடியேற இந்திரா திட்டமிட்டார். அதை தடுத்து நிறுத்தியவர் காமராஜர்.

"உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை" என்று கூறி அவர் மனதை மாற்றி சாஸ்திரி மந்திரிசபையில் இடம் பெறச்செய்தார். சாஸ்திரி இறந்ததும் இந்திராவை பிரதமராக்கினார். தேர்தலில் தோற்ற இந்திரா காந்தி அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கவில்லை. நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக மனம் வருந்தியதோடு மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற கடுமையாக உழைக்கத் தீர்மானித்தார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது சப்தர்ஜங் ரோட்டில் 1_ம் எண் வீட்டில் வசித்து வந்தார். இது பிரதமருக்குரிய பெரிய பங்களா அல்ல. மந்திரிகள் அல்லது அதிகாரிகளுக்கு உரிய வீடுதான். அங்கு மொரார்ஜி தேசாய் குடி வர விரும்புவதாகவும் எனவே வீட்டை உடனே காலி செய்யும்படியும் இந்திராவிடம் அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். தன் மகன்களுடனும் மருமகள்களுடனும், பேரக்குழந்தைகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்த இந்திரா, எங்கே குடிபோவது என்று திகைத்தார். ஏனென்றால், அலகாபாத்தில் உள்ள பூர்வீக வீடான "ஆனந்த பவனம்" கூட ஏற்கனவே நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.

நல்லவேளையாக, இந்திரா காந்தியின் நீண்ட கால குடும்ப நண்பர் முகமது யூனுஸ், வெல்லிங்டன் கிரசண்ட் ரோட்டில் உள்ள தன் வீட்டை உடனடியாக காலி செய்து இந்திராவுக்குத் தர முன்வந்தார். இந்த வீட்டில்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் சஞ்சய் _ மேனகா திருமணம் நடந்தது. இந்திரா காந்தியின் உதவியாளர்கள் எல்லாம் வெளியேறிவிட்டனர். தனி செயலாளர் ஆர்.கே.தவான் மட்டும் "உங்களிடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறேன்" என்று விசுவாசத்துடன் கூறினார்.

இந்திரா காந்தி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பாதுகாப்பை குறைக்கும்படி மொரார்ஜி கட்டளையிட்டார். "இந்திரா இப்போது சாதாரண பிரஜைதான். அவருக்கு குறைந்த அளவு பாதுகாப்பு போதும்" என்று கூறினார். "நெருக்கடி நிலை"யின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்திரா காந்தியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி சரண்சிங்கும் சுகாதார மந்திரி ராஜ்நாராயணனும் துடித்தனர். "அவசரப்படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்" என்று மொரார்ஜி தேசாய் கூறினார். சட்ட மந்திரி சாந்தி பூஷனும் பிரதமரின் கருத்தை ஆதரித்தார். ஆயினும் இந்திரா காந்தியைக் கைது செய்வதில் சரண்சிங் உறுதியாக இருந்தார்.

அக்டோபர் 2_ந்தேதி அவர் சி.பி.ஐ. டைரக்டரை அழைத்தார். "இந்திராவைக் கைது செய்யத் தயாராகுங்கள்" என்று கட்டளையிட்டார். இந்திரா காந்தியை எந்த முறையில் கைது செய்வது? அவரை எப்படி நடத்துவது? என்று சி.பி.ஐ. டைரக்டர் கேட்டார். "இந்திரா காந்தி இப்போது சாதாரண பிரஜை. எனவே சாதாரண பிரஜை மாதிரியே அவரை நடத்தவேண்டும்" என்றார் சரண்சிங்.

3_ந்தேதி மாலை இந்திரா காந்தியின் வீட்டுக்கு சி.பி.ஐ. போலீசார் சென்றார்கள். "உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்" என்றார்கள். "அப்படியா? தாராளமாக கைது செய்யுங்கள். கை விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதாக இருந்தாலும் சரி" என்றார் இந்திரா காந்தி. ஆனால் கை விலங்கு போடாமல் அவரை போலீசார் அழைத்துச்சென்றார்கள். மறுநாள் இந்திரா காந்தி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வரப்பட்டது. ஆனால் "நாற்காலி வேண்டாம்" என்று இந்திரா கூறிவிட்டார்.

அரசாங்க வக்கீல் தமது வாதத்தில் கூறியதாவது:-

"தேர்தல் பிரசாரத்திற்கு பல வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஜீப்களை இந்திராவும் அவர் மகன் சஞ்சய்காந்தியும் பயன்படுத்தினார்கள். பம்பாயில் பெட்ரோல் கிணறுகள் தோண்ட பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுடன் இந்திரா காந்தி ஒப்பந்தம் செய்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.

இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இதற்கு பதிலளித்து கூறியதாவது:-

"இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா? இவ்வாறு பிராங்க் அந்தோணி கேட்டார். முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அன்றைய தினமே இந்திரா காந்தியை நீதிபதி விடுதலை செய்தார். ஒரே நாளில் விடுதலை ஆவோம் என்று இந்திரா காந்தியே நினைக்கவில்லை.
================================================================================
விடுதலை செய்யப்பட்ட இந்திரா காந்தி உற்சாகம் அடைந்தார். ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாசர் உடல் நிலை மோசம் அடைந்து, பீகார் தலைநகரான பாட்னாவில் படுத்த படுக்கையில் இருந்தார். அவரை இந்திரா காந்தி போய் பார்த்தார். இந்த சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இருவரும் 50 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். ஜனதா கட்சி ஆக்கபூர்வமாக செயல்படாமல், இந்திராகாந்தியை பழிவாங்குவதிலேயே குறியாக இருந்தது ஜெயப்பிரகாசருக்குப் பிடிக்கவில்லை.

இந்திராவை கைது செய்தது அவருக்கு மன வேதனையை அளித்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது நேருவும், ஜெயப்பிரகாசரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நேருவின் மனைவி கமலாவும், ஜெயப்பிரகாசரின் மனைவியும் உயிர்த்தோழிகள். இந்திரா காந்தி சிறு குழந்தையாக இருந்தபோது ஜெயப்பிரகாசர் செல்லமாகத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவார். நெருக்கடி நிலைப்பிரகடனத்தையும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவர் எதிர்த்தார். என்றாலும், இந்திரா காந்தி நல்லவர், திறமைசாலி என்பதில் எவ்வித கருத்து வேற்றுமையும் இல்லை. நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட சம்பவங்களுக்காக, ஜெயப்பிரகாசரிடம் இந்திரா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

"இந்து! அதையெல்லாம் மறந்து விட்டேன்! மன்னித்து விட்டேன்" என்றார் ஜெயப்பிரகாசர். இருவர் கண்களிலும் நீர் துளிர்த்தது. இந்திரா காந்தி விடைபெறும்போது, ஜெயப்பிரகாசரின் காலைத் தொட்டு வணங்கி, "நீங்கள் விரைவில் பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்" என்றார். ஜெயப்பிரகாசர் இந்திராவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் இன்னும் கொஞ்ச நாட்கள்தான் வாழ்வேன். நீ பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

ஜெயப்பிரகாசரின் வாழ்த்தைப் பெற்ற இந்திரா காந்தி, புதிய உற்சாகத்தையும், புதிய தெம்பையும் பெற்றார். பின்னர் பூமிதான இயக்க தலைவர் வினோபாவையும் இந்திரா காந்தி சந்தித்தார். "நெருக்கடி நிலை"யின் போது, அவருடைய ஆசிரமம் சோதனை போடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார். இந்திரா காந்தி பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்தார். நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்கு பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இதனால் பொதுமக்களிடம் இந்திரா காந்தியின் செல்வாக்கு மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. இந்திரா காந்தி பாராளுமன்றத்தில் இடம் பெறுவது நல்லது என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். அவர் போட்டியிடுவதற்கு வசதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் டி.பி.சந்திர கவுண்டர் தன் "எம்.பி" பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அங்கு 1978 நவம்பரில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதி, "காங்கிரஸ் கோட்டை" என்று புகழ் பெற்றதாகும். 50 சதவீதத்துக்கு மேல் பெண் வாக்காளரைக் கொண்ட தொகுதி. அங்கு போட்டியிட இந்திரா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, முன்னாள் முதல்_மந்திரி வீரேந்திர பட்டில் போட்டியிட்டார்.

இந்திரா காந்தியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று ஜனதா தலைவர்கள் விரும்பினார்கள். வீரேந்திரபட்டீல் சார்பாக தேர்தல் வேலைகளை கவனிக்க மத்திய தொழில் மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனுப்பி வைக்கப்பட்டார். போட்டி கடுமையாக இருந்தது., எனினும் சுமார் 70,000 ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி 1978 நவம்பர் 12_ந்தேதி லண்டன் சென்றார். அவருடைய பாஸ்போர்ட்டை ஜனதா அரசு முடக்கி வைத்திருந்தபோதிலும், லண்டனுக்கு மட்டும் போய்வரக்கூடிய குறுகிய கால பாஸ்போர்ட்டை வழங்கியது. லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் இந்திரா டெல்லி திரும்பினார். ஆனால் அவரை "எம்.பி"யாக பதவி ஏற்கவிடாமல் தடுக்க ஜனதா அரசாங்கம் குறுக்கு வழியைக் கையாண்டது. முன்பு இந்திரா காந்தியிடம் விசாரணை நடத்தச்சென்ற அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் இந்திரா தடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதுபற்றி விசாரணை நடத்திய குழு பாராளுமன்ற உரிமை மீறல் குற்றத்தை இந்திரா செய்திருப்பதாக தீர்ப்புக் கூறியிருந்தது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்வது என்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அவரை சிறையில் அடைப்பதென்றும் ஜனதா கட்சி முடிவு செய்தது. இதற்கான தீர்மானத்தை டிசம்பர் 19_ந்தேதி பாராளுமன்றத்தில் பிரதமர் தேசாய் கொண்டு வந்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக 279 பேரும், எதிராக 138 பேரும் ஓட்டுப்போட்டனர். தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து இந்திரா சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சமயத்தில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. உறுப்பினரான எஸ்.டி.சோமசுந்தரம் அமைச்சராகப் பதவி ஏற்றதால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆதரவுடன் அங்கு இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார்.

இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ஆனால் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை மொரார்ஜி தேசாய் விரும்பவில்லை. உடனே அவர் எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்டு, "இந்திரா காந்தியை ஆதரிக்காதீர்கள்" என்று கூறினார். இதனால் எம்.ஜி.ஆருக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. "பிரதமரே வேண்டாம் என்று கூறுவதை எப்படி செய்வது?" என்று யோசித்தார். பின்னர், "தஞ்சை தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவருக்குப் போதிய பாதுகாப்பு கொடுப்பது இயலாத காரியம்" என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் தஞ்சையில் போட்டியிடும் திட்டத்தை இந்திரா கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று இந்திரா யோசித்துக்கொண்டிருந்தபோது அவரே எதிர்பாராத அரசியல் திருப்பம் டெல்லியில் ஏற்பட்டது.
=====================================================================================

ஆட்சி பீடத்தில் ஜனதா கட்சி அமர்ந்து விட்டபோதிலும் அதன் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால் மந்திரிசபையில் அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது. சரண்சிங்கும், ராஜ்நாராயணனும் இந்திரா காந்தியையும், சஞ்சய் காந்தியையும் எப்படி பழிவாங்குவது என்று யோசித்தபடி இருந்தார்களே தவிர ஆக்கபூர்வமாக செயல்படவில்லை.

ஒருநாள் மந்திரி ராஜ்நாராயணன் நிருபர்களை அழைத்தார். "நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?" என்று கேட்டார். நிருபர்கள் விழித்தார்கள். ராஜ்நாராயணன் ஒரு புன்னகையுடன் "உங்களுக்குத் தெரியாது. காரணம் நான் பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் கடைப்பிடித்த முறையைப் பின்பற்றுகிறேன்" என்று கூறினார்.

"அந்த முறை என்ன என்று கூறுங்களேன். உலக மக்கள் எல்லோரும் பயன் அடைவார்கள்" என்று ஒரு நிருபர் கூறினார். "அதுவும் சரிதான்" என்று கூறிய ராஜ்நாராயணன் தொடர்ந்து சொன்னார்:

"காலையில் எழுந்ததும் பலர் காபி _ டீ குடிக்கிறார்கள். அது தவறு. அவற்றில் விஷ சத்து இருக்கிறது" என்று கூறி நிறுத்தினார். "அப்படியானால் நீங்கள் காபி, டீ குடிப்பதில்லையா?" என்று ஒரு நிருபர் கேட்டார். "நோ... நோ... நான் குடிப்பது வேறு!" என்றார். "அதைத்தான் சொல்லுங்களேன்" என்று நிருபர்கள் வற்புறுத்தினார்கள். "சொல்லத்தான் போகிறேன். எல்லோரும் பயன் அடையவேண்டும் அல்லவா?" என்று கூறிய ராஜ்நாராயணன், குரலை தாழ்த்திக் கொண்டு, "தினமும் காலையில் என் சிறுநீரில் அரை டம்ளர் அளவுக்கு குடிக்கிறேன்" என்று சொன்னார். இதைக் கேட்ட நிருபர்கள் அதிர்ச்சியால் உறைந்து போனார்கள்.

அதிர்ச்சியிலிருந்து நிருபர்கள் மீளவில்லை. என்றாலும், ஒரு நிருபர் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, "எவ்வளவு நாட்களாக நீங்கள் இந்த அமுதத்தை குடித்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். "அமுதம் என்று நீங்கள் கேலியாக குறிப்பிட்டாலும் சரி, உண்மையாக உணர்ந்து சொன்னாலும் சரி, என்னைப் பொருத்தவரை அது அமுதம்தான். அதை கழிவுப் பொருள் என்று நினைப்பது சரியல்ல. ரத்தத்தை சுத்தீகரிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு" என்றார், ராஜ்நாராயணன்.

"இன்று அருமையான செய்தி கிடைத்துவிட்டது!" என்று நினைத்த நிருபர்கள், அதை தங்கள் அலுவலகங்களுக்குத் தெரிவிக்க அவசரமாகக் கிளம்பினார்கள். "கொஞ்சம் பொறுங்கள்!" என்றார், ராஜ்நாராயணன். "இன்னும் என்ன `செய்தி' சொல்லப்போகிறாரோ" என்று நிருபர்கள் உட்கார்ந்தனர். "நான் கூறிய மருந்தின் மகிமை, என் குரு உள்துறை மந்திரி சரண்சிங்குக்கும் தெரியும். அவரும் அதை தினமும் அருந்தி பயன் அடைந்து வருகிறார்" என்று கூறிய ராஜ்நாராயணன், "இந்த மருத்துவ முறையைப் பின்பற்றும் இன்னொருவர் பெயரையும் கூறப்போகிறேன். அவர் பெயரைக் கேட்டால் அப்படியே திகைத்துப்போய் விடுவீர்கள்" என்று கூறி நிறுத்தினார்.

"அவர் யார் என்று கூறுங்கள். சஸ்பென்சாக நிறுத்தி, எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். செய்தி கொடுக்க நேரமாகிறது" என்று அவசரப்படுத்தினார் ஒரு நிருபர். "பொறுங்கள், பொறுங்கள். சிறுநீர் அருந்துவோர் பட்டியலில் நமது பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களும் இருக்கிறார்கள். எண்பது வயதுக்கு மேலும் அவர் எவ்வளவு தெம்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார் பாருங்கள். எல்லாம் இந்த மருந்தின் மகிமை!" என்றார், ராஜ்நாராயணன். மறுநாள் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியது. "சிறுநீர் குடிக்கும் இந்திய மந்திரிகள்" என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டு மேல்நாட்டு பத்திரிகைகள் இந்தியாவின் மானத்தை வாங்கின.

ராஜ்நாராயணன் இப்படி பேட்டி அளித்தது, மொரார்ஜி தேசாய்க்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. "கோமாளித்தனத்துக்கும் ஒரு எல்லை இல்லையா?" என்று ராஜ்நாராயணனிடம் கடிந்து கொண்டார். "நான் உண்மையைத்தானே சொன்னேன். நாம் மட்டும் பலன் அடைந்தால் போதுமா? உலகமே பலன் அஆட்சி பீடத்தில் ஜனதா கட்சி அமர்ந்து விட்டபோதிலும் அதன் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால் மந்திரிசபையில் அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது. சரண்சிங்கும், ராஜ்நாராயணனும் இந்திரா காந்தியையும், சஞ்சய் காந்தியையும் எப்படி பழிவாங்குவது என்று யோசித்தபடி இருந்தார்களே தவிர ஆக்கபூர்வமாக செயல்படவில்லை.

ஒருநாள் மந்திரி ராஜ்நாராயணன் நிருபர்களை அழைத்தார். "நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?" என்று கேட்டார். நிருபர்கள் விழித்தார்கள். ராஜ்நாராயணன் ஒரு புன்னகையுடன் "உங்களுக்குத் தெரியாது. காரணம் நான் பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் கடைப்பிடித்த முறையைப் பின்பற்றுகிறேன்" என்று கூறினார்.

"அந்த முறை என்ன என்று கூறுங்களேன். உலக மக்கள் எல்லோரும் பயன் அடைவார்கள்" என்று ஒரு நிருபர் கூறினார். "அதுவும் சரிதான்" என்று கூறிய ராஜ்நாராயணன் தொடர்ந்து சொன்னார்:

"காலையில் எழுந்ததும் பலர் காபி _ டீ குடிக்கிறார்கள். அது தவறு. அவற்றில் விஷ சத்து இருக்கிறது" என்று கூறி நிறுத்தினார். "அப்படியானால் நீங்கள் காபி, டீ குடிப்பதில்லையா?" என்று ஒரு நிருபர் கேட்டார். "நோ... நோ... நான் குடிப்பது வேறு!" என்றார். "அதைத்தான் சொல்லுங்களேன்" என்று நிருபர்கள் வற்புறுத்தினார்கள். "சொல்லத்தான் போகிறேன். எல்லோரும் பயன் அடையவேண்டும் அல்லவா?" என்று கூறிய ராஜ்நாராயணன், குரலை தாழ்த்திக் கொண்டு, "தினமும் காலையில் என் சிறுநீரில் அரை டம்ளர் அளவுக்கு குடிக்கிறேன்" என்று சொன்னார். இதைக் கேட்ட நிருபர்கள் அதிர்ச்சியால் உறைந்து போனார்கள்.

ராஜ்நாராயணன் ஏற்கனவே "அரசியல் கோமாளி" என்று பெயர் எடுத்தவர். அவர் உண்மையாகவே கூறுகிறாரா? அல்லது தமாஷ் செய்கிறாரா என்று திகைத்தார்கள். "என்ன எல்லோரும் இப்படி வாயடைத்துப் போய்விட்டீர்கள்? நான் விளையாடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சத்தியமாகச் சொல்கிறேன். இது நிஜம், நிஜம், நிஜம்!" என்றார்.

டையவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் கூறினேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார், ராஜ்நாராயணன். ஏற்கனவே இந்திரா காந்தியை கொடுமைப்படுத்தியதால், ஜனதா அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பு அடைந்திருந்தனர். ராஜ்நாராயணன் அளித்த பேட்டியால், ஜனதா கட்சியின் செல்வாக்கு மேலும் சரிந்தது.

இதற்கிடையே இந்திரா காந்தியை ஷா கமிஷன் நேரில் அழைத்து விசாரித்தது. நீதிபதி கேட்ட எந்தக் கேள்விக்கும், இந்திரா பதில் அளிக்க மறுத்தார். "நான் பிரதமராகப் பதவி ஏற்கும்போது, ரகசியக் காப்பு பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன். எனவே, பதில் அளிக்க இயலாது" என்றார். ஷா கமிஷன் தனது 500 பக்க அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்தது. அதில், நெருக்கடி நிலையின்போது நடந்த பல அத்துமீறல்கள் நடந்தது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்திரா காந்தி மீது குறிப்பிட்ட எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை.

இந்த சமயத்தில், மொரார்ஜி தேசாய் மகன் காந்தி தேசாய் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இது பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று, மொரார்ஜிக்கு சரண்சிங் கடிதம் எழுதினார். "வெறும் வதந்தியை மட்டும் அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தமுடியாது" என்று தேசாய் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பதவியை சரண்சிங்கும், சுகாதார அமைச்சர் பதவியை ராஜ்நாராயணனும் ராஜினாமா செய்தனர். இதனால், ஜனதா கட்சி பிளவுபட்டது.

மந்திரிசபை கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும், சரண்சிங்குக்கும் சமரசம் செய்து வைக்க ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். தனக்கு உள்நாட்டு இலாகாவுடன், துணைப்பிரதமர் பதவியும் வேண்டும் என்றும், தன்னுடைய சீடர் ராஜ்நாராயணனுக்கு மீண்டும் மந்திரி பதவி தரவேண்டும் என்றும் சரண்சிங் வற்புறுத்தினார்.

துணைப்பிரதமர் பதவி தருவதாகவும், ஆனால் உள்நாட்டு இலாகாவைத் தர முடியாது என்றும் கூறிய தேசாய் சரண்சிங், ஜெகஜீவன்ராம் ஆகிய இருவரையும் துணைப் பிரதமராக நியமித்தார். சரண்சிங்குக்கு நிதி இலாகா கொடுக்கப்பட்டது. ராஜ்நாராயணனுக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாது என்று தேசாய் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்நாராயணன், தேசாய் ஆட்சியைக் கவிழ்ப்பதாகச் சபதம் செய்தார்.

ஜனதா கட்சியை விட்டு விலகி, "ஜனதா (எஸ்)" என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். ஜனதா கட்சியை சேர்ந்த 34 எம்.பி.க்கள் அக்கட்சியை விட்டு விலகி, ராஜ்நாராயணன் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் ரபிராய், ஜானேஸ்வர் மிஸ்ரா, ஜக்பீர்சிங் ஆகியோரும் ஜனதாவை விட்டு விலகி, ராஜ்நாராயணன் கட்சியில் சேர்ந்தனர். இதனால் மொரார்ஜி தேசாய் மந்திரிசபை ஆட்டம் கண்டது.
===============================================================================

ஜனதா கட்சியில் நெருக்கடி அதிகமாகிக் கொண்டே இருந்தது. மொரார்ஜி தேசாயை கவிழ்த்துவிட்டு பிரதமராக வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த சரண்சிங், "இதுதான் சமயம்" என்று, ஜனதா கட்சியை உடைப்பதில் ஈடுபட்டார். "மொரார்ஜி தேசாய் பதவி விலக வேண்டும்" என்று, சரண்சிங் கோஷ்டி போர்க்கொடி தூக்கியது. "நான் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?" என்று திருப்பிக் கேட்ட தேசாய், "எக்காரணம் கொண்டும் நான் ராஜினாமா செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மொரார்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்நாயக், பகுகுணா, ஜார்ஜ்பெர்னாண்டஸ் உள்பட 13 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். 80 "எம்.பி"க்கள் ஜனதாவை விட்டு விலகி, ராஜ்நாராயணன் கட்சியில் சேர்ந்தார்கள்.

இந்நிலையில், மொரார்ஜி தேசாய்க்கு மெஜாரிட்டி இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட காங்கிரஸ், அவர் மந்திரிசபை மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. "எனக்கு இன்னமும் மெஜாரிட்டி ஆதரவு இருக்கிறது. பாராளுமன்றத்தில் என் மெஜாரிட்டியை நிரூபித்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தோற்கடிப்பேன்" என்று மொரார்ஜி கூறினார். 1979 ஜுலை 15_ந்தேதி, டெல்லி அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவி மீது நீண்ட காலமாகவே "கண்" வைத்திருந்த துணைப்பிரதமர் ஜெகஜீவன்ராம், மொரார்ஜி தேசாயை சந்தித்தார். "ஜனதா கட்சியில் பெரும்பான்மையோர், நீங்கள் பிரதமராக நீடிப்பதை எதிர்க்கிறார்கள்.

கட்சி துண்டு துண்டாக உடைந்து சிதறி விடும்போல் இருக்கிறது. சரண்சிங், மற்ற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பிரதமராக ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதைத்தடுக்க வேண்டுமானால், பிரதமர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யவேண்டும். வேறு வழி இல்லை" என்று கூறினார். "ராஜினாமா செய்ய நீங்கள் மறுத்தால், நான் ராஜினாமா செய்து விட்டு வெளியேறுவேன்" என்று எச்சரித்தார். இதன் பிறகு, மூத்த மந்திரிகளுடனும் ஜனதா தலைவர் சந்திரசேகருடனும் மொரார்ஜி தேசாய் ஆலோசனை நடத்தினார். பதவியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தார். ராஜினாமா அன்று மாலை ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று, ஜனாதிபதி சஞ்சீவரெட்டியை சந்தித்தார்.

"பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டு, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். "புது மந்திரிசபை அமைக்கப்படும் வரை, காபந்து அரசாக பதவியில் இருங்கள்" என்று மொரார்ஜியிடம் சஞ்சீவரெட்டி கேட்டுக்கொண்டார். காங்கிரசை தோற்கடித்து விட்டு, 1977 மார்ச் 24_ந்தேதி பிரதமராகப் பதவி ஏற்ற தேசாய், 2 வருடம் 5 மாதங்களில் பதவியை விட்டு விலகினார். புது மந்திரிசபை அமைக்க பலர் போட்டியிட்டனர். ஜனதாவை விட்டு விலகி புதுக்கட்சி தொடங்கிய ராஜ்நாராயணன், ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். "என் கட்சியில் 75 எம்.பி.க்கள் உள்ளனர். புது மந்திரிசபை அமைக்கத் தேவையான பலத்தை விரைவில் திரட்ட முடியும். எனவே, மந்திரிசபை அமைக்க என்னை அழையுங்கள்!" என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனதா கட்சியின் ஒரு அங்கமாக, ஜனசங்கம் இருந்தது. ஜனசங்கத்தின் தொடர்பை துண்டித்துக்கொண்டால், மொரார்ஜி தேசாயை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், "வாழ்ந்தாலும் சரி; அழிந்தாலும் சரி. தேசாயுடன்தான் இருப்போம்" என்று ஜனசங்கம் அறிவித்தது. இதற்கிடையே சரண்சிங், ஜனதாவை விட்டு விலகி, ராஜ் நாராயணன் கட்சியில் சேர்ந்தார். அவரை பிரதமராக்க அவருடைய ஆதரவாளர்கள் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். "சரண்சிங் மந்திரிசபைக்கு ஆதரவு கொடுக்கிறோம்" என்று காங்கிரஸ் திடீரென்று அறிவித்து, அனைவரையும் திகைக்க வைத்தது. ஜனாதிபதி சஞ்சீவரெட்டியை சரண்சிங் சந்தித்தார். 262 எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்து, அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். தன் மந்திரிசபையில் இடம் பெறுமாறு காங்கிரசையும் சரண்சிங் அழைத்தார்.

28_7_1979 அன்று சரண்சிங் பிரதமராகவும், காங்கிரசை சேர்ந்த சவான் துணைப்பிரதமராகவும் மற்றும் 7 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து, சி.சுப்பிரமணியம் உள்பட 17 பேர் மந்திரியானார்கள். இந்த மந்திரிசபையில் அ.தி.மு.க.வும் இடம் பெறவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து, பாலாபழனூர் ஆகியோர் 19_8_1979_ல் மந்திரிகளாகப் பதவி ஏற்றனர்.

இந்திரா காந்தியின் தாத்தா மோதிலால் நேரு, அலகாபாத்தில் பெரிய கோடீஸ்வரராக வாழ்ந்தவர். பெரிய வழக்கறிஞர். அலகாபாத்தில், மோதிலால் நேருவுக்குச் சொந்தமான இந்த மாளிகையின் பெயர் "சுயராஜ்பவன்". 42 அறைகளைக் கொண்டது. இங்குதான் 1917 நவம்பர் 19_ந்தேதி இந்திரா பிறந்தார். 1930_ம் ஆண்டு, "ஆனந்த பவனம்" என்ற இன்னொரு மாளிகையை மோதிலால் கட்டினார். இது, சுயராஜ்பவனைவிட சற்று சிறியது என்றாலும், நவீன வசதிகள் கொண்டது.

1930 முதல் இந்த மாளிகையில்தான் நேரு குடும்பம் வசித்தது. இங்குதான் இந்திரா _ பெரோஸ்காந்தி திருமணம் நடந்தது. இந்த வீடுகளையெல்லாம் நாட்டுக்காக அர்ப்பணித்து விட்டார், நேரு. அதன் காரணமாக, இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இல்லாதபோது, வாடகை வீட்டுக்கு செல்ல நேரிட்டது.
====================================================
புது மந்திரிசபை அமைக்க சரண்சிங்கை ஜனாதிபதி அழைத்தபோது, "உங்களுக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதை, ஆகஸ்டு மூன்றாவது வாரத்தில் நீங்கள் பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்படி மெஜாரிட்டியை நிரூபிப்பதாக, சரண்சிங் ஒப்புக்கொண்டிருந்தார். காங்கிரஸ் ஆதரவுடன் மெஜாரிட்டி பலத்தை நிரூபித்துவிட முடியும் என்று அவர் நம்பினார். இந்நிலையில், சரண்சிங்கை தொடர்ந்து ஆதரிக்க இந்திரா காந்தி ஒரு நிபந்தனை விதித்தார்.

நெருக்கடி நிலையின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை மொரார்ஜி தேசாய் நிறைவேற்றியிருந்தார். அந்த சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும், அப்படி வாபஸ் பெற்றால் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் சரண்சிங்கிடம் இந்திரா காந்தி தெரிவித்தார். ஆனால், அந்த சட்டத்தை வாபஸ் பெற சரண்சிங் மறுத்துவிட்டார். "அப்படியானால் உங்களுக்கு இனி ஆதரவு இல்லை" என்று இந்திரா காந்தி அறிவித்தார். "காங்கிரஸ் கட்சி என் முதுகில் குத்திவிட்டது" என்று கூறிவிட்டு, சரண்சிங் 20_ந்தேதி காலை ஜனாதிபதியை சந்தித்து, தன் மந்திரி சபையின் ராஜினாமாவைக் கொடுத்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தும்படி கேட்டுக் கொண்டார். 24 நாட்கள் பிரதமராக இருந்த சரண்சிங், ஒரு நாள்கூட பாராளுமன்றத்தைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரிசபை ராஜினாமா பற்றி சரண்சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:_ "நெருக்கடி கால கொடுமைகளுக்கு காரணமான இந்திரா, அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போதுதான், என் தலைமையிலான மந்திரிசபைக்கு ஆதரவு தரமுடியும் என்று நிபந்தனை விதித்தார்.

குறிப்பாக, நெருக்கடி நிலையை கண்டித்து எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை எரித்ததாக, சஞ்சய் காந்தி, வி.சி.சுக்லா ஆகியோர் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதற்கு மத்திய அரசு இணங்கினால், அது நீதித்துறையில் குறுக்கிடுவது ஆகும். எனவே, இந்திராவின் கோரிக்கையை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்திராவின் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் மீதும் தொடரப்பட்ட நெருக்கடிக்கான வழக்குகளை ரத்து செய்து விட்டு பதவியில் நீடிக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை." இவ்வாறு சரண்சிங் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஜனாதிபதியை ஜெகஜீவன்ராம் சந்தித்தார். புது மந்திரிசபை அமைக்க தன்னை அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த "எம்.பி"க்கள், ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். "ஜெகஜீவன்ராமை பிரதமராக்க வேண்டும்" என்று மனு கொடுத்தார்கள். "ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் இருந்தால், ஜெகஜீவன்ராமை ஆதரிக்கத் தயார்" என்று காங்கிரஸ் அறிவித்தது. இதற்கிடையே, சட்டமந்திரி கத்தர், ஜனாதிபதியை சந்தித்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார். "பாராளுமன்றத்தைக் கலைக்க, பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 295 எம்.பி.க்கள் விரும்புகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடந்து முடியும் வரை அனைத்துக்கட்சிகளையும் கொண்ட "தேசிய அரசாங்கம்" அமைக்கலாமா என்று, சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார்.

"தேசீய அரசாங்கம்" அமைக்க இ.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் ஜனதா எதிர்த்தது. பாராளுமன்றம் கலைப்பு முடிவில், பாராளுமன்றத்தை கலைப்பது என்றும், தேர்தல் நடந்து முடியும்வரை சரண்சிங் மந்திரிசபையை "காபந்து மந்திரிசபை"யாக நீடிக்க அனுமதிப்பது என்றும் ஜனாதிபதி தீர்மானித்தார். இதற்கான உத்தரவு 22_8_1979 அன்று பிறப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு இருந்ததாவது:_ பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படுகிறது. நவம்பர் மாதம் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும். டிசம்பர் 15_ந்தேதிக்குள் புதிய மந்திரிசபை பதவி ஏற்கும். தேர்தல் முடியும் வரை தற்போதுள்ள சரண்சிங் மந்திரிசபை "காபந்து" மந்திரிசபையாக நீடிக்கும். ஆனால், முக்கியமான கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக்கூடாது." இவ்வாறு ஜனாதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சரண்சிங் வாழ்க்கைப்பாதை நீண்ட காலம் உத்தரபிரதேச அரசியலில் பங்கு கொண்டிருந்தவர் சரண்சிங். இவர் 1977_ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு, முதல் முறையாக மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றார். சிறந்த நிர்வாகியான இவர், விவசாய துறையில் மிகவும் அக்கறை கொண்டவர். சரண்சிங் 1902_ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார். "எம்.ஏ" பட்டம் பெற்றவர். சட்ட கல்லூரியில் படித்து வக்கீல் ஆனார். 1929_ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 8 ஆண்டு கால தீவிர அரசியலுக்குப்பின் 1937_ம் ஆண்டு மாநில சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் குதித்து சிறை சென்றார். 1946_ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கோவிந்த வல்லபபந்த் மந்திரிசபையில் துணை மந்திரி ஆனார். 5 ஆண்டுகள் கழித்து மாநில நிதி, தகவல் மந்திரியாக பதவி ஏற்றார். தொடர்ந்து 15 ஆண்டுகள் மந்திரியாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2 முறை உத்தரபிரதேச முதல்_மந்திரியாக இருந்தார். 1969_ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தனியாக "பாரதீய கிரந்தி தளம்" என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்டார்.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாரதீய கிரந்தி தளமும், வேறு சில கட்சிகளும் சேர்ந்து "பாரதீய லோக் தளம்" என்ற கட்சியை அமைத்தன. ஜனதா கட்சி உருவானபோது பாரதீய லோக் தளமும், அதில் இணைந்தது. அதன் பிறகு ஜனதாவின் துணைத்தலைவராக சரண்சிங் இருந்தார். பாரதீய கிரந்தி தளத்தின் "ஏர் உழவன்" சின்னம்தான், 1977_ல் நடந்த பொதுத்தேர்தலில் ஜனதா கட்சியின் சின்னமாக இருந்தது. 1977_ல் மார்ச் மாதம் 24_ந்தேதி தேசாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் உள்நாட்டு இலாகா மந்திரியாக சரண்சிங் பதவி ஏற்றார். 1978_ம் ஆண்டு ஜுன் 29_ந்தேதி சரண்சிங்கையும், அவரது பிரதம சீடர் ராஜ்நாராயணனையும், மத்திய மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்யும்படி மொரார்ஜி தேசாய் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் ராஜினாமா செய்தனர். பிறகு தேசாய்க்கும், சரண்சிங்கிற்கும் சமாதானம் செய்து வைக்க பல முறை முயற்சி நடந்தது. அதில் வெற்றி கிடைக்கவில்லை. 1979 ஜனவரி மாதம் 10_ந்தேதி மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடந்து வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஜனவரி 24_ந்தேதி சரண்சிங் துணைப்பிரதமராக பதவி ஏற்றார். தேசாய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆனார்.
====================================================================

1980 ஜனவரியில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. மீண்டும் ஆட்சிக்கு வர இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதை இந்திரா உணர்ந்திருந்தார். இந்தியா முழுவதும் மின்னல் வேக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். 62 நாட்களில் மொத்தம் 40 ஆயிரம் மைல் சுற்றுப்பயணம் செய்தார். இந்தத் தேர்தலில், இ.காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 525 இடங்களில் 351 இடங்களை இ.காங்கிரஸ் கைப்பற்றியது.

அதாவது, மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சியான சரண்சிங் தலைமையிலான மக்கள் கட்சி (ஜனதா) 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, ஆந்திராவில் உள்ள மேடக் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திரா காந்தி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். குறிப்பாக, மேடக் தொகுதியில், 2,19,091 ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்திராவுக்கு 3,01,465 ஓட்டுகளும், எதிர்த்துப் போட்டியிட்ட ஜெய்பால் ரெட்டிக்கு வெறும் 82,374 ஓட்டுகளும் கிடைத்தன. அமேதி தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய்காந்தி ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரதமராக இந்திரா காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 14_ந்தேதி மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடந்தது. ஜெயில்சிங் (உள்துறை), ஆர்.வெங்கட்ராமன் (நிதி), பிரணாப் முகர்ஜி (வர்த்தகம்), பி.வி.நரசிம்மராவ் (வெளி விவகாரம்), ராவ் பிரேந்திரசிங் (விவசாயம்), கமலபதி திருபாதி (ரெயில்வே) உள்பட 14 பேர் காபினெட் மந்திரிகளாகவும், ஆர்.வி.சாமிநாதன் (விவசாயம்), ஜாபர் ஷெரீப் (ரெயில்வே) உள்பட 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி சஞ்சீவரெட்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வருத்தம் தெரிவித்தார்
மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்ற இந்திரா காந்தி, நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது என்று உறுதி அளித்தார்.

இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டில் இ.காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டன. (அப்போது முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்) தி.மு.க _ இ.காங்கிரஸ் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. 24 இடங்களில் போட்டியிட்ட இ.காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம், 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன.

தமிழ்நாடு தவிர மற்றும் 7 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் தோல்வி அடைந்தன. தமிழ்நாடு உள்பட 8 மாநில அரசுகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்த, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாட்டில் பதவியிலிருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசும், மற்றும் 7 மாநில அரசுகளும் கலைக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இ.காங்கிரஸ் வெற்றி பெற்றது-
-----------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை எடுத்துள்ளேன். தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

No comments: