புதிதில் இணையத்தில் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது இம்சையான விசயம். அந்த நேரத்தில் எனக்கு அடைக்கலம் அளித்து காத்தது தான் Lynx எனப்படும் உலாவி. அதில் படம் எதுவும் தெரியாது எழுத்து மட்டும் தான் என்பதால் அதை மேலோட்டமாகப் பார்த்தால் நாம் இணையத்தில் இருப்பது போலவே தெரியாது.
LYNX
இந்த சம்பவம் தான் எனக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர உலகில் வேறு சில உலாவிகளும் உண்டு என்பதையும் அதனாலும் சில பயன்கள் உண்டு என்பதையும் புரிய வைத்தது. இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு சரியான மாற்று எதுவும் இல்லாத காலம் அது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் மரணப்படுக்கையில் கிடந்தது. சஃபாரி விண்டோஸில் வேலை செய்யாது. பீனிக்ஸ், ஓபெரா எல்லாம் பெரும்பாலானோர் (முக்கியமாக இந்தியாவில்) கேள்விப்படாத பெயர். எனவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற கதையாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் ஆட்சி செய்து வந்தது.
சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய மகன் மற்றும் மகள் மூலம் ஃபயர்பாக்ஸ் அறிமுகமானது. ஃபயர்பாக்ஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட எந்த விசயத்தில் உசத்தி என்று அப்பொழுது புரியவில்லை என்றாலும் என் குழந்தகள் (அதுவும் அறிவுஜீவி் குழந்தகள் ) சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி ஃபயர்பாக்ஸை சரணடைந்தேன். பின்னர் ஃபயர்பாக்ஸின் Add-ons பற்றித் தெரிய வந்ததும், மொத்தமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மறந்தேன்.
பின்னர் சஃபாரி, ஓபெரா என்று அனைத்தையும் முயற்சித்து ஒவ்வொன்றிலும் ஒரு விசயம் பிடித்துப் போக அனைத்தையும் கலந்து கட்டி உபயோகிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்றால் லின்க்ஸ் (Lynx) தான். தொட்டில் பழக்கம்! அனைத்து உலாவிகளையும் உபயோகித்தாலும் ஃபயர்பாக்ஸ் தான் செல்லக் குழந்தை.
இந்த நிலையில் கூகிள் ஒரு உலாவியை உருவாக்கி வருவதாக பேச்சு எழும்பியதும் அதை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கிய காரணம் கூகிளின் எளிமை. முதன்முதலில் ஜி-மெயில் பார்த்ததும் அதன் வெறுமையைக் கண்டு கொஞ்சம் அரண்டு தான் போனேன். மெயில்களை பகுத்து வைக்க ஃபோல்டர் (folder) கூட இல்லாமல் அலங்காரமற்று மொக்கையாக இருந்தது. பிறகு பழகப் பழக ஜி-மெயிலின் சக்தி புரிய ஆரம்பித்தது. இது கூகிளின் பிற வெளியீடுகளுக்கும் பொருந்தும்.
நேற்று கூகிள் க்ரோம் வெளியிடப்பட்ட இரண்டாவது நிமிடம் அதை தரவிரக்கி உபயோகிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றிய சில குறிப்புக்கள் (அப்பாடி ஒரு வழியாக விசயத்துக்கு வந்தாச்சு!)
*எதிர்பார்த்த மாதிரியே பார்க்க வெகு எளிமையாக இருக்கிறது. உலாவி என்ற மென்பொருள் ஒன்று இருப்பது போலவே தோன்றவில்லை.
* மற்ற உலாவிகளுடன் ஒப்பிடும் போது க்ரோம் வேகமாகவே உள்ளது. உலாவியில் இயங்கும் ஜாவாஸ்கிரிப்ட் மொழியின் வேகத்தைப் பரிசோதிக்க கூகிள் சிபாரிசு செய்யும் தளம் இது: http://code.google.com/apis/v8/run.html. கூகிளின் தயாரிப்பை கூகிள் தளத்திலேயே போய் சோதிப்பதா என்று நினைப்பவர்கள் இங்கே செல்லலாம். இரண்டிலும் சோதனை செய்து பார்த்ததில் ஃபயர்பாக்ஸ், சபாரி மற்றும் ஓபெராவை விட க்ரோம் பல மடங்கு வேகமாக இருக்கிறது. (IE பற்றிக் கேட்கவே வேண்டாம். மொத்தமாக படுத்து விட்டது).
*ஒரு கோப்பை தரவிரக்க க்ரோம் எடுத்துக் கொள்ளும் நேரமும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் ஓபெரா அளவுக்கு வேகமாக இருக்காது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு துல்லியமாக அளந்து பார்க்க என்னிடம் வசதி கிடையாது.
* Web standard எனப்படும் இணைய தரத்திலும் க்ரோம் முந்துகிறது. http://acid3.acidtests.org/ தளத்தில் சோதித்துப் பார்த்த பொழுது க்ரோம் நூற்றுக்கு 78 மதிப்பெண்கள் எடுத்து ஓபெராவிற்கு அடுத்த நிலையில் இருக்கிறது (ஓபெரா = 83/100, ஃபயர்பாக்ஸ் = 70/100, சஃபாரி = 75 / 100, IE6 = 11 / 100).
*பிற உலாவிகளில் இருப்பது போல இணைய தள முகவரி அடிப்பதற்கு ஒரு டப்பா (text box), தேடுவதற்கு ஒரு டப்பா என்றில்லாமல் க்ரோமில் ஒரே டப்பா தான். எனக்கு இது வசதியாகவே இருக்கிறது.
*புதிதாக ஒரு பக்கத்தை திறந்தால் நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை எல்லாம் காட்டுகிறது. அதில் இருந்து நீங்கள் விரும்பும் தளத்துக்கு செல்லலாம். இது வசதியா இல்லை தொல்லையா என்பது நீங்கள் எந்த மாதிரி தளங்களுக்கு அடிக்கடி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது! :) இது எறக்குறைய ஓபெராவில் இருக்கும் 'Speed Dial' போலத் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஓபெராவில் நீங்கள் விரும்பும் தளங்களை காட்டும் மாதிரி செய்யலாம். க்ரோமில் அது முடியாது.
*நான் ஒரு முறை என் நண்பருக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அமேசானில் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் என் நண்பருக்கு உலாவியைப் பயன்படுத்தும் போது நான் முன்னமே தேடிய பக்கங்களை பார்த்து விட்டதால் என் திட்டம் தெரிந்து எல்லாம் புஸ்ஸானது! க்ரோமில் இப்பிரச்சனையை தடுக்க வசதி உண்டு. நீங்கள் விரும்பினால் இதற்கான சிறப்பு பக்கத்தில் உலாவுங்கள். நீங்கள் பார்த்த எந்த விபரமும் கணினியில் பதிவாகாது, பிறரும் நீங்கள் எந்த எந்த பக்கங்களை பார்த்தீர்கள் என கண்டுபிடிக்க முடியாது. பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்களில் உலாவும் போது இது மிக வசதியாக இருக்கும். பலான தளங்களை பார்க்கவும் தான். (இதே வசதி சஃபாரியில் 'Private Browsing' என்று உள்ளது).
*விண்டோஸில் உள்ள 'Task Manager' பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். உங்கள் கணினியில் என்ன என்ன மென்பொருட்கள் ஓடுகின்றன, ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு மெமரி மற்றும் ப்ராசசர் பயன்படுத்துகிறது போன்ற தகவல்களைத் Task Managerஐப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதே போன்ற ஒரு Task Manager க்ரோமிலும் உண்டு. நீங்கள் பல தளங்களைப் திறந்து வைத்திருந்தால், எது உங்கள் கணினியை அதிகம் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். உங்கள் உலாவி வேகமாக இல்லை என்று தோன்றினால், எந்த தளத்தில் கோளாறு என்று தெரிந்து கொண்டு அதை மட்டும் மூடி விடலாம்.
*பக்கங்களில் தேடும் வசதியும் நன்றாக உள்ளது. இன்டெர்நெட் எக்ஸ்புளோரரில் உலாவும் போது நீங்கள் ஒரு வார்த்தையை அந்தப் பக்கத்தில் தேட வேண்டும் என்றால், அந்த வார்த்தையை முழுவதுமாக தட்டச்சு செய்து Enter அடித்தால் தான் தேடல் ஆரம்பிக்கும். க்ரோமில் நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அடிக்க அடிக்க பொருத்தமான வார்த்தைகள் வேறு வண்ணத்தில் தெரிய ஆரம்பித்து விடுகிறது (சஃபாரி போலவே).
*நீங்கள் மற்ற உலவிகளில் 'Tabbed Browsing' மூலம் பல தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒரே ஒரு தளம் தவறாக இயங்கினாலும் மொத்த உலாவியும் திணறும் அல்லது மொத்தமாக நொறுங்கி (க்ராஷ் ஆகி) விடும். க்ரோமில் அந்தப் பிரச்சனை இருக்காது என்று கூகிள் கூறியிருக்கிறது. பிரச்சனைக்குரிய தளம் மட்டுமே க்ராஷ் ஆகும் மற்ற தளங்கள் எல்லாம் உறுதியாக நிற்கும் என்பது கூகிளின் உறுதிமொழி. ஆனால் உலாவியை மொத்தமாக க்ராஷ் ஆகும் வழியை இப்பொழுதே கண்டுபிடித்து விட்டார்கள் (பார்க்க http://evilfingers.com/advisory/google_chrome_poc.php). பீட்டா வெர்ஷன் என்பதால் மன்னித்து பொறுத்தருள்வோம்.
*க்ரோம் பயன்படுத்துவதின் உங்கள் கணினியில் ஆபத்தான மென்பொருளை நிருவி அழிச்சாட்டியம் செய்யும் malware தளங்கள் மற்றும் உண்மையான தளம் போல நடித்து உங்களிடமிருந்து தகவல்களை திருடும் போலியான phishing தளங்களின் தொல்லை பெருமளவு குறையும் என நம்பலாம்.
உபயோகித்த வரையிலும் நான் கண்ட பிரச்சனைகள்
-சில தளங்களில் scrolling செய்தால் மூன்றாவது கியரில் வண்டி ஸ்டார்ட் செய்வது போல ஜெர்க் அடிக்கிறது.
-சில தளங்களில் இருந்து வார்த்தைகளை காப்பி செய்ய முடிவதில்லை (உதாரணம்: தினமலர்)
-குமுதம், விகடன், தினமலர் போன்ற தளங்கள் திணறுகின்றன. அதிகப்படியான flash plug-in இருப்பதினால் என்று நினைக்கிறேன்.
-ஒரு பக்கத்தை புக்மார்க் செய்வது எளிதாக இருந்தாலும், புக்மார்க் செய்த பக்கத்தை திறக்க தலையை சுத்தி மூக்கைத் தொடுவதை போல உள்ளது.
-இப்போதைக்கு க்ரோம் விண்டோஸில் மட்டுமே வேலை செய்யும். லினக்ஸ் மற்றும் மேக் மக்கள் பொறுத்திருக்க வேண்டியது தான்.
-க்ரோம் வந்ததில் இருந்து என்னுடைய ஃபயர்பாக்ஸுக்கு காய்ச்சல். ரொம்பவே தூங்கி வழிகிறது. க்ரோமை நிறுத்தினால் ஃபயர்பாக்ஸ் சுறுசுறுப்பாக எழுந்து விடுகிறது. இது குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா இல்லை க்ரோம் தான் ஃபயர்பாக்ஸுடன் மல்லுக்கட்டுகிறதா என்று தெரியவில்லை. உறுதியாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
முடிவாக,
பீட்டா வெர்சன் மட்டுமே என்றாலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. கூகிள் தளங்கள் க்ரோமில் நன்றாக இயங்கும் என்று எனக்குப் படுவதால், தற்போதைக்கு கூகிள் தளங்களை (ஜி-மெயில், ரீடர், மேப்ஸ், டாக்குமெண்ட்ஸ் போன்றவை) க்ரோமிலும், மற்றதை ஃபயர்பாக்ஸிலும் உலாவலாம் என்று இருக்கிறேன்.
க்ரோமின் ஆணை மூலம் ஓப்பன் சோர்ஸாக உள்ளதால், ஃபயர்பாக்ஸ் போல விரைவாக வளர்ச்சி அடையும் என நம்பலாம். மக்கள் extension எழுத ஆரம்பித்து விட்டால் நமக்கு கொண்டாட்டம் தான். விஜயகாந்த் வருகையால் பாதிப்படைந்தது தி.மு.கவா இல்லை அ.தி.மு.கவா என்று ஆராய்வது போல, க்ரோமினால் பாதிப்பு இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கா இல்லை ஃபயர்பாக்ஸுக்கா என்று சுவாரஸ்யமான பட்டிமன்றங்களும் ஆராய்ச்சிகளும் நடக்கும்.
க்ரோமின் பயன்பாட்டு விதிமுறைகள் (Terms of Service) பலரையும் திகிலடைய வைத்திருக்கிறது (http://yro.slashdot.org/article.pl?sid=08/09/03/0247205 , http://news.cnet.com/8301-17939_109-10030522-2.html). எனக்கென்னவோ இதை கூகிள் மாற்றி விடும் என்று தோன்றுகிறது.
Adblock என்பது ஃபயர்பாக்ஸ் அன்பர்கள் பலரும் விரும்பி உபயோகிக்கும் ஒரு Add-on ஆகும். இது தளங்களில் வரும் தேவையற்ற விளம்பரங்களை வடிகட்டி நமது பார்வைக்கே வராமல் செய்து விடும். விளம்பரங்களின் மூலம் பணம் அள்ளும் கூகிள், இப்படிப்பட்ட ஒரு விசயத்தை க்ரோமில் அனுமதிக்குமா? இதை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் கூகிள் அதை எப்படி எதிர் கொள்ளும் என்பது எல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகளே.
நீங்கள் அணிந்திருக்கும் அண்டர்வேரின் நிறம் என்னவென்று சொல்லக் கூடிய சக்தியினை இப்பொழுதே கொண்டுள்ள கூகிளாண்டவர், க்ரோமின் துணையுடன் அந்த அண்டர்வேரை நீங்கள் எங்கிருந்து திருடினீர்கள் என்றும் அதை துவைத்து எத்தனை நாள் ஆயிற்று என்றும் ஊருக்கெல்லாம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கும் அபாயமும் இருக்கிறது.
உலாவி என்பது இணையத்தில் படிக்கவும் பார்க்கவும் மட்டுமே என்று இருந்தது ஒரு காலம். இப்பொழுது உலாவியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் முக்கால்வாசி வேலையை இணையத்தில் வைத்தே முடித்து விடலாம். மீதி கால்வாசி வேலைக்குத் தான் நமக்கு கணினி, ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் ஆபீஸ், போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் எல்லாம் தேவை. அந்த கால்வாசி சுமையையும் இறக்கி 'சர்வம் இணைய மயம்' என்று செய்வதே கூகிளின் குறிக்கோள். அதில் கூகிள் க்ரோம் ஒரு முக்கிய படி.
ஒரு கேள்வி: Chrome என்பதை எப்படி தமிழில் எழுதுவது? சிலர் குரோம் என்று எழுதுகிறார்கள். சிலர் வம்பே வேண்டாம் என்று Chrome என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். எனக்கு என்னமோ உச்சரிப்பின் படி பார்த்தால் க்ரோம் என்பது தான் Chrome-இன் சரியான் தமிழாக்கமாக படுகிறது. இந்த மாதிரி விசயத்தில் எல்லாம் இலக்கணம் பார்க்கத் தான் வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Thursday, September 4, 2008
கூகிள் க்ரோம் பார்க்க வெகு எளிமையாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment