Saturday, September 6, 2008

ரஜினி பற்றிய ஒரு உண்மையான விமர்சனம்

அது ஒகேனக்கலா கட்டும், குசேலனா கட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி எது செய்தாலும் அது பரபரப்பாகி வருகிறது. பத்திரிகைகளுக்கு தீனியாகிவிடுகிறது. அரசியல், நாட்டு நிலவரம் பற்றி எப்போ வாவது விழாக்களில் ஒரு வரியில் அவர் தன் மனம் திறந்துவிட்டால் கூட அதற்கு வெவ்வேறு கோணங்களில் ஆராயப் படும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் அரசியல் தலைவர்களாலும், பல லட்சக்கணக்கான ரசிகர்களாலும் உற்று கவனிக்கப்படுகிறார். தமிழக அரசியலில் தீவிரமாக நுழைவதற்கு முன்பே இப்படிப்பட்ட ஓர் ஈர்ப்பு சக்தி எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ஏறத்தாழ அப்படியொரு காந்தசக்தியை இந்த மனிதர் பெற்றிருக்கிறார் என்பதுஅசாதாரணமான விஷயம். `பாட்சா', `அருணாசலம்', `முத்து', `படையப்பா', `சந்திரமுகி', `சிவாஜி' என்று ரஜினியின் அண்மைக்கால வெற்றிப்படங்கள் தமிழக திரையுலகில் எப்படியொரு புயலைக் கிளப்பியதோ அதே போன்று `பாபா', `குசேலன்' போன்ற சுமாராக ஓடிய ஒரு சில படங்களும் ஏற்படுத்தியுள்ளதுதான் ஆச்சர்யம்.

``நான் மொத்தம் எழுபத்தைந்து படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கேன் என்றால் ரஜினியை மட்டும் வைத்து இருபத்தைந்து படங்கள் செய்திருக்கேன். `புவனா ஒரு கேள்விக் குறி'யிலிருந்து `பாண்டியன்' வரை! ஏ.வி.எம். தயாரிப்பில் `முரட்டுக்காளை', `பாயும் புலி' போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தேன் என்றால்; பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் `ஆறிலிருந்து அறுபது வரை', `எங்கேயோ கேட்ட குரல்', `ப்ரியா' என்று பட்டியல் நிளூம். கே.பி. சாரின் புரொடெக்ஷனில் `நெற்றிக் கண்', `வேலைக்காரன்', `ராகவேந்திரா ' போன்ற படங்களைத் தந்திருக்கிறேன்.

எதற்கு இந்த லிஸ்ட்டைத் தருகிறேன் என்றால் இப்படிப்பட்ட பலவிதமான படங்களில் 90 சதவிகிதம் வெற்றிப் படங்கள்! மற்றவை நஷ்டமல்ல. லாபம் குறைச்சலாக கிடைத்தவை. ஆக என் படங்கள் எல்லாமே வெள்ளிவிழா, அல்லது நூறு நாள் கண்டவை. அதுதான் ரஜினியின் மகிமை'' என்று ஒரே மூச்சில் சூப்பர் ஸ்டாரின் ஆரம்ப கால வெற்றிப் பயணத்தை அசைபோட்டார் பழம் பெரும்இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர்ஹிட் படங்களால் ஏதோ தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மட்டும்தான் கொழித்தார்கள் என்று நீங்கள் அவசர கணக்குப் போட்டால் அதோடு ரஜினி என்கிற அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் வெற்றிவாகை முடிந்து விடவில்லை என்பது இவரது கருத்து.

``ரஜினி படம் பூஜை போட்டவுடனேயே ஏதோ மின்சார அதிர்வுகள் போல் கோடம்பாக்கமே சுறுசுறுப்பாகிவிடும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். போஸ்டர் ஒட்டுபவர், தியேட்டரில் சைக்கிள் காண்ட்ராக்ட் எடுப்பவர், பெட்டிக்கடையில் முறுக்கு, பாப்கார்ன் விற்பவர் என்று திரையுலகைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கமே குஷியாகிவிடும். அதனால்தான் ஒரு முறை ரஜினியிடம் சொன்னேன்.. `நீங்கள் ஒரு பொதுச் சொத்து. நீங்கள் படம் பண்ணுவது உங்களுக்காக மட்டுமல்ல. மிகப் பெரிய கூட்டத்திற்காக. எனவே அடிக்கடி படம் பண்ணுங்கள்' என்றேன். வழக்கம் போல் சிரித்தார்'' என்ற எஸ்.பி. முத்துராமன், தன் யூனிட்டுக்காக சூப்பர் ஸ்டார் செய்த பெரிய உதவியைச் சொல்லும் போது சற்று கண்கலங்கினார்.

``என் யூனிட்டில் ஒரு பதினைந்து பேர் பலகாலமாக என்னோடு இருப்பவர்கள். அவர்கள் எதிர்காலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்ற உள்ளுணர்வு எனக்குள் ரொம்ப காலமாக தொந்தரவு செய்ய, ரஜினியிடமே இதைச் சொல்லிவிட்டேன். சொன்னால் உங்களால் நம்ப முடியாது. அடுத்த நாளே `பாண்டியன்' படத்திற்கு ஒப்புக்கொண்டார். டைரக்டர் முதல் கடைசி டெக்னீஷியன் வரை 15 பேரும் லாபத்தை சமமாக எடுத்துக் கொண்டோம். அதுதான் ரஜினியின் மனிதநேயம்! நான் ஏழெட்டு வருடமாக படம் பண்ணலை என்றாலும் உணவு, உடை என்று அடிப்படை வசதிகளுக்கு நாங்கள் யாரும் கஷ்டப்படவில்லை! ஆக, சூப்பர் ஸ்டார் என்கிற சுரங்கத்தில் மனித நேயம், அன்பு, பாசம், ஆன்மிகம் போன்ற பல அற்புதங்கள் இருக்கு. அதனால்தான் உலகம் அவரைப் போற்று கிறது..'' முத்துராமன் பட படப்போடு பேசினார்.

``அவரைப்பற்றி நான் பேசக்கூடாதுங்க. மற்றவர்கள் அவரைப்பற்றி பேசும்போது நான் ரசிக்கணும்'' என்று தயங்கினார் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவரான சத்ய நாராயணா. 1981-ம் வருடத்திலிருந்து மன்றத்தின் பொறுப்புகளை கவனித்துக் கொள்பவர்.

``எனக்கு 58 வயசாயிடுச்சு. நான் தலைவரிடம் சேர்ந்த போது எனக்கு என்ன வயசு தெரியுமா? 29. ஆக, சரியா என்னோட சரிபாதி வாழ்க்கையை அவரோடு கழித்தவன். நான் முதன் முதல்ல அவரை எப்படிப் பார்த்தேனோ அதே மாதிரிதான் இன்றைக்கும் பார்க்கிறேன். அதே பாசம், கருணை, மனிதநேயம்! வெற்றிகள், சோதனைகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மிகப்பெரிய மனப்பக்குவம் அவருக்குண்டு. அசாத்திய தன்னம்பிக்கையும், தெய்வ பலமும் உள்ளவர்களால் மட்டுமே அது சாத்தியம்..'' என்று முடித்துக் கொண்டார் சத்யநாராயணா.

ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்த ரஜினிக்கு இன்று குசேலன் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை என்றதும் பல பக்கங்களிலிருந்து சர்ச்சைகள், கேள்விக் கணைகள். இத்தனைக்கும் `குசேலனில் என்னுடைய பங்கு 25 சதவிகிதம்தான்' என்று அவர் ஆரம்பத்திலிருந்தே கூறியவர்.

``இதில் அவர் ஹீரோவும் இல்லை. கௌரவ வேடம்தான். குசேலன் அவரது சொந்தப் படமும் இல்லை. ஆனால் அவர் தலையில் எல்லா பொறுப்பும் விழுவது ஏன் என்று தெரியவில்லை'' என்கிறார் சூப்பர் ஸ்டாரின் நீண்ட கால நண்பரும், துக்ளக் ஆசிரியருமான சோ. ஏறத்தாழ இதே போன்றதொரு மனநிலையில் பேசுகிறார் டைரக்டர் கே. பாலசந்தர்.

``குசேலன் பற்றி ஊடகங்களில் வெளிவந்த எண்ணற்ற தகவல்கள் எதிலும் உண்மையில்லை. அனைத்தும் தவறானவை. ஒன்றை மட்டும் இப்போது குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன். எனது கவிதாலயா நிறுவனத்திற்கு உதவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தானே முன்வந்த புண்ணியவான் ரஜினி பற்றி பலவாறான விமர்சனங்களும், வாக்குவாதங்களும் வெளிவர மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவனான நானே காரணமாயிட்டேன் என்பதற்காக கூனிக் குறுகி நிற்கிறேன்.'' - சற்று உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார் கே.பி.

தமிழ்த் திரையுலகத்தில் இதமான அதிர்வுகளை ஏற்படுத்தி இருபத்தைந்து ஆண்டுகாலமாக பல குடும்பங்களை வாழவைத்த ரஜினியைப் பற்றிய சமீபகால விமர்சனங்கள் இயக்குநர் சிகரத்தை காயப்படுத்தியுள்ளது புரிந்தது.

``அடுத்த படத்தில் பெரிய ஹிட் கொடுத்த பிறகு இதே தமிழ்த் திரையுலகம் நாளைக்கு அவரைத் தூக்கி வைத்து கொடிபிடித்துக் கொண்டாடும். பெரிய பரபரப்போடு பேசப்படுவார். அப்போதும் ஒன்றுமே அறியாதவர் போல புன்னகைப்பார் அவர். அடிக்கடி இமயமலைக்குப் போய் ரிஷிகளைப் பார்த்துப் பேசுவதாலும், தியானம் இருப்பதாலும் அவருக்கு ஒருவித சாத்வீக மனசு வந்து விட்டது. நீங்கள் அவரை எவ்வளவு தூண்டி விட்டாலும் `இந்த சினிமாவுக்கு இவ்வளவு செஞ்சவன்' என்ற வார்த்தை அவரிடம் எப்போதும் வராது. அதனால்தான் வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் துவண்டுவிடாமல் அவரால் பார்க்க முடிகிறது.'' _ என்று ரஜினியின் மனநிலையை சற்று தத்துவார்த்தமாக அலசினார் ரஜினி மற்றும் அவரது அண்ணன் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான பாபு ராஜேந்திரன்!

உண்மைதான். திரையுலகில் பல சாதனைகளைக் கண்ட ரஜினியை தமிழகம் அறியும். அதே சமயம், அவருக்குள் இருக்கும் இன்னொரு அற்புதமான முகத்தை அவ்வளவு சுலபமாக அறிய முடியுமா?.

ரஜினி வாய்ஸ் குறைந்துவிட்டதா?

இந்தக் கேள்வியை சென்னையில் பல பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களிடம் கேட்டபோது, பெரும்பான்மையினர் சட்டென்று சிரித்தார்கள். ``எப்படி சார்..? எத்தனை பேர் புதுசா வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்!'' என்று ஏதோ சொல்லி வைத்தாற்போல் கூறினார்கள். இதோ எங்கள் மெகா சர்வே ரிஸல்ட்! ரஜினியின் மவுசு என்றுமே குறையாது என்றவர்கள் 86 சதவிகிதம். இவர்கள் பெரும்பாலும் இளசுகள். குசேலனால் சற்று பாதித்துள்ளது என்றவர்கள் பத்து சதவிகிதம்! நான்கு சதவிகிதம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

No comments: