Thursday, March 11, 2010

சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும்

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடமே அனுமதி பெறவேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.
சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப் பகுதிகளிலும் தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறைப்பகுதிகளிலும் வளரக்கூடியது.
சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்டமுடியும்.
விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, சவுக்கு, முருங்கை, முந்திரி, குமிழ் மலைவேம்பு, மகோகனி மற்றும் பல வகையான வன மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம். விதைகளை நேரடியாக குழிகளில் ஊன்றி குறைந்த செலவில் வளர்க்கலாம். கன்றுகளும் நடவு செய்யலாம்.
ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம்.
எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் வளர்ப்போம். இயற்கை வளம் பெருக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமி ஃயாக்குவோம். கலாமின் கனவை நனவாக்குவோம். சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக் மற்றும் அனைத்து வகை வன மர விதைகள், கன்றுகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.
ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை, காமநாயக்கன்பாளையம்,
பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |

No comments: