ஷாஹி துக்கடா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 3 கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, திராட்சை - 10.
செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரவுன் பகுதிகளை 'கட்’ செய்து விட்டு, நான்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை நெய்யில் 'மொறுமொறு’வென பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு பால் கலவையில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பால் - பிரெட் கலவை மீது தூவி பரிமாறவும்.
- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்
காளான் வடை
தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பையும் வேர்க்கடலையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பாதி அரைக்கும்போது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பிறகு, காளானை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசவும். வெறும் கடாயில் காளானைப் போட்டு வதக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் வற்றி காளான் சுருண்டு வந்ததும் இறக்கி, அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... சுவையான காளான் வடை ரெடி!
- எஸ்.கோகிலாம்பாள், திருச்சி
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...ஷாஹி துக்கடா: பாலின் அளவைக் குறைத்து, பால் பவுடர் அல்லது 'மில்க் மெய்ட்' சேர்த்தால் சுவை கூடும்.
காளான் வடை: வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்காமல், மிக்ஸியில் கொரகொரவெனப் பொடித்துப் போட்டால் வடை 'க்ரிஸ்பி’யாக இருக்கும்.
Sunday, November 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment