Sunday, November 27, 2011

கம்யூனிசமே இப்படித்தானா?

ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம்.


நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?


சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.


"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள்.


இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான்.

No comments: