Tuesday, December 6, 2011

சூப்பர் சமையல்.................. அறுசுவை விருந்து!

நாம் உண்ணும் உணவு, சுவையாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இனிப்பு, புளிப்பு, உப்பு - சுவைகள் உடலை வளர்க்கும். கசப்பு, துவர்ப்பு, காரம் முதலிய சுவைகள் உடலை வற்றச் செய்யும் இயல்புடையன. அறுசுவைகளும் உணவில் அமையுமாறு சாப்பிட்டால், உணவு ஆரோக்கியமானதாக ஆவதோடு,ஒரு மனநிறைவையும் அளிக்கிறது.

முருங்கைப்பூ கட்லெட்

தேவையான பொருள்கள்:

முருங்கைப்பூ - 200 கிராம் (நறுக்கியது), கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 100 கிராம், அரிசி - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- 6, கொத்துமல்லி விதை, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 1 தேக்கரண்டி, புளி - ஒரு சிறிய கோலி அளவு, வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி, ரவை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிது சிறிதாக நீர் தெளித்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுத்தம் பருப்பு, புளி, மற்றும் கொத்துமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் மற்றும் வெல்லத்தைக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, முருங்கைப் பூ, மற்றும் மசாலா கலவையை இட்டு உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, எலுமிச்சம் பழம் அளவு உருண்டையாகச் செய்து ரவையில் பிரட்டி தட்டையாக்கி, ஒரு குழிவான தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும்.

சென்னா சாலட்

தேவையான பொருள்கள்:

வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 200 கிராம், கேரட் - பெரியது 1, கோஸ் - 100 கிராம், குடை மிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 1 பொடியாக நறுக்கவும், மிளகுத் தூள், சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லித் தழை - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ருசிக்கு, சாட் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொண்டைக் கடலை மற்றும் காய்கறிக் கலவை, உப்பு, சீரகத்தூள், மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், கொத்துமல்லித் தழை என எல்லாவற்றையும் போட்டு, அதிக அழுத்தம் கொடுக்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். சுவையான சத்து நிறைந்த சாலட் தயார்.

கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு கொத்துக் கடலை. இதைச் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகத்தான் ஏறும். குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.

கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்: கொள்ளு - 100 கிராம், தக்காளிப் பழம் -1 (அரைத்துக் கொள்ளவும்), பூண்டு - 5 பல் (பொடிதாக அரிந்து கொள்ளவும்), மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி, சீரகம் -1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை: கொள்ளினை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கொள்ளுடன், தக்காளிக் கூழ், மற்றும் நான்கு தம்ளர் நீர் கலந்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த நீரை மிளகுத் தூள், உப்பு கலந்து சிறு தீயில் நுரை வரும் வரை கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, சீரகம், மற்றும் அரிந்து வைத்துள்ள பூண்டையும் பொரித்து அத்துடன் கலந்து கொள்ளவும்.

கொள்ளு, உடல் எடையைக் குறைப்பதுடன், வாதம் காரணமாக உடலில் உண்டாகக்கூடிய உடல் வலிகளை நீக்கவல்லது. சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் கொள்ளுக்கு உண்டு.

வெண்பூசணி சாதம்

பூசணிக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. உடல்சூடு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப்புண், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், குறிப்பாகப் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு பூசணி மிக முக்கியமான மருந்து.

தேவையான பொருள்கள்:

பெரிய பூசணி பத்தை -2,பச்சரிசி - 2 கப், தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பூசணியைத் துருவி, மிக்ஸியிலிட்டு, சாறு பிழிந்து கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் சாறு என்ற கணக்கில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்து, துருவிய தேங்காய், மற்றும் கறிவேப்பிலையை இட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சாதம் சற்று சூடு ஆறியதும், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்க் கலவையில் கலந்து கொள்ளவும். சுவையான சத்தான பூசணி சாதம் தயார்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய் - 6,
தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 1,
கடுகு - 1/2 தேக்கரண்டி தாளிக்க,
தயிர் - 100 மிலி.,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

நெல்லிக்காயை வேகவைத்து கொட்டை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்த நெல்லிக்காய், தேங்காய் அரைத்தது, தயிர், மற்றும் உப்பு கலந்து கடுகைத் தாளித்து, கலந்து கொள்ளவும்.

கசகசா - நட்ஸ் பாயசம்

தேவையான பொருள்கள்:

கசகசா - 2 தேக்கரண்டி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, சாரைப் பருப்பு - 2 தேக்கரண்டி, அரிசி - 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 1 கப், சர்க்கரை/வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - அரை லிட்டர், உலர் திராட்சை- 10 கிராம், நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

கசகசா, பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள கசகசா, மற்றும் தேங்காய்க் கலவை இட்டு, சிறிது நீர் கலந்து நன்கு கிளறவும். வெந்து வரும் சமயம் சர்க்கரை, அல்லது வெல்லத்தைக் கலக்கவும். கலவை நன்கு வெந்து கொதிக்கும் சமயம், அடுப்பை சிறு தீயில் வைத்து, காயவைத்த பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து பாயசத்தில் கலந்து கொள்ளவும்.

கசகசா உடலுக்குக் குளிர்ச்சி தரும். தேங்காய், கசகசா பாயசம் சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறும்.

நார்த்தங்காய் ஸ்வீட் அண்டு சார் பச்சடி

தேவையான பொருள்கள்:

நார்த்தங்காய் -/நாரத்தை வற்றல் -100 கிராம்,
புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு,
வற்றல் மிளகாய் - 6,
கடுகு -1 தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

நார்த்தங்காயைப் பொடியாக அரிந்து கொள்ளவும். நார்த்தங்காய் கிடைக்காத காலங்களில் நாரத்தை வற்றலை சிறு துண்டுகளாக்கி ஐந்து நிமிடம் சுடுநீரில் இட்டுப் பயன்படுத்தலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து நாரத்தங்காய் துண்டுகளை நன்றாக பிரட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து ஊற்றி அதில் நாரத்தங்காயை வேகவிடவும். நன்கு வெந்தவுடன், உப்பு, மற்றும் வெல்லத்தைக் கலந்து சிறு தீயில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். வற்றலைப் பயன்படுத்தும் பொழுது உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.

சுவையான புளிப்பு, இனிப்பு நாரத்தங்காய் பச்சடி பூசணி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments: