Wednesday, December 21, 2011

அடுத்த முதல்வர் பதவிக்கு ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேறுவதற்கு காரணம்

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.

குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முதல்வர் யார்?
தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்:
வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருந்த நிலையில், சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதால், 30ம் தேதி நடைபெறும் செயற்குழுவில், கட்சியில் பெரும் மாற்றமும், இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் வரும் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவும், அவரது குடும்பத்தினர் 13 பேரின் உறவுகள் பிரிந்து, கட்சியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


அனைத்திலும் ஆதிக்கம் : இதுகுறித்து, கட்சி வட்டாரத்திலும், அரசு வட்டாரத்திலும் கிடைத்த தகவல்கள் வருமாறு:
ஆட்சி வந்தது முதல், அமைச்சரவையிலும், அதிகார வட்டத்திலும், சசிகலாவின் ஆதரவு ஆட்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், உயரதிகாரிகளின் டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட் பணிகள் உள்ளிட்டவை, சசிகலா ஆட்களின் உத்தரவில் தான் நடந்துள்ளன.

குறிப்பாக, தொழிற்துறையில் இது தொடர்பாக, பல திரைமறைவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சிவில் சப்ளைஸ் துறையில் உணவுப் பொருட்கள் வாங்குதல், மின்சாரத் துறையில் தனியாரிடம் மின் கொள்முதல், மின் வாரியம், டான்சி, தொழிற்துறை உள்ளிட்டவற்றில் புதிய கான்ட்ராக்ட் பணிகள், பழைய இரும்பு (ஸ்க்ரேப்) விற்பனை போன்றவற்றில், பெரும் தலையீடுகள் இருந்துள்ளன. இலவச திட்டங்களுக்கான கொள்முதல்களிலும், பல பேரங்கள் நடந்துள்ளன.

இதேபோல், தி.மு.க.,விலுள்ள பல வி.ஐ.பி.,க்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சசிகலாவின் பெயரைச் சொல்லி, பேச்சு நடந்திருக்கிறது. உயர்கல்வி, சுகாதாரம், இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, சமூக நலம், வேளாண்துறை உள்ளிட்டவற்றில், பல்வேறு டிரான்ஸ்பர் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில், பெரும் குளறுபடி ஏற்படுத்தியதாக, சசிகலா குடும்பத்தினர் மீது புகார்கள் எழுந்தன.

மிடாஸ் விவகாரம் :
இதேபோல், சசிகலாவுக்குச் சொந்தமான, "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு மட்டும், மதுவகைகள் தயாரிப்புக்கான, "ஸ்பிரிட்' தருவதில், பல தில்லுமுல்லுகள் நடந்ததாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட, தனியார் மது தொழிலதிபர்களும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிகிறது. தனியார் சர்க்கரை ஆலைகளில் சிலவற்றில், இதற்கான பணம் கொடுப்பதிலும் பேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

மின்துறையில் கான்ட்ராக்ட் பணி பார்க்கும் ஒரு நிறுவனம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீராசாமிக்கும், துரைமுருகனுக்கும் வேண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்பாக எழுந்த ஒரு பிரச்னையில், விதியை மீறி அவர்களுக்குச் சாதகமான முடிவு எடுக்க, சசிகலா ஆதரவாளர்கள் சிலர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, பல்வேறு புகார்கள் கார்டனுக்கு தொடர்ந்து வந்துள்ளன. ஆனால், சில அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருந்த சிலரும் அவற்றை முதல்வரின் கவனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து விட்டனராம்.

பத்திரிகை ஆசிரியர் :

இதேபோல், பெரும்பான்மையான புதிய அமைச்சர்கள் நியமனத்திலும், சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன் மற்றும் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் பின்னணிகள் இருந்துள்ளன.
இந்த பிரச்னைகள் குறித்து, அதிருப்தி அடைந்த பலர், தங்களது எண்ணக் குமுறல்களை, முதல்வருக்கு வேண்டப்பட்ட அரசியல் ஆலோசகரான, "மூத்த பத்திரிகை ஆசிரியருக்கு' ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை, முதல்வரை சந்தித்து, பிரச்னையின் தீவிரம் குறித்து பேசியுள்ளார். இறுதி முடிவெடுப்பது குறித்து, நேற்று முன்தினம் காலையிலும் வந்து, பேசிய பின்னர் தான், சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வெளியேற்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலாகாகளில் மாற்றம் :
சசிகலா குடும்பத்தினரின் வெளியேற்றம், தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி, பச்சைமால், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் விஜய், வைத்தியலிங்கம், கோகுல இந்திரா, பழனியப்பன், வளர்மதி, ஆனந்தன், ஜெயபால், செந்தூர்பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வராஜ் உட்பட ஏராளமான அமைச்சர்களின், இலாகாகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், வரும் 30ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க., செயற்குழுவில், கட்சியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி: தினமலர்

No comments: