Friday, October 4, 2013

சுண்டல், ஸ்வீட், காரம்... மிச்சமாகிப் போனால்... வித்தியாசமான டிஷ்!.......... நன்றி : அவள் விகடன்.

நவராத்திரி சமயத்தில்... நாம் செய்தது, அக்கம்பக்கத்தில் கொடுத்தது என்று பலவிதமான சுண்டல்கள் மிகுந்துவிடும். அவற்றை வைத்து என்ன செய்யலாம்?
இனிப்பு இல்லாத சுண்டல் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பொட்டுக்கடலை மாவு அல்லது ரஸ்க்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு பிசையவும். இந்தக் கலவையை சிறு வடைகள் வடிவத்தில் தட்டி, நான்ஸ்டிக் தவாவில் பரவலாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுக்கவும். வித்தியாசமான, சுவையான, சுண்டல் கட்லெட் ரெடி!
தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் வீட்டில் செய்யும்... உறவினர், நண்பர்கள் வாங்கி வரும் ஸ்வீட், கார வகைகள் தேவைக்கு அதிகமாகி விடும்போது அவற்றை வேறு வகையில் பயன்படுத்த முடியுமா?
காராசேவு, மிக்ஸர், நாடா பக்கோடா, தேன் குழல் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்த கலவையை குணுக்கு போல் கிள்ளி போட்டு பொரிக்கவும். வழக்கமாக செய்யும் குணுக்கைவிட இது மேலும் பிரமாதமான ருசியுடன் இருக்கும்.
ஸ்வீட் வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 100 கிராம் கடலைப்பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கிளறி, பொடித்த ஸ்வீட் சேர்த்துக் கலந்து பூரணம் தயாரிக்கலாம். மைதா மாவை தேவையான நீர் விட்டு பிசைந்து, ஸ்வீட் பூரணம் வைத்து மூடி, போளி தயாரிக்கலாம். இந்த மல்டி ஸ்வீட் போளி ஆளை அசத்தும்.
இஞ்சி அதிகமாக கிடைக்கும் சீஸனில், அதை வாங்கி பக்குவப் படுத்தி வைப்பது எப்படி?
இஞ்சியை இளசாக (நார் இல்லாதது) வாங்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, சிறிதளவு சர்க்கரை, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால்... சமையலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இஞ்சி சாறை கெட்டியாக காய்ச்ச வேண்டியது அவசியம்.
சுகரை கன்ட்ரோலில் வைக்கவும், உடலுக்கு வைட்டமின் சத்து கிடைக்கவும் எளிய உணவு முறை... ப்ளீஸ்!
வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் மோரில் இந்தப் பொடியை கொஞ்சம் சேர்த்து பருகி வந்தால்... சுகர் கட்டுப்படும்.
நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியை சேர்த்துக் கலந்து அருந்தினால், வைட்டமின் 'சி’ சத்து கிடைக்கும். இது, வயிற்றுக் கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். நெல்லிப் பொடியை தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், கூந்தல் நன்கு வளரும்.
டீ தயாரிக்கும்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினாலும் பொடி தங்குகிறதே... என்ன செய்வது?
தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய்... இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். இதை சூடான பாலில் கலந்தால்... அருமையான  ஏலக்காய் டீ ரெடி. டீத்தூளும் தங்காது.
பாட்டிலில் போட்டு வைத்த ஊறுகாய்கள் எல்லாம் பழையதாகி கொஞ்சம் கொஞ்சம் தங்கிவிட்டது... இதை என்ன செய்வது?
சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாய் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, வாணலியில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
வீட்டுக்கு வரும் உறவினர், விருந்தாளிகளுக்கு வாசனையான மோர் கொடுக்க... ஒரு ஐடியா தருவீர்களா...?
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். ஒரு டம்ளர் மோரில் 2 ஐஸ் க்யூப், சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கினால்... அருமையான, கமகம மோர் தயார்
முருங்கை மரம் பூத்து குலுங்குகிறது அவ்வளவு பூவும் காயாகாது. முருங்கைப்பூவை சமையலில் பயன்படுத்தலாமா?
முருங்கைப் பூவை நெய்யில் வதக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சட்னியாக அரைக்கலாம்.
பொரித்த அப்பளம் நமுத்துவிட்டால், என்ன செய்யலாம்?
அதை வைத்து பச்சடி தயாரிக்கலாம். அப்பளத்தை மிக்ஸியில் கிள்ளிப் போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கப் தயிருடன் சேர்த்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்தால்... சுவையான அப்பளப் பச்சடி ரெடி. இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.

நன்றி: அவள் விகடன்

No comments: