சிறுவயதுகளில் கோயில்களில் சமஸ்கிருதத்தைக் கேட்க நேர்ந்தபோது அது ஒரு மொழி என்ற எண்ணக்கரு என்னிடத்தில் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது கடவுளரோடு பேசும் சங்கேத பாசை என்றும் நினைத்திருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஆரியம் திராவிடம் குறித்த அறிதல்களும் புரிதல்களும் ஏற்பட்டு இருக்கவில்லை. ஆனால் அப்போதிருந்த ஒரு கேள்வியினைச் சொல்ல முடியும். (அது இப்போதும் உண்டு ) பூஜைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற இந்த சங்கேத பாசைக்கான தமிழ் மொழி பெயர்ப்பினைப் புரிந்துகொண்டுதான் இவர்கள் பாடுகிறார்களா? அல்லது ஆங்கில கவிதைகளை மனனம் செய்து பொருள் தெரியாது ஒப்பிக்கும் என்னைப் போலவே ஒப்பிக்கிறார்களா என்பதுதான் அது. பின்னாளில் ஒருநாள் கோயில்களில் தன் தந்தைக்கு உதவியாற்றும் ஒருவனைப் பிடித்து நீ பாடுறதெல்லாத்துக்கும் உனக்கு பொருள் தெரியுமோடா எனக் கேட்டதற்கு தெரியாதென்றும் புத்தகங்களில் அவை தமிழில் எழுதப்பட்டுள்ளன எனவும் தான் மனனம் செய்து வைத்துள்ளதாகவும் சொன்னான். அட இதுவும் மை நேம் இஸ் சயந்தன் கேஸ்தான் என நினைத்தவாறே உன்ர அப்பாக்கு தெரியுமோட என்றேன். தெரியாது என்று சொல்லி விட்டு ஓடினான். அந்த தெரியாது என்பதற்கு இரு பொருள் உண்டு.
திராவிடம் என்பதில் கூட அப்போது தெளிவான கருத்தினை நான் பெற்றிருக்கவில்லை. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை என்பது உடமையடா என்ற பாடல்களிலிருந்து அது தமிழ் தமிழன் என்பவற்றைச் சுற்றிய ஒரு கருத்தியல் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாளில் வாசிப்பு பரப்பில் அது ஆரியத்திற்கெதிராக முன்னிறுத்தப்பட்ட தென்னிந்திய இனக்குழுக்களை இணைத்த ஒரு பிரிவென சில தெளிவுகள் ஏற்பட்டன.
சமஸ்கிருதம் வடமொழியாக ஆரியர்களுடைய மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகளின் நேரெதிர் மொழியாகவும் அது பார்க்கப்படுகிறது. ஆக இரண்டுமே தனித்தனியான பிற மொழிகளாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுவது சாதாரணமானதுதான். ஆக சமஸ்கிருதம் ஆரியர்களினால் கொண்டு வரப்பட்டதா ?
இவைகுறித்து அண்மையில் எரிமலை இதழிலிருந்து படித்த இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழே என்ற கட்டுரையின் கருத்தினடியில் தொடர்ந்து எழுதுகிறேன்.
தமக்கென கல்வியும் கலையும் மொழியும் எழுத்தும் இலக்கியமும் இல்லாத நிலையிலேயே ஆரியர்கள் ஆசியாவின் மேற்கிலிருந்து (நாவலர் தீவு ) இந்தியாவிற்குள் நுழைந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆதலால் சமஸ்கிருதம் அவர்களின் வருகையின் பிற்பட்டே தோன்றிய மொழி எனக்கொள்ளலாம்.
இதற்கிடையில் தமிம் எப்படி பிறமொழிகளாய்த் திரிபடைகிறது என்பதனைப் பார்க்கலாம். அதற்கு முன் உலகின் முதல் மொழி தமிழ் என்பது குறித்த ஆராய்வுகளை நோக்கலாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலே என்பது அதன் நேரடி அர்த்தத்தில் அதீத மிகைப்படுத்தலாகத் தோன்றினாலும் கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தில் என்பது கல்வியும் மன்னரும் தோன்றாக் காலத்தில் எனப் பொருள்பட்டு சரியாகத்தான் சொல்லப்படுகிறது.
ஜேம்ஸ் சர்ச் வார்ட் என்ற அறிஞர் கடல்கொண்ட லெமுரியா கண்டம் குறித்து எழுதுகையில் 60 000 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று கடலில் மூழ்கியது என்றும் அதன்போது ஆறு கோடி மக்கள் உயிரிழந்தனர் எனவும் குறிப்பிடுகிறார். தவிர உலகின் முதல் மனிதர் இனத்தின் பிறப்பிடம் லெமுரியாதான் எனவும் கூறுகின்றார்.
லெமூரியா கடல்கொண்டமையானது மூன்று கட்டங்களாக நடந்துள்ளது. ஆரம்பத்தில் தென் அமெரிக்கா ஆபிரிக்கா அவுஸ்ரேலியா போன்ற நிலப்பரப்புக்கள் பிரிந்து சென்ற போது மக்கள் கூட்டத்தினரிடையேயும் பிரிவுகள் ஏற்பட்டன. (செவ்விந்தியர்கள் அம்மா என்ற சொல்லை அன்னை என்றே அழைக்கின்றனர். புலம் என்ற கண்ணினைக் குறிக்கும் பழந்தமிழ் சொல் இப்போது கண்ணினை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. சீன மொழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் உண்டு.. மா என்பது சீன மொழியிலும் குதிரையை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்.
இறுதிக்கட்ட கடல் கோளின் போதே இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது. பறுணியாறு குமரியாறு போன்ற வடிநிலங்களில் இருந்தோர் பாண்டி நாட்டுக்குள் புகுந்தனர். குமரியில் இருந்து தமிழ் வடக்கே செல்ல அது திராவிடமானது. மேலும் செல்லச் செல்ல பிராகிருதமாகி அதுவே ஆரியரிடத்தில் கலந்து சமஸ்கிருதமானது என மொழியியல் அறிஞர் பாவாணார் குறிப்பிடுகிறார்.
அடிப்படையானதும் முதன்மையானதுமான தமிழ் சொற்களெல்லாம் வட சொல் திரிபாக காட்டப்பட்டன. ஆயிரக்கணக்கான வேண்டா அயற்சொற்கள் நிலைபெற்று இந்தி உருவானது. இவ்வாறு தமிழை அடிப்படையாக கொண்ட கலவைமொழி அன்றாடம் பேசக் கூடிய மொழியாக இருக்கவில்லை. அது பேச்சு வழக்கில் புகக்கூடிய வடிவைக் கொண்டிருக்காத காரணத்திலாயே விரைவில் அழிந்து போனது.
ஆயினும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடமொழியாளர் செல்வாக்குற்றிருந்ததனால் சமஸ்கிருதத்தை ஒரு வேத மொழியாகக் காட்ட முற்பட்டனர். பிற நாட்டு மொழியியலாளர்கள் இந்திய மொழிகளைக் குறித்த ஆய்வகளைச் செய்ய முற்பட்ட போது அவாகளுக்கு சமஸ்கிருதம் பரிந்துரைக்கப்பட்டு அது இந்திய மொழிகளின் தாயாக காட்ட முயற்சிக்கப்பட்டது.
சமஸ்கிருதத்தில் ஐந்தில் இரண்டு பங்கு தமிழ்ச் சொற்கள் உள்ளன என்கிறார் பாவாணர். ஆர்வாட் பல்கலைக் கழகத்தில் உலக முதன் மொழியை கண்டுபிடிக்க கையாள வேண்டிய நெறிமுறை பற்றி ஆய்வறிக்கை அளித்துள்ள முனைவர் மதிவாணன் வட இந்திய மொழிகளுக்கு தமிழே மூலமென நிறுவியுள்ளார்.
இது போலவே இது நாள் வரை சிங்களவர் ஆரிய வழித்தோன்றல்கள் என்ற எண்ணக்கருத்தை முறியடித்த கட்டுரையொன்றையும் வாசித்தேன். சிங்களவர் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கவில்லையெனவும் மரபணு ரீதியில் அவர்கள் தென்னிந்திய மக்கட் கூட்டத்தினருடனே பெருமளவில் ஒத்திருப்பதாகவும் கட்டுரை சொல்லியது. சிங்கள எழுத்துவடிவம் ஆரம்பத்தில் தமிழைப் பெருமளவு ஒத்திருந்தது குறித்தும் அக்கட்டுரை ஆராய்கிறது.
Tags: சமஸ்கிருதம், சிங்களம், தமிழ், மொழி
இவ்விடுகையோடு தொடர்புடைய வேறும் சில
* வேர்ட்பிரஸ் - தமிழில் பின்னூட்டத்தினை உள்ளிடுதல் (8)
* மெல்பேண் இன்னிசைக் குசு (5)
* தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள் (15)
Saturday, October 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment