இன்று வெளி வந்த 12.10.2008 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் சன் டிவிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் நடந்த “காதலில் விழுந்தேன்” பட விளம்பரம் பற்றிய பிரச்சினையை பற்றி எழுதியிருக்கிறார்கள். முதலில் அதை பார்ப்போம்:
“ சன் டி.வி.யால் அலறும் கோடம்பாக்கம்' என்ற தலைப்பில் நாம் கடந்த 09.10.08 குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியிட்டிருந்த கவர் ஸ்டோரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. `காதலில் விழுந்தேன்' என்ற சின்ன பட்ஜெட் படத்தை விலைக்கு வாங்கிய சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்தப் பட விளம்பரத்தை சன் டி.வி.யில் திரும்பத் திரும்பப் போட்டு அதை பிரமாண்ட படம் என்பது போல சித்திரித்து விட்டது பற்றி திரைப்படத் தயாரிப்பாளர்கள் புலம்பிய புலம்பலை அதில் பதிவு செய்திருந்தோம்.
``பூனைக்கு மணி கட்டப்போவது யார்?'' என்ற எதிர்பார்ப்பில் இருந்த கோலிவுட் வட்டாரம், குமுதம் ரிப்போர்ட்டரில் அந்தச் செய்தியைப் படித்ததும் சுறுசுறுப்பானது. உச்சகட்டமாக அந்தச் செய்தியைப் படித்த முதல்வர் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து `டோஸ்' விட்டாராம். ``தயாரிப்பாளர் சங்கம் நடுநிலையோடு நியாயமாக நடக்கும் என்று பார்த்தால் நீங்கள் சன் டி.வி.க்கு சாதகமாக, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி `காதலில் விழுந்தேன்' படத்துக்கு நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் `போட்டு அவர்கள் தாக்கி'க் கொண்டிருக்கிறார்களே'' என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தாராம் கலைஞர்.
நமது செய்தியில், ``சன் டி.வி.யின் அத்துமீறல் பற்றி இதுவரை யாரும் தங்களிடம் புகாராகத் தரவில்லை'' என்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணனின் விளக்கத்தையும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், `புகார் தர ஆளில்லையா? ஏன் நான் இருக்கிறேன்' என்று நடிகர் - தயாரிப்பாளர் ஜே.கே. ரித்தீஸ், சன் டி.வி.யின் அத்துமீறலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனது லெட்டர் பேடிலேயே புகார் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம், சன் டி.வி. விளம்பர விவகாரம் குறித்து விவாதிக்க கடந்த 6-ம்தேதி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டியது. அதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அழையா விருந்தாளியாக சன் குழுமத்தின் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவும் அந்தக் கூட்டத்துக்கு வந்துவிட, தயாரிப்பாளர் சங்கத்தில் சிறிய சலசலப்பு. அப்போது ``சன் டி.வி. பற்றிய விவாதத்தில் சன் குழுமம் தரப்பில் நான் கலந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லையே? இந்தக் கூட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளும்படி அனுப்பி வைத்ததே கலாநிதிமாறன்தான்'' என்று அவர் கையெழுத்திட்ட பரிந்துரைக் கடிதத்தைக் காட்டியிருக்கிறார் சக்ஸேனா.
அதன்பிறகு சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அப்போது பேசிய ராம நாராயணன், ``சில ஆண்டுகளுக்கு முன் நான் தயாரித்த `ருத்ரநாகம்' என்ற படத்துக்கு அதிகப்படியான விளம்பரத்தை டி.வி.யில் கொடுத்துவிட்டேன். அதற்காக இங்கு மன்னிப்புக் கேட்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றிருக்கிறார்.
அடுத்துப் பேசிய நடிகை குஷ்பு, ``ஒரு படத்துக்கு இவ்வளவு விளம்பரம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றால், மற்ற படங்களுக்கும் அதன் தயாரிப்பாளர் விரும்பியபடி விளம்பரம் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். விளம்பர விஷயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்; அல்லது அந்தக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுங்கள்'' என்ற ரீதியில் பேசினார்.
காஜாமொய்தீன், `சரோஜா' படத் தயாரிப்பாளர் `அம்மா கிரியேஷன்' சிவா ஆகியோர் பேசும்போது, ``சன் டி.வி. தயாரித்த படத்துக்கு சன் டி.வி.யில் விளம்பரம் போடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. படம் அவர்களுடையது, டி.வி.யும் அவர்களுடையது. இதில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கிறது?'' என்று கேட்க, புகார் கொடுத்த ரித்தீஸோ, ``இவர்களது தயாரிப்பில் வெளியான படம் என்ற ஒரே காரணத்திற்காக அதுபற்றி சகட்டுமேனிக்கு விளம்பரப்படுத்தி மற்ற படங்களுக்கு பாரபட்சம் காட்டினால், ஓடிக்கொண்டிருக்கும் மற்ற நல்ல படங்கள் மக்கள் மத்தியில் இருட்டடிப்பு செய்யப்பட்டு, வர்த்தக ரீதியாக முடங்கிப் போய்விடும். சன் டி.வி. இன்னும் பல படங்களைத் தயாரிக்க உள்ள நிலையில், இனிமேல் சேனல்கள் தயாரிக்கும் படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் எடுபடும். மற்ற படங்கள் வந்த சுவடே தெரியாமல் சுருண்டுவிடும். அதுமட்டுமின்றி, சேனல்கள் தங்கள் விரும்பம் போல் `டாப் 10' என்ற பெயரில் படங்களைத் தர வரிசைப்படுத்தி விமர்சிக்கிறார்கள். இவர்களின் விமர்சனமும் குறிப்பிட்ட அந்தப் படத்தின் மீது மக்கள் கொண்ட கருத்தும் கொஞ்சம் கூட பொருத்தமாக இருப்பதில்லை'' என்று தனது கருத்தைப் பலமாகவே பதிவு செய்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சில இயக்குநர்கள் கடைசி வரை வாயைத் திறக்கவே இல்லை. ``நாங்கள் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களில் நீங்கள்தான் இயக்குநர்கள்'' என்று அவர்களிடம் உத்தரவாதம் அளித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொக்கி போட்டுவிட்டதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.
கூட்ட நிகழ்வுகளால் சற்று ஆவேசமாகக் காணப்பட்ட சக்ஸேனா, ``யாரோ ஒரு நடிகர் புகார் தந்து விட்டார் என்பதற்காக இப்படி ஒரு கூட்டம் கூட்டி விவாதிக்கிறீர்களே? இதே படத்தை மதுரை, திண்டுக்கல் என சில இடங்களில் திரையிடவிடாமல் தியேட்டர் ஓனர்களுக்கு சிலர் மிரட்டல் விடுத்தபோது, இந்தத் தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?'' என்று கேள்வி எழுப்பினார். `` `காதலில் விழுந்தேன்' படத்தை ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து உங்கள் தரப்பில் இருந்து யாரும் எந்தப் புகாரும் தரவில்லையே?'' என்று ராம நாராயணன் கேட்டபோது ``ஏன்? அதுபற்றி பத்திரிகைகளில் வந்ததைப் பார்த்து நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாமே?'' என்று எகிறியிருக்கிறார் சக்ஸேனா.
இந்த ரீதியில் நடந்த அந்தக் கூட்டத்தில் முழுமையான விவாதம் என்று எதுவும் நடைபெறவில்லை. மாறாக கூச்சலும் குழப்பமுமே மிஞ்சியது. இதனால் ``இப்பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, விவாதித்து முடிவெடுக்கப்படும்'' என்ற அறிவிப்போடு இந்தச் சர்ச்சைக்கு தாற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார் ராம நாராயணன்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
``விளம்பரம் கொடுப்பது அவர்களின் சொந்த விருப்பமாக இருந்தாலும் மற்றவர்களின் வயிற்றில் அடிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் நிலைமையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரினால்தான் இதுபோன்ற ஒரு விவாதமே தொடங்கியி ருக்கிறது. அந்த வகையில் குமுதம் ரிப்போர்ட்டருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்!
பொதுக்குழுவிலும் இப்பிரச்னை குறித்து தெளிவாக எங்கள் கருத்தை முன்வைப்போம். அதையொட்டி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியை நகல் எடுத்து அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது'' என்று சிலாகித்தார்கள் அவர்கள்.
எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்”!
நன்றி: குமுதம் ரிப்போர்டர்.
இந்த அழகில் கருணாநிதி ``தயாரிப்பாளர் சங்கம் நடுநிலையோடு நியாயமாக நடக்கும் என்று பார்த்தால் நீங்கள் சன் டி.வி.க்கு சாதகமாக, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி `காதலில் விழுந்தேன்' படத்துக்கு நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் `போட்டு அவர்கள் தாக்கி'க் கொண்டிருக்கிறார்களே'' என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தாராம். ஆகா என்ன நியாய உணர்ச்சி! அதே போல மதுரையில் அப்படத்தை வெளியிட விடாது அராஜகம் செய்யும் பெருந்தகை பற்றி ஒரு வார்த்தையும் கிடையாது. அதே சமயம் சன் டிவியை பற்றி பேசும் கூட்டத்துக்கு அதற்கு அழைப்பில்லையாம், ஆகவே அழையா விருந்தாளியாம். இப்படி வேறு எழுதுகிறார்கள்.
கூட்டம் ஆரம்பிக்கும்போது நியாயஸ்தர் மாதிரி தலைவர் ராம நாராயணன் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த “ருத்ர நாகம்” என்ற தனது படத்துக்கு அந்த காலக் கட்டத்தில் அதிகமாக விளம்பரம் கொடுத்ததற்கு மன்னிப்பு வேறு கேட்டு எல்லோர் காதிலும் பெரிய பூ சுற்றியுள்ளார்.
ப்ரொக்ராம் ப்ரமோஷன் என்று ஒவ்வோரு டி.வி. சேனலிலும் போடுகிறார்களே, அதை பற்றி சொல்ல ஏதேனும் விஷயம் உண்டா? நான் கேட்கிறேன், வெறுமனே சன் டிவியில்தானே விமரிசனம் தருகிறார்கள்? நீங்களும் கொடுங்களேன் யார் வேண்டாம் என்றது? இதே குமுதம் ரிப்போர்டர் மற்ற பத்திரிகைகளில் வரும் விஷயத்துக்கு (உதாரணம் ஜூ.வி.யின் கழுகார் கட்டுரைகள்) விளம்பரம் தருமா? அதே சமயம் ஜூ.வி. படியுங்கள் என குமுதம் ரிப்போர்டரில் விளம்பரம் கட்டணம் கொடுத்து போடச் சொன்னால் வருமானம் தேவை என்றால் போட்டுவிட்டு போகிறார்கள், அவ்வளவுதானே விஷயம்.
இன்னொரு கேள்வி. விளம்பர விஷயத்தில் கட்டுப்பாடுகளை செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? அதுவே முதல் தவறு. பணம் இருக்கிறவன் செய்கிறான். இல்லாதவன் ரித்தீஸ் மாதிரி புகார் தருவார்கள் போல.
கடைசிய்யக ஒரு கேள்வி. சன் டிவி குழுமத்துக்கும் தயாரிப்பாள்ர்கள் சங்கத்துக்கும் நடக்கும் பிரச்சினையை வெறுமனே வெளியிட்டதற்காக தனக்கு தானே ஷொட்டு கொடுத்து கொள்கிறதே குமுதம் ரிப்போர்டர், அது எதில் சேர்த்தி?
Sunday, October 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment