"எண்ணை பரல் ஒன்றுக்கு $ 135 என, எண்ணைக் கம்பனிகளுக்கு கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருக்கும் நாங்கள், பாகிஸ்தானில் சமாதானத்தை பேணுவது எப்படி?" - பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி.
அமெரிக்க நிதிநெருக்கடி என்ற சுனாமி பல உலகநாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை உருவாக்கி வருகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி வறிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்படப் போகின்றன. அதன் அறிகுறியாக இப்போது பாகிஸ்தான் என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலை வந்துள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகின்றது. மத்திய வங்கியிடம் தற்போது $8.14 பில்லியன் பணம் மட்டுமே கையிருப்பில் இருக்கின்றது. அதிலும் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை கழித்துப்பார்த்தால், $ 3 பில்லியன் மட்டுமே எஞ்சும். இந்த பணத்தை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு தான் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களான எண்ணை, உணவுப் பொருட்களை வாங்க முடியும்.
அண்மைக்காலமாக உலகசந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ள எண்ணை, மற்றும் உணவுப்பொருட்களின் இறக்குமதி பாகிஸ்தான் பொருளாதாரத்தை அதிகளவில் பாழ்படுத்தியுள்ளது. அதேநேரம் முஷாரப் கால தவறான முகாமைத்துவம், ஊழல் என்பன வீழ்ச்சிக்கான பிற காரணங்களாகும். சிலர் முஷாரப் காலம், இப்போது உள்ள நிலைமையை விட சிறந்ததாக இருந்தது என சிலர் கூறத்தலைப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சர்வதேச பொருளாதாரத்தின் தாக்கம் பற்றி குறைத்து மதிப்பிடுவதாலேயே இவ்வாறு கூறுகின்றனர். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் உலகமயமாக்கல் காரணமாக இந்தியாவில் எவ்வாறு வசதிபடைத்த நடுத்தர வர்க்கம் உருவானதோ, அதேபோன்று முஷாரப் கால பாகிஸ்தானிலும் நடந்தது.
இன்றைய ஜனாதிபதி சர்தாரி பதவியேற்ற நாளில் இருந்தே, அவரை துரதிர்ஷ்டம் துரத்த ஆரம்பித்து விட்டது. தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாலும், அதே நேரம் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றனர். உள்நாட்டு பணக்காரர்களும் பாகிஸ்தானிய வங்கிக்கணக்கில் இருக்கும் தமது பணத்தை எடுத்துக் கொண்டு போய் துபாய் போன்ற நாடுகளில் பத்திரப்படுத்துகின்றனர். அனேகமாக எல்லா பாகிஸ்தானிய செல்வந்தர்களும் ஏற்கனவே வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர்.
பாகிஸ்தானிய ரூபாய் இந்த வருடம் 21 சத வீதம் மதிப்பிழந்துள்ளது. பணவீக்கம் 25 வீதத்தை எட்டிப்பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எண்ணை விற்கும் சவூதி அரேபியாவிடம், இவ்வருடம் கொடுக்க வேண்டியுள்ள $ 6 பில்லியன் கடனை இரத்து செய்யுமாறு அந்நாட்டிடம் கெஞ்சிய போதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் பொருளாதாரத்தை அழிவில் இருந்து காப்பற்ற வேண்டுமாகில் $ 100 பில்லியன் பணம் தேவைப்படுகின்றது. சர்வதேச சமூகத்திடம் கையேந்திய போதும், அது கிடைக்குமா என்பது கேள்விக்குறி. உலகின் பெரிய பணக்கார நாடுகளே தள்ளாடும் போது, பாகிஸ்தானை யார் கவனிக்கப் போகிறார்கள்?
பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால், அது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். 160 மில்லியன் சனத்தொகையை கொண்ட பாகிஸ்தானில், 100 மில்லியன் பேர் 25 வயதுக்கு குறைவான இளைஞர்கள். பொருளாதார பிரச்சினை காரணமாக வறுமை அதிகரிக்கும் என்பதால், பெரும்பாலான இளைஞர்கள் தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுவர். மேலும் தலிபான் இயக்கத்திடம் நிறைய பணம் இருக்கின்றது. அவர்கள் தமது போராளிகளின் குடும்பங்களுக்கு மாதாமாதம் தவறாமல் உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.
Thursday, October 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment