Thursday, October 8, 2009

பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்த்த காவல் அதிகாரிகள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதன், 7 அக்டோபர் 2009( 21:02 IST )

பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்வியில் சேர்த்த காவல் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற மனுவிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்ன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை நடந்த பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், அதனை மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கோரி ஒய்வு பெற்ற பேராசிரியர் பிரபா கல்விமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனு இன்று நீதிபதிகள் ஹெச். எல். கோகலே, டி. முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அண்ணா பல்கலையில் அரசுக்கு இருந்த பொதுத் தொகுப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்று தனது மனுவில் கூறியிருந்த பேரா. பிரபா கல்விமணி, தமிழக காவல் துறையின் இரண்டு மூத்த அதிகாரிகள், நுழைவுத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த தங்கள் பிள்ளைகளுக்கு அரசுத் தொகுப்பில் இடம் பெற்றுத் தந்ததை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகக் காவல் துறையின் ஆயுதப் பிரிவு காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த நரீந்தர் பால் சிங், தனது மகள் குர்பானி சிங்கிற்கு 2004-05 கல்வியாண்டில் அரசுத் தொகுப்பில் இடம் பெற்றுச் சேர்த்துள்ளார். குர்பானி சிங் பெற்ற மொத்த மதிப்பெண் 300க்கு 229.44 ஆகும். ஆனால் அது தாழ்த்ததப்பட்டோருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தகுதி மதிப்பெண் 241.44 விட மிகவும் குறைவானதாகும். இருந்தும் அவர் அரசுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவதாக, தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த கே.இராதாகிருஷ்ணன் தனது மகன் ஆர். சந்தீப்பை 2005-06 நிதியாண்டில் அரசுத் தொகுப்பில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பில் சேர்த்துள்ளார். சந்தீப் பெற்ற மதிப்பெண் 300க்கு 188.31ஆகும்.
இப்பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண் 246.92. இந்த அளவிற்கு குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் தனது மகனை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொறியியல் பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார் இராதாகிருஷ்ணன் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார் பிரபா கல்விமணி.

வழக்கிலிருந்து அமைச்சர்களை காப்பாற்றிய அதிகாரிகள்!

2004ஆம் ஆண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு 2இன் தலைமை ஆய்வாளராக இருந்த நரீந்தர் பால் சிங், அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களான கே.ஏ. செங்கோட்டையன், பா. வளர்மதி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தார். தனது மகளுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்த இவ்விரு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துவிட்டார் என்று கல்விமணி குற்றம் சாற்றியுள்ளார்.

இதேபோல் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 1இன் தலைமை ஆய்வாளராக இருந்த கே. இராதாகிருஷ்ணன், அன்றைய முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை முடித்து, அதற்கு பரிசாக தனது மகனுக்கு பொறியியல் பட்டப்படிப்பிற்கான இடத்தைப் பெற்றுள்ளார் என்று கல்வி மணி குற்றம் சாற்றியுள்ளார்.

இந்த ஆதரங்களையெல்லாம் தமிழக அரசிடம் அளித்த பின்னரும் அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது மனுவில் கூறியுள்ள கல்விமணி, இவ்விரு அதிகாரிகள் மீதும் 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 7, 13 (1), (2) இன் கீழ் வழக்குப் பதிவுச் செய்து விசாரிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணைப் பொறுப்பை ம.பு.க.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

இம்மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறுக் கோரி வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்

No comments: