Thursday, July 28, 2011

அறுசுவை விருந்து!

சேம்பு பக்கோடா

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 8, கடலை மாவு, அரிசிமாவு - தலா 1/2 கப், மிளகாப் பொடி - 11/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சேப்பங்கிழங்கை பாதி வெந்தவுடன் தோலுரித்து, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் (நன்கு வேகவிடாமல், அரை வேக்காட்டில் வேகவிடவும்) கடலை மாவு மற்றும் அரிசி மாவுடன் மிளகாப் பொடி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் கரைத்துக்கொண்டு, சேம்பு வில்லைகளை ஒவ்வொன்றாகத் தோய்க்கவும். நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

முள்ளங்கி சூப்

தேவையான பொருட்கள்:

இளசான முள்ளங்கி - 1, சிறிய கேரட் - 1, பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, முள்ளங்கி இலை (இருந்தால்) பொடியாக நறுக்கியது, ஒருகைப்பிடி அளவு, சோளமாவு - 2 டீஸ்பூன், வெண்ணெ - 2 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன், கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது - 1/4 கப், சோளமாவு - 2 டீஸ்பூன்

செய்முறை:

முள்ளங்கியைத் தோல் சீவிப் பொடிப் பொடியாக சீவி, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வாணலியில், வெண்ணெயுடன், கேரட் துருவல், பச்சைப்பட்டாணி, முள்ளங்கி இலை ஆகியவற்றை மிதமான தீயில், நன்கு வதக்கவும். அதை, அரைத்த முள்ளங்கி விழுதுடன் கலக்கவும். பின் சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து விழுதாகக் கரைத்து ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

கொத்துமல்லி இலைகளை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாறவும்

வாழைத்தண்டு ரைத்தா

தேவையான பொருட்கள்:

இளம் வாழைத்தண்டு - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1 சிறியது, இஞ்சி - 1 சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன், புளிக்காத கெட்டித்தயிர் - 1 கப், கடுகு - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:

வாழைத் தண்டின், நாரை நீக்கிவிட்டு, மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனைப் பொடியாக நறுக்கி, அரை டீஸ்பூன் உப்பைப் போட்டு, பிசறிப் பிழிந்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து விழுதாக்கி அதனுடன், தயிரைக் கலக்கவும். பின் மேற்படி, வாழைத் தண்டை இக்கலவையுடன் சேர்த்து கடுகு தாளித்து, கொத்து மல்லித் தழை போட்டுப் பரிமாறவும்.

(ஆம்லா ரைஸ்) நெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பெரிய அளவிலான நெல்லிக்காய் - 4, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, கேரட் சிறியது - 1, நல்லெண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், கொத்துமல்லி + கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

சாதத்தை உதிர் உதிர்வாக ஒரு தட்டில் ஆற வைத்து, 2 ஸ்பூன் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றவும்.

நெல்லிக்காயைப் பச்சையாகத் துருவி, கொட்டையை நீக்கிவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்துப் பின் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்துப் பின் அரைத்த விழுதை நன்கு வதக்கவும் (தண்ணீர் சுண்டி வரும்வரை) பட்டாணி மற்றும் கேரட் துருவலை வேக வைத்து, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதுடன் சேர்த்து சாதத்தில் கலக்கவும்.

வறுத்த வேர்க்கடலையை மேலே தூவி, கொத்துமல்லி இலையைத் தூவிப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் கொஜ்ஜூ

தேவையான பொருட்கள்:

சிறிய காலிஃப்ளவர் - 1, பெரிய வெங்காயம் - 3, பழுத்த தக்காளி - 2, பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி ( பொடியாக நறுக்கியது) 2 ஸ்பூன், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, பாசிப்பருப்பு - 1/2 கப், கடலைப் பருப்பு - 1 மேஜைக் கரண்டி, புளி - 1 எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ற அளவு, கடலை மாவு - 1 மேஜைக் கரண்டி, கடுகு + உ.பருப்பு - 2 ஸ்பூன்.

செய்முறை:

காலிஃப்ளவர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில், கடுகு உளுத்தம் பருப்பைத் தாளிதம் செய்தவுடன் நறுக்கிய பொருட்களையும், பச்சைப் பட்டாணி முத்துக்கள் மற்றும் தக்காளித் துண்டுகளைப் போட்டு, வதக்கவும். பின் தேவைக்கேற்ப உப்பையும், சாம்பார் பொடியையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

குக்கரில் கடலைப் பருப்பு மற்றும் பாசிப் பருப்பைப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இரண்டு நிமிடத்துக்கு வெயிட் போட்டு, பாதி வெந்தவுடன் மேற்படி வதக்கல் கலவையை அதனுடன் சேர்க்கவும். புளிக் கரைசலுடன், கடலை மாவையும் தூவி மீண்டும் குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் சென்றபின் குக்கரைத் திறந்து அனைத்தையும், கரண்டியால் மசிக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

பலாப்பழ ஹல்வா

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 4, சர்க்கரை - 1 கப், நெய் - 2 மேஜைக்கரண்டி, கோதுமை மாவு - 1 மேஜைக்கரண்டி, முந்திரிப் பருப்பு - 8, ஏலக்காப் பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

கோதுமை மாவை, சிவக்கும்வரை நன்கு வறுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும். பலாச்சுளைகளை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, மிதமானத் தீயில், தண்ணீர் சுண்டும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். நன்கு சுண்டி வரும்போது, வறுத்த கோதுமை மாவைக் கொஞ்சம், கொஞ்சமாகத் தூவி, கெட்டிப் பதம் வரும்போது நெயைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.

முந்திரிப் பருப்பைத் துண்டுகளாக்கி நெயில் வறுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியபின் துண்டுகளாகப் போடவும்.

நன்றி: ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,சென்னை

No comments: