Wednesday, July 27, 2011

அம்மா இது என்ன ? உங்கள் பலமும் பலவினமும் புரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது

புதுடெல்லி, ஜூலை 27, 2011

சமச்சீர் கல்வி சட்டத் திருத்தம் தொடர்பாக விளக்கம் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசையே குறைகூறியது உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியது.

சமச்சீர் கல்வி தொடர்பாக சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், 'சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை 2011-ம் கல்வி ஆண்டிலோ அல்லது அதற்குப் பிறகோ நடைமுறைப்படுத்தலாம் என கூறப்பட்டது.

இந்தத் தீர்ப்பைச் சரியாக புரிந்துகொள்ளாததால், சமச்சீர் கல்வி திட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது.

தமிழக அரசுக்கு கல்வி மற்றும் சட்டத்துறையில் சரியான ஆலோசனை வழங்குவதற்கு உரியவர் எவரும் இல்லை.


இதனால், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நேரத்தை தமிழக அரசு வீணடித்துவிட்டது. சரியான ஆலோசனை இருந்திருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்க மாட்டாது,' என்று தனது வாதத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராவ் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அடுத்த ஆண்டுக்குள் குறைகளைச் சரிசெய்து, வரும் 2012 கல்வியாண்டில் திருத்தப்பட்ட சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், ஏற்கெனவே இரண்டு மாத காலமாக புத்தகங்கள் இன்றி மாணவர்கள் பாதிப்பு உள்ளாகி வருகிறார்கள் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, சமச்சீர் கல்வி புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையை அரசு இதுவரை தொடங்கவில்லை என்றும் எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்த நிலையில், அக்கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறுவது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது கவனத்துக்குரியது.


நன்றி :விகடன்

No comments: