எங்க பாட்டி, அம்மா எல்லாம் சமைக்கும்போது வீடே மணக்கும். அவங்க கைப்பக்குவமே தனி!'' என்று நாக்கை சுழற்றியபடி சொல்லி ஆதங்கப்படுபவர்கள்... நம்மில் ஏராளம்! சுவைக்காக மட்டுமல்லாமல், சுகாதாரத்துக்காகவும் அவர்களெல்லாம் சமைத்ததுதான் அதற்குக் காரணம். அப்படிப்பட்ட கிராமிய மணம் கமழும் 30 வகை உணவுகளை இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''கம்பு, சோளம், கொள்ளு, காய்கறி, கீரை, கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தி... சுவையுடன், பலத்தையும் தரும் உணவு வகைகளை கொடுத்துள்ளேன். நம் உணவு முறையை சற்றே மாற்றிக் கொண்டு, நிறைவான ஆரோக்கியம் பெறுவோம் வாருங்கள்!'' என்றபடியே பத்மா சமைத்திருக்கும் ரெசிபிகளை, கலை உணர்வுடன் அலங்கரித்து, கண்ணுக்கும் விருந்து படைக்கிறார் செஃப் ரஜினி!
கருப்பட்டி பணியாரம்
தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கேழ்வரகு மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி.
செய்முறை: கருப்பட்டியை நன்கு பொடித்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி... கேழ்வரகு மாவு, அரிசி மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கிராமங்களில் வெல்லம், சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை காபி, டீ, பலகாரம் என இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
வேப்பம்பூ துவையல்
தேவையானவை: வேப்பம்பூ - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு வேப்பம்பூ துவையலை பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சி வரமால் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.
பூண்டு மிளகு குழம்பு
தேவையானவை: தோல் உரித்த பூண்டுப் பல் - 10, மிளகு - 20, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டுப் பல்லை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி, வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். காடாயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வேக வைத்த பூண்டு, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: பூண்டு வாயுத்தொல்லையை நீக்கும். மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.
எள் உருண்டை
தேவையானவை: கறுப்பு எள் - 250 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: எள்ளை தண்ணீர் விட்டுக் களைந்து, கல் அரித்து, வடிகட்டி, வெறும் வாணலியில் போட்டு பொரியும்படி வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). வறுத்த எள்ளை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகு விட்டு நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு: எள், எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீர் சிறிது விட்டு கொதிக்கவிடவும். கம்பி பாகு பதம் வந்த உடன் அதில் மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரி அடுப்பில் வைத்து சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து அப்படியே சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
பருப்புக் கஞ்சி
தேவையானவை: பாசிப்பருப்பு - 250 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வாழைப்பழம் - ஒன்று, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, பால் - 200 மில்லி, நெய் - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, நன்கு குழையும்படி வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் வேக வைத்த பருப்பை போட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த கொப்பரையை சேர்க்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிப் போட்டு, பால் விட்டு நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்தப் பருப்புக் கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். வெல்லத்துக்குப் பதிலாக உப்பு, மோர் சேர்த்தும் கஞ்சி தயாரிக்கலாம்.
சோள ரவை உப்புமா
தேவையானவை: காய்ந்த சோளம் - 200 கிராம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளத்தை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி (தோல் சீவி), பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று மடங்கு என்ற அளவில் தண்ணீரை கடாயில் கொதிக்கவிடவும். மற்றொரு காடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு நன்கு வதக்கி... கொதிக்கும் நீரில் போட்டு தேவையான உப்பு சேர்த்து, சோள ரவையைப் போட்டு நன்கு கிளறவும். சிறிது ஒரு ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும்..
குறிப்பு: சோளக் கதிரை சுட்டு சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடலாம். அடை, வடை, கஞ்சி என்று பலவிதமாக தயாரித்தும் சாப்பிடலாம். பிஞ்சு சோளத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் மாவு சத்து அதிகம்.
வெந்தயக்கீரை சாம்பார்
தேவையானவை: வெந்தயக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - 100 கிராம், கடுகு, வெந்தயம் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெந்தயக்கீரையை ஆய்ந்து இலைகளை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியே வைக்கவும். புளியைக் கரைத்து கடாயில் விட்டு... சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, பிறகு வதக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து, மேலும் கொதித்ததும் வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். எல்லாம் கலந்து கொதித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். வெந்தயக் கீரை சேர்த்து சப்பாத்தி தயாரிக்கலாம்.
வெந்தய பணியாரம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, வெந்தயம் - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, கேரட், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக் கல்லில் எண்ணை சிறிது விட்டு, மாவை ஊற்றி, இருபுறமும் ஒரு சிறிய குச்சியில் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெந்தய பணியாரத்துக்கு கொத்தமல்லி சட்னி சிறந்த காம்பினேஷன்.
அவல் உப்புமா
தேவையானவை: சிவப்பு அவல் - 250 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை மிக்ஸியில் உப்புமா ரவை பதத்துக்கு லேசாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, ஒரு பங்கு அவலுக்கு இரு பங்கு தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்த உடன் தாளித்ததை போட்டு... உப்பு, பொடித்த அவலை போட்டு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி , மேலே கொத்தமல்லி தூவவும்.
குறிப்பு: அவல், பசியை அடக்கும். கார்போஹைட்ரேட் அடங்கியது.
கம்பு அடை
தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், கம்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும், கம்பையும் தனித் தனியாக ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்று சேர்த்து ஊற வைக்கவும். எல்லாம் நன்றாக ஊறிய உடன்... அரிசி, கம்பு இரண்டையும் மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். பருப்புகளை தனியாக அரைத்து, எல்லா மாவையும் ஒன்று சேர்த்து... உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். மாவை தோசைக்கல்லில் சிறிய அடைகளாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சத்து நிறைந்த கம்பை பயன்படுத்தி, இனிப்பு அடையும் தயாரிக்கலாம்.
கொள்ளு துவையல்
தேவையானவை: கொள்ளு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கொள்ளு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து... புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: கொள்ளு, உடலுக்கு பலம் தரும். உடலில் உள்ள அதிகமான கொழுப்புச் சத்தை குறைக்கும்.
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, கடலைப்பருப்பு - 150 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஊற வைத்து களைந்து கெட்டியாக அரைத்து, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த பருப்பு சேர்த்து உதிரி உதிரி உதிரியாக வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறி, வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: பருப்புக்கு பதில், கொள்ளு ஊற வைத்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.
கருணைக்கிழங்கு மசியல்
தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கருணைக்கிழங்கை குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் தாளிக்கவும். மசித்த கருணைக்கிழங்கை அதில் சேர்த்து... உப்பு, வெல்லத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கெட்டியானதும் எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.
குறிப்பு: மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை துவையல், மசியல் என்று தயாரித்து சாப்பிட... நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சிப் புளி
தேவையானவை: புளி - 100 கிராம், குருத்து இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், கறுப்பு எள் - 50 கிராம், கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். எள்ளை களைந்து, கல் நீக்கி, வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கொதித்த பின்பு வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கொதிக்க வைத்து, எள்ளுப்பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
குறிப்பு: நீராகாரம், பழைய சாதத்துக்கு... இஞ்சிப் புளி சிறந்த காம்பினேஷன்.
மொச்சை கத்திரி சாம்பார்
தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மொச்சை (தோல் உரித்து) - 100 கிராம், கத்திரிக்காய் - 2, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி எடுத்து வைக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு, வேக வைத்த மொச்சையும் போட்டு, சிறிது கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி... பெருங்காயம் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
குறிப்பு: மொச்சையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.
மணத்தக்காளி குழம்பு
தேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய் - ஒரு கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு... கடுகு, வெந்தயம், கட்டிப் பெருங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... மணத்தக்காளிக்காயை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மணத்தக்காளிக்காயை உப்பு கலந்த தயிரில் 4 நாள் ஊற வைத்து, காய வைத்து... எண்ணெயில் வறுத்து, ரசம் சாதத்துடன் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை துவையல்
தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, இஞ்சி, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: சூடான சாதம், கறிவேப்பிலை துவையல், சுட்ட அப்பளம்... இது சூப்பர் காம்பினேஷன்!
பிரண்டை துவையல்
தேவையானவை: பொடியாக நறுக்கிய இளம் பிரண்டை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பிரண்டையை வதக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுத்து... அதனுடன் வதக்கிய பிரண்டை, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும் சமயத்தில் இந்தத் துவையல் மிகவும் நல்லது. பிரண்டை ஜீரண சக்தியை அதிகரித்து, பசி எடுக்க வைக்கும்.
பயறு வெள்ளரி தயிர்பச்சடி
தேவையானவை: முளைகட்டிய பயறு - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தயிர் - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறு, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்து நன்றாக கலக்கவும்.
குறிப்பு: கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் அருமையான பச்சடி இது. சிறிய வெங்காயம், தக்காளியையும் சேர்க்கலாம்.
சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - கால் கிலோ, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக தட்டிப் போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். பிறகு கடுகு தாளித்துக் கொட்டி... பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. பிஞ்சு சுண்டைக்காயை சமைத்தால்.. மிகவும் ருசியாக இருக்கும்.
வாழைத்தண்டு மோர்கூட்டு
தேவையானவை: இளம் வாழைத்தண்டு - 2 துண்டு (வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மோர், தயிர் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை போட்டு வைத்து எடுத்து, பின்பு தண்ணீரில் வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஆறியவுடன் சிறிது தயிர் கலக்கவும்.
குறிப்பு: பித்தப்பையில் கல் இருந்தால், வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட... குணமாகும். நிரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து வாழைத்தண்டு.
வாழைப்பூ வடை
தேவையானவை: வாழைப்பூ (சிறியது) - ஒன்று, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து களைந்து, வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், வதக்கிய வாழைப்பூவை சேர்த்துப் பிசையவும். காடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது.
பொட்டுக்கடலை உருண்டை
தேவையானவை: பொட்டுக்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிக்கட்டி, பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). பொட்டுக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை விட்டு கிளறி, உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து அதிகம் உள்ள இந்த உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
காராமணி கூட்டு
தேவையானவை: காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை சேர்த்து அரைக்கவும். இதை வேக வைத்த காராமணியுடன் சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
நாரத்தை இலைப் பொடி
தேவையானவை: நாரத்தை இலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி... இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கெட்டியான சிறு உருண்டைகளாக பிடிக்கவும். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
குறிப்பு: தயிர்சாதத்துக்கு இது சிறந்த காம்பினேஷன். மிகவும் முற்றிய இலையாக இருக்காமல், இளம் துளிர் இலையில் தயாரிக்கவும்.
கறுப்பு உளுந்து பொடி
தேவையானவை: முழு கறுப்பு உளுந்து - 200 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கறுப்பு உளுந்து, மிளகு, மிளகாயை ஒன்று சேர்த்து எண்ணெயில் வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும். உளுந்து பொடி எலும்புகளை வலுவடையச் செய்யும்.
வேர்க்கடலை உருண்டை
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வேர்க்கடலையை நன்றாக தேய்த்துப் புடைத்து, தோல் நீக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால் அதுதான் சரியான பதம்). கடலையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பாகை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, பிறகு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: கிராமப்புறங்களில் கடலை உருண்டை முக்கியமான தின்பண்டம்.
கேழ்வரகு இனிப்பு தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி.
செய்முறை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைகளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
குறிப்பு: தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை. திடீர் மாவுகளுக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்தும் தயாரிக்கலாம். வெல்லத்துக்கு பதில் கருப்பட்டியும் சேர்க்கலாம்.
முருங்கைக்கீரை பொரியல்
தேவையானவை: பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 10 ஆர்க்கு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பாதி வெந்ததும், ஆய்ந்து நறுக்கிய முருங்கைக்கீரையை அதில் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி, கலவையை பிழிந்து நீரை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல், கீரை - பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக் கீரையில் தங்க பஸ்பம் சத்து உள்ளது. இரும்பு சத்தும் உள்ளது. அடை, வடை, கூட்டு, பொரியல், பக்கோடா என்று பலவிதமாக தயாரித்து பயன்பெறலாம்
Tuesday, January 10, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment