Friday, January 6, 2012

மேலப்பாளையம் ஸ்பெஷல், வெண்டைக்காய் மீன் குழம்பு,பருப்பு ரசம் & புளிச்சாறு,சுறா முருங்கைக்கீரை ஆணம் & சுறாப்புட்டு,கூனி தட்டைபயறு கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்; மீன் - அரைக்கிலோ, வெண்டைக்காய் - கால்கிலோ, வெங்காயம் - 2, தக்காளி -2 பச்சை மிளகாய் -3 பூண்டு - 6பல் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் மீன் மசாலாத்தூள் -2டேபிள்ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு தேங்காய் 3டேபிள்ஸ்பூன்(விரும்பினால்) எண்ணெய் -5டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரைடீஸ்பூன் உ.பருப்பு -1டீஸ்பூன் கருவேப்பிலை -3இணுக்கு உப்பு -தேவைக்கு மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்,மீன் வெள்ளையாக ஆகும் அளவு குறைந்தது 5தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும்,மீனில் மஞ்சள் தூள் ,உப்பு போட்டு கடைசியாக பிரட்டி அலசி எடுக்கவும்.மீன் வாடை சுத்தமாக இருக்காது.மணமாக இருக்கும். வெண்டைக்காய் கழுவி துடைத்து கொஞ்சம் பெரிய துண்டாக போட்டு வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை ரெடி செய்து வைக்கவும்.
ஒரு வாணலியில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காயை வதக்கி எடுக்கவும்.தனியாக எடுத்து வைக்கவும்.

மீன் குழம்பு வைக்க ஒரு வாணலியில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்,உ.பருப்பு,கருவேப்பிலை வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.

வெங்காயம்,பூண்டு வதங்கியதும்,நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும்.வதக்கி விடவும்.

சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைக்கவும்,எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.
த்துடன் மிள்காய்த்தூள்,மீன் மசாலாத்தூள் சேர்க்கவும்.
வதக்கியவற்றுடன் மசாலா சேர்த்து பிரட்டவும்.
கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
பின்பு மீனை சேர்க்கவும்,நான் ஊளி மீன் உபயோகித்து உள்ளேன்,விரைவில் வெந்து உடையும் மீன் என்றால் முதலில் வெண்டைக்காய் சேர்த்து விட்டு,பின்பு மீன் சேர்க்கவும். அடிக்கடி அகப்பை போட வேண்டாம்.
நன்கு கலந்து விடவும்.மீனும் வெண்டைக்காயும் சேர்ந்து கொதித்து மணம் வரும்.தேங்காய் விரும்பாதவர்கள் இப்படியே சாப்பிடலாம்.
விரும்பினால் அரைத்த தேங்காய் விழுது விட்டு கொதிக்க விடவும்,சிம்மில் சிறிது நேரம் அடுப்பை வைக்கவும்.நன்கு தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து மேல் வரும்.
சுவையான கமகமக்கும் வெண்டைக்காய் மீன் குழம்பு ரெடி.

இதில் உள்ள வெண்டைக்காய் சாப்பிட மீனை விட ருசியாக இருக்கும்.

இதனை சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசையுடன் பரிமாறாலாம்.
மீன் அளவு,வெண்டைக்காய் அளவு உங்கள் விருப்பமே. எண்ணெய்,காரம்,தேங்காய் உங்கள் ருசிக்கு தகுந்தபடி சேர்த்து கொள்ளலாம்.

பருப்பு ரசம் & புளிச்சாறு

ரசப்பொடி தேவையான பொருட்கள் ; மிளகு -1டேபிள்ஸ்பூன் சீரகம் -1டேபிள்ஸ்பூன் மல்லி - 2டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு - 2டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ்பூன் பெருங்காயப்பொடி - 1டீஸ்பூன் மஞ்சள்பொடி - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 கருவேப்பிலை - ஒரு கைப்பிடி மஞ்ச்ள் பொடி,பெருங்காயப்பொடி பொடி தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொறுமையாக லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்த பின்பு அத்துடன் மஞ்சள் பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ரசப்பொடி ரெடி.
ரெடி செய்த ரசப்பொடியை ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் தேவைக்கு உபயோகிக்கலாம்.

சிம்பிளாக ரசம் வைக்க புளியைக் கரைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு தட்டிய பச்சை மிளகாய்,பூண்டு போட்டு வதக்கி,ரசப்பொடி சேர்த்து,கரைத்த புளியை விட்டு,உப்பு சேர்த்து,மல்லி இலை நறுக்கி போட்டு,நுரை கூடியதும் அடுப்பை அணைத்தால் சிம்பிள் ரசம் ரெடி,வேண்டுமானால் சிறிய தக்காளி பிணைந்து விடலாம்.


பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்;

பருப்பு - ஒரு கையளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு - 4பல்

தக்காளி -1

மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்

ரசப்பொடி - 1டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -1

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

கடுகு - அரைஸ்பூன்

மிள்காய்வற்றல் - 1

உப்பு - தேவைக்கு

ஊறிய பருப்பு, நறுக்கிய தக்காளி, 2பல்பூண்டு, மஞ்சள் பொடி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
மிக்ஸியில் ரசப்பொடி, சிறிது கருவேப்பிலை,மல்லி இலைகாம்பு, 2பல் பூண்டு, பச்சை மிளகாய், விரும்பினால் 2சின்ன வெங்காயம் சேர்த்து பரபரவென்று சுற்றி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து மிக்ஸியில் சுற்றியதை போட்டு,கொதிக்க விடவும்.
பருப்பு வெந்து இப்படி காணப்படும்.
புளி இப்படி கொதி வரவும், வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.ரசத்தில் நுரை கூடியவுடன் இறக்கவும்.
சுவையான பருப்பு ரசம் ரெடி. மேலப்பாளையம் புளிச்சாறு :

தேவையான பொருட்கள்;

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகு - 1டீஸ்பூன்

சீரகம் - அரைஸ்பூன்

வெந்தயம் - கால்ஸ்பூன்

கடுகு - கால் + அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

சிறிய தக்காளி - 1

சிறிய பச்சை மிளகாய் -1

பூண்டு - 4பல்

சின்ன வெங்காயம் - 2

மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்

எண்ணெய் -3டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

மிளகு சீரகம் அம்மியில் அரைத்து, அத்துடன், வெங்காயம், தக்காளி, பூண்டு, சிறிது மல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய், கால்ஸ்பூன் கடுகு வைத்து தட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், உ.பருப்பு, வற்றல், கருவேப்பிலை தாளித்து, ரசத்திற்கு அரைத்தவற்றை போட்டு,மஞ்சப்பொடியும் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளிக்கரைசல் விடவும்.உப்பு சரியாகப் போடவும்.
ரசம் இப்படி நுரை கூடி கொதி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மேலப்பாளையம் புளிச்சாறு ரெடி.
எங்க ஊரில் வெறுஞ்சோறு, கட்டிப்பருப்பு, புளிச்சாறு,சுருட்டு கறி எல்லார் வீட்டிலும் செய்யக்கூடிய காம்பினேஷன், சூப்பராக இருக்கும்.

எங்க ஊர் கட்டி பருப்பு செய்ய 100கிராம் பருப்புடன்,சிறிய தக்காளி,ஒரு சிறிய வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய்,ஒரு டீஸ்பூன் எங்க ஊர் மசாலா,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி இலை சிறிது, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வெந்த பின்பு வழக்கம் போல் கடுகு,வற்றல்,கருவேப்பிலை,வெங்காயம் தாளித்து கொட்டவும். ருசி செமையாக இருக்கும்.


சுறா முருங்கைக்கீரை ஆணம் & சுறாப்புட்டு

சுறா முருங்கைக்கீரை ஆணம் தேவையான பொருட்கள்: சுறா மீன் துண்டுகள் - அரைக்கிலோ முருங்கைக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் -100கிராம் தக்காளி -1 பூண்டுபல்- 10 மிளகுத்தூள் - ஒன்னரை டீஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் - முக்கால் டீஸ்பூன் மல்லித்தூள் -2டீஸ்பூன் மீன் மசாலா - 1டீஸ்பூன் (விரும்பினால்) தேங்காய் - 3டேபிள்ஸ்பூன் புளி - நெல்லியளவு உப்பு - தேவைக்கு நல்ல எண்ணெய் -4டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் சுறா மீனை நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் குறிப்பிட்ட மசாலா தூள் வகைகள், பூண்டு,சின்ன வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி,தேங்காய் துருவல் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். புளி சிறிது கரைத்து எடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த மசாலா,தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.மசாலா வாடை அடங்கியதும். சிறிதளவு புளிக்கரைசல் விடவும்.நன்கு மூடினால் பொங்கி வடியும், திறந்தே கொதிக்கட்டும்.
அதற்குள் முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி எடுக்கவும்.
கொதித்த ஆணத்தில் சுறா மீன் துண்டுகளை போடவும்.மீன் வேகட்டும். எலும்பு துண்டுகள் தவிர மற்ற துண்டுகளை புட்டுவிற்கு தனியாக எடுத்து வைக்கவும்.
ஆணத்தில் ஆய்ந்த முருங்கைக்கீரையை போடவும்.நன்கு வேகட்டும்.
ஒரு பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் விட்டு, காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்ததும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு சிவற வதக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் சுறா முருங்கைக்கீரை ஆனத்தில் தாளிசத்தை கொட்டவும். அடுப்பை அணைத்து விடவும். நெலு நெலுன்னு ஆணம் சூப்பராக இருக்கும்.
சுவையான சத்தான சுறா முருங்கைக்கீரை ஆணம் ரெடி. குளிர்,பனிக்காலத்தில் செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நல்லது.இந்த ஆணத்திற்கு, பூண்டு, நல்ல எண்ணெய், முருங்கைக்கீரை தான் தனி ருசியை தரும். ப்லைன் ரைஸில் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்,பொரித்த அப்பளம்,சுறாப்புட்டு உடன் பரிமாறலாம்.

சுறாப்புட்டு :

சுறா மீன் வேகவைத்தது - கால் கிலோ

வெங்காயம் - கால் கிலோ

பூண்டு -6பல்

தக்காளி - 1

பச்சை மிள்காய் - 2

தேங்காய் -3டேபிளஸ்பூன் மிளகுத்தூள் - அரைஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்(விரும்பினால்)

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

வெங்காய்ம், பூண்டு, தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் மிக்சியில் பரபரவென்று அரைத்து வைக்கவும்.
ஆணத்தில் இருந்து எடுத்த எலும்பு இல்லாத மீன் ஆற வேண்டும்.ஆணம் வைக்கவில்லை என்றால் தனியாகவும் மீனை கழுவி மஞ்சள் தூள்,உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் வெந்து எடுக்கலாம்.
மீனை இப்படி உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கியவற்றை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்,சிறிது நேரம் மூடவும்.
வெங்காயம், தக்காளி,பூண்டு வதங்கிய பின்பு உதிர்த்த மீனை சேர்க்கவும், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும், காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.பிரட்டி விடவும், உப்பு சரி பார்க்கவும்.

அரைத்த தேங்காய் மிளகாய் கலவையை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,புளிப்பு தேவைப்பட்டால் அரை எலுமிச்சை பழம் பிழியவும், நன்கு பிரட்டி விடவும்.

.
சுவையான சுறாப்புட்டு ரெடி.

இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும், மீதியானால் ப்ரெட்டில் வைத்து சாண்ட்விச் செய்தும் சப்பாத்தியில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.

என்னுடைய மற்றொரு சுறாப்புட்டு ரெசிப்பியை இங்கு காணலாம்.



கூனி தட்டைபயறு கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்:
காய்ந்த கூனி இறால் - 2கைபிடியளவு
கத்திரிக்காய் -கால்கிலோ
தட்டைப்யறு -100கிராம்
வெங்காயம் -2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
பூண்டு பல் -4
குழம்பு மசாலா அல்லது மீன் மசாலா - 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் அரைத்தது - 3டேபிள்ஸ்பூன்
புளி - பெரிய நெல்லியளவு
உப்பு - தேவைக்கு
கூனி இறாலை மணம் வரும்படி சிவறாமல் வறுத்து கொள்ளவும்.தட்டை பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் பயறுடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உ.பருப்பு கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.

வறுத்த கூனி இறால், மசாலா தூள் சேர்க்கவும்,நன்கு பிரட்டி விடவும்.

வேக வைத்த தட்டை பயறு சேர்க்கவும்.


நன்கு பிரட்டி விடவும்.

புளிக்கரைசல் விடவும், உப்பு சரிபார்க்கவும்.நன்கு கொதிக்க விடவும்.மசாலா,புளி வாடை மடங்க வேண்டும்.


அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதிவரவும், சிம்மில் சிறிது வைத்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான கூனி தட்டைபயறு கத்திரிக்காய் ரெடி. இதனை ப்லைன் ரைஸ், சப்பாத்தி,அரிசி மாவு ரொட்டியிடனும் பரிமாறலாம்.வெஜ் சாப்பிடுறவங்க தட்டை பயறு கத்திரிக்காய் மட்டும் போட்டு இம்முறையில் செய்யலாம்.

No comments: