இன்றைய தினம், இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் அனைத்து நடுத்தர வர்க்கத்தினரும் உச்சரிக்கும் பெயர், 38 வயது அகிலேஷ். யார் இவர்? எப்படி ஒவ்வொரு வீட்டிலும் குடும்பப் பெயர் போல் ஆகிவிட்டார்?
சுதந்திர இந்தியாவில் முப்பத்தோரு வயதில் ஒரு மாநில முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர் அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் பிரஃபுல்ல குமார் மஹந்தா. 1985 ல் அவர் அஸ்ஸாம் முதல்வராக பதவியேற்ற போது நாடெங்கும் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக, இளைய சமுதாயத்திற்கு முன் மாதிரியாக விளங்கினார். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் அவரது புகழ் காலப்போக்கில் நீர்த்துப் போனது வேறு விஷயம்.
2012 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல், மார்ச் 15ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்க போகும் அகிலேஷ் யாதவ்தான். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முழக்கத்துடன், கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் இளைஞர் அமைப்பை வலுப்படுத்த நாடெங்கும் சுற்றி வரும் ராகுல் காந்தியை ஒரே ஒரு தேர்தல் மூலம் முந்திவிட்டார் அகிலேஷ்.
எப்படி முதல்வரானார்?
1989 ல் உத்தரபிரதேச மாநில முதல்வராக முலயாம் சிங் ஆட்சிக்கு வந்த போதே, தமிழகம் போல், உ.பி.யிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆரம்பித்து விட்டது. இடையில் சில காலம் பாஜக ஆட்சியில் இருந்தாலும் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுகுண் சமாஜும் இல்லாமல் அங்கே யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைதான்.
மூன்று முறை முதல்வராக இருந்த முலயாம் சிங்தான் இந்த தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அனைவரும் அவர்தான் முதல்வர் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அகிலேஷ் முன்னிறுத்தப்பட்டார். காரணம் இந்த தேர்தலின் வெற்றி தன்னுடைய மகனின் தீவிர களப்பணியால்தான் என்பதில் உறுதியாக இருந்த முலாயம், அதற்கு பரிசாக முதல்வர் பதவியைத் தந்திருக்கிறார்!
மைசூரில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்று, ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்துள்ள அகிலேஷிடம் உத்தரபிரதேச மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஐஐஎம் ல் பயிற்சி
பெற்ற மேலாண்மை வல்லுனரான அபிஷேக் மிஸ்ராவை முக்கிய துணையாக வைத்துக்கொண்டு, நவீன இந்தியாவின் வெற்றிகரமான முதல்வராக வருவாரா அல்லது மஹந்தா போல் கரைந்து விடுவாரா என்பது அடுத்த ஐந்தாண்டுகளில் தெரிந்து விடும்.
முலயாமும் கருணாநிதியும்…
வி.பி சிங் தலைமையிலான தேசிய முண்ணனியில் முக்கிய தலைவராக இருந்த கருணாநிதியுடன், முலயாம் சிங்கிற்கு 1989லிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. முலயாம் உள்ளிட்ட சோசலிஸ்டுகள் மீது இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு அதிக பற்றுதல் உண்டு என்பது புதிய விஷயமல்ல.
முலயாம் சிங்கின் இன்றைய அதிரடி முடிவு அகில இந்தியாவையும், குறிப்பாக வாரிசுகளை களம் இறக்கியுள்ள அரசியல் பிரமுகர்களை திரும்பி பார்க்க வைத்து விட்டது. அதே நேரத்தில் குருவி தலையில் பனங்காயை சுமத்தி விட்டாரோ என்றும் குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.
இந்த முடிவை அவர் செயல்படுத்திய விதம்தான் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களை அவர் கையாண்ட விதம், குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்திய நேர்த்தி, கிங் மேக்கர் காமராஜர் அன்று இந்திராவை பிரதமராக்கிய அரசியல் அனுபவத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் கருணாநிதி இந்த விஷயத்தில் ‘சோசலிஸ்டு நேத்தாஜி’ முலயாமிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கருணாநிதியின் தவறு
பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவை காங்கிரஸ் கட்சிக்குள் அழைத்து வந்ததை யாரும் குற்றமாக கருதவில்லை. அதே இந்திரா, நேருவுக்கு பின் பாரத பிரதமராக வந்த போதும் யாரும் குடும்ப ஆட்சி என்று கோஷம் எழுப்பவில்லை. அவரது ஆட்சியில் இளைய மகன் சஞ்சய் காந்தி பொதுச் செயலாளராக இருந்த போதோ, அல்லது இந்திராவிற்கு பிறகு மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமர் ஆன போதோ யாரும் குடும்ப ஆட்சி என்று குறை கூறவில்லை. இன்று நான்காம் தலைமுறையாக ராகுல் காந்தி பொதுச்செயலாளராக உள்ள காங்கிரஸ் கட்சிதான் குடும்ப ஆட்சியின் உச்சக் கட்டம்.
ஆனால் இரண்டாம் தலைமுறையான ஸ்டாலின் மாணவப் பருவத்தில் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே ‘குடும்ப ஆட்சி’ என்ற பழியை சுமந்து வரும் கருணாநிதியின் நிலை பரிதாபத்திற்குரியதுதான்.
இந்திராகாந்தியின் அடக்குமுறை மிசா கொடுமையில் மாநில முதல்வரின் மகன் என்ற பாரபட்சம் இல்லாமல் சிறைக்கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின் திமுகவில் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்கும் போதும் ‘குடும்ப ஆட்சி’ என்ற கோஷம், ஒரு சில சக்திகளால் தீண்டாமை குற்றம் போல் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்காகவே ஸ்டாலினின் அரசியல் பொறுப்புகள் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வந்துள்ளது.
தமிழக அரசியலில், விமர்சனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் கருணாநிதி. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்த இருவருக்கு மட்டுமே உண்டு. மாபெரும் மக்கள் சக்தியாக விளங்கிய எம்ஜியார் விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டார். இன்றைய முதல்வரோ தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி கையாள்வார் என்பது சாமானிய மக்களுக்கே நன்றாக தெரியும்!
இப்படி விமர்சனங்களுக்கு பயந்து, மகன் தானாக நிலை நிறுத்திக் கொள்ளட்டும் என்று, கருணாநிதி தடைபோட்டதன் விளைவு, மாணவர் பருவத்தில் கட்சி பணியாற்ற வந்து, 60 வயதில் திமுக இளைஞர் அணி பொறுப்பிலேயே இருக்கிறார் ஸ்டாலின்!
ஸ்டாலினும் அகிலேஷும்
ஸ்டாலினின் அனுபவத்தை ஒப்பிட்டால், அரசியலில் அகிலேஷ் ஒரு குழந்தை தான்..
மாணவர் திமுக என்று ஆரம்பித்து, மிசா, இளைஞர் அணி, சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், உள்ளாட்சி அமைச்சர், திமுக பொருளாளர் என நீண்ட அரசியல் அனுபவம் பெற்று பிறகும் துணை முதல்வர் அளவுக்கே உயர்ந்துள்ளார் ஸ்டாலின்.
இளைஞர் அணி, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் மாநிலத் தலைவர் என்று பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதல்வர் ஆகிவிட்டார் அகிலேஷ்.
மதிமுகவை ஆரம்பித்து இளைஞர்களின் எழுச்சியாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான திமுக நிர்வாகிகளை தனது கட்சிக்குள் வைகோ இழுத்துக் கொண்டிருந்த நெருக்கடியான காலத்தில், திமுக இளைஞர் அணிக்கு புத்துயிர் கொடுத்து திமுகவை பாதுகாத்தவர்களில் ஸ்டாலின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல தெற்கில் காணாமல் போகவிருந்த கட்சியை காப்பாற்றியவர் அழகிரிதான். மதிமுகவிலிருந்த மதுரை பொன் முத்துவை, அவரது கோஷ்டியோடு திமுகவுக்கு திரும்ப வைத்தது சாதாரண விஷயமா!
தொடர்ந்து வந்த 1996 இடைத்தேர்தலில் ரஜினியை இணைத்துக்கொண்டு, வைகோவின் எழுச்சிக்கு சாமர்த்தியமாக தடை போட்ட கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிய ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க இடம்தரவில்லை. உள்ளத்தில் எண்ணம் இருந்தாலும் விமர்சனங்களுக்கு பயந்து கொண்டு முடிவெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று கருணாநிதி இருந்த அதே நிலைதான், முலயாம் சிங்குக்கும். ஆனால் அவர் தயங்கவில்லை. துணிந்து ஒரு முடிவெடுத்துவிட்டார். விமர்சனங்களுக்குப் பதில் பாராட்டுக்கள் குவிகின்றன!
1996லேயே ஸ்டாலினை குறைந்தபட்சம் துணை முதல்வராக ஆக்கியிருந்தால் இன்றைக்கு திமுகவில் ஸ்டாலினா அழகிரியா என்ற கேள்வியே எழுந்திருக்காது.
எந்த வாரிசும் இல்லாத எம்ஜியார், தனக்குப் பிறகு அதிமுக எப்படி இருக்க வேண்டும் என கடைசி வரை சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் திமுகவுடன் அதிமுகவை இணைந்து விடலாம் என்ற ஒரு முயற்சியும் ஒரிஸ்ஸா முதல்வர் பட்நாயக்கின் தலைமையில் அரங்கேறியது. இந்த முயற்சியின் சாட்சியாக பட்நாயக், கருணாநிதி, எம்ஜியார் மூவரும் இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் முக்கிய இடத்தை பெற்றன.
எம்ஜியாரின் கடைசி காலத்தில், ஜெயலலிதா ராஜீவ் காந்தியை சந்தித்து ஆட்சியை கைப்பற்ற முயன்றது உள்ளிட்ட விஷயங்கள் அவரை பெருமளவில் மனதை பாதித்து விட்டது. அந்த நேரத்தில் பட்நாயக் போன்றவர்கள் இருந்திருந்தால் திமுக, அதிமுக ஒன்றாகி இருக்கக் கூடும். திராவிட பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட எம்ஜியாருக்கு ஜெயலலிதா தலைமையில் கட்சி செல்வது பிடிக்கவில்லை என்பது அந்த நேரத்திலிருந்த எம்ஜியாரின் அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும், கட்சியை விட்டு வெளியேற்றவில்லையே தவிர, ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தை முற்றிலும் எம்ஜியார் குறைத்துவிட்டார் என்பதுதான் உண்மையும் கூட.
கட்சிக்கு அடுத்த கட்ட தலைவர் என்பது எவ்வளவு முக்கியம், ஜனநாயக கட்சியாகவே இருந்தாலும் அடுத்த தலைவரை அடையாளம் காட்ட வேண்டியதன் அவசியத்தை எம்ஜியார் நன்றாகவே உணர்ந்திருந்தார். சரியான முடிவெடுத்து தன் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காததால், அவர் நினைத்தது போலவே அதிமுக இரண்டாக உடைந்ததும், அடுத்து நடந்த சம்பவங்களும் அதிமுகவின் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. எம்ஜியார் இருந்த அதே நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவும் இன்று இருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.
திமுகவைப் பொறுத்தவரை, முரசொலி மாறனின் ஆசியோடு வைகோ அடுத்த தலைவராக உருவெடுத்து வந்த நிலையில்தான் ‘தனக்கு பின் தனது மகனே’ என்ற ஆசை கருணாநிதிக்கு வந்தது. அந்த ஆசைக்கு வித்திடும் வகையில், ஸ்டாலின் நல்ல உழைப்பை கொடுத்து சாமானியனாகத்தான் கட்சிப்பணி ஆற்றி வந்தார்.
ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்து விட்டால் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்ற காரணத்தினால் தான் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் விரிசல் ஏற்பட்டு மதிமுக என்ற தனிக்கட்சி வரை சென்றது.
அன்று பாராளுமன்ற நாயகனாக இருந்த ‘வைகோ மத்தியிலும், ஸ்டாலின் மாநிலத்திலும்’ என்று பரஸ்பரம் செய்து கொண்டிருந்தால், வைகோ முன்மொழிய ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை கொடுத்து விட்டு, கருணாநிதி முலயாம் போல் மத்திய அரசியல் பார்வையாளராகவோ அல்லது அவருக்கு பிடித்த எழுத்துத் துறைக்கோ சென்றிருக்கலாம்
தவறை திருத்த முன் வருவாரா கருணாநிதி?
பெரிய வியாபார அல்லது விவசாய குடும்பங்களில் பெரியவர்கள், தாங்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே மகன்களுக்குள் பொறுப்பை கொடுத்து அவர்களை வழி நடத்திச் செல்வது இன்றைக்கும் இருக்கும் வழக்கம். தனது காலத்திலேயே தனது பிள்ளைகள் தனியாக முடிவெடுத்து திறமையாக வியாபாரத்தை, விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார்களா என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார்கள். நல்ல பிள்ளைகள் தந்தையின் அனுபவத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு மேலும் பெருமை சேர்க்கிறார்கள்.
அரசியலே குடும்பம், குடும்பமே அரசியல் என்று ஒட்டு மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பவர்களுக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் பொருந்தக் கூடியவைதான்.
திமுக என்ற பெரும் இயக்கம் சிதறாமல் வலுவாக இருக்க வேண்டுமானால் அடுத்த தலைவர் யார் என அடையாளம் காட்டப்பட வேண்டியது முக்கியம். அது ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்தான் என்று இருக்க வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் அதிமுகவை திறமையுடன் எதிர்கொள்ளக்கூடிய எவராக இருந்தாலும் அது திமுகவுக்கு நன்மையே.
அகிலேஷ் யாதவ், வெளி நாட்டில் படித்திருந்தாலும் மக்களோடு மக்களாக சகஜமாக எளிதில் பழகியதால்தான் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்று கட்சிக்கு வெற்றியை தேடித் தந்தார். நம்மில் ஒருவர் என்ற எண்ணம் மக்களுக்கு யார் மீது வருகிறதோ அவரே வெற்றித் தலைவராக உருவெடுக்கிறார். புதுவையில் ரங்கசாமியின் வெற்றி ரகசியமும் இதுதான். சைக்கிளில் , டீக்கடையில் சாதாரணமாக பார்க்கக்கூடிய வகையில்தான் அவருக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கம். அது தான் அவரை புதுவையின் ஆட்சிக் கட்டிலில், தனிக்கட்சி கண்ட மிகக் குறுகிய காலத்திலேயே ஏற்றியது.
கருணாநிதியின் மகன் என்ற காரணத்தை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இன்றைய திமுகவில் மக்களோடு மக்களாக எளிமையாக பழகுபவர், தமிழகம் முழுவதும் நன்றாக அறிமுகமானவர், அமைச்சராக ஊர் ஊராக திட்டங்களை திறமையாக நிறைவேற்றியவர் என்ற வகையில் ஸ்டாலின் அடுத்த தலைமைக்கு ஏற்றவராகவே தெரிகிறார்.
மீண்டும் ஒரு முறை ‘கருணாநிதியா – ஜெயலலிதாவா’ என்ற கேள்வியை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்ப மாட்டார்கள். இதைவிட ‘ஜெயலலிதாவா – ஸ்டாலினா’ என்ற கேள்விக்கு சுவாரஸ்யம் அதிகம். தேர்தலில் நல்ல பலனும் கிடைக்கும்.
எனவே ஆறாம் முறை முதல்வர் என்ற கனவை முடித்துக்கொண்டு திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற தெளிவான முடிவை அறிவிப்பதுதான், உரிய காலத்தில் செய்யாமல் விட்ட தவறை திருத்திக் கொள்வதாகவும் இருக்கும்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
என்ற குறளுக்கு, குறளோவியம் கண்ட கருணாநிதிக்கு யாரும் விளக்கம் சொல்ல தேவையில்லை. இப்போதாவது தன் மகன்களில் யாரை அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவெடுப்பாரா?
Sunday, March 11, 2012
முலாயம் சிங்கால் முடிந்தது கருணாநிதியால் முடியாமல் போனது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment