Friday, December 12, 2008

இந்திய அரசியல் நிலை- ஒரு கண்ணோட்டம்

அரசியல்'

அது ஒரு சாக்கடை.
அது ஒரு பிணம்தின்னும் கழுகுக்கூட்டம்.
அது ஒரு நாய்கள் (ம) நரிகளின் கூடாரம்.
அது ஒரு வெட்டிப்பேச்சு பேசுவோர் மன்றம்.
அது ஒரு மக்களை மாக்களாக்கும் முயற்சியின் வெற்றி.
அது தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்ளும் முயற்சி.
மனசாட்சியை விற்றவர்களுக்கு முதலிடம் அளிக்கப்படுமிடம்.

................இப்படி எத்தனை எத்தனையோ.

இத்தகைய நிலை ஏன் உருவாயிற்று? யார் இதற்குக் காரணம்? அனைவருக்கும் தெளிவாக தெரிந்ததுதான், அரசியல்வாதிகள் என்று.

'அரசியல்வாதிகள்', இவர்கள்தான், எத்தனை புத்திசாலிகள்; இவர்களின் திறமையை நிச்சயம் பாராட்டித்தான் தீர வேண்டும். எத்தனை கோடி மக்களானாலும் சரி, அத்துணை பேரையும் மடையர்களாக்கி தாம் நினைத்தை சாதித்துக் கொள்ளும் இவர்களை, பாராட்டித்தானே தீர வேண்டும். மக்களின் மறதியை, அவர்களுடய இயலாமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள், தேர்தல் நேரங்களில் அள்ளிவீசும் வாக்குறுதிகள்தான் எத்தனை!? அத்தனை வாக்குறுதிகளையும் இவர்கள் நிறைவேற்றியிருந்தால் இன்றைய இந்தியாவின் மக்கள்தொகையில் 40% பேர் நிலவுக்கு குடிபெயர்ந்திருப்பர்!!!!!!!!!!!!!!!!???????????

மன்னராட்சி காலம் :
இக்காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல் நிலை எப்படி இருந்தது? மக்களின் நிலையென்ன? நாட்டின் நிலையென்ன? மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றமிருந்ததா? உறுதியாக மக்களின் வாழ்க்கைமுறை அர்த்தமுள்ளதாக வும், முன்னேற்றப்பாதையாகவும்தான் இருந்தது. அவரவர் பண்பாடு, சம்பிரதாயம், வழிமுறை ஆகியவற்றிற்கு சரியான அங்கிகாரம் பெரும்பாலான மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கிடைத்தது. அவரவர் தொழிலை, அவரவர் சிரமேற் கொண்டு செய்தனர். ஆனால், மன்னர்களின் நடவடிக்கைகள்தான், திருப்திகரமானதாக இல்லை.

சிலரின் தன்னிச்சையான, எதேச்சதிகாரபோக்கில் செயல்படும்தன்மை மக்களை கொடுமைப்படித்தியது. சிலரின் நாடுபிடிக்கும் ஆசையினால், மக்களின் அமைதி பாதிக்கப்பட்டதோடில்லாமல், மக்களில் பெரும்பான்மையினோர் போரில் மாண்டனர். சிலரின் சுகபோக வாழ்க்கையினால், நிர்வாகத்தில் பல ஊழல்கள் நடைபெற்றன. ஒரு சிலர் மட்டும், ஒரு சிலர் குடும்பங்கள் மட்டும் என்றும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டுதான் இருந்தது. அவர்கள் மட்டும் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். மற்றவர்களை கொத்தடிமைகளாக நடத்தினர். இத்தகைய குறைகள் இருந்தாலும், இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது பொற்காலம்தான் (குறிப்பாக தமிழ்நாட்டிற்கு). மக்களிடம் வரிவசூல் செய்யும் விதமும், அதனை மக்களுக்காகவே செலவிடும் முறையும், இன்றைய அரசியல்வாதிகளுக்கு வேப்பங்காயாகத்தான் இருக்கும்.

எத்தனைதான் சிறப்புகள் இருந்தாலும், சிலபல குறைகள் இருந்தாலும், "மக்களனைவரும் சமம்" என்கிற கண்ணோட்டத்தில் மன்னராட்சி என்பது சாத்தியப்படாது. 'ஒருவரின் குடும்பம் மட்டும் ஆட்சி செய்வது' என்பது மற்றவர்களை முட்டாளாக மதிக்கும் செயல். எனவே மன்னராட்சி நடைமுறைக்கு உதவாது.சுதந்திரத்திற்கு முன் :
மன்னர்கள், தம் ஆட்சியை படிப்படியாக ஆங்கிலேயரிடம் இழந்து கொண்டிருந்த காலம். இந்தியா சிறிது சிறிதாக அடிமைத்தனத்தில் மூழ்கி, ஒருநாள் முழுவதுமாக மூழ்கிய காலம். சிப்பாய்கலகத்திற்குப் பிறகு தான் இந்தியாவின் விடுதலை விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயரத் தொடங்கியது. 'வெள்ளையரின் சுரண்டலை, ஏகாதிபத்தியத்தை அடியோடு வேரறுக்க வேண்டும்' என்ற எண்ணம் அனைவருடத்திலும் மேலோங்கியது. மிதவாதிகளும், தீவிரவாதிகளும் தத்தம் பாணியில் அறப்போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். இந்தியாவின் விடுதலை மட்டும்தான் அனைவரின்( சில விதிவிலக்குகளை மன்னிப்போம்) குறிக்கோளாக இருந்தது. ஆங்கிலேயருக்கோ, இந்தியாவில் கிடைக்கும் வருமானம்தான் குறிக்கோளாக இருந்தது. அதற்காக, அவர்கள் எதனையும் செய்யத்தயாராக இருந்தனர். பல நன்மைகளையும் செய்தனர் (இன்றை நிலையை ஒப்பிடும்போது).

அந்நியர் ஆட்சி :

"அந்நியர் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் நம்மிடம் மனிதத்தன்மையும், தன்மான உணர்வும் இல்லை என்பதாகத்தான் பொருளாகும். நமது திறமையின்மைக்கும், பலவீனத்திற்கும் நாமே ஒப்புதல் அளித்ததாகிவிடும். அந்நியர் ஆட்சியையும், அவர்களுடைய பாதுகாப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால் கொத்தடிமை களாக மாற நாம் தயார் என்றுதான் பொருளாகும்" -என்ற நிதர்சனமான உண்மையை அனைத்து தரப்பினரையும் அடையச்செய்தன பல புரட்சி இயக்கங்கள்.

அரசியலில் ஈடுபட்டிருந்த அத்துணை பேரும் பொதுநலமாக நடந்து கொண்டனர் (ஒருவரை தவிர்த்து). "நாடு விடுதலையடைய வேண்டும், நாம் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசித்திட வேண்டும், இந்தியா முன்னேற வேண்டும்" என்பதுதான் அவர்களின் உயிர்மூச்சாக இருந்தது. இதனில் முக்கியமாக, தனியாக அடிக்கோடிட்டு குறிப்பிடவேண்டியச் செய்தி, சுதந்திர வேட்கையில், இளைஞர்களின் பங்கு எவ்வாறிருந்தது என்பதுதான்.

சுதந்திர வேட்கையில் இளைஞர்களின் பங்கு :

எத்துணை, எத்துணை இளைஞர்கள், நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்தது. அவர்களனைவரும் தான் 'இந்தியாவின் தூண்கள்'. அவர்களால்தான் இந்தியா இத்தகைய நிலையிலாவதுள்ளது. ஆண்டு அனுபவித்த பிறகு செய்யும் தியாகத்தைவிட, இளமையிலேயே, அனைத்து இன்பங்களையும் துறந்து, 'நாட்டின் விடுதலையே' உயிர்மூச்சாக கொண்டு, நாட்டிற்காகவே உழைத்த, வாழ்ந்த, வீழ்ந்த இளைஞர்கள்தான் உண்மைத் தியாகிகள். உரக்கச் சொல்லுகிறேன் இளைஞர்கள்தான் உண்மைத்தியாகிகள்.

இன்னொன்றையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அது, அனைத்து இளைஞர்களிடமும் காணப்பட்ட அரசியல் பற்றிய விழிப்புணர்வு. அதுவும் தெளிவான கண்ணோட்டத்துடன் கூடிய விழிப்புணர்வு. நாட்டில் நடக்கும் அனைத்து செய்திகளையும் அவர்கள் அறிந்துருந்தனர். அனைத்து அரசியல்வாதிகளைப் பற்றிய முழுத்தகவல் அவர்களுக்கு தெரிந்திருந்தது. நன்மை, தீமைகளை நடுநிலையாக அலசி ஆராய்ந்தனர். தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக எதிர்த்தனர். அதற்குக் காரணமானவர்களையும் கடுமையாக தண்டித்தனர். நாட்டின் முதுகெலும்பே தாங்கள் தான் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ற படி திறம்பட செயல்பட்டனர். நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது தாங்கள் தான் என்பதையும் அறிந்திருந்த அவர்கள் அரசியலில்
முக்கியத்துவம் பெற்றனர்.

சுதந்திரத்திற்குப் பின் :

இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. அன்று, அரசியலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தனர். மூத்தவர்கள், அனுபவமுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இளைஞர்கள் அவர்களுக்கு வழிவிட்டனர் துரதிருஷ்டவசமாக. "வயதில் மூத்தவர்களூக்குத்தான் அனுபவம் இருக்கும், அவர்களால்தான் திறமையாக ஆட்சி செய்திட முடியும், அனைத்து சூழ்நிலைகளிலும் நிலைதடுமாறாமல் ஆட்சிசெய்வர்" என்ற பேச்சுக்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. நாடு நத்தை வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க சில தலைவர்கள் வாரிசு அரசியலை உருவாக்குவதிலும், சொத்து சேர்ப்பதிலும் முனைப்புடன் இருந்துவிட்டனர். இவர்களுடைய ஒட்டுமொத்த அனுபவமும், திறமையும் மக்களின் பணத்தை சூறையாடுவதற்கே பெரிதும் பயன்பட்டது, (பயன்படுகிறது).

இத்தகைய சூழ்நிலையிலும் இளைஞர்களின் பங்கு குறிப்பிடும்படியாகவே இருந்தது (1960-1980 களில்). அவ்வப்போது நாட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி தம்முடைய எதிர்ப்பை காட்டி வந்த இவர்கள் மெல்ல அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தனர். ஆனால், இவர்களோ நாட்டின் முன்னேற்றத்தை குப்பையில் போட்டுவிட்டு, தம்முடைய முன்னேற்றத்தில் கண்ணுங்கருத்தமாக இருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் மிகவும் ஏழையாக இருந்த இவர்கள், இன்று இந்தியாவையே விலைக்கு வாங்கும் அளவுக்கு பெரும் பணக்காரகளாக மாறியுள்ளனர். எங்கிருந்து வந்தது இவர்களுக்கு அத்துணை பணம்? ஈசன்தான் அறிவான்.

கோஷ்டிப்பூசலையும், ஜாதிக்கலவரங்களையும் தமக்கு சாதகமாக தூண்டிவிட்டு, நாட்டுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவரைப்பற்றியொருவர் கீழ்த்தரமாக விமர்சிப்பதும், அவருக்கு எதிராக சதிசெய்வதும்தான் "இவர்களின் பெரும்பான்மையான பணி. நாடு சுதந்திரமடைந்து இத்துணை ஆண்டுகள் ஆகியும், மக்களின் வாழ்க்கை முறையில் எந்தவித மாற்றமும், முன்னேற்றமும் இல்லையே" என்று சிந்திக்க வேண்டிய இவர்கள், இத்தணை ஆண்டுகால ஆட்சியில் நான் சேர்த்த சொத்துக்கள் இவ்வளவுதானா? என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

courtesy : © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை
http://tamilcafe.net/0805/04/indianPolitics.html

No comments: