Saturday, December 27, 2008

ஏசி அறை: ஜில்லென ஒரு ஆபத்து

இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல் ஆரோக்கியம் பாதிப்படும்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில், அலுவலங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டருக்கு ஏசி தேவைப்படுகிறது. அதனால் ஏசி இல்லாத அலுவலங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

எனினும் ஒருசில அலுவலகங்களில் ஏசி முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இது உடலுக்கு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும்.

வெளியில் உள்ள தட்ப வெப்பத்துக்கு பழகிப் போன நம் உடல், அலுவலகத்தில் குளிர்ந்த தட்ப வெப்பநிலையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் உடலில் சில அசவுகரியங்கள் நேரிடலாம்.

அலுவலகத்தில் ஏசி முறையாகப் பராமரிக்கப்படாததாலும் அவ்வப்போது சுத்தப்படுத்தாததாலும், அவை பாக்டீரியா வாழும் இடங்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அலுவலக ஏசி அறைக்குள் புகை பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களோ வந்து சென்றால், அவர்கள் மூலம் தொற்றுக் கிருமிகள் அறைக்குள் பரவ வாய்ப்புள்ளது.

தரை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்களில் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள், வெளியே செல்லாமல் நம் மீது பரவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் காய்ச்சல், இருமல், நிமோனியா, தலைவலி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு, சாதாரண நோய்யைப் போலவே சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய சுகாதாரக் கேடுகள் தொடர்ந்தால், உடலில் பெரிய தாக்கத்தை அவை ஏற்படுத்தக்கூடும்.
(மூலம் - வெப்துனியா)

No comments: