Sunday, February 19, 2012

சுவை தரும் சொதிக் குழம்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத் திருமணங்களில் சொதிக்குழம்பு எப்படியிருந்தது என்பதை வைத்துத்தான் முழு கல்யாண விருந்தையே எடை போடுவார்கள்... இதோ சுவையான சொதிக் குழம்பு செய்முறை!

தேவையான பொருள்கள்

தேங்காய் - 1, கத்தரிக்காய் - 2, முருங்கைக்காய் - 1, கேரட் - 1, பட்டர்பீன்ஸ் - 50 கிராம், பட்டாணிப் பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய்- 2, பச்சை மிளகாய் - 2, சிறிய வெங்காயம் - 6, இஞ்சி- சிறிய துண்டு, பூண்டு - 5 பல், எலுமிச்சம் பழம்- 1, கடுகு, உ.பருப்பு, வற்றல், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு தம்ளர் நீர் விட்டு அரைக்கவும். பின் அதைப் பிழிந்து பால் எடுக்கவும். இந்த முதல் பாலை தனியாக பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். சக்கையை மீண்டும் இரு முறை அரைத்து பால் எடுத்து தனித்தனி பாத்திரத்தில் வைக்கவும்.

காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், உரித்த பூண்டு, இஞ்சியை வதக்கிக் கொள்ளவும். மூன்றாவதாக எடுத்த பாலில் காய்கறிகளை வேகவைக்கவும். வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை அதில் சேர்த்து வேகவிடவும். கொஞ்சம் தேங்காய்த் துருவலில் இரண்டு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேர்க்கவும். கொதிக்கும் பொழுது அதனுடன் முதலாவது எடுத்த பாலைச் சேர்க்கவும். இதனைக் கொதிக்கவிடக் கூடாது. லேசாக நுரைத்து வரும் போது இறக்கி விடவும். பின்னர் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் இவற்றைத் தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குழம்பில் விடவும். சுவையான சொதி தயார். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வாழைக்காய் சிப்ஸ், இஞ்சித் துவையல் போன்றவற்றின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்!

-ரா.சுப்புலட்சுமி, தூத்துக்குடி

No comments: