Tuesday, February 28, 2012

கல்யாண விருந்து சாப்பாடு

கோதுமை பாயசம்!

தேவை: கோதுமை - 1 கப், வெல்லம் - 3/4 கிலோ, நெய் - சிறிதளவு, முற்றிய தேங்காய் -2, (தேங்காய்ப் பால் 3 முறை), ஏலப் பொடி - 1 சிட்டிகை, முந்திரி, திராட்சை - தேவையான அளவு.

செய்முறை: கோதுமையை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்து தேங்காய் 3ம் பால் விட்டுக் குழைய விடவும். வெல்லம் சேர்த்து நன்றாகச் சுருண்டு வரும் வரை கிளறவும். அதில், இரண்டாம் பால் சேர்த்து, ஒரு கொதி வந்தபின் இறக்கி வைத்து முதல் பாலைச் சேர்க்கவும். ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

அவல் பாயசம்!

தேவை: அவல் - 1 கப், சர்க்கரை - 2 1/2 கப், பால் - 1 1/2 லிட்டர், ஏலப் பொடி -1 சிட்டிகை, நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு.

செய்முறை: நன்றாக அலம்பிய அவலை நெய்யில் வறுத்து, தண்ணீர் தெளித்து குழைய வேகவிடவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து சுருளக் கிளறவும். பாலைக் காய்ச்சிக் குறுக்கவும். இரண்டையும் சூடாகக் கலந்து ஏலப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

இளநீர் பாயசம்:

தேவை: இளநீர் வழுக்கையுடன் - 1, தேங்காய்ப் பால் - 1 கப், பால் - 1 லிட்டர், சர்க்கரை - தேவையான அளவு ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:இளநீரைத் தனியாக எடுத்து வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கவும். ஒரு லிட்டர் பாலை நன்றாகக் காய்ச்சிக் குறுக்கி சர்க்கரை சேர்க்கவும். தேங்காய்ப் பால், வெட்டி வைத்துள்ள வழுக்கையும் சேர்த்துப் பின் பரிமாறும் அளவுக்கு இளநீரையும் ஏலப்பொடியும் சேர்க்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.

தேங்காய்ப் பால் பாயசம்(சதசதயம் கேரளா)

தேவை : தேங்காய்த் துருவல் - 3 கப், சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி அரிசி - 1 கப், நெய் - சிறிதளவு, வெல்லத்தூள் - 1/2 கிலோ, ஏலக்காய் - 1 சிட்டிகை முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை: அரிசியை நெய்யில் வறுத்து, அதில் தேங்காய் மூன்றாம் பாலைச் சேர்த்து குழைய வேகவிடவும். அதில் வெல்லம் சேர்த்துப் பூரணம் போல் திரண்டு வரும் வரை கிளறவும். பின் இரண்டாம் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்தபின், பல் பல்லாக வெட்டிய தேங்காயையும் முந்திரி, திராட்சையையும் நெய்யில் வறுத்துப் போடவும். தேவையெனில் நேந்திரம் பழத் துண்டுகளும் சேர்க்கலாம்.

சக்கப்பிரதமன்

தேவை: நன்றாகப் பழுத்த பலாச்சுளை - 10, வெல்லம் - 1/2 கிலோ, சுக்குப்பொடி, ஏலப்பொடி - தலா 1 சிட்டிகை, தேங்காய்ப் பால் - 1/2 கப், நெய், முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

பலாச்சுளையை துண்டுகளாக வெட்டி நெய்யில் வதக்கி, வெல்லம் சேர்த்து சுருண்டு வரும் வரை கிளறவும். பின் தேங்காய்ப் பால் சேர்க்கவும். சுக்குப் பொடி, ஏலப்பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குடைமிளகாய் தயிர்ப் பச்சடி

தேவை: குடைமிளகாய் -100 கிராம், தயிர் - 2 கப், தேங்காய் - 1/2மூடி, பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறு துண்டு. தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை:

குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை பச்சை மிளகாய், இஞ்சியுடன் மைய அரைத்து தயிரில் சேர்க்கவும். குடைமிளகாயும், உப்பும் சேர்த்து எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும். குடைமிளகாயை வதக்கியும் சேர்க்கலாம்.

பூந்தி தயிர்ப் பச்சடி

தேவை: காராபூந்தி - 1 கப், தயிர் - 2 கப், தேங்காய் - 1/2 மூடி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, சர்க்கரை - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தாளிக்க: கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்து தயிரில் கலக்கவும். பின் உப்பு சர்க்கரை சேர்த்து தனியாக வைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறும் சமயத்தில் பூந்தி சேர்த்துப் பரிமாறவும்.

தக்காளி தயிர்ப் பச்சடி!

தேவை: பெங்களூர் தக்காளி - 2, தயிர் - 2 கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - சிறிதளவு. தாளிக்க- எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை:தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிரில் பச்சை மிளகாய் விழுது, உப்பு, தக்காளி, சர்க்கரை சேர்த்து எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டிப் பரிமாறவும்.

மிக்ஸட் வெஜிடபிள் தயிர்ப் பச்சடி!

தேவை: நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், குடை மிளகாய் கலந்து - 1 கப், தயிர் - 2 கப், தேங்காய் - 1/2 மூடி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, தாளிக்க - கடுகு, கறிவேப் பிலை, பெருங்காயம், எண்ணெய் உப்பு - தேவையான அளவு

செய்முறை: தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து, தயிரில் சேர்க்கவும். பின், உப்பு, காய்கறிகளைச் சேர்த்து எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும்.

ஸ்வீட் பச்சடி மாங்காய்!

தேவை: மாங்காய் - 2, வெல்லம் - 1/4 கிலோ, உப்பு - 1 சிட்டிகை தாளிக்க: கடுகு, வரமிளகாய், பெருங் காயம், எண்ணெய்

செய்முறை: மாங்காயைத் தோலுடன் சிறு துண்டங்களாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து மாங்காய் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேக வைத்து வெந்ததும் வெல்லம், உப்பு சேர்த்துக் கெட்டியானதும் பரிமாறவும்.

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி!

தேவை: வெண்டைக்காய் - 1/4 கிலோ, வெல்லம் - 1/4 கிலோ, புளி - நெல்லிக்காயளவு உப்பு - தேவையான அளவு,தாளிக்க:கடுகு, வர மிளகாய், பெருங்காயம், எண்ணெய்

செய்முறை: எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து சிறு துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். பிறகு புளி கரைத்து விட்டு நன்கு கொதி வந்ததும் உப்பு, வெல்லம் சேர்த்துப் பரிமாறவும்.

நார்த்தங்காய் ஸ்வீட் பச்சடி!

தேவை: பழுத்த நார்த்தங்காய் - 1 பெரியது, வெல்லம் -1/4 கிலோ, உப்பு - சிறிதளவு தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய்

செய்முறை: நார்த்தங்காயை சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கி இலேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும். பின் உப்பு, வெல்லம் சேர்த்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

அன்னாசிப் பச்சடி!

தேவை: நன்கு பழுத்த அன்னாசி - 1, சர்க்கரை - 1/4 கிலோ, ஏலப்பொடி - 1 சிட்டிகை, நெய் -சிறிதளவு, முந்திரி, திராட்சை - தேவையானது

செய்முறை: அன்னாசியைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கிப் பின் சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் ஏலப்பொடி சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

மிக்ஸட் ஃப்ரூட் பச்சடி!

தேவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள், சாத்துக்குடி, பப்பாளி, மாம்பழம், அன்னாசி, திராட்சை போன்றவை - 2 கப், தூள் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி - 1 சிட்டிகை,உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: பொடியாக நறுக்கிய பழங்களைப் பொடித்த சர்க்கரையுடன் கலந்து ஏலப்பொடி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

மாங்காய் கோசம்பரி!

தேவை: பாசிப் பருப்பு - 1 கப், மாங்காய் - 2, இஞ்சி - 1 துண்டு, தேங்காய்த் துருவல் - 1/4 கப், பச்சை மிளகாய் -2, தாளிக்க: கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 1 மூடி, கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை: பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் கலந்து வைக்கவும். பாசிப் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து இலேசாக வெந்தவுடன் இந்தக் கலவையைக் கலந்து உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துத் தாளித்துப் பின் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

பருப்பு கோசம்பரி!

தேவை: கடலைப் பருப்பு - 1கப், சர்க்கரை - 1 சிறிய கரண்டி, தேங்காய்த் துருவல் - 1/4 கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை: கடலைப் பருப்பை ஊறவைத்து அரைவேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். பின் தேங்காய்த் துருவல் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும். தேவையெனில் சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்.

வெங்காயத்தாள் கோசம்பரி

தேவை: வெங்காயத்தாள் - 1கட்டு, பாசிப் பருப்பு - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, எலுமிச்சை - 1 மூடி, கொத்துமல்லி - சிறிது, தாளிக்க : எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: பாசிப் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து இலேசாக வெந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து எலுமிச்சைப் பிழியவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

வெஜிடபிள்கோசம்பரி!

தேவை: வெள்ளரிக்காய், கேரட், குடை மிளகாய் - துருவியது தலா 1 கப், உப்பு சேர்த்து வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், தேங்காய்த் துருவல் - 1/4 கப், எலுமிச்சை - 1 மூடி, பச்சை மிளகாய், இஞ்சி - பொடியாக நறுக்கியது - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: துருவிய காய்கறிகள், பட்டாணி, தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும்.

அவரைக்காய் கறி!

தேவை: அவரைக்காய் - 1/2 கிலோ, தேங்காய்த் துருவல் - 1/2 கப், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, வரமிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க. பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்- தேவையான அளவு

செய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய்த் தாளித்து கறிவேப் பிலை, பெருங்காயம் சேர்த்து அவரைக்காயைப் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக விடவும். உப்பு சேர்த்து நன்றாக வெந்த பின் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் மஞ்சூரியன்!

தேவை: காலிஃப்ளவர் - 1 (பெரிய பூ), கடலை மாவு, அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 1 தேக் கரண்டி, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: காலிஃப்ளவரை துண்டு துண்டாக நறுக்கி வெந்நீரில் சுத்தம் செய்ததும், அரை வேக்காடு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். மாவுகளில் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி சேர்த்து ஈரத்துடன் காலிஃப்ளவரை நன்கு கலந்து விடவும். காலிஃப்ளவரில் மாவு நன்றாகக் கலந்ததும் எண்ணெயில் மிதமானத் தீயில் பொரித்தெடுக்கவும்.

பருப்புசிலி!

தேவை: பீன்ஸ், கொத்தவரை, அவரை, குடைமிளகாய்- ஏதாவது ஒன்று பொடியாக நறுக்கி வேகவைத்தது - 1 கப், கடலைப் பருப்பு, து.பருப்பு -தலா 1/4 கப், வர மிளகாய் - 4, மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்து வர மிளகாயுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இக் கலவையை ஆவியில் வேகவைத்து உதிரியாக உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வேகவைத்த காயுடன் உதிர்த்த பருப்பையும் சேர்த்து நன்கு கலந்து, கிளறிப் பரிமாறவும்.

சேனைக்கிழங்கு ரோஸ்ட்!

தேவை: சேனைக் கிழங்கு - 1/4 கிலோ, புளிக் கரைசல் - 1 கப், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் பொடி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து அரைவேக்காடு வேகவைக்கவும். வெந்தவுடன் நீரை வடிகட்டி சூடாக இருக்கும் போதே மிளகாய்ப் பொடி கலந்து பிசிறவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சேனைக்கிழங்கு கலவையைக் கொட்டி குழையாதவாறு சிறு தீயில் நன்கு மொறு மொறுவென வதக்கவும்.

மலபார் அவியல்!

தேவை: கேரட், பீன்ஸ், புடலங்காய், பரங்கிக்காய், காரமணிக்காய், சேனைக் கிழங்கு, முருங்கைக்காய் ஒவ்வொன்றும் நீளவாக்கில் நறுக்கியது - 1 கப், பட்டாணி - 1 கப், தேங்காய் -2, பச்சை மிளகாய் - 5, தயிர் - 1/2 கப்,தேங்காய்ப் பால் - 1 கப்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை - சிறிதளவு,

செய்முறை: காய்களை பட்டாணியுடன் குழையாமல் உப்பு சேர்த்து வேகவைத்து வடிக்கவும். தேங்காயை பச்சை மிளகாயுடன், தேங்காய்ப் பால் சேர்த்து கெட்டியாக மைய அரைத்து, தயிரைக் கலக்கவும். எண்ணெயைச் சூடாக்கி கறிவேப்பிலை சேர்த்து அரைத்த கலவையைக் கொட்டவும். இலேசாகக் கொதி வந்ததும் வெந்த காய்களைச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

எரிசேரி!

தேவை: சேனைக்கிழங்கு - 1/4 கிலோ, கறுப்பு/வெள்ளை காராமணி -1/2 கப், வரமிளகாய் - 4, தேங்காய் - 1, தேங்காய் எண்ணெய் - தாளிக்க, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேனைக்கிழங்கை ஓர் அங்குல அளவில் செதுக்கிக் கொண்டு, முதல் நாள் இரவு ஊறவைத்த காராமணியுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். மிளகாயையும், தேங்காயையும் கெட்டியாக மைய அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைக் கொட்டவும். இலேசாகக் கொதி வந்ததும் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டுச் சூடாகப் பரிமாறவும்.

ஓலன்!

தேவை: நீளமாக நறுக்கிய பரங்கிக்காய் - - 1 கப், வேகவைத்த காராமணி - 1/2 கப், தேங்காய்ப் பால் - 3 கப், தேங்காய் - 1 மூடி, பச்சை மிளகாய் - 3, சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை: பரங்கிக்காயையும் காராமணியையும் குழையாமல் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைத் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இந்த அரவையைக் கொட்டி இலேசாகக் கொதி வந்ததும் வெந்த காயையும், காராமணியையும் கொட்டிக் குழையாமல் நன்கு புரட்டவும். சிறிது தேங்காய் பால் சேர்த்துப் பின் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு காரக்கறி!

தேவை: உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், தக்காளி - 1/4 கிலோ, மிளகாய்ப் பொடி (அ) சாம்பார்ப் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் , கடுகு. உ. பருப்பு, க.பருப்பு - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துப் பின் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய்ப் பொடி சேர்த்து மிதமானத் தீயில் நன்கு சுருள வதக்கவும். பின் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும். இறக்கியதும் கொத்து மல்லித் தூவி பரிமாறவும்.

பூசணிக்கா புளி கூட்டு!

தேவை: பூசணிக்காய் - டைமன் சைசில் 1 செ.மீ. அளவில் நறுக்கியது 2 கப், வேர்க் கடலை - 1/4 கப், தேங்காய்த் துருவல் - 1 கப், தனியா, க.பருப்பு, உ.பருப்பு - தலா 2 டீஸ்பூன், புளிக்கரைசல்- 1 கப், பெருங்காயம் - 3/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வர மிளகாய் - 2, தாளிக்க - தேங்காய் எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.

செய்முறை: பூசணிக்காயையும், வேர்க்கடலையையும் உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு வரமிளகாய், தனியா, உ.பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவற்றை நன்றாகச் சிவக்க வறுத்து தேங்காய்த் துருவலுடன் கெட்டியாக அரைக்கவும். புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கொதி வந்ததும் வெந்த காயையும், அரவையையும் சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு கொதி வந்ததும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும்.

திருநெல்வேலி சொதி!

தேவை: கேரட், பீன்ஸ், பூசணிக்காய், கத்தரிக்காய், குடைமிளகாய் நறுக்கியது - தலா 1 கப், தேங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, கொத்துமல்லி- சிறிதளவு, உப்பு - தேவையானது, தாளிக்க: எண்ணெய், சோம்பு, இலவங்கம் - சிறிதளவு

செய்முறை: எணணெயில் சோம்பு, இலவங்கம் தாளிக்கவும். கறிகாய்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, பச்சை மிளகாயுடன் வதக்கவும். பின் தேங்காய்ப் பாலில் உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

வெஜிடபிள் புலவ்!

தேவை: பாசுமதி அரிசி - 2 கப், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், நூக்கல், நீளவாக்கில் நறுக்கிய கலவை - 1 கப், தண்ணீர் - 2 கப், நெய் - 1 கரண்டி, எண்ணெய்- சிறிதளவு. தாளிக்க : பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு. இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், புதினா இலைகள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (மெலிதாக நறுக்கவும்).

செய்முறை: ஓர் அடிகனமான பாத் திரத்தில் எண்ணெய் விட்டு, பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு தாளிக்கவும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது இடவும். சிறிதளவு நெய் சேர்த்து இலேசாகப் புரட்டவும். பின்பு தண்ணீர், உப்பு சேர்த்து பாசுமதி அரிசி போட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும். அடுப்பில் நேரடியாகச் செய்வதானால் அடிக்கடி இலேசாக உதிர்ப்பது போல் கிளறி விட்டு, நன்கு வெந்ததும் புதினா இலைகளைப் போட்டுப் பின் பரிமாறவும்.

மாங்காய் சாதம்!

தேவை: மாங்காய்த் துருவல் - 2 கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி -1/2கப், கேரட் துருவல் - 1/4 கப், பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு. உதிராக வடித்த சாதம் -2 கப்.

செய்முறை: எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாங்காய்த் துருவல், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கி சாதத்தைக் கொட்டி உதிர் உதிராகக் கலக்கவும். இறக்கி வைத்து கேரட் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

புதினா சாதம்!

தேவை: புதினா - 2 கட்டு, பச்சை மிளகாய் - 5, இஞ்சி -1 துண்டு, புளி - நெல்லிக்காயளவு, தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, உப்பு - தேவையான அளவு, வடித்த சாதம் - 2 கப்.

செய்முறை:வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சி, சுத்தம் செய்த புதினா ஆகியவற்றை நன்கு வதக்கி உப்பு, புளி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். வடித்த சாதத்துடன் கடுகு, உ.பருப்பு, க. பருப்பு, பெருங்காயம் தாளித்து அத்துடன் அரைத்த கலவையை உதிராகக் கலந்துப் பரிமாறவும்.

வாங்கிபாத்!

வாங்கிபாத் பொடிக்கு: வர மிளகாய் - 5, தனியா, உ.பருப்பு, க.பருப்பு - தலா 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, லவங்கம் - 5, மராட்டிமொக்கு - 2, பெருங்காயம் - 1 சிட்டிகை. தேவை:கத்தரிக்காய் - 1/4 கிலோ, புளிக்கரைசல் - 1/2 கப், மஞ்சள் பொடி 1 சிட்டிகை. உப்பு- தேவையானது, சாதம் -2 கப், வெங்காயம்-2, தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்து மல்லி.

செய்முறை: வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டியவற்றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து சிறிது வதங்கியதும் புளிக்கரைசல் பொடி, உப்பு சேர்த்து சுருள வதக்கவும். சாதம் சேர்த்து உதிராகக் கிளறிப் பரிமாறவும்.

கறிவேப்பிலை சாதம்!

தேவை: வடித்த சாதம் -2 கப், கறிவேப்பிலை - 2 கப், உ.பருப்பு, க.பருப்பு, து. பருப்பு - தலா 1 ஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், வர மிளகாய் - 4, பெருங்காயம் - 1 சிட்டிகை. தாளிக்க: எண் ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய், மிளகு மற்றும் பருப்புகளை சிவக்க வறுக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதனை உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். பின் வடித்த சாதத்தில் கடுகு, பெருங்காயம், உ.பருப்பு, க. பருப்பு தாளிக்கவும். அதில் பொடியைச் சேர்த்து நன்கு உதிராகக் கலக்கவும். மேலாக நெய்யில் முந்திரி வறுத்தும் சேர்க்கலாம்.

புளியோதரை!

தேவை: புளிக்கரைசல் கெட்டியாக - 2 கப், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு. மேல் பொடி: வர மிளகாய் - 4, தனியா, க.பருப்பு - தலா 1 ஸ்பூன், உ.பருப்பு - 1/2 ஸ்பூன், வெந்தயம், மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய்- 1 கப், வறுத்த வேர்க் கடலை - 50 கிராம், வடித்த சாதம் - 2 கப், வெல்லம் - நெல்லிக்காயளவு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.

உள்பொடி: வர மிளகாய் - 6, தனியா - 2 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உள்பொடிக்கு, மேல் பொடிக்குத் தேவையானவற்றை மிதமானத் தீயில் வறுத்து தனித் தனியே பொடிக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வர மிளகாய், உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்துப் பின் புளிக்கரைசல், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். உள்பொடி, வெல்லம் சேர்த்து, நன்கு கொதித்ததும், வடித்து ஆற வைத்த சாதத்தில் இக் கலவையைத் தேவையான அளவு நன்கு கலந்து மேல்பொடியை தூவிப் பரிமாறவும்.

அவல் கேசரி!

தேவை: அவல் - 1 கப், சர்க்கரை - 2 1/2 கப், நெய் - 1/2 கப், பால் - 2 கப், ஏலப்பொடி, முந்திரி, திராட்சை - சிறிதளவு

செய்முறை: நன்கு கழுவி சிறிது ஊறவைத்த அவலை நெய்யில் வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பால் சேர்த்து குழைய வேகவிடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்துப் போட்டு ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

கல்கண்டு பாத்!

தேவை: அரிசி - 1 கப், சர்க்கரை - 2 1/2 கப், பால் - 5 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை, நெய் - 1/2 கப், ஏலப்பொடி, பச்சை கற்பூரம், முந்திரி, திராட்சை - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு சுத்தம் செய்து, ஈரத்துடன் நெய்யில் வதக்கி பாலில் நன்கு குழைய வேகவிடவும். சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறி, குங்குமப்பூ, ஏலப் பொடி, பச்சை கற்பூரம் நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை பொரித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

அசோகா அல்வா!

தேவை: பாசிப் பருப்பு - 1 கப், கோதுமை மாவு - 1/2 கப், சர்க்கரை - 5 கப், நெய் - 2 கப் முந்திரி, திராட்சை, ஏலப்பொடி - தேவையான அளவு சிவப்பு கலர் - தேவைப்பட்டால்

செய்முறை: கோதுமை மாவை நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை நிறைய தண்ணீர் விட்டு குழைய நீர்க்க வேகவைத்துக் கொள்ளவும். பிறகு கோதுமை மாவில் அதைக் கொட்டி கட்டி தட்டாமல், நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். இந்தக் கலவை பளபளவென்று வரும் போது சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் ஏலப் பொடி, கலர் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.

காசி அல்வா!

தேவை: பூசணிக்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - 2 கப், சிவப்பு கலர் - 1 சிட்டிகை (தேவைப்பட்டால்), வெள்ளரி விதை - தேவையான அளவு, நெய், முந்திரி, திராட்சை- தேவையான அளவு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம்- சிறிதளவு

செய்முறை: பூசணிக்காய்த் துருவலை கண்ணாடிப் பதம் வரும் வரை நன்றாகத் தண்ணீரில் வேகவைத்து, ஒரு மெல்லியத் துணியில் நன்கு பிழிந்தெடுக்கவும். பிறகு நெய்யில் நன்றாக ஈரம் வற்ற வதக்கி, சர்க்கரை சேர்த்து, சுருளக் கிளறவும். இறக்கியபின் ஏலம், பச்சைக் கற்பூரம், நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை சேர்த்துப் பரிமாறவும்.

அக்கார வடிசல்!

தேவை: அரிசி - 1 கப், துருவிய வெல்லம் - 21/2 கப், பால் - 5 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை நெய் - 1 கப், ஏலப்பொடி, முந்திரி திராட்சை, பச்சைக் கற்பூரம் - தேவையான அளவு

செய்முறை: அரிசியைப் பாலில் நன்கு குழைய வேகவிடவும். இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் குங்குமப்பூ, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை தாளித்துப் பின் பரிமாறவும்.

பதிர் பேணி!

தேவை: பதிர் பேணி - 5 வில்லைகள் (கடைகளில் கிடைக்கும்) பாதாம், முந்திரி அரைத்த விழுது - 1 மேசைக்கரண்டி, பால் - 1 லிட்டர், சர்க்கரை - 2 மேசைக் கரண்டி, கலர் இனிப்பு பூந்தி - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 1 மேசைக் கரண்டி, ஏலப்பொடி, குங்குமப்பூ - தலா 1 சிட்டிகை, பாதாம் எஸன்ஸ், கேசரி கலர் (தேவைப்பட்டால்).

செய்முறை: பாலை நன்கு சுண்டக் காய்ச்சவும். இதில் பாதாம், முந்திரி விழுது சேர்த்துக் கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து இறக்கி ஏலம், குங்குமப்பூ எஸன்ஸ் கலர் சேர்த்து குளிரூட்டவும். தட்டில் ஒரு பதிர்பேணியை இட்டு அதன் மேல் சிறிது பொடித்த சர்க்கரை, பூந்தி, பாதாம் பால் விட்டுப் பரிமாறவும்.

சாக்லெட் பர்ஃபி!

தேவை: கோவா - 1 கப், சர்க்கரை - 1 1/2 கப், சாக்லெட் பவுடர் - 1 மேசைக்கரண்டி, நெய் - சிறிதளவு, பாதாம், பிஸ்தா, முந்திரி- தேவைக்கேற்ப

செய்முறை: கோவாவை சர்க்கரையுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகக் கிளறவும். இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். இரண்டாம் பாகத்தை சாக்லெட் பவுடர் சேர்த்து, நன்கு கையால் பிசைந்து, கொட்டி வைத்துள்ள முதல் பாகத்தின் மீது பரப்பவும். டபுள் டெக்கர் சாக்லெட் பார் தயார். இதன் மீது பாதாம், முந்திரி, பிஸ்தா துருவலைத் தூவி அலங்கரிக்கலாம்.

கேரட் அல்வா (காஜர் அல்வா)!

தேவை: நன்கு சிவந்த கேரட் துருவல் - 2 கப், பால் - 1 லிட்டர், சர்க்கரை - 4 கப், ஏலப்பொடி, முந்திரி, திராட்சை, நெய்- தேவையான அளவு

செய்முறை: கேரட் துருவலை நெய்யில் வதக்கி பாலில் நன்கு வேகவிடவும். பின் சர்க்கரை சேர்த்து சுருளக் கிளறவும். இறக்கியபின் ஏலப்பொடி நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

மெதுவடை!

தேவை: உளுந்து - 1 கப், மிளகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது - தலா 1 ஸ்பூன், தேங்காய் பல்லாக நறுக்கியது - சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, கிரைண்டரில் மைய அரைக்கவும். மசிந்த பின்னும் 5 முதல் 10 நிமிடங் கள் கிரைண்டரில் அரைய விட்டால் மெதுவடை மெத்தென வரும். இதனுடன் உப்பு, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப் பல், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி எண்ணெயில் வடையாகத் தட்டவும்.

வெஜிடபிள் வடை!

தேவை: ஊறவைத்த உளுந்து - 1 கப், நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி கலந்தது - 1 கப், எண்ணெய், பெருங்காயம், உப்பு - தேவைக்கு.

செய்முறை: உளுந்தை தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். அதில் கறிகாய்களையும், உப்பு, பெருங்காயத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். காய்ந்த எண்ணெயில் மெல்லிய வடைகளாகப் பொரித்தெடுக்கவும்.

ஆமவடை!

தேவை: கடலைப் பருப்பு - 1 கப், வர மிளகாய் - 4, மஞ்சள் தூள், நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, - தேவையான அளவு, எண்ணெய் -பொரித்தெடுக்க.

செய்முறை: கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். இந்த விழுதில் அரை கரண்டி நெய், கறிவேப்பிலை, கொத்துமல்லி கலந்து எண்ணெய் காய்ந்ததும் வடை தட்டிப் பொரித்தெடுக்கவும்.

கீரை வடை!

தேவை: ஊறவைத்த உளுந்து - 1கப், பொடியாக நறுக்கிய கீரை - 1/2 கப், பச்சை மிளகாய், இஞ்சி - சிறிதளவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: உளுந்தை நன்கு வடித்து தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மெல்லிய வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும்.

தயிர் வடை!

தேவை: ஊறவைத்த உளுந்து - 1 கப், உப்பு - தேவையான அளவு, தயிர் - 6 கப், தேங்காய்த் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - பொரிக்க. அலங்கரிக்க: கேரட் துருவல், கொத்து மல்லி, மிளகாய்ப் பொடி, பூந்தி

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்க்காமல் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பச்சை மிளகாய், உப்பு அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும். எண்ணெயில் வடை தட்டி, முக்கால் வேக்காட்டில் எடுத்துக் கொண்டு சுடச்சுட தயிரில் போடவும். வடை ஊறிய தும் தட்டில் வைத்து மேலே சிறிது தயிர் கலவையை ஊற்றவும். கேரட், கொத்து மல்லி, மிளகாய்ப் பொடி, காராபூந்தி அலங் கரித்துப் பரிமாறவும்.

வாழைப்பூ வடை!

தேவை: சுத்தம் செய்து நறுக்கிய வாழைப் பூ - 1 கப், கடலைப் பருப்பு - 1 கப், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி- சிறிதளவு, எண்ணெய் - பொரித்தெடுக்க. பாசிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தேவையான அளவு

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். பாசிப் பருப்பைத் தனியாக ஊற வைக்கவும். ஒன்றாக ஊறவைத்தவற்றை அரைத்துக் கொண்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், வாழைப்பூ, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும். இதில் ஊறவைத்த பாசிப் பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, வடைகளாகப் பொரித்தெடுக்கவும்.

வாழைக்காய் சிப்ஸ்!

தேவை: முற்றிய வாழைக்காய் - 2, மிளகுத் தூள் -2 டீஸ்பூன், எண்ணெய்- பொரித்தெடுக்க, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை - 1 மூடி, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: தோல் சீவிய வாழைக்காயை எலு மிச்சை, உப்பு கலந்த நீரில் போடவும். பிறகு நேரிடையாக எண்ணெயில் பொரித் தெடுக்க நன்கு வெளுப்பாக வரும். பின் மிளகுத் தூள் உப்பு, பொரித்த கறிவேப்பிலை சேர்க்கவும்.

சேனை சிப்ஸ்!

தேவை: சேனைக் கிழங்கு - 1/4 கிலோ, பச்சைப் பட்டாணி (ஊறவைத்தது) - 1/2 கப், உப்பு, மிளகுத் தூள், பெருங்காயத் தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: சேனைக் கிழங்கை பட்டாணி சைஸில் நறுக்கிக் கொண்டு கொதிக்கும் தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு, பட்டாணியுடன் சேர்த்துப் போட்டு உடனே இறக்கி வைக்கவும். கால் பாகம் வெந்தால் போதும். பின்பு சேனை, பட்டா ணியை நன்கு தண்ணீர் வடித்து ஒரு துணி யில் காற்றாட ஆறவைக்கவும். வாணலியில் எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் பட்டாணியையும் சேனையையும் ஓசை அடங்கும் வரை பொரித்து எடுத்து பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகுத் தூள், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். ஊறவைத்த பட்டாணி யானால் தனியாகப் பொரித்தெடுத்துப் பின் கலக்கவும்.

சின்ன வெங்காய முருங்கை சாம்பார்!

தேவை: சின்ன வெங்காயம் - 100 கிராம், முருங்கைக்காய் - 2, புளிக்கரைசல் - 2 கப், வேகவைத்த துவரம் பருப்பு - 4 கப், உப்பு,நெய், பெருங்காயம் - தேவைக்கு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, வெல்லம் - சிறிதளவு. மசாலா அரைக்கத் தேவையானவை: மிளகாய் வற்றல் - 4, தனியா, சீரகம் - தலா 1 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1/2 கப், தாளிக்க: கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: நெய்யில் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சின்ன வெங்காயம், முருங்கைக்காயை வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். மசாலாப் பொருள்களை வறுத்து தேங்காய், பச்சை வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் குழம்பில் போட்டு நன்கு கொதி வந்ததும் வெல்லம், வேக வைத்த துவரம் பருப்பு சேர்க்கவும்.கெட்டியானதும், கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

புளி இஞ்சி!

தேவை: புளிக்கரைசல் - 5 கப், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி - 1 கப், கீறிய பச்சை மிளகாய் - 5, மிளகாய்ப் பொடி- 1 டீஸ்பூன், உப்பு, வெல்லம் - தேவைக்கு, தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: வாணலியில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். பின் புளிக்கரைசல் சேர்த்து உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து கெட்டியாகக் கொதித்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

கதம்ப சாம்பார்!

தேவை: வறுக்க: மிளகாய் வற்றல் -5, தனியா- 2 டீஸ்பூன், உ.பருப்பு, வெந்தயம், மிளகு - தலா லீ டீஸ்பூன், க.பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய் - 1 மூடி, வெல்லம் - சிறிது, பெருங்காயத்தூள் - லி டீஸ்பூன், காய்கள் - கேரட், கத்தரிக்காய், குடைமிளகாய், பரங்கிக்காய், பூசணிக்காய். வேகவைத்த துவரம் பருப்பு - 4 கப், புளிக்கரைசல் - 3 கப், தாளிக்க: நெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி,உப்பு - தேவைக்கு

செய்முறை: வறுக்க வேண்டியவற்றை, சிவக்க வறுத்து, தேங்காய், வெல்லம் சேர்த்து மைய அரைக்கவும். காய்களை நெய்யில் வதக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். பின், புளிக்கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்ததும் அரைத்த பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு துவரம் பருப்பைப் போட்டுக் கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கித் தாளிக்கவும்.

மிளகுக் குழம்பு!

தேவை: மிளகு - 1கரண்டி, உ.பருப்பு, து.பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், புளிக் கரைசல் - 5 கப், சுக்கு - 1துண்டு (நசுக்கியது), கறிவேப்பிலை இலைகள் - 2 கப், சீரகம் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் -1 மேசைக்கரண்டி, நெய் -சிறிதளவு. தாளிக்க- கடுகு, சீரகம், பெருங்காயம்.

செய்முறை: சிறிதளவு நல்லெண்ணெயில் மிளகு, உளுத்தம் பருப்பு, தனியா, துவரம் பருப்பு ஆகியவற்றைச் சிவக்க வறுத்து, பின் சீரகம், சுக்கு, கறிவேப்பிலையுடன் நன்கு மைய தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை புளிக்கரைசலில் சேர்த்து உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் நெய், நல்லெண்ணெய் கலக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும்.

வத்தக் குழம்பு!

தேவை: சுண்டைக்காய், மணத்தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் வற்றல்களில் ஏதேனும் ஒன்று - 1 கப், புளிக் கரைசல் - 6 கப், சாம்பார்ப் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெல்லம் - 1 எலுமிச்சை அளவு, தாளிக்க: நல்லெண் ணெய், கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு.

செய்முறை: நல்லெண்ணெயில் கடுகு, து.பருப்பு, வெந்தயம், க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து வற்றலை நன்றாக வறுக்கவும். பின் சாம்பார்ப் பொடி சேர்த்து ஒரு புரட்டு புரட்டவும். புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மூன்றில் ஒரு பங்கான பின் வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பிட்லை!

வறுத்து அரைக்க: கறிவேப்பிலை, வெல்லம், பெருங் காயம் - சிறிதளவு, வர மிளகாய்- 6, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2கப்.

தேவை: கீழ்க்கண்ட காய்களுள் ஏதேனும் ஒன்று வேகவைத்தது. பூசணிக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் - 2 கப், புளிக்கரைசல் - 2 கப், துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு வேகவைத்தது - 2 கப், உப்பு - தேவையான அளவு, நெய், கடுகு, சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலை - தாளிக்க.

செய்முறை: அரவைக்குத் தேவையானவற்றை நெய் யில் வறுத்து, தேங்காய்த் துருவல் கறிவேப்பிலை, வெல்லம், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக்கவும். காயை நீளவாக்கில் நறுக்கி வேகவைத்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அரைத்த பொடி மற்றும் பருப்பைக் கொட்டி நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும்.

பொடி போட்ட பருப்பு சாம்பார்!

தேவை: முருங்கைக்காய் அல் லது விருப்பத்துக்குரிய காய் ஏதேனும் - 2 கப், சாம்பார்ப் பொடி - 2 டீஸ்பூன், துவரம் பருப்பு வேகவைத் தது - 4 கப், புளிக்கரைசல் - 2 கப், வெல்லம் - சிறிதளவு. உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி- தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் நறுக்கியது, தாளிக்க - நெய், கடுகு, வெந்தயம், சீரகம்.

செய்முறை: காயை நெய்யில் ஒரு வதக்கு வதக்கி தண்ணீர் ஊற்றி அரைவேக்காடு ஆனதும் புளித் தண்ணீர், சாம்பார்ப் பொடி, உப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மூன்றில் ஒரு பங் காகச் சுண்டியதும் வேகவைத்த து.பருப்பு, வெல்லம், பச்சைமிளகாய் சேர்த்து மேலும் இரண்டு கொதி வரவிடவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளிப்பு சேர்த்து இறக்கவும்.

மோர்க்குழம்பு!

தேவை: கடைந்த தயிர் - 2 கப், து. பருப்பு, க.பருப்பு - தலா 1 டீஸ்பூன், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம்- தலா 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1துண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 1 மூடி, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம், தே.எண்ணெய்.

செய்முறை: து.பருப்பு, க.பருப்பு, தனியா, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள் பொடியுடன் மைய அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதுடன் தயிர் ஊற்றி இலேசாக ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்து மல்லித் தழை சேர்க்கவும்.

தக்காளி ரசம்!

தேவை: நாட்டுத் தக்காளி - 4, புளிக்கரைசல்- 1/2 கப், வேகவைத்த துவரம் பருப்புடன் தெளிந்த நீர் - 1 கப், மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன், தனியாப் பொடி, மிளகுத் தூள் - தலா 1 டீஸ்பூன், சீரகம் - 2 ஸ்பூன், தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, நெய், உப்பு, பெருங்காயம் - தேவைக்கு

செய்முறை: சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து இலேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். புளிக்கரைசலில் நறுக்கிய தக்காளி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் துவரம் பருப்பு நீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பொடியைச் சேர்க்கவும். கொத்துமல்லி தூவி இறக்கவும். நெய் யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

மைசூர் ரசம்!

மசாலா அரைக்க: வர மிளகாய் - 4, தனியா, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 2 கப், வேகவைத்து மசித்த துவரம் பருப்பு - 1 கப், உப்பு, வெல்லம், நெய் - தேவைக்கு, தாளிக்க: கடுகு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை நன்கு வறுத்து தேங்காய், வெல்லம் சேர்த்து நன்றாக மைய அரைத்து, கொதிக்கும் புளித்தண்ணீரில் போடவும். இரண்டு கொதி வந்ததும் வேகவைத்து மசித்த துவரம் பருப்பில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும்.

மிளகு ரசம்!

தேவை: புளிக்கரைசல் - 1 கப், மிளகு - 1 டீஸ்பூன், தனியா, து.பருப்பு - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, நெய், பெருங்காயம் - தேவைக்கு. தாளிக்க: கடுகு, சீரகம், கொத்து மல்லி, கறிவேப்பிலை.

செய்முறை: புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் தனியா, து.பருப்பு, மிளகு சேர்த்து நன்கு வறுத்துப் பொடி செய்து ரசத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப் பிலை, பெருங்காயம் தாளித்து, கொத்துமல்லி தூவிப் பின் பரிமாறவும்.

லெமன் ரசம்!

தேவை: பாசிப் பருப்பு வேகவைத்த நீர் - 2 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி நசுக்கியது - 1 துண்டு, மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு, நெய்- தேவைக்கு, தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் எலுமிச்சை - 1 பழம்

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து உப்பு, பெருங்காயம் போட்டு நன்கு கொதிக்க விடவும். இதில் பாசிப் பருப்பு நீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மிளகு, சீரகப் பொடி போட்டுப் பின்தாளித்து கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். சிறிது ஆறியபின் எலுமிச்சை பிழியவும்.

பாதுஷா

தேவை: மைதா - 1 கிலோ, டால்டா (அ) வெண்ணெய் - 250 கிராம், ஏலப்பொடி, ஆப்பசோடா - 1 சிட்டிகை, பேகிங் பவுடர் - 1/4 டீஸ்பூன், சர்க்கரை - 800 கிராம், அலங்கரிக்க: தேங்காய்ப் பூ (அ) செர்ரிப் பழம்

செய்முறை: வெண்ணெயுடன் ஆப்ப சோடா, பேகிங் பவுடர் சேர்த்து நுரை வரும் வரை கலக்கவும். மைதாவை இதன் மேல் தூவினாற்போல் சிறிது சிறிதாகச் சேர்த்து இலேசாகத் தண்ணீர் தெளித்து தளர்வாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாதுஷா போல் செய்து வாணலியில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி பொரித்தெடுத்து, கம்பிப்பதம் போல் காய்ச்சி ஏலப்பொடி சேர்த்த சர்க்கரைப் பாகில் போடவும். பத்து நிமிடம் ஊறவைத்து, செர்ரிப் பழம் வைத்து ட்ரேயில் அடுக்கவும். பாதுஷா தயார்.

டிரை ஃப்ரூட்ஸ் பீடா!

தேவை: கல்கத்தா வெற்றிலை, சுண்ணாம்பு நீர், குல்கந்த், டூட்டி ஃப்ரூட்டி, வாசனைப் பாக்கு, டூத் பிக், கிராம்பு - தேவையான அளவு.

செய்முறை: வெற்றிலையைத் துடைத்து, சுண்ணாம்பு கலந்த நீரை தடவவும். வெற்றிலையின் நடுவில் குல்கந்த், டூட்டி ஃப்ரூட்டி, வாசனைப் பாக்கு வைத்து பீடா போல் மடித்து நடுவில் கிராம்பைச் செருகவும். பீடாவை டூத்பிக் குச்சியில் செருகி தட்டில் அடுக்கவும். தேவையெனில் கல்கத்தா மசாலாவையும் சேர்க்கலாம்.

No comments: