நமது ஊடகங்களிடம் ஒரு அசிங்கமான பழக்கம் உண்டு. அது யாதெனில் - தெரிந்தே, பரபரப்புக்காக - பலரின் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என்கிற நோக்கில் - தவறான ஒரு விஷயத்தை பிரசுரிப்பது. பிறகு சம்பந்தப்பட்டவர்கள் அந்த செய்தி குறித்து கண்டனம் தெரிவித்தால் - சற்றும் வெட்க மானமின்றி "தெரியாமல் நடந்துவிட்டதாக" தெரிந்தே செய்த அட்டூழியத்திற்கு "மன்னிப்பு" கேட்பார்கள். முக்கியமாக சினிமா தொடர்பில் இருப்பவர்கள் என்றால் - ஓரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல மகிழ்வார்கள். கவர்ச்சிக்கு கவர்ச்சி படம் போடலாம், பரபரப்பான செய்தியாகும், அந்த பரபரப்பில் நான்கு காசு பார்க்கலாம். பிறகு சம்பந்தப்பட்டவர்கள் கண்டனம் தெரிவித்தால்? காசா, பணமா. "மன்னிப்பு கேட்டால் போயிற்று".
தமிழில் கல்கி வார இதழை தவிர ஏனைய பத்திரிகைகள் - இந்த அசிங்கத்தை செய்ய தவறுவதோ, தயங்குவதோ இல்லை. அந்த வகையில் - குமுதம் சென்ற மாதம், தாம் வெளியிட்ட "ஸ்ரூதி தனுஷ் டேட்டிங்கா? கோபத்தில் ரஜினி குடும்பம்" தலைப்பிலான கட்டுரைக்கு ஒரு மாசம் கழித்து இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்கள். அந்த கட்டுரை குறித்து ஸ்ருதி எழுதிய கடிதம்.
"ஆசிரியர் அவர்களுக்கு, சமீபத்தில் குமுதம் வார இதழில் 10.1.2012 தேதியிட்ட பதிப்பு ஸ்ரூதி தனுஷ் டேட்டிங்கா? கோபத்தில் ரஜினி குடும்பம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அவதூறை கிளப்பும் விதத்திலும் தவறாக சித்தரிக்கும் விதத்திலும் எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையை படித்து அதிர்ச்சி அடைந்தேன். கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் தவறானவை. என் பேருக்கும் புகழுக்கும் பெரியளவில் பங்கம் விளைவிப்பவை. சமுகத்தில் எனக்கிருக்கும் மதிப்பை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனது கடின உழைப்பாலும் ஏற்று கொண்ட தொழிலை மதித்து நடக்கும் தன்மையாலும் திரைத்துறையிலும் சமூகத்திலும் எனக்கு கிடைத்துள்ள நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்பது இந்த கட்டுரையிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது.
கட்டுரையில் வரும் வாசகங்கள் தவறானவை என்ற போதிலும் அதை படிக்கும் திரைதுறையினரும் பொதுமக்களும் அவை அனைத்தும் உண்மை என்று நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே இந்த கட்டுரை பொதுமக்களை தவறாக வழி நடத்துவதற்கும் எனக்குள்ள சமூக அந்தஸ்தின் மீது சேற்றை வாரி இறைப்பதற்கான முயற்சி தான். கட்டுரையில் வரும் தவறான, உள்நோக்கத்துடன் கூடிய வாசகங்களும் குற்றச்சாட்டுகளும் துறைரீதியான எனது முன்னேற்றத்தில் சரி செய்ய முடியாத
சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மோசமான பாதிப்பை உண்டாக்கி உள்ளன.
மொத்தத்தில், இந்த கட்டுரை மூலம் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். என்னை பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்ட வாசகங்கள் தவறானவை என்று வாசகர்கள் உணர செய்வது உங்கள் கடமை."
தனிப்பட்ட முறையில் ஷ்ருதியை காயப்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. ஆனால் எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அந்த கட்டுரை ஷ்ருதியின் மனதை புண்படுத்தி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். ஷ்ருதி ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தின் சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளோம். ஷ்ருதியின் திரை உலக பயணம் மட்டுமல்ல அவரது எதிர்கால வாழ்க்கை பயணமும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம் வாழ்த்துகள். ஆசிரியர். "
பக்கத்திலிருந்து பார்த்தது போலோ அல்லது எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தது போலோ எழுதவேண்டியது. பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டியது. அநாகரீகமாக ஒரு செய்தியையும் போட்டு விட்டு,
"அவரது தொழிலும், வாழ்க்கையும் சிறப்பாக அமையவேண்டும் " என்று வாழ்த்துவது கபடத்தனம் இல்லையா? இப்படி எல்லாம் எழுதினால் ஒருவன் எப்படி அய்யா நன்றாக இருக்க முடியும்" என்கிற அறிவு வேண்டாம்.
உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு, வருத்தம் தெரிவித்து விட்டு - கொஞ்ச நாள் கழித்து, எந்த குற்ற உணர்வுமில்லாமல் - திரும்ப சில நாளில் ரஜினியிடம், தனுஷிடம், கமலிடம் அல்லது ஸ்ருதியிடம் வெட்கமின்றி பேட்டி என்று போவார்கள்.
"வெட்கம் மானம் எல்லாம் பார்த்து இருந்தால் அறுபது வருஷம் பத்திரிகை நடத்தி இருக்க முடியுமா" என்கிறார் மூத்த பத்திரிகையாளர்.மேற்கண்ட செய்தியை வாசித்ததும் - சென்ற மாதம் ஒரு வலைத்தளத்தில் குமுதம் ரிப்போர்டரில் பணிபுரிந்தவரின் கட்டுரை ஒன்றும், நான் சிறுவயதில் வாசித்த குமுதம் குறித்த தகவல்களும் ஞாபகத்திற்கு வந்தன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தருகிறேன்.
"என் கைப்பேசிக்கு அந்த அழைப்பு வரும் போது நேரம் நண்பகல் 12 மணிக்கு மேல் (2009, சன.29) இருக்கும். அன்று வியாழக்கிழமை. அப்போது நான் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தியாளர். வார இருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் அந்த இதழுக்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. என்னிடம் பேசிய ஒரு செய்தியாளர், ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இலங்கைப் பிரச்னைக்காக நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார்.
அந்த இதழுக்கான ‘வம்பானந்தா’வை (அரசியல் கிசுகிசு) மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த இணையாசிரிடம் போய் சொன்னேன். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல,.. சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். தீக்குளிப்பைப் பற்றி எழுத இடம் நிச்சயம் இருக்காது” என்றார்.
ஆசிரியரிடம் போனேன். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்: “இந்த இஸ்யூல சேக்க முடியாது. வம்பானந்தாவில் முடிஞ்சா சேக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”. திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தேன்.
“சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க.” என்றவரிடம், “நானும் போகட்டுமா சார்” என்றேன். “எதுக்கு வேஸ்ட்டா?" என்றார். குமுதம் அலுவலகத்தில் அன்று நடந்த நிகழ்வை தருகிறார் அந்த நிருபர். தீக்குளித்த முத்துக்குமார் செய்தது சரியா, தவறா என்கிற வாதத்தை தள்ளி வைத்துவிட்டு - ஈழத்தமிழர்களுக்காக தம் எதிர்ப்பை உயிர் தியாகம் செய்து காட்டிய நிகழ்வை அலட்சியமாய் பேசியவர்கள் - தங்களை தமிழர்கள் என்றோ, ஊடகக்காரர்கள் என்றோ சொல்ல அருகதை பெற்றவர்களா? நடிகை குறித்த சமாசாரம் என்றால் வேறு செய்தியை வெட்டி விட்டு போட்டிருக்க மாட்டார்கள்.
அதற்கு பிறகு அவர்கள் முத்துக்குமார் குறித்து எழுதிய கட்டுரைகள் எல்லாம் போலியாக, பாசாங்காக தானே இருக்க முடியும். எனது பதின்ம பருவத்தில் படித்த ஒரு செய்தி. குமுதத்தில் பணிபுரிந்த - அந்த எழுத்தாளருக்கு ஒரு வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு - அந்த எழுத்தாளர் குமுதத்தில் பணி புரிவது ஏற்புடையதாக இல்லை. ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது, ஒரு வாசகர் "குமுதம் மாதிரி குப்பை பத்திரிகைல வேலை செய்யணுமா" என்று கேட்டார்.
அதற்கு அந்த எழுத்தாளர், "பத்திரிகை குப்பை தான். என் படைப்பு குப்பையா, குப்பை இல்லையா" என்று மட்டும் பாருங்க என்றார் நறுக்கென்று - நியாயமாய். இந்த செய்தி ஆசிரியரின் காதுக்கு போக, அந்த எழுத்தாளர் விசாரிக்கப்பட்டார். "நீங்க அப்படி சொல்லி இருக்கக்கூடாது" என்றார் ஆசிரியர். "நான் உண்மையை தானே சொன்னேன்" என்று வெளியேறினார் - வேலையை விட்டும்.
நான்கு நடிகைகளின் முதுகில் இருந்து இடுப்பு வரையிலான பின் பகுதியை வெளியிட்டு, "யார் இந்த நடிகைகள்" என்கிற அசிங்கமாக கேட்ட கேள்வியை மனதில் கொண்டு தான் (இந்த தகவலை இன்னுமொரு வலைத்தளத்திலும் வாசித்தேன்) கோபத்தில் அந்த வாசகர், "குமுதம் மாதிரி குப்பை பத்திரிகையில் வேலை செய்யணுமா" என்று கேட்டார். இந்த சம்பவம் நடந்து இருபத்தி ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன். ஆனால் அவர்கள் இன்னும் நடிகைகளின் முந்தானைக்குள் இருந்து வரவே இல்லை.
Sunday, February 19, 2012
வெட்கம் மானம் பார்த்தா பிழைப்பு நடத்த முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment