Sunday, February 19, 2012

ஒரு தாய் தன் மகளுக்கு கூறிய அறிவுரைகள்

அந்தக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு, அவள் புகுந்த வீடு செல்லும் போது கூறிய அறிவுரைகள் சிவபுராணத்தில் உள்ளது.

பெரும்பாலும் இந்தக் கால தாய்மார்கள், தன் மகளுக்கு புகுந்த வீடு செல்லும்போது கூறும் அறிவுரைகளைக் கலிபுராணமாகக் கொள்ளலாம்.

சிவபுராணம்: கணவனிடம், வீட்டில் இந்தப் பொருள் இல்லை" என்று கூறாமல், வாங்க வேண்டும்" என்று கூறு.

கலிபுராணம்: எந்தப் பொருளும் வாங்கவில்லை; அதனால் அது இல்லை, இது இல்லை" என்று புலம்பு.

சிவபுராணம்: கணவன் வெளியிலிருந்து வந்தவுடன் களைப்புத்தீர உபசரி!

கலிபுராணம்: கணவன் வெளியிலிருந்து வந்தவுடன் நீ களைப்புடன் இருப்பதாகக் கூறு. அப்போதுதான் ஹாய்யாக இருக்க முடியும்.

சிவபுராணம்: கணவன் உன்னைக் காரணமின்றி கடிந்தாலும் சாந்தமாயிரு.

கலிபுராணம்: கணவன், உன்னைக் கடிந்து கொள்ளும் முன் நீ முந்திக் கொள்.

சிவபுராணம்: கணவன் வெளியூரிலிருந்து வந்தவுடன் கால் மேல் கால் போட்டு உட்காராதே. எழுந்து நின்று விட்டு பிறகு உட்கார். கணவன் உனக்கு குரு.

கலிபுராணம்: கணவனும், நீயும் எல்லாவிதத்திலும் சரிசமம். அதனால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பதில் சொல்; தப்பேதுமில்லை!

சிவபுராணம்: கணவனின் பந்துக்களை உபசரி.

கலிபுராணம்: கணவனின் பந்துக்களை நெருங்கவே விடாதே. முக்கியமாக கணவனின் கூடப் பிறந்த சகோதரிகளை!

சிவபுராணம்: கணவனை பெயரிட்டோ, நீ என்று ஒருமையிலோ பேசாதே.

கலிபுராணம்: கணவனைப் பெயரிட்டு, ‘நீ’ என்று ஒருமையிலேயே கூப்பிடு. அப்போதுதான் அடங்கிப் போவான்.

சிவபுராணம்: சிரமமாயினும் அவன் ஆணையை நிறைவேற்று.

கலிபுராணம்: உன் ஆதிக்கத்தை, அதிகாரத்தை ஆரம்ப முதலே அவன் மேல் செலுத்தப் பழகு.

சிவபுராணம்: இரவில் பின் தூங்கி, காலை முன் எழுந்திரு.

கலிபுராணம்: இரவில் சீக்கிரம் படுத்து காலையில் நேரம் கழித்து எழுந்திரு. பெட் காஃபி உனக்கே!

- பரிமளா பாலசுப்ரமணியம், பெங்களூரு-16

No comments: