Tuesday, August 5, 2008

தமிழக மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.

பெங்களூர்:

கர்நாடகத்தில் முதுகலைப் படிப்பு முடித்த டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குறையைப் போக்க பக்கத்து மாநிலங்களிலிருந்து மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.

பக்கத்து மாநிலங்கள் தமிழகம், ஆந்திரம் மற்றும் மகாராஷ்ட்ராவுடன் கடும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வரும் கர்நாடகம், நிலைமையை உணர்ந்து இறங்கி வருகிறது.

இந்த மூன்று மாநில அரசுகளிடமும் பேசி கர்நாடகத்தின் டாக்டர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடா.

டாக்டர்கள் பற்றாக்குறை!:

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாநிலத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக உறுப்பினர்கள் புகார் எழுப்பினர்.

இந்தப் புகாருக்கு அமைச்சர் ராமச்சந்திர கவுடா பதிலளிக்கையில்,

கர்நாடகத்தில் டாக்டர்கள் குறைபாடு இருப்பது உண்மைதான். அதைப்போக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ முதுகலைப் படிப்பு படித்த டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இங்கு படித்து பட்டம் பெறும் டாக்டர்கள் அரசு சம்பளம் குறைவு என்று கருதி அரசாங்க வேலைக்கு வர மறுக்கிறார்கள். அவர்களுக்கு கவர்ச்சிகரமான அளவில் சம்பளத்தை உயர்த்தி அரசுப் பணிக்கு வரும்படி ஏற்பாடுகள் செய்துஇருக்கிறோம்.

தமிழக டாக்டர்கள்:

என்றாலும் தொடர்ந்து மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் தமிழகம், ஆந்திரம், மராட்டியம் மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலைக்கு வர விரும்பும் உயர் படிப்பு படித்த டாக்டர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை கர்நாடகத்துக்கு அழைத்து வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பெங்களூர் மருத்துவக் கல்லூரியை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்துக்கு இணையாக மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்படி மாற்றப்படும்போது இங்கு மேல்படிப்பு படித்து வரும் டாக்டர்கள் அதிக அளவு கிடைப்பார்கள். அப்போது இந்தப் பற்றாக்குறை தீரும், என்றார்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி, மருத்துவர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

No comments: