Sunday, August 24, 2008

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் மிட் நைட் அரெஸ்டிற்கும் சம்பந்தம் இருக்க முடியுமா

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சைவ - வைணவ மோதலில் கடலுக்குள் போன பெருமாள் விக்ரகத்துக்கும், இந்த நூற்றாண்டில் உலகை உலுக்கிய சுனாமிப் பேரழிவுக்கும் சம்பந்தம் உண்டா?

உண்டு - அப்படி இருக்க சாத்தியமுண்டு என அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து கமல் தசாவதாரத்தில் அசாத்திய திறமை காட்டியிருந்தார். கேயோஸ் - பட்டாம்பூச்சி தியரிக்கு செல்லுலாயிடில் உரை எழுதியிருந்தார்.

அது போல எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் மிட் நைட் அரெஸ்டிற்கும் சம்பந்தம் இருக்க முடியுமா என்றால்? முடியும் என்பது என் பதில்.

கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஃபோட்டோ
எம்.ஜி.ஆருக்கும் - எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன பிரச்சனையோ? எதனால் சுட்டுக்கொண்டார்களோ? அதைப் பற்றியெல்லாம் தற்போது விவாதிக்க வேண்டாம். அது அவர்களுடைய Personal பிரச்சனை. ஆனால் அதுதான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது என்பது உண்மை.
கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த அந்த ஒரு ஃபோட்டோ, மற்ற அனைவைரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆரை தி.மு.வில் முன்னிலைப் படுத்தியது. தி.மு.க ஜெயிக்க உதவியது.

எம்.ஜி.ஆர் அதன்பின்னர் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்தது முதல்வரானது அனைவரும் அறிந்த வரலாறு. அவருடைய திரைப்பட கதாநாயகியாக இருந்த ஜெயலலிதா அவருடைய அரசியல் நாயகியாகவும் உருவெடுப்பார் என்பது அப்போது யாரும் யோசித்துப்பார்க்காத விஷயம்.

ஜெயலலிதாவை இழுத்து தள்ளிய காட்சி
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவருடைய மனைவி வி.என்.ஜானகியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். கடுப்பான எம்.ஜி.ஆரின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை ஊர்வல வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். அது ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம், வி.என்.ஜானகியின் துரதிருஷ்டம். அந்த காட்சி தூர்தர்ஷனில் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பானது. பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பாமரர்களும் உச்சுக்கொட்டினார்கள். அவ்வளவுதான். ஜெயலலிதா மற்ற அனைவரையும் (அப்போது பவர்ஃபுல்லாக இருந்த ஆர்.எம்.வீரப்பனையும்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, அ.தி.மு.கவில் முன்னுக்கு வந்துவிட்டார்.

அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், கட் அவுட் வைத்ததும், பதவி இழந்ததும் மீண்டும் பதவியைப் பிடித்தார் என்பதும் இன்னொரு வரலாறு. அந்த வரலாற்றில் ஒரு பக்கம்தான் கருணாநிதியின் நள்ளிரவுக் கைது.

அன்று எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டிருக்காவிட்டால் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிற அளவுக்கு பிரபலமாகியிருக்க மாட்டார்.
எம்.ஜி.ஆரின் திரைப்பட நாயகி அரசியல் நாயகி ஆகியிருக்க மாட்டார்.
அவர் கருணாநிதியை கைது செய்திருக்க மாட்டார்.

இது கேயோஸ் தியரியை வைத்து, தமிழக அரசியலை நான் பார்க்கும் பார்வை.

No comments: