Tuesday, August 5, 2008

தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவி

பெ.நா.,பாளையம்:
தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவியை, கோவை இளைஞர் வடிவமைத்துள்ளார். இதை பயன்படுத்தி, 50 முதல் 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தை சில வினாடிகளில் ஏற முடிகிறது. இக்கருவியை வடிவமைத்த, கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கூறியதாவது: "விசான் டெக்' என்ற இந்த கருவியை பயன்படுத்தி, சில வினாடிகளில் மரம் ஏறி விடலாம். இரண்டு ஆண்டாக பல்வேறு விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வடிவமைத்துள்ளேன். வீட்டுத் தோட்டங்களில் தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், 50 முதல் 100 தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், இக்கருவி நல்ல பயனை கொடுக்கும். தென்னை மரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரும்பு பாகங்கள் படும் பகுதியில்,"ரப்பர் புஷ்' பொருத்தப்பட்டுள்ளது. தென்னை மரத்தின் உச்சிப் பகுதிக்கு சென்றபின், மரத்தை சுற்றி வந்து காய்களை பறிக்கவும், மரத்தில் உள்ள பாளைகளை சுத்தம் செய்யவும் முடியும். 60 முதல் 80 கிலோ எடையுள்ள நபர்கள், இக்கருவியின் உதவியால், எளிதில் மரம் ஏற முடியும். இதன் தற்போதைய விலை, 3,000 முதல் 3,500 ரூபாய் வரை. அரசு மானியம் அளித்தால், விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு தர முடியும். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.

No comments: