Monday, August 18, 2008

இமெயில் மோசடிக்காரர்கள் - நெட் பேங்க்கிங் மோசடி

சென்னையைச் சேர்ந்த னிவாசனின் வீட்டுக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன... அடித்துக்கொண்டேயிருக்கும் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்... விடாது ஒலித்தால் வெறுத்துப் போய் எடுத்து, 'எதுவும் கேட்காதீங்க... நொந்து வெந்து போயிருக்கேன்... என்ன விட்டுடுங்க...' என்று குரல் கம்மப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் 21 லட்ச ரூபாயை இழந்துவிட்டு நின்றால் யாரால்தான் பேசமுடியும்! கம்ப்யூட்டரின் மெயின் இணைப்புவரை எல்லாவற்றையும் துண்டித்துவிட்டார். அந்த வழியாகத்தானே கொள்ளையர்கள் அவருடைய பணத்தை அள்ளிச் சென்றுவிட்டார்கள்.

'உங்கள் வங்கிக் கணக்கை அப்டேட் செய்யவேண்டும்... இந்த பட்டனை க்ளிக் செய்யுங்கள்' என்று ஒற்றை வரி இமெயிலாக வந்த தகவலை அடுத்து, னிவாசன் அந்த பட்டனை க்ளிக் செய்ய, அவருடைய வங்கிக் கணக்கு பற்றிய மொத்தத் தகவலும் களவாடப்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய வங்கிக் கணக்கை செக் பண்ணுவதற்காக முயற்சித்தபோது பாஸ்வேர்டு தவறு என்ற தகவலே தொடர்ந்து வந்திருக்கிறது. வங்கிக்குத் தொலைபேசி மூலமாகக் கேட்டபோதுதான் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 21 லட்ச ரூபாய் மும்பையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்ட விபரீதம் தெரிய வந்தது.




னிவாசன் போலீஸில் புகார் கொடுக்க... விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது. மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்மணி தொடர்ந்து வங்கிக்கு வந்து, 'ஒரு நிலம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... கிரெடிட் ஆகிவிட்டதா?' என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால், கிரெடிட் ஆனவுடன் அவர் பணத்தை எடுத்துச் சென்றது யாருக்கும் உறுத்தலாக இல்லை. னிவாசனுக்கு அந்த இமெயில் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற அடிப்படையான தகவல்களைத் திரட்டியிருக்கும் காவல் துறை, இந்தப் புகாரை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கிறது. சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணையில் இறங்கியிருக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவின் (வங்கி மோசடி தடுப்புப் பிரிவு) உதவி கமிஷனர் பன்னீர் செல்வம், இவ்விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.

''நெட்பேங்க்கிங் மாதிரியான விஷயங்கள் நம்முடைய வசதிக்காகத்தான் இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது ரொம்பவே கவனமாக இருக்கணும். இப்போ 21 லட்சத்தை இழந்துட்டு நிற்கும் னிவாசன் ஒரு ரிட்டயர்ட் வங்கி அதிகாரி. அவருக்கே ஸ்லிப் ஆகிடுச்சு.

அவர் கணக்கு வெச்சிருக்கறது 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில். அந்த வில்லங்கமான மெயில் வந்தது 'அட்மின் அட் ஐ.சி.ஐ.சி.ஐ. காம்' (admin@ICICIbank.com) என்கிற மெயில் ஐ.டியில் இருந்து. நம்முடைய வங்கிக் கணக்கை எதற்காக இன்னொரு பேங்க் நிர்வாகம் கேட்கிறதுனு ஒருகணம் யோசிச்சிருந்தா... அது போலியான இமெயில்னு புரிஞ்சிருக்கும். அவசரத்தில் பலர் இதையெல்லாம் கவனிக்கறதில்லை'' என்றார்.

''அவர்கள் எப்படி னிவாசனைக் குறிவைத்தார்கள்?'' என்று கேட்டபோது,

''பொதுவாக, இமெயில் மோசடிக்காரர்கள், எந்த ஒரு தனிநபரையும் குறிவைத்துச் செயல்படுவதில்லை. முதல்கட்டமாக ஆயிரக்கணக்கான இமெயில் முகவரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். அதில் எந்த மீன் பதில் போட்டு சிக்குகிறதோ அதை வலையில் வீழ்த்தி விடுவார்கள். இதுதான் டெக்னிக். அதனால், நாம் இதுபோன்ற இமெயில்களுக்கு பதில் சொல்லாமல் டெலிட் செய்தாலே சிக்கலைத் தவிர்த்துவிடலாம்.

முன்பு, அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு கடைசியாக பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவலைக் கேட்டு ஏமாற்றினார்கள். இப்போது விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஒரே க்ளிக்கில் அத்தனை தகவல்களையும் சுருட்டி விடுகிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் படித்தவர்கள்தான் என்றாலும், ஏமாற்று வேலை மும்முரமாக நடக்கிறது'' என்றார்.

இந்த மோசடியில் ஈடுபடும் சர்வதேச கும்பலின் இலக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான். இங்குள்ள பணத்தை நேரடியாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லமுடியாது என்பதால், இந்தியாவில் உள்ள சிலரை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதாவது, மிகச் சுலபமாக வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஒரு வழி என்று சொல்லி அவர்களுடைய வங்கிக் கணக்கை வாங்கிக் கொள்கிறார்கள். ஏமாற்றி சுருட்டப்படும் தொகை அந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்கள் சிறிய சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதியை வேறு கணக்கிலோ அல்லது நேரடியாகவோ கொடுத்துவிட வேண்டும். ஏதாவது சிக்கலாகி வழக்கு அதுஇதுவென்று வந்தால் ஏமாற்றுக் கும்பல் தப்பிவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு கணக்கு எண்ணைக் கொடுத்தவர் மாட்டிக் கொள்வார்.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் சொல்லும் விஷயம் அதற்குச் சரியான உதாரணம்...

''என் அண்ணன் ராஜ்மோகனின் வங்கிக் கணக்குக்கான நெட்பேங்க்கிங் பாஸ்வேர்டை திருடிய இமெயில் மோசடிக் கும்பல், 12 லட்ச ரூபாயை வேறொரு கணக்குக்கு மாற்றிவிட்டார்கள். என் அண்ணன் சென்னை போலீஸூக்கு புகார் கொடுக்க, அவர்களும் விசாரணையில் இறங்கினார்கள்.

மும்பையில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸின் கணக்கில் அந்தப் பணம் மாற்றப்பட்டது தெரிந்து போலீஸ் அங்கே போனது. அந்த ஆப்டிகல்ஸ் உரிமையாளருக்கு எதுவும் தெரியவில்லை. அதன்பிறகு விசாரித்தபோது அந்தக் கடையின் மேனேஜர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்தக் கணக்கு எண்ணை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார். கடைசியில், அந்த மேனேஜருக்காகக் கடையைச் சேர்ந்தவர்கள் பணத்தைக் கட்டினார்கள்'' என்றார்.

விஞ்ஞானம் நமக்கு புதிதுபுதிதாக பல வசதிகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. கூடவே, மோசடிப் பேர்வழிகள் அதற்கான குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்
இன்னொரு சீட்டிங்!



நெட் பேங்க்கிங் மோசடியைப் போலவே இன்னொரு இமெயில் மோசடி இருக்கிறது. அது உருக்கமான கதைகளைச் சொல்லியோ, அல்லது அதிரடி பரிசுப் போட்டியைச் சொல்லியோ ஏமாற்றுவது.

'அமெரிக்காவில் 300 கோடி டாலர் சொத்து இருக்கிறது. அதை க்ளைம் செய்ய யாருமில்லை. உங்கள் பேர், இனிஷியல் உட்பட எல்லாமே அந்தச் சொத்தின் உரிமையாளருடையதைப் போல இருக்கிறது. அந்தச் சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றிவிடலாம். அது வக்கீலாக இருக்கும் என் பொறுப்பு. புதிய டாகுமென்ட்டுகளை எழுதும் செலவு மட்டும்தான்... 1,000 டாலர் அனுப்புங்கள்' என்று மெயில் வரும். அமெரிக்காவில் சுப்பிரமணியோ, கோவிந்தசாமியோ இருக்க வாய்ப்பு இருக்கா என்று யாரும் யோசிப்பதில்லை. 300 கோடி டாலர் யோசிக்க விடாது!

ஆறு மாதம் முன்பு சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரியில் 200 கோடி டாலர் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கு இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ் டியூட்டி ஆகியவற்றைக் கட்டவேண்டும் என்று சொல்லி பணம் கேட்டிருக்கிறது ஒரு கும்பல். அவரும் அனுப்பியிருக்கிறார்.

அதன்பிறகும் விடாமல் அது இதுவென்று சொல்லி சுமார் 18 லட்ச ரூபாய்வரை கறந்திருக்கிறார்கள். கடைசியாக உங்கள் பணமெல்லாம் கன்டெய்னரில் அனுப்பப்பட்டு மும்பையில் இருக்கிறது. கஸ்டம்ஸ் க்ளியரன்ஸூக்காக 3 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள். எல்லா பணத்தையும் இழந்த பிறகு போலீஸூக்குப் போயிருக்கிறார் அந்தப் பெண்!

நன்றி: நாணயம் விகடன்

No comments: