Friday, August 29, 2008

கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

டெல்லி: கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக சந்தையிலிருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் மிகப் பெரிய கள்ள நோட்டு கும்பல் பிடிப்ட்டது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளில், 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகள் அதிகம் இருந்தன. பல கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை இந்த கும்பல் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடும் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந் நிலையில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கிலாவாலா கூறியிருப்பதாவது:

இதனால் இந்த நோட்டுகள் செல்லாது என்று மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக வங்கிகளை தொடர்பு கொண்டு புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

பொதுமக்களிடம் உள்ள இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் மீண்டும் இவை புழக்கத்திற்கு வராது. அதற்கு பதிலாக 2006ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். அதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். பின்னர் சிறிய தொகை நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றார்.

1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை படிப்படியாக ஓரங்கட்டும் பணியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இந்த பணி முற்றிலுமாக நடைபெற்ற பிறகு இவற்றை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கும். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாதவையாகும்.

No comments: