Saturday, November 15, 2008

மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே

இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.

வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”

கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:

“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”

*******************


வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:

‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?

பலத்த கைதட்டல்.

திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.

“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”

இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!

No comments: