1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துரிமை தடைசெய்யப்பட்டது. அவர்கள் பிற ஜெர்மனியருடன் மனம்புரிதல் தடைசெய்யப்பட்டது. 1938 நவம்பர் 10 ஆம்தேதி யூதர்களுக்கு எதிராக ‘பொக்ரம்’ என்னும் கூட்டக்கொலை அறிவிக்கப்பட்டது. யூதர்களின் குடிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது ஹிட்லர் யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவித்தார். அவர்கள் பொது இடங்களில் நடமாடுவது, சேர்ந்து வழிபடுவது தடைசெய்யப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டோக்களில் மட்டுமே அவர்கள் வாழவேண்டுமென ஆணையிடப்பட்டது. 1941ல் யூதர்களில் 12 வயதுக்கு மேல் வயதான எல்லா யூதர்களும் ஆயுதத் தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்புக்குச் செல்லவேண்டுமென ஆணை வந்தது. ஆறு வயதுக்குமேலான எல்லா யூதர்களும் மஞ்சள்நிற அடையாள வில்லை அணிந்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது
1941ல் போர் தனக்குச் சாதகமாக திரும்பிவிட்டது என்ற எண்ணம் ஹிட்லருக்கு உருவானதும் அவர் ‘கடைசித்தீர்வு’ ஒன்றை முன்வைத்தார். முடிந்தவரை யூதர்களை திரட்டி கொன்று ஒழிப்பதே அந்தத் தீர்வு. யூதர்கள் கூட்டம்கூட்டமாக கைதுசெய்யப்பட்டு கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கடைசி துளி உழைப்பு வெளிவரும் வரை கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை விஷவாயு அறைகளில் தள்ளி கொலைசெய்தார்கள் ஹிட்லரின் சிறப்புப் படையினர்.
கொல்லப்பட்டவர்களின் மயிர் கம்பிளி தயாரிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தோல் செருப்பு தைக்க பயன்பட்டது. எலும்புகள் பற்கள் எல்லாமே தொழிற்சாலைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன. ஆஷ்விட்ஸ், மாஜ்டனிக், ட்ரெப்ளின்கா, டச்சாவூ, புஷன் வால்ட், பெர்கன் -பெல்சன், செம்னோ, பெல்ஸெக், மெடானக் போன்ற கொலைமையங்களில் இரவும் பகலும் கொலை நடந்தது. 1943-44 களில் சராசரியாக மணிநேரத்துக்கு ஆயிரம்பேர் என்ற அளவில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேரை நாஜிகள் கொன்றார்கள். கட்டாய உழைப்பில் இறந்தவர்கள் உட்பட 57 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது நிபுணர் கணக்கு. ஐரோப்பிய யூதர்களில் 90 சதவீதம் பேரும் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள்.
பின்னர் மனித மனசாட்சியை உலுக்கியது இந்தக்கொலை வரலாறு. மனிதன் இத்தனை குரூரமானவனா என்ற கேள்வி எழுந்து வந்தது. சாதாரண மக்கள் எப்படி இந்தக்கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?
நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள். அச்செய்திகள் வர வர உலகமே சுய விசாரணை செய்ய ஆரம்பித்தது. மனிதனின் மனசாட்சி பற்றிய இலட்சியவாத நம்பிக்கைகள் தகர்ந்தன. கல்வி மனிதனைப் பண்படுத்தும் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து சிதைந்தது.
Sunday, November 30, 2008
மும்பாயின் கொடுரத்தில் அடுத்த ஹிட்லர் உருவாகி வருவதை உலக நாடுகள் அறியவேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment