Sunday, September 25, 2011

இலங்கைப் பிரச்னைக்கு சர்வதேச ரீதியிலான தீர்வு சாத்தியமில்லை என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே கூறினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற 66-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இன்று பேசியது:

"இலங்கையில் நிலவும் பிரச்னைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விஷயம். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விஷயத்தை அணுகக்கூடாது.

தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும்.

வரலாற்றின் புதிய தருணத்தில் நாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று எம் நாட்டு மக்கள் நம்புகிறார்கள். உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது.

பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்ககூடாது.

தற்போது உலகளாவிய பயங்கரவாதம், ஐ.நா. சபை உள்பட சர்வதேச அமைப்புகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து நாடுகளையும் பயங்கரவாதம் அச்சுறுத்தி வருகிறது.

பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி விடுதலைப்புலிகளுடன் நாங்கள் நடத்திய போரில் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை மக்கள், இப்போது புலிகளின் பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் எல்லா பகுதிகளிலும் சுதந்திரமாகவும் பயமின்றியும் வாழ்கிறார்கள்," என்றார்.

மேலும், "போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு அழுத்தங்கள் வருவதால், அதை முறியடிக்க சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்," என்று ராஜபக்ஷே கேட்டுக்கொண்டார்.

No comments: