Tuesday, September 20, 2011

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் தூக்கில் போடுவதை சோனியா காந்தி விரும்பவில்லை

சென்னை, இந்தியா: “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் தூக்கில் போடுவதை சோனியா காந்தி விரும்பவில்லை” இப்படி ஒரு தகவல் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார் வைகோ. சோனியாவின் விரும்பம் பற்றிய இந்தத் தகவல் எங்கே பரவி வருவதாக அவர் தெரிவிக்கவில்லை.

சோனியாவின் விருப்பம் இதுதான் என்ற தகவல் பரவி வருவது தமிழகத்தில் என்றால், உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், இது முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம், இது சோனியா காந்தியின் நிஜமான விருப்பமோ இல்லையோ, அப்படியொரு தகவல் தமிழகத்தில் பரவினால், தேர்தல் பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ்காரர்கள் சங்கடமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும்.

இந்த ட்ராக்கை கெட்டியாகப் பிடித்துள்ள வைகோ, “தூக்கில் போடுவதைத் தடுக்க வேண்டும் என்பது சோனியாவின் விருப்பம் என்ற தகவல் பரவி வருவதால், இந்த சொல்லை செயலாக்கி காட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இன்று வேலூர் சென்று சிறையில் இருக்கும் முருகன், சந்தன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்த ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, அதன்பின் வெளியே வந்து நிருபர்களுடன் பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “முதல்வர் ஜெயலலிதா நினைத்தால், இவர்கள் மூவரது தண்டனையைத் தடுத்து நிறுத்த முடியும்” என்பதையும், இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் அவர்.

“இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த தீர்மானத்தை ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுகோளாக ஏற்று, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணை மனுதள்ளுபடி செய்யபட்ட பின்னர் அதை மறு பரிசீலனை செய்வதற்கு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. இவர்களது தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களுக்கு சகல அரசியல் கட்சிகளும், வாக்கு சேகரிப்பதற்காக மக்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளன. அப்படியான நேரத்தில், வைகோவின் இந்த ஸ்பெசிஃபிக் டார்கெட் பேச்சு, அதிஷ்டத்தோடு விளையாடும் விளையாட்டாகவே தெரிகிறது.

No comments: