Wednesday, September 14, 2011

புதிய விக்கிலீக்ஸ் ‘ஸ்ரீலங்கா’ கேபிள், தமிழகத்தில் வில்லங்கம்!

புதுடில்லி, இந்தியா: தற்போது வெளியாகியுள்ள புதிய விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தப் போகின்றது. ஸ்ரீலங்கா விவகாரம் தொடர்பான இந்த கேபிள், மத்திய அரசின் ஸ்ரீலங்கா பற்றிய ரகசிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

மேலை நாடுகள் ஸ்ரீலங்கா பற்றி தெரிவிக்கும் எதிரான கருத்துக்கள், கொழும்புவை சீனாவின் பக்கமாகவே மேலும் தள்ளிச் செல்கின்றன என்று இந்தியா கவலை கொள்கிறது” இவ்வாறு இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் அமெரிக்க ராஜதந்திரியிடம் ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது இந்த கேபிள்.

இதன் அர்த்தம்-

ஸ்ரீலங்கா மீது மேலை நாடுகள் குற்றம் சுமத்துவதை, இந்திய அரசு விரும்பவில்லை.

கடந்த (2010) ஆண்டு ஜனவரியில், புதுடில்லியின் கூட்டுச் செயல்திட்ட இணை செயலர் டி.எஸ்.திருமூர்த்தி, “ஸ்ரீலங்காவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வடபகுதியில் (யாழ்ப்பாணம் மற்றும் வன்னி) .சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்திய திட்டங்களுக்கு எதிரானவை. அங்கு சீனாவை அனுமதிப்பது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றை பாதிக்கின்றன” என்று புதுடில்லியின் நிலைப்பாட்டை அமெரிக்க ராஜதந்திரி ஒருவரிடம் வெளிப்படுத்தியதாக கூறுகின்றது விக்கிலீக்ஸ் கேபிள்.

இதே கேபிளில், புதுடில்லியிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றும் முதல் செயலர் ஒருவர் அமெரிக்க ராஜதந்திரி ஒருவருக்கு அடித்த காமென்ட் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஸ்ரீலங்காவின் வட பகுதியில் நடைபெறும் ரயில் பாதை அமைக்கும் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியை சீனா கவனிக்கின்றது. மற்றைய பகுதி இந்தியாவால் செய்யப்படுகின்றது. சீனாவின் பகுதியில் வேகமாக வேலை நடைபெற்று முடியும்போது, இந்தியப் பகுதியில் வேலைகள் பூர்த்தி அடையாமல் இருப்பது, புதுடில்லிக்குத்தான் அவமானமான விஷயம்.

நிலைமை இப்படியிருக்கையில், ஸ்ரீலங்காவின் வடபகுதியில் சீனா செய்யும் வேலைத்திட்டங்கள் பற்றி இந்தியா கவலை கொள்வதும், அங்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்க முனைவதும் நகைப்புக்கிடமான விஷயம்” என்பதுதான், ஸ்ரீலங்கா தூதரக அதிகாரியின் கிண்டல் காமன்ட்!

அதேநேரத்தில், “சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயங்கவில்லை” என்று அமெரிக்க ராஜதந்திரியிடம் தெரிவித்துள்ள திருமூர்த்தி, 2009ம் ஆண்டு டிசெம்பரில் இந்தியாவால் ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்பட்ட 425 மில்லியன் டாலர் லைன் ஆஃப் கிரெடிட் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த லைன் ஆஃப் கிரெடிட் யாருடைய கவனத்தையும் கவராமல், கொடுக்கப்பட்டிருந்தது.

புதுடில்லி கொழும்புவுக்கு கொய்யாப்பழம் கொடுத்தாலே கொந்தளிக்கும் தமிழக அவசியல்வாதிகள் யாருமே, 425 மில்லியன் டாலர் லைன் ஆஃப் கிரெடிட் பற்றி வாயே திறக்கவில்லை! பாவம், அவர்களுக்கு அதுபற்றி தெரியாமலேகூட இருக்கலாம்!

No comments: