Tuesday, September 20, 2011

ரஷ்யா, ‘பழைய கொலையை’ மறந்து விட்டு வரச் சொல்கிறது!

முன்னாள் உளவாளி தமது நாட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட கோபம், பிரிட்டனுக்கு உள்ளது. கோபத்தை தணித்து, இரு நாடுகளும் பழையபடி உளவுத் தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது ரஷ்யா.

லண்டன், பிரிட்டன்: அடுத்த வாரம் பிரதமர் டேவிட் கேமரான் ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், இரு நாடுகளிடையேயும் உளவுத் தகவல்களை பரிமாற்றம் செய்வது பற்றிய கோரிக்கையை ரஷ்யா வலியுறுத்த உள்ளதாக தெரியவருகிறது.

2006ம் ஆண்டு லண்டனில் முன்னாள் உளவாளி அலெக்சான்டர் லிட்வினென்கோ கொல்லப்பட்டபின், இரு நாடுகளும் உளவுத் தகவல்களைத் தமக்கிடையே பரிமாற்றம் செய்வதை நிறுத்தியிருந்தன. பிரிட்டன்தான் தொடர்புகளை முதலில் முறித்துக் கொண்டது.

தமது நாட்டில் வைத்துச் செய்யப்பட்ட அந்தக் கொலை பிரிட்டனுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னணியில் ரஷ்ய உளவுத்துறை இருந்தது என்பது, பெரிய ரகசியமாக இருக்கவில்லை.

பிரிட்டனிலுள்ள ரஷ்ய தூதர் அலெக்சான்டர் யகோவென்கோ, “இந்தக் கொலை பற்றி பிரிட்டிஸ் அரசு கோரிக்கை விடுக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால், பிரிட்டன் கோருவதுபோல ரஷ்ய உளவுத்துறையைச் சேர்ந்த யாரையும் விசாரணைக்காக பிரிட்டனிடம் ஒப்படைக்க முடியாது. அதற்கு எமது அரசியல் சட்டத்தில் இடமில்லை. தவிர, இதில் ரஷ்ய உளவுத்துறை தொடர்பு பட்டுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆதாரம் இல்லாமல் யாரையும் நாடுகடத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம்தான், இரு நாடுகளிடையே உளவுப் பரிமாற்றத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.

“செப்.11 தாக்குதலின் 10வது ஆண்டு நிறைவின்பின் பிரிட்டிஷ் பிரதமர் ரஷ்யாவுக்கு விஷயம் செய்யும் சந்தர்ப்பத்தில், ரஷ்ய உளவுத்துறைக்கும், பிரிட்டிஷ் உளவு அமைப்புகளான MI5, MI6 ஆகியவற்றுக்கும் இடையே உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்வதில் நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம்” என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

“நாம் தயாராக உள்ளோம். பிரிட்டனின் பக்கத்திலிருந்துதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என்றும் கூறியுள்ளார் ரஷ்ய தூதர். மாஸ்கோ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பிரிட்டிஷ் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதியைச் சந்திப்பதுடன், ரஷ்ய அரசின் ‘மிகச் சக்தி வாய்ந்த’ மனிதராகக் கருதப்படும் பிரதமர் விளாதிமிர் பூட்டினையும் சந்திக்க உள்ளார்.

கசப்பான அறிக்கை யுத்தங்களை அடுத்து, முதல் தடவையாக 4 வருடங்களின்பின், இரு தரப்புத் தலைமையும் நேருக்கு நேர் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளனர்.

No comments: