தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவம் இது. மு.க. அழகிரியின் மகன் துரை.தயாநிதியின் நிறுவனம் ரிலீஸ் செய்த படம் தொடர்பாக அவரைப் பேட்டி காண விரும்பியது ஒரு சேனல். சத்யம் தியேட்டர் மாடியில் பில்லியர்ட்ஸ் ஆடிக் கொண்டிருந்த தயாநிதி அங்கே வரச் சொல்லிவிட்டார். தயாநிதி பேட்டி கொடுக்க இருப்பதைக் கேள்விப்பட்ட தியேட்டர் நிர்வாகம் மற்ற மேஜைகளில் ஆடிக்கொண்டிருந்தவர்களிடம் கெஞ்சி, இடத்தைக் காலி பண்ணுங்க" என்று கேட்டுக்கொண்டது. இந்தச் சம்பவத்தை நம்மிடம் சொன்ன ஒரு திரையுலகப் பிரமுகர், தியேட்டர்காரர்கள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த அளவு பயந்து கொண்டு ராஜமரியாதை கொடுத்தார்கள். பேட்டியின்போது எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதென்று மற்றவர்களைப் போகச் சொன்ன தியேட்டர் நிர்வாகம், அவர்களின் படங்களை மட்டுமே திரையிட்டு வந்ததில் ஆச்சர்யமென்ன?" என்று கேட்டார்.
சென்னை மட்டுமல்ல; தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் கூட தங்கள் படம் மட்டும்தான் திரையிடப்பட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் ‘அன்பாக’ மிரட்டப்பட்டனர். இதனால் விஜய் நடித்த ‘காவலன்’ படமே கூட தியேட்டர் கிடைக்காமல் சில நாட்கள் பெட்டியில் அடங்கியது. ‘களவாணி’ போன்ற நல்ல படங்களுக்குப் பல தடைக் கற்கள். இது மக்களிடம் எரிச்சலை உண்டாக்கியது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல படங்களுக்கு தியேட்டரும் விநியோகஸ்தர்களும் கிடைக்கவில்லை. பல தயாரிப்பாளர்கள் நொந்து போனார்கள். தமிழ்ப் படவுலகில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டு, ஒரு குடும்பம் கோலோச்ச அனுமதிக்கப்பட்டு விட்டது என்று புலம்பினார்கள்.
ஆட்சி மாறிய பின் நிலைமை மாறிவிட்டதா?
எங்களுக்கு இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இருந்தன. இப்போது ஆரோக்கியமான சூழல் உருவாகி, நல்ல படங்களை ஒரு நம்பிக்கையுடன் தயாரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது," என்கிறார் தயாரிப்பாளர் கே.ஆர். முன்பு போல் திரையுலகில் கோலோச்ச முடியாது என்பதை உணர்ந்த துரை. தயாநிதி தமது ‘மங்காத்தா’ படத்தை சன் நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டு லண்டனில் தற்காலிகமாக செட்டில் ஆகிவிட்டார். சன் நிறுவனமும், ‘நேரடியாகக் களத்தில் குதித்தால் வம்பு வந்து சேரும்’ என்று பயந்து ராதிகாவின் ரேடன் நிறுவனத்துக்கு 19 கோடிக்குக் கைமாற்றி(?) விட்டது.
ஆளும் கூட்டணியில் உள்ள சரத்குமார், ‘அரசு மற்றும் தியேட்டர்கள் தொடர்பாக ஏதாவது பிரச்னை வந்தால் சமாளித்துக் கொள்வார்’ என்று சன் நிறுவனமும் நினைத்ததில் தவறில்லை. சாட்டிலைட் உரிமையை மட்டும் வைத்திருக்கும் சன், தனது சேனல்களில் செய்த விளம்பர சுனாமி காரணமாக, ‘மங்காத்தா’ முதல் ஐந்து நாட்களிலேயே வசூலைக் கொட்டி அசர வைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினும் தமது ‘ஏழாம் அறிவு’ படத்தை சன் மூலம் வெளியிட இருக்கிறாராம்.
சிலரது சேனல் பின்புலம்தான் எங்களைப் போன்ற தயாரிப்பாளர்களுக்குப் பெரிய சவால். ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவருடன், உறுதியான, திறமையான வீரர் கலந்து கொண்டால் கூட அவர் தோற்றுத்தான் போய்விடுவார். படவுலகில் தொடர்ந்து இருக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் புயலெனப் புகுந்த சிலர், மீடியா என்ற ஊக்க மருந்தை கைவசம் வைத்துக் கொண்டு, தங்கள் தொடர்பான படங்களையே தமிழகம் முழுவதும் வெளியிட்டு விளம்பர பலத்தால் திரையுலகை, தங்கள் பிடிக்குள் வைத்துக் கொண்டார்கள்.
பத்திரிகைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சினிமா விளம்பரம் செய்யக்கூடாதென்று கட்டுப்பாடு உண்டு. அதேபோல் சேனல் நடத்துபவர்கள் தங்கள் படங்களுக்குக் கூட சகட்டுமேனிக்கு விளம்பரம் செய்து கொள்வதைத் தடுக்க, கட்டுப்பாடு தேவை. சேனலாகட்டும்; பத்திரிகைகளாகட்டும்; சமதள ஆடுகளம் இருக்கும்படியான நிலை உருவானால் மட்டுமே, நல்ல படங்களைத் தயாரிக்கும் சிறு தயாரிப்பாளர்கள் கூட தயாரிப்புத் தொழிலில் நீடிக்க முடியும்," என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்.
‘மைனா,’ ‘மதராசபட்டினம்’ போன்ற பல நல்ல படங்கள் மக்களை ரீச் பண்ண அவர்கள்தானே காரணம்" என்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர்.
திரைப்பட விநியோகம் மற்றும் தியேட்டர் தொழிலில் முக்கியமான புள்ளி அபிராமி ராமநாதன். திரையுலகம் சிலரது பிடியிலிருந்து மீண்டு விட்டதா என்ற நம் கேள்விக்குப் பதிலளிக்க மிகவும் தயங்கினார் அவர். வேண்டாம் ஸார். சர்ச்சைக்கிடமான விவகாரம்" என்று கழன்று கொண்டார்.
தேர்தல் முடிந்து ஆட்சியும், காட்சியும் மாறியபின் முடங்கியிருந்த படங்கள் ரிலீஸாகத் தொடங்கி விட்டன. கடந்த நூறு நாட்களில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் நல்ல சரக்கு மட்டுமே விலை போகும் என்பது போல, ஒருசில படங்களே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ‘அவன்-இவன்’, ‘தெய்வத் திருமகள்’, ‘காஞ்சனா’ ஆகிய படங்களை வெற்றிப் படங்களாகச் சொல்லலாம். ஆனால் முடிந்த படங்கள் வெளிவர ஒரு சாதகமான சூழல் நிலவுவதே தமிழ்த் திரைப்பட உலகம் சிலர் பிடியிலிருந்து மீண்டு விட்டது என்பதைக் காட்டுகிறது," என்கிறார் கலைப்புலி சேகரன். இருந்தும் இன்றைய திரைப்படத் தயாரிப்பு, விநியோகச் சூழல், ஆரோக்கியமாக இல்லை. காரணம், கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து எரியும் தீக்குள் விழுந்து விட்ட நிலையில்தான் படவுலகம் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். தியேட்டர்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்துக் கொள்ளும் கட்டணம்; மற்றும் தொழிலாளர் சம்பளப் பிரச்னை. குறிப்பாக தொழிலாளர் சம்பளப் பிரச்னையில் படவுலகம் தடுமாறி நிற்கிறது. புதுப்பட பூஜைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
தியேட்டர்களில் பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸான முதல் வாரத்தில் டிக்கெட்டுக்கு 200, 250 என்று வசூல் வேட்டை ஆடுகிறார்கள் தியேட்டர் அதிபர்கள். தியேட்டரில் வசூல் ஆவதால் அரசுக்கு வரி மூலம் எந்த லாபமும் இருக்காது. காரணம், அரசு நிர்ணயித்துள்ள கட்டணப்படிதான் அவர்கள் வரி செலுத்துகிறார்கள். அரசை ஏமாற்றுகின்ற அதே சமயம் வசூல் விஷயத்தில் தயாரிப்பாளர் - விநியோகஸ்தர்களையும் தியேட்டர் அதிபர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது பலரது குற்றச்சாட்டு. இப்போது சென்னையில் சில தியேட்டர்களில் வார வாடகை கொடுத்துவிட்டு படத்தைப் போடுகிறார்கள். பல படங்களுக்கு கொடுத்த வாடகையை விட மிகக் குறைவாக வசூலாகிறது. தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான். சென்னைக்கு வெளியே உள்ள தியேட்டர்களில் சதவிகிதக் கணக்கில் வியாபாரம் நடக்கிறது. ஏ.ஸி. தியேட்டர்களுக்கு, குறைந்தபட்சக் கட்டணம் ரூபாய் 20. அதிகபட்சம் 100. ஏ.ஸி. அல்லாத தியேட்டர்களுக்கு, பதினைந்திலிருந்து 70 ரூபாய் வரை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம்," என்கிறார் தியேட்டர் உரிமையாளர் சங்கச் செயலர் திருச்சி ஸ்ரீதரன். இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு விரைந்து எடுக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
படவுலக விவகாரங்களில் தலையிடுவதை ஜெயலலிதா விரும்பவில்லை என்கிறார்கள். ‘மங்காத்தா’ படம் மூலம் சன் நிறுவனம் மீண்டும் களத்துக்கு வந்தாலும் அதிகாரப் பின்னணி இல்லாததால் இனி அடாவடி, அத்துமீறல் இருக்காது என்றும் கருதப்படுகிறது.
அரசிடமிருந்து எந்தக் குறுக்கீடும் கிடையாது. எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளும் சூழல்தான் இருக்கிறது," என்கிறார் கலைப்புலி சேகரன்.
- ப்ரியன்
பாக்கி இல்லை
சன் நிறுவனம் உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி ஆகியோர் தயாரித்த படங்களில் தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது," என்கிறார் திரைத் தொழிலாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான வி.சி.குகநாதன். பையனூரில் திரைப்படக் கலைஞர்கள் தொழிலாளர்களுக்காகக் கட்டப்படும் குடியிருப்பைப் பற்றி விசாரித்தோம்.
50 ஏக்கரில் 10,000 வீடுகள் கட்ட வேண்டுமென்பது திட்டம். ஹட்கோ நிறுவனம் 249 கோடி நிதி உதவி செய்கிறது. இந்தக் கடனுக்கு தமிழக அரசு கியாரண்டி. 15 ஏக்கரில் இரண்டு படப்பிடிப்புத் தளங்களை எங்கள் செலவில் அமைக்கிறோம். இந்தப் பணிகளை வேகப்படுத்த அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்றார் அவர்.
Friday, September 16, 2011
மீண்டு விட்டதா தமிழ் சினிமா? வெளிச்சத்துக்கு வரும் தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment