Sunday, September 4, 2011

மூவரும் தூக்கிலிருந்து, தற்காலிகமாக தப்பியது எப்படி?

சென்னை, இந்தியா:
சென்னை ஹைகோர்ட், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் (ஸ்ரீகரன்), சாந்தன், பேரறிவாளன் (அறிவு) ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எடுத்துக் கொண்டது. அதையடுத்து, இவர்கள் மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த 8 வாரங்களுக்குள் எத்தனையோ காரியங்கள் நடைபெறலாம்!

நேற்றைய தினம் இந்த மூன்று பேரின் சார்பிலும் வழக்குரைஞர் சந்திரசேகர் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜராகி, மனு மீது விசாரணைக்கு நீதிபதியிடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கு நீதிபதி பால் வசந்தகுமார் அனுமதி அளித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையே இன்று எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் ஆஜராகிய ராம் ஜெத்மலானி தமது வாதத்தில், “இவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு 11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் தவறானது. ஒரு கைதியை அவரது அறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட, 30 விநாடிகள் கூட ஆகாது. அப்படி இருக்கும் போது 11 ஆண்டு காலம் அவர்களை காக்க வைத்தது என்ன நியாயம்.

இதற்கு முன்பு நடைபெற்ற ஒரு வழக்கில், கருணை மனு செய்யப்பட்டபோது, அதற்கு பதில் வர இரண்டு ஆண்டுகள் தாமதமாகின. இரண்டாண்டு காலம் தாமதித்து கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால், தூக்கு தண்டனையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு 11 வருடங்களுக்கு மேல் தாமதிக்கப்பட்டுள்ளது ” என்று வாதிட்டார்.

அவரது விவாதம் இப்படி ஆதாரபூர்வமாக அமைந்திருக்க, மறுபக்கமாக மற்றொரு விஷயமும் இதில் இன்ஃபுளுவன்ஸ் செய்தது.

உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கின் நேரடி சட்ட விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே நேரத்தில், வழக்கு நடைபெறும் காலகட்டத்தின் புறச் சூழ்நிலையும் கணக்கில் எடுக்கப்படுவதுண்டு என்று விறுவிறுப்பு.காமில் நேற்று தெரிவித்திருந்தோம் (அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

ஏற்கனவே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட மனு என்ற போதிலும், தற்போதைய புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே நீதிபதி 8 வாரங்களுக்கு தடை விதித்துள்ளார் என்று தெரியவருகின்றது. தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக நடைபெறும் போராட்டங்களே இதற்கு உதவி செய்திருக்க வேண்டும்.

இதற்கிடையே மற்றொரு திருப்பம்.

இவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு மற்றொரு சாதகமான அம்சமாக, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனைகளை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி கோரும் தீர்மானமே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்தத் தீர்மானம், ஏகமனதாக நிறைவேறியது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்ட முதல்வர், “இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்பதைப் பதிவு செய்துள்ளார். ‘ஒரு மாநிலத்தின் கருத்தாக’ இந்தத் தீர்மானம், தமிழக கவர்னர் ஊடாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரியவருகின்றது.

தமிழக சட்டசபையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு ஒரு தினம் முன்பாக (திங்கட்கிழமை) விறுவிறுப்பு.காம் இதற்கான சாத்தியம் பற்றி கீழ்வருமாறு எழுதியிருந்தது:

முதல்வர் ஜெயலலிதா, இந்தத் தூக்குத் தண்டனைகளை ரத்து செய்யுத் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார். அது ஒரு விதத்தில் உண்மைதான். நேரடி அதிகாரம் கிடையாது! ஆனால், சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர முடியும். அது, 100 சதவீத எம்.எல்.ஏ.க்களின் (தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையில் உள்ள) ஆதரவைப் பெற்றால், ஒரு மாநிலத்தின் குரலாகக் காண்பிக்க முடியும்.

அது மாத்திரமின்றி,இந்தத் தீர்மானத்தால் அரசியல் ரீதியாகவும் பலன் பெற்றிருக்கிறார் ஜெயலலிதா.

• செப்டெம்பர் 5ம் தேதி, தி.மு.க. சட்டசபைக்கு வந்து இதுபற்றி வாய் திறக்கும் முன்னர்,

• செப்டெம்பர் 6ம் தேதி வேலூரில் போராட்டத்துக்கு ஆட்திரட்டும் நடவடிக்கையைத் தொடங்கும் முன்னர்,

இன்று சட்டசபையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து, அரசியல் ரீதியாக தி.மு.க., மற்றும் பா.ம.க.வுக்கு செக் வைத்திருக்கிறார், முதல்வர்.

No comments: